என்றும் இருப்பவர்கள்! 20 - சா. கந்தசாமி 

1959 -ஆம் ஆண்டு. சென்னை அமைந்தகரை அரச மரத்தடியில் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுகூட்டம். சாலை முழுவதும் செங்கொடிகள்.
 என்றும் இருப்பவர்கள்! 20 - சா. கந்தசாமி 

ஜெயகாந்தன்
 1959 -ஆம் ஆண்டு. சென்னை அமைந்தகரை அரச மரத்தடியில் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுகூட்டம். சாலை முழுவதும் செங்கொடிகள். பெரும் திரளான மக்கள் கூடி இருந்தார்கள். திராவிட முன்னேற்றக்கழகத்தையும், அதன் தலைவர்களையும் கடுமையாகத் தாக்கி ஓர் இளைஞர் பேசிக்கொண்டு இருந்தார்.
 கிளர்ச்சி ஊட்டும் பேச்சு. அவர் மைக்கின் முன்னே நின்று கொண்டு பேசவில்லை. இப்படியும் அப்படியும் நடந்து கொண்டு பெருங்குரலில் முழங்கினார். திடீரென்று எம்பிக் குதித்தார். மேலே போனார். கீழே இறங்கி வந்தார். சில விநாடிகள் மெüனம் காத்தார். மக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தார்கள். பேசியவர் ஜெயகாந்தன். வயது இருபத்தைந்து. எழுத்தாளர். நான் அந்தக் கூட்டத்தில் நின்று அவர் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.
 ஜெயகாந்தன் ஒரு தேர்ந்த நடிகரைப் போல பெரும் கூட்டத்தையும் பேச்சால் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டிருந்தார். ஆனால், அவர் அடிப்படையில் எழுத்தாளர். சாந்தி, சமரன், சரஸ்வதி ஆகிய இடதுசாரி பத்திரிகைகளில் சென்னையில் நடைபாதைகளில் வாழும் ஏழை எளிய மக்கள் பற்றி பரிவோடு எழுதிக்கொண்டு வந்தார்.
 யாரைப்பற்றி அவர் எழுதினாரோ- அவர் அக்கதைகளைப் படிக்கப் போவதில்லை என்பது அவருக்குத் தெரியும். ஏனெனில் கதைகள் படிக்க அவர்களுக்குப் படிப்பு கிடையாது. சிறிதளவு படித்தவர்களுக்குக் கூட படிக்க நேரம் கிடையாது. அவர்கள் பொழுதெல்லாம் கை ரிக்ஷா இழுப்பவர்கள். பல இடங்களில் இருந்து லாரிகளில் பெரும் பொருட்களை ஏற்றி இறக்குகிறவர்கள். முதுகில் மூட்டையைத் தூக்கிக் கொண்டு குனிந்தபடியே நடக்கிறவர்கள். பார வண்டி இழுத்துக் கொண்டு ஜட்கா வண்டிகள், டிராம்களுக்கு இடையில் சாலைகளில் ஓடுகிறவர்கள்.
 நடைபாதையே அவர்களுக்கு இருப்பிடம். நகரம் அடங்கிய பிறகு சோறாக்கி, மீன் குழம்பு வைத்து சாப்பிடுகிறவர்கள். தெரு விளக்கடியில் வாழ்கிறவர்கள். புத்தகங்கள் படிக்கிறவர்கள் கிடையாது. நடைபாதைவாசிகள் பலரின் இருப்பிடமாக அந்த காலத்தில் டவுனில் லோன்ஸ் குயர் இருந்தது. அங்கு வாழ்கிறவர்களின் இரவு வாழ்க்கை-போலீஸ் தொந்தரவு பற்றியெல்லாம் அவர் எழுதியிருக்கிறார். அதோடு எழுத்தாளர்கள் எழுதக்கூடாது; எழுத தேவையில்லாதது, பத்திரிகைகள் பிரசுரிக்க முடியாதது பற்றியெல்லாம் அவர் எழுதியிருக்கிறார்.
 அவரின் மகத்தான சிறுகதைகளான "பிணக்கு ஒரு பிடி சோறு', "இனிப்பும், கறுப்பும்' எல்லாம் அவர் இளம் பருவ வாழ்க்கையில் கண்டதும்,கேட்டதும் அனுபவித்தது தான் என்றே குறிப்பிட வேண்டும். அவர் ஏழையில்லை. வறிய குடும்பத்தில் பிறந்தவரும் கிடையாது.
 1934-ஆம் ஆண்டில் கடலூர் மஞ்சகுப்பத்தில் தண்டபாணி பிள்ளை, மகாலட்சுமி அம்மாள் மகனாக பிறந்தார். தந்தை அரசு பணியில் இருந்தார். மாமாக்கள், அத்தைகள் வசதி படைத்தவர்களாக வாழ்ந்தார்கள். பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருந்ருந்தார்கள். அத்தைமார்கள் வீட்டிலேயே பள்ளிக்கூடம் வைத்து நடத்தினார்கள். ஜெயகாந்தன் படிப்பு அத்தையின் பள்ளிக்கூடத்தில் தான் தொடங்கியது. உடன் படித்தவர்களில் ஒருவர் கி.வீரமணி.
 ஆரம்பப்பள்ளிக்கூடத்தில் சேர்ந்து படித்தார். ஐந்தாம் வகுப்பு பெயில். "நான் ஐந்தாம் வகுப்பு பெயில்' என்பதைப் பெருமையோடு சொல்லிக் கொண்டிருந்தார். பன்னிரெண்டு வயதில் வீட்டை விட்டு வெளியேறி சின்னஞ்சிறிய வேலைகள் எல்லாம் பார்த்தார். ஐஸ் வண்டி தள்ளிக் கொண்டு போய் ஐஸ் விற்று இருக்கிறேன். ஜட்கா வண்டியோட்டிக்கு உதவியாளனாக; டாக்டர் பை தூக்கிக் கொண்டு போகும் பையனாக- இப்படி பல வேலைகள் செய்து இருக்கிறேன். ஆனால் நான் ஒரு பொழுதும் இழிவான- வெளியில் சொல்லத்தகாத வேலை எதனையும் செய்தது இல்லை.
 ஒரு வேலையில் சேர்கிற போது- அதுவே வாழ்க்கையாகி விடப் போகிறது என்று நினைத்துக்கொள்வேன். "ஒரு வாரம், பத்து நாட்களுக்கு மேல் நான் எந்த வேலையிலும் இருந்தது இல்லை. பறந்து போய் விடுவேன்'' என்று எழுதியிருக்கிறார்.
 அலைந்து திரிந்து கொண்டிருந்த மகனுக்கு அவர் தாயார் ஒரு கடிதம் கொடுத்து சென்னைக்கு அனுப்பி வைத்தார். அது அவர் மாமாவான - கம்யூனிஸ்டுக் கட்சி உறுப்பினரான ராதா கிருஷ்ணனிடம் கொண்டு போய் கொடுத்தார். பின்னர் கம்யூனிஸ்டு கட்சியில் சேர்க்கக்கூடிய வயதில்லை என்றாலும் ஜீவா கம்யூனில் வைத்துக்கொண்டார். ஆசிரியரை ஏற்பாடு செய்து படிக்க வைத்தார். வெகு விரைவிலேயே அவர் எல்லோர்க்கும் வேண்டிய புத்திசாலி பையனாகிவிட்டார்.
 அவர் படித்தார். பலவிதமான புத்தகங்கள்-கம்யூனிஸ்டு புத்தகங்கள் எல்லாம் படித்தார். பாரதியார் தான் அவருக்கு உகந்த எழுத்தாளராகப்பட்டார். அவரையே ஞானாசிரியன் என்று இறுதிகாலம் வரையில் கொண்டாடிக் கொண்டு இருந்தார்.
 கட்சி என்பது சித்தாந்த ரீதியில் கட்டமைக்கப்பட்டது. விதிமுறைகள் கொண்டது. ஆகையால் கலைஞனான அவரால் கட்சியில் இருக்க முடியவில்லை. வெளியில் வந்து விட்டார். அவருக்கு வயதாகிக் கொண்டே வந்தது. திருமணமும் செய்து கொண்டார். "தான் என்னவாவது என்ற கேள்வி ஏற்பட்ட போது எழுத்தாளனாவதுதான் சரியென்று வந்துவிட்டேன்' என்றார்.
 "ஆனந்த விகடன்' பத்திரிகை அவரிடம் கதை கேட்டது. அவர் "சரஸ்வதி' பத்திரிகையில் எழுதிய சென்னை நகர ஏழை தொழிலாளிகள், குருவி ஜோசியர்கள், சித்தாள்கள் போன்றவர்களின் அக-புற வாழ்க்கையை அடிப்படையாக வைத்துக் கொண்டு எழுதினார். ஆனந்த விகடன் வாசகர்கள் அதுவரையில் படிக்காதக் கதைகள்; அறியாத மொழிகள். உரையின் வீச்சு, தர்க்க நியாயம் அவர்களை அதிகமாக ஈர்த்தது. எனவே தொடர்ந்து எழுதுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். கேட்டால் எழுதக்கூடியவர். "பத்திரிகைகள் கேட்டதால் தான் நான் கதைகள் எழுதினேன்' என்று ஒரு சமயம் குறிப்பிட்டார்.
 தமிழ் சினிமா பாடல்களில் இருந்தும், வசனத்தில் இருந்தும் விடுபட்டு மக்களின் அடிப்படையான வாழ்க்கையைச் சொல்லும் விதமான மாறிவந்து கொண்டிருந்தது. ஜெயகாந்தனுக்குத் தன்னுடைய "உன்னைப் போல் ஒருவன்' சினிமாவிற்கு ஏற்றதாக இருக்கும் என்று கருதினார். அது ஆனந்த விகடனில் வெளிவந்து இருந்தாலும் ஆனந்த விகடன் கதைகளின் குணாதிசயங்கள் கொண்டதில்லை. எளிய மக்கள் வாழ்க்கையை அதன் மெருகு குலையாமல் சொல்வது. படம் எடுக்க அதிகப் பணமும் தேவைப்படாது; பெரிய நடிகர்களும் தேவையில்லை என்று பட்டதால் நண்பர்களோடு சேர்ந்து ஆசிய ஜோதி பிலிம்ஸ் என்று கம்பெனியை ஆரம்பித்தார்.
 அதன் அலுவலகம் ஆழ்வார்பேட்டை. ராமசாமி நாயக்கர் தெரு அரச மர பிள்ளையார் கோயில் மாடி. 1964-ஆம் ஆண்டில் "உன்னைப் போல் ஒருவன்', கலைவாணர் அரங்கில் முதன் முதலாக டிக்கெட்டில் காட்டப்பட்டது. நான் படம் பார்த்துவிட்டு வெளியில் வந்தேன். ஜெயகாந்தனின் நண்பர் தேவபாரதி என்னை அழைத்துக் கொண்டு போய் அறிமுகப்படுத்தினார். அந்த அறிமுகம் ஐம்பதாண்டு காலம்-அவர் மரணம் வரையில் நீடித்தது.
 அவரின் "உன்னைப் போல் ஒருவன்' மிகச்சிறந்த இந்திய சினிமா படமென்று தேசிய விருது பெறும் என்று அவர் நண்பர்கள், பத்திரிகையாளர்கள், சினிமா சம்பந்தப்பட்டச் சிலர் சொல்லிக் கொண்டு இருந்தார்கள். அவர் மெüனமாகவே அதனை அங்கீகரித்தார். ஆனால் சத்யஜித்ரேயின் "சாருலதா' விற்கு முதல் பரிசு கொடுக்கப்பட்டது. அது ரவீந்திர நாத் தாகூர் "சிதைந்த வீடு' என்ற மனம் நெகிழ வைக்கும் யதார்த்தமான கதை. ஜெயகாந்தன் "சாருலதா' பார்த்து இருந்தார். தேசிய சினிமா விருதுகள் பட்டியலில் சாருலதாவிற்குக் கொடுத்தது சரிதான். நான் நடுவர்களில் ஒரு ஆளாக இருந்தால் கூட எதைச் செய்திருப்பேனோ அதையே செய்திருக்கிறார்கள். குற்றம் குறைகள் சொல்ல முடியாது என்று நண்பர்களை அமைதிப்படுத்தினார்.
 அவருக்கு பல துறைகளில் ஈடுபாடு இருந்தது. சங்கீதத்தில் வீணை வாசிக்க விரும்பினார். சில மாதங்கள் வீணை கூட கற்றுக் கொண்டார். ஆனால் தொடர்ந்து கற்றுக்கொண்டும் சாதகம் புரிந்து கொண்டு இருக்க முடியாதென்று அதை விட்டுவிட்டார்.
 "உன்னைப் போல் ஒருவன்' எடுத்த போது வீணை சிட்டிபாபுவை இசையமைக்க அழைத்தார். அவர் "சினிமாவிற்கு இசை அமைக்கத் தெரியாதே' என்றார். "எனக்கு சினிமா எடுக்கத் தெரியாது. ஆனால் எடுத்து இருக்கிறேன். நீங்கள் விணைவாசியுங்கள் போதும். சினிமா படத்திற்குச் சரியாக இருக்குமென்று' அழைத்து வந்தார்.
 அவருக்கு கர்நாடக இசை மீது அதிகமான ஈடுபாடு இருந்தது. பாடவும் கற்றுக் கொண்டிருந்தார். நண்பர்கள் மத்தியில் அடிக்கடி பாடுவார். அது பெரும்பாலும் பாரதியார் பாடல்களாக இருக்கும். மேற்கத்திய இசை மீது அலாதியான பிரியம் கொண்டிருந்தார். அது" பாரீஸ்சுக்குப் போ' நாவலில் பிரதிபலிக்கிறது.
 நடிகர் சந்திரபாபு தான் என் மேற்கத்திய இசைக்கு அடிப்படை காரணம். அவர் ஐநூறுக்கு மேற்பட்ட மேற்கத்திய இசைப்பாடல்கள் கொண்ட ரெக்கார்டுகள் வைத்துக் கொண்டிருந்தார். ""மேற்கத்திய இசை கேட்பதற்காகவே அவர் வீட்டிற்கு அடிக்கடி சென்று கொண்டிருந்தேன். சந்திரபாபு தான் என்னை முதன் முதலாக ஜெ.கே என்றழைத்தார். அதுவே பிரபலமாகிவிட்டது'' என்றார்.
 ஜெயகாந்தன் கார் பிரியர். புதிதாக கார் வந்தால் வாங்குவார். ஹெரால்டு என்று நான்கு பேர்கள் செல்லத்தக்க கார் அறிமுகப்படுத்தப்பட்டது. அவர் வெளிர் நீல நிற கார் வாங்கிக் கொண்டார். நன்றாகத் கார் ஓட்டக்கூடியவர். நண்பர்களை அழைத்துக் கொண்டு தமிழ்நாட்டில் நடைபெற்றக் கூட்டங்களுக்கு எல்லாம் செல்வார். நான் அவரோட சில ஊர்களுக்கு சென்று இருக்கிறேன். முண்டாசு கட்டிக்கொண்டு பாட்டுப் பாடிக் கொண்டே கார் ஓட்டுவார். கார் இல்லாமல் போனதும், பஸ், ரயில் பயணம் செய்தார். ஏ.சி ரயில் பயணம் அவருக்கு ஒத்து வந்தது இல்லை. எனவே இரண்டாம் வகுப்பு ரயில் பயணந்தான்.
 ஜெயகாந்தன் சினிமா கம்பெனி இருந்த அலுவலகம் எழுத்தாளர்கள், நடிகர்கள், சினிமா பிழைப்புத் தேடி சென்னைக்கு வந்தவர்கள் கூடும் இடமாக இருந்தது. அவர் கே.கே.நகருக்கு சொந்த வீடு கட்டிக் கொண்டு போன பிறகும் அலுவலகத்தை விடவில்லை. அதனை நண்பர்களைச் சந்திக்கும் இடமாகவும், உரையாடும், இடமாகவும் வைத்துக்கொண்டிருந்தார்.
 நான் நந்தனத்தில் வசித்ததால் அவரைச் சந்திப்பதும் பேசுவதும் அதிகமாயிற்று. சிறிது காலம் "ஞானரதம்' பத்திரிகையில் ஆசிரியராக இருந்தார். பின்னார் அறந்தை நாராயணன் ஆரம்பித்த "கல்பனா' இதழின் ஆசிரியரானார். என்னுடைய "ஏரிக்கரையில்' என்ற குறுநாவலை வெளியிட்டார்.
 1986-ஆம் ஆண்டுக்குப் பிறகு அவர் எழுதுவதை நிறுத்திவிட்டார். எவ்வளவோ பேர்கள் எழுத வற்புறுத்தினார்கள். அவர் கேட்கவில்லை.
 ஜெயகாந்தன் அலுவலகம் "மடம்' என்று பெயர் பெற்று இருந்தது. அது யார் யாரோ வந்து கூடிப்பிரியும் இடமாக இருந்தது. வந்தவர்களையும் ஏன்? எதற்கு வந்தீர்கள்? என்று அவர் கேட்டதும் இல்லை; போனவர்களைப் பற்றியும் விசாரிப்பதும் இல்லை. ஆனால், அவர் மடத்தின் பீடாதிபதி இல்லை. அவர் பேசக்கூடியவராகவும், கேட்கக் கூடியவராகவும் இருந்தார்.
 ஒரு நாள் மாலைப் பொழுது. கன்னிமாரா நூலகத்தில் இருந்து புத்தகங்களை எடுத்துக் கொண்டு வந்தேன். அரச மரத்தடியில் சைக்கிளை நிறுத்திவிட்டு நிமிர்ந்து பார்த்தேன். ஜெயகாந்தன் இருப்பது தெரிந்தது. உள்ளே சென்றவுடன் இடம் இருந்தது. உட்கார்ந்து கொண்டேன்.
 ""பையில் என்ன புத்தகமா?'' என்று கேட்டார்.
 "ஆமாம். பாரதியார் பற்றிய புத்தகம். பாரதி பாடல்களுக்கு தடை போட்டது பற்றி'' என்று ஆங்கிலப் புத்தகத்தை எடுத்து கொடுத்தேன்.
 1928-ஆம் ஆண்டில் பர்மாவில் பாரதியார் ஸ்வேத கீதங்கள் என்ற கவிதைப் புத்தகம் தேச துரோகமானது என்று தடை போடப்பட்டது. பர்மா அப்போது பிரிட்டீஷ் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தது. எனவே தமிழ்நாட்டிலும் பாரதியார் ஸ்வேத கீதங்கள் மீது தடை போடப்பட்டது. புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
 சென்னை மாகாண சட்டப் பேரவை-மேல் சபையில் ஒரு ஒத்திவைப்புத் தீர்மானத்தை சத்தியமூர்த்திக் கொண்டு வந்தார். அது சட்டப்படி பாரதியார் கவிதைகளுக்குத் தடை போட்டது தவறு. அரசாங்கம் தன் உத்தரவை வாபஸ் வாங்கிக் கொள்ள வேண்டுமென்பது தான் தீர்மானத்தின் சாரம். பல உறுப்பினர்கள் பாரதியின் பெருமை பற்றிப் பேசினார்கள். தீர்மானம் வெற்றிப் பெற்றது. தடை விலக்கிக் கொள்ளப்பட்டது.
 சட்டசபை நடவடிக்கைகள் முழுவதும் மேலான தரத்தில் இருந்தது. மொழி ஆங்கிலம். மிகச் சிறந்த ஆவணம் என்று இந்திய சரித்திர ஆராய்ச்சி நிறுவனம் புத்தகமாக வெளியிட்டிருந்தது. ஜெயகாந்தன் இரண்டு மூன்று பக்கங்களைப் புரட்டிப் பார்த்தார். பிறகு படிக்க ஆரம்பித்தார். அவரின் ஆங்கிலம் சுத்தமாகவும், புரியக்கூடிய விதத்திலும் இருந்தது.
 ஜெயகாந்தன் ஆழ்வார்பேட்டை மடத்தை கே.கே.நகர் வீட்டிற்கே கொண்டு போய்விட்டார். வீட்டில் மாடியில் கூரை வேய்ந்து "சபை' என்று பெயர் வைத்துவிட்டார். ஒவ்வொரு நாளும் சபை கூடும். பத்துபேர்கள் இருந்தாலும் சரி, இரண்டு பேர்கள் இருந்தாலும் சரி ஜெயகாந்தன் இருந்தால் சபை கூடிவிட்டது என்று அர்த்தம். அவர் பேசுவார்; சில சமயம் மற்றவர்களையும் பேசவிடுவார்.
 அவர் பிறந்த நாள் ஏப்ரல் 24. சபையில் அது கொண்டாடப்படும். "அவர் அறுபதாவது பிறந்த நாள் 1994-ஆம் ஆண்டு ஏப்ரல் 24-ஆம் தேதி சிறப்பாகக் கொண்டாடலாம் என்று இருக்கிறோம்' என்றேன். அவர் தலையசைத்து "சரி' என்றார். பின்னர் மூப்பனாரை சந்தித்தோம்." பிரமாதமாகக் கொண்டாடலாம். நான் என்ன செய்ய வேண்டுமென்றார்.' "விழா குழுவிற்குத் தலைமையேற்க வேண்டும் என்றோம்.' அவர் இசைவு தெரிவித்தார்.
 ஆதிமூலம், மருது, ராஜசேகரன் ஓவியம் வரைந்தார்கள். பலர் கட்டுரை எழுதினார்கள். கலைஞர்.மு.கருணாநிதி வாழ்த்துரை வழங்கினார்.
 1997-ஆம் ஆண்டில் சாகித்ய அகாதெமிக்காக, ஜெயகாந்தன் எழுத்தும், சாதனையும் என்று ஓர் ஆவணப்படம் எடுத்தேன். சென்னை, கடலூர், மஞ்சகுப்பம், புதுச்சேரிக்கு எல்லாம் எங்களோடு வந்து ஒத்துழைத்தார். "விடுதலை' கி.வீரமணி, பால்ய கால நண்பரின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். இளம் பருவத்தில் சுற்றிய தோட்டங்களிலும், விளையாடிய மைதானங்களிலும், படித்த பள்ளிகளிலும் மாறி மாறி இருவரும் பேசிக்கொண்டார்கள்.
 புதுச்சேரிக்கு பாரதி வாழ்ந்த இல்லத்திற்குச் சென்ற போது, முண்டாசு கட்டிக்கொண்டு வாசலில் சிறிது நேரம் நின்றார். அப்புறம் மிடுக்காக நடந்து உள்ளே சென்றார்.
 ஆவணப்படத்திற்காக "ஜெயகாந்தன் சண்டைக்காரர் என்று அறியப்பட்டிருக்கிறாரே?' என்று கேள்வி கேட்டேன்.
 "நல்ல காரியத்திற்குச் சண்டை போடுவது சரிதான்' என்று பதில் சொன்னார்.
 அதுவே அவரை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.
 (அடுத்த இதழில் சுத்தானந்த பாரதியார்)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com