ஊரே திருமண வீடாக மாறும் திருவிழா - சாந்தகுமாரி சிவகடாட்சம்

ஊரே திருமண வீடாக மாறும் திருவிழா - சாந்தகுமாரி சிவகடாட்சம்

சிந்தை கவர்ந்த திருவிழாக்கள் 72
"நான் உன் மீது அன்பு கொண்டுள்ளேன் என்கின்ற வார்த்தை பணத்தை விட மேன்மையானது.''
- பிராங்க் சினட்ரா 
பலவிதமான தெய்வங்களின் உருவங்களைத் தரித்திருந்த சிறுவர், சிறுமியர் அம்மனையும், ஈஸ்வரனையும் வாகனங்களில் ஊர்வலமாக சுமந்து செல்லும்பொழுது, முன்னால் நடந்து செல்கின்றனர். இதைத் தவிர அலங்கரிக்கப்பட்ட யானை, ஒட்டகம், பெண்களின் கோலாட்டம், வாத்தியங்களை வாசித்துச் செல்லும் இசைக்கலைஞர்கள், மயிலாட்டம், ஒயிலாட்டம், கால்களில் சலங்கை கட்டி ஆடும் நாட்டுப்புறக் கலைஞர்கள், பக்திப் பாடல்களைப் பாடிச் செல்வோர் என்று சித்திரைத் திருவிழா இரவு நேரத்திலான சுவாமி புறப்பாடு எங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது.
மீனாட்சி அம்மன் கோயிலுக்கு கிழக்கு பக்கம் இருக்கும் புது மண்டபத்துக்குள் நுழைந்தோம், திருமலை நாயக்கர் காலத்தில் வசந்த விழாவை கொண்டாடுவதற்காக உருவாக்கப்பட்ட இந்த மண்டபம் இன்று புகழ்மிக்க பஜாராக விளங்குகிறது. பலவிதமான கைவினைப் பொருள்களையும், கைத்தறி ஆடைகளையும், பித்தளை பாத்திரங்களையும் விற்கும் கடைகள் இங்கு ஏராளம். அங்கே இருந்த டெய்லர்கள், சிலமணி நேரத்தில் ஆடைகளைத் தயாரித்து கொடுத்து விடுகிறார்கள். அன்று அவர்கள் எல்லாரும் வெகு மும்முரமாக பல அழகிய உடைகளை தைத்துக் கொண்டிருந்தனர் மறுநாள் நடக்கவிருக்கும் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்திற்கு அணிந்துசெல்ல, கொடுக்கப்பட்ட ஆடைகளாம், இரவு பத்து மணிக்குள் டெலிவரி செய்யவேண்டும் என்றனர். 
நான்கு சித்திரை வீதிகளிலும் பந்தல்கள் போடப்பட்டிருந்தன. பக்தர்கள் வரும் வழிகளில் எல்லாம் அவர்கள் வெயிலில் சிரமப்படக்கூடாது என்று டின் ஷீட்டுகளைக் கொண்டு கூரைகள் அமைத்திருந்தனர்.
மீனாட்சி திருக்கல்யாணத்தை அது நடைபெறப்போகும் திருப்புகழ் மண்டபத்தில் அருகே இருந்து காண்பதற்கான நுழைவுச்சீட்டுகளை விற்கிறார்கள். என் கணவர் முன்கூட்டியே இரண்டு டிக்கெட்டுகளை வாங்கி கைவசம் வைத்திருந்தார். வெளிநாட்டு பக்தர்களுக்கும், உல்லாசப் பயணிகளுக்கும் தனி இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. உள்ளே வரமுடியாத, பிற பக்தர்கள் கண்குளிர மீனாட்சி திருக்கல்யாணத்தை கண்டு
களிக்க 20 எல்இடி ஸ்கிரீன்களை அமைத்திருந்தனர்.
ஏர்கூலர்களையும் பொறுத்தியிருந்தனர். இதைத்தவிர நிகழ்ச்சியை "லைவாக' பார்க்க, டுரோன்ஸ் (drones) உண்டு என்றனர். குடிக்கும் தண்ணீர், நகரும் கழிப்பறைகள் என்று அத்தனையும் தயார் நிலையில் இருந்தன. 
மதுரையில் இந்த விழா தொடங்கிய காலகட்டத்தில் மாட்டுவண்டிகளில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து மூட்டை முடிச்சுகளோடு மக்கள் மீனாட்சி திருக்கல்யாணத்தைக் காண வந்தார்களாம். கட்டுசோறு கட்டிக்கொண்டு வந்து மதுரை நகரின் புறநகர் பகுதிகளில் தங்குவார்களாம். இன்றும் இப்படி மக்கள் வருகிறார்கள், பலர் லாரிகள், டிராக்டர்களிலும், மீன்பாடி வண்டிகளிலும் வந்து குவிகிறார்கள். இவர்களுக்கும், பக்தர்களுக்கும் உணவுகளை வழங்க
பல தண்ணீர் பந்தல்களும், உணவு வழங்கும் இடங்களும் இருக்கின்றன. இதில் மிகவும் பெரிய அளவில் அன்னதானம் செய்யப்படும் இடம் மாட்டுத்தாவணிச் சந்தை பகுதியாக இருக்கிறது. 
திருக்கல்யாணத்திற்கு முதல்நாள் இரவு தொடங்கி கல்யாணத்தன்று வரை சுமார் ஒரு லட்சம் பேர்கள் அங்கே நடக்கும் கல்யாண விருந்தில் ஆண்டுதோறும் கலந்துகொள்கிறார்கள். மொத்தம் 700க்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் இப்பணியில் ஈடுபடுகின்றனர். விருந்து உண்டு தம் தம் வசதிக்கேற்ப மொய்யும் எழுதிச்செல்கின்றனர். ஒரு ஊரே திருமண வீடாக மாறிக் களைக்கட்டும் கண்கொள்ளா திருவிழாவாக மீனாட்சி திருக்கல்யாணம் எங்களை அசத்தியது.
என்னதான் விஐபி நுழைவுச் சீட்டுகளை வைத்திருந்தாலும், முதலில் வருபவர்களுக்கு முதலிடம் என்று சொன்னதால் அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து குளித்து, காலைச் சிற்றுண்டியை முடித்துக் கொண்டு கிளம்பினோம். 5.30 மணிக்கு எல்லாம் திருப்புகழ் மண்டபத்தை அடைந்தோம். ஆனால் எங்களுக்கு முன்னரே அங்கே பெரும் அளவில் மக்கள் அமர்ந்திருந்தார்கள். சுமார் ஒன்றரை டன் மலர்கள் கொண்டு மண்டபத்தின் உள்புறத்தையும், மேடையையும் அலங்கரித்து இருந்தனர். 
மீனாட்சி திருக்கல்யாணத்தைப் பற்றிய கதாகாலட்சேபம் தொடங்கியது. என்னைச் சுற்றி அமர்ந்திருந்த பெண்கள், தாங்கள் கொண்டு வந்திருந்த மஞ்சள் கயிற்றில் மேலும் மஞ்சள் பொடியைத் தடவி, கயிற்றின் நடுவில் விரலி மஞ்சளை முடிந்து கொண்டிருந்தனர். மேலும் சிலர் கருமணிகள், மற்றும் தாலியை மஞ்சள் கயிற்றில் கோர்த்துக் கொண்டிருந்தனர். ஏன் இப்படி செய்கிறார்கள் என்று என் மனதில் எழுந்த கேள்விக்கு, மீனாட்சி திருக்கல்யாணம் நடந்தேறியபொழுது விடை கிடைத்தது. 
முதலில் விநாயகர், பிறகு திருப்பரங்குன்றத்திலிருந்து முருகப்பெருமான் தெய்வானையுடன் பல்லக்கில் தூக்கி வரப்பட்டு திருமண மேடையின் ஓரப் பகுதிகளில் வைக்கப்பட்டனர். திருப்பரங்குன்றம் பவளர்கனிவாய் பெருமாளே மீனாட்சியின் சகோதரராக வந்து அன்னையை, சொக்கருக்கே தாரை வார்த்துக் கொடுப்பதினால் அவரும் சிறிது நேரத்தில் வந்து சேர்ந்தார்.
என் மனம், மணமகன், மணப்பெண்ணின் வரவுக்காக காத்திருந்தது. பிரியாவிடையுடன் சுவாமி, மீனாட்சி அம்மனுடன் சித்திரை வீதிகளில் பவனிவந்து, பிறகு கோயில் ஊஞ்சல் மண்டபத்தில் கன்னி ஊஞ்சலாடினார்கள்.
பிறகு அவர்கள் திருமண மேடைக்கு வந்து சேர்ந்தனர். வெண்பட்டு, வைரக்கிரீடம் என்று மாப்பிள்ளை சுந்தரேஸ்வரரின் அழகு காண்போரை சொக்க வைத்தது. இதனால்தான் சொக்கநாதர் ஆனாரோ! கோரைப்பட்டு, தங்க அங்கியுடன் மீனாட்சி அம்மனும் சர்வ அலங்காரத்தில் கவர்ந்தாள். அன்னையின் கயல்விழிகளில் மையிட்டிருந்தனர், கன்னத்திலும் திருஷ்டிக்கு கறுப்பு பொட்டு. மையிட்டான்பட்டி என்ற ஊரிலிருந்து இந்த மை தயாரிக்கப்பட்டு கொண்டு வரப்படுகிறதாம். அதேபோல் அன்னைக்கு மங்கல நாண் செய்து தரும் ஊர் திருமங்கலம் என்று அழைக்கப்படுகிறது.
மீனாட்சி அம்மன் சார்பில் ஒரு பட்டரும் சுந்தரேஸ்வரர்க்கு என்று மற்றொரு பட்டரும் இந்த திருமணத்திற்கு பிரதிநிதிகளாக செயல்படுகின்றனர். அந்தக்காலத்தில் மீனாட்சி திருக்கல்யாணத்தை நடத்தி வைத்த குலசேகரபாண்டியன், மற்றும் உக்கிரப் பாண்டியன் வழிவந்தவர்கள்தான் இந்த பட்டர்களாம். சுவாமிகளுக்கு பட்டாடைகள் சாத்துபடி செய்விக்கப்பட்டன. பட்டர்களுக்கு காப்பு கட்டப்பட்டது. அவர்கள் மாலைகளை மாற்றிக் கொண்டனர். பிறகு வேத மந்திரங்கள் ஒலிக்க, மங்கள மேளம் முழங்க, மீனாட்சிக்கு சுந்தரேஸ்வரர் தாலியை அணிவித்தார்.
அவ்வளவுதான் சுற்றியிருந்த அவ்வளவு பெண்களும், தாங்கள் தயார் செய்து வைத்திருந்த மஞ்சள் கயிற்றை எடுத்து அணிந்து கொண்டனர். பலர் தங்கள் கணவர்களை அணிவிக்கச் சொன்னார்கள். என் பக்கத்திலிருந்த ஒரு சுமங்கலிப் பெண், என் கையில் ஒரு தாலிக்கயிற்றைத் திணித்து, அதை என் கணவரிடம் கொடுத்து அணிந்து கொள்ளச் சொன்னார். என் கணவரும் அப்படியே செய்தார்.
அங்கே பக்தி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அம்மா மீனாட்சியே, எங்களை தீர்க்க சுமங்கலியாக வாழ வை என்று பெண்கள் வேண்டிக் கொண்டனர். தீபாராதனை நடந்த பின் பிரசாதம் வழங்கப்பட்டது. தங்கள் வீட்டு திருமணம் நல்லமுறையில் நடந்தேறியது போன்ற திருப்தியுடன் மக்கள், சந்தோஷம் அப்பிய முகங்களுடன் திரும்பிச் சென்றனர். 
வழிநெடுகிலும் சுமங்கலிப் பெண்கள், பெண்களுக்கு தாலிச்சரடு, வெற்றிலை பாக்கு, பழங்களை வழங்கினர். மீனாட்சி திருக்கல்யாணத்தைப் பார்த்தால் கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என்ற நம்பிக்கை இன்றளவும் நிலவி வருகிறது.
அன்று இரவு மீனாட்சி, தன் கணவருடன் பூப்பல்லக்கில் பவனி வந்தாள், மறுநாள் தேரில் பவனி, கடைசி நாள் கள்ளழகர் வருகை என்று மக்கள் பக்தியில் திளைக்க நாங்களும் அவர்களுடன் ஐக்கியமானோம்.
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com