செவ்வாய்க்கிழமை 16 ஜூலை 2019

மேகாலய நாட்டு நாடோடிக்கதை: இனிமேல்தான் சுபயோகம்!

DIN | Published: 16th June 2019 12:39 PM

தேவ தத்தா என்ற தச்சுத்தொழிலாளி காட்டு மரங்களை வெட்டி வீட்டுக்குத் தேவையான சாமான்களைத் தயாரித்து விற்பவன். ஒரு நாள் காட்டின் மையப் பகுதிக்குச் சென்று வைரம் பாய்ந்த ஒரு மரத்தை வெட்டத் துவங்கினான்." என் ஆயுள் முடிந்தது எனப் புலம்பியது' அந்த மரம். "இல்லை. இனி மேல் தான் உனக்கு சுபயோகம்' என்றது அருகிலிருந்த முதியமரம்.
 ஆச்சரியமடைந்த தச்சன் அந்தக்குரல் தன் பிரமையாக இருக்கும் என்று அந்த மரத்தை வெட்டி, அழகிய கட்டில் உருவாக்கி கடை வீதியில் விற்பனைக்கு வைத்தான். அதன் அழகில் பலரும் மயங்கினர். மாறு வேடத்தில் நகர்வலம் வந்த அரசனும் கட்டிலைப் பார்த்து ஆச்சரியமடைந்தான். பின்னர் ஆட்களை அனுப்பிக் கட்டிலை வாங்கி வரச்சொல்லி அதனை அலங்கரித்து அன்றிரவு தூங்கினான்.
 நள்ளிரவில் கட்டிலின் நான்கு கால்களும், இந்த அரண்மனை காட்சிகள் நமக்குப் புதியவை. போய் சுற்றிப் பார்த்துவிட்டு வரலாம். மந்திர சக்தியால் இதன் பலகை அப்படியே அந்தரத்தில் நிற்கும் என்று சொல்லவும், அதைக் கேட்ட அரசன் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தான். இருப்பினும் என்ன தான் நடக்கிறது பார்ப்போம் என்று பேசாமல் இருந்தான்.
 சற்று நேரம் கழித்து வந்த கால்கள் தங்களைப் பொருத்திக் கொண்டதும் பேச ஆரம்பித்தன. முதல் கால், " நான் தானிய களஞ்சியத்தைப் பார்த்தேன். அரசாங்க ஆட்கள் திருட்டு வழியில் மூட்டைகளைக் கடத்திக் கொண்டிருந்தார்கள்' என்றது.
 இரண்டாவது கால், "நான் கருவூலத்தைப் பார்த்தேன். அதன் காப்பாளரே பொன்னையும், நவரத்தினங்களையும் களவாடிக் கொண்டிருந்தார்' என்றது. மூன்றாவது கால், "நான் ஆயுதப் பாசறைப் பக்கம் சென்றேன். தளபதியே படைக்கலன்களை எதிரி நாட்டினருக்கு விற்கக் கண்டேன்' என்றது.
 நான்காவது கால், "நான் தற்செயலாக இளவரசியின் அந்தப்புரம் பக்கம் போய்விட்டேன். நான் கண்ட காட்சியை எப்படி சொல்வேன்? இளவரசி, மகத நாட்டைச் சேர்ந்த தளபதியுடன் நெருக்கமாக இருந்தார். அவன் அரசருக்குப் பாலில் விஷத்தைக் கலந்து கொடுத்துவிடும்படியும், பிறகு ஆட்சியைக் கைப்பற்றி விடலாம் என்றும் சொன்னான். அதற்கு இளவரசி பயந்து மறுக்கவே அவன் கோபத்தில் இளவரசி கன்னத்தில் அறைந்துவிட்டு வெளியேறினான்' என்றது.
 இவற்றைக் கேட்ட அரசன் தான் கேட்டதெல்லாம் உண்மையா? தன் பிரமையா? என்று தீர்மானிக்க முடியாமல் எழுந்து உடனடியாக இளவரசியின் அந்தப்புரத்துக்குச் சென்று பார்த்தான். அவள் கன்னத்தில் சில விரல்கள் பதிந்து சிவந்திருந்தன. அதற்குக் காரணம் கேட்ட போது திருட்டு விழி விழித்தாள்.
 உடனே அந்த நள்ளிரவில் அவளையும் அரண்மனையில் விருந்தினராகத் தங்கியிருந்த மகத நாட்டு தளபதியையும், பாசறை, கருவூலம், களஞ்சிய காப்பாளர்களையும் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டான்.
 மறுநாள் தச்சன் தேவ தத்தாவை அழைத்துவர ஆட்களை அனுப்பினான். தான் செய்த கட்டிலால் ஏதாவது விபரீதம் நடந்திருந்தால், அரசன் சிறைக்கு அனுப்பக்கூடுமே என்று நடுங்கியபடி வந்தான் தச்சன். அதற்கு நேர்மாறாக அரசன், அவனை மகிழ்ச்சியுடன் வரவேற்று, "தச்சரே, நீ எனக்கு விற்றது சாமானியக் கட்டில் அல்ல. அது என் உயிரையும், சதிகாரர்களிடமிருந்து நாட்டையும் காப்பாற்றிவிட்டது' என்று கூறி நாட்டில் சில பகுதிகளை ஒதுக்கி தச்சரை சிற்றரசனாக நியமித்து நிறையச் செல்வங்களையும் அளித்து அனுப்பி வைத்தான்.
 காட்டில் ஒரு முதிய மரம், "இனி உனக்கு யோகக் காலம் தான்' என்று சொன்னது வெட்டுப்பட்ட மரத்துக்கு மட்டுமல்ல, தனக்கும் சேர்த்துதான் என்று புரிந்து மகிழ்ச்சியில் திளைத்து தன் புதிய வாழ்க்கையைத் துவங்கினான் தச்சன்.
 -அ.ஷண்முக சுந்தரம், பெங்களூரு
 
 
 
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

அரசு பள்ளியை தரம் உயர்த்தும் இளைஞர்கள்
இசையறிஞர் ப. முத்துக்குமாரசாமி நினைவாக... இசையோடு வாழ்வு!
மாற்றத்தை நோக்கி மாற்றுத்திறனாளிகள்!
என்றும் இருப்பவர்கள்!
சிதைவின் விளிம்பில் சித்தன்னவாசல்!