சிந்தை கவர்ந்த திருவிழாக்கள் - 71: உலகிலேயே மிக நீளமான திருவிழா!

""மனைவி பேசாத ஒவ்வொரு வார்த்தையையும் புரிந்து கொள்பவனே முழுமையான கணவன்''
சிந்தை கவர்ந்த திருவிழாக்கள் - 71: உலகிலேயே மிக நீளமான திருவிழா!

""மனைவி பேசாத ஒவ்வொரு வார்த்தையையும் புரிந்து கொள்பவனே முழுமையான கணவன்''

 - ஆல்பிரட் ஹிட்ச்காக் 

மீனாட்சிக்கு கொடுத்த வாக்கின்படி எட்டாம் நாள் சுந்தர வடிவம் கொண்ட சுந்தரேசுவரவர், அவளை மணந்துகொள்கிறார். தேவர்கள், ரிஷிகள், தெய்வங்கள் கலந்துகொண்ட திருமணம் தடபுடலாக நடந்து முடிந்தது. மீனாட்சியின் அண்ணன் விஷ்ணுவே கன்னிகாதானம் செய்கிறார். மீனாட்சியும் சுந்தரேசுவரரும் நெடுங்காலம் மதுரையை ஆள்கின்றனர். அவர்களுக்குப் பிறந்த ஆண் குழந்தைக்கு உக்ர பாண்டியன் என்ற பெயரை சூட்டி அன்புடன் வளர்த்து வருகின்றனர்.  இவரே பின்நாளில் "முருகன்' என்று அழைக்கப்பட்டார். தன் மகனுக்கு உரிய வயதில் பட்டத்தைச் சூட்டி, பிறகு தங்களுடைய சுயரூபத்தைக் காட்டி மறைகின்றனர். இது சொல்லப்பட்டிருக்கிற வரலாறு.

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலை கட்டியது யார்? இதற்கும் ஒரு வரலாறு இருக்கிறது.

விருத்திராசூரனை இந்திரன் கொன்றான். இதனால் இவனுக்குப் பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. தற்போதைய மதுரை அப்பொழுது கடம்பவனக் காடாக இருந்தது. இங்கே சுயம்புவாகத் தோன்றியிருந்த சிவலிங்கத்தை இந்திரன் வழிபட்டு தன்னுடைய தோஷத்தைப் போக்கிக் கொண்டான். இதைப் பற்றி அறிந்த குலசேகரப் பாண்டியன், கடம்பவனக் காட்டை அழித்து அந்தச் சுயம்பு லிங்கத்திற்குக் கோயிலைக் கட்டினான், என்று சிலரும் வேறு பலர் வரலாற்றின்படி, கடம்பவனமாக இருந்த காட்டை அழித்து அழகிய நகரமாக்கும்படி குலசேகரப்பாண்டியனின் கனவில் சிவபெருமான் கூறினான். அப்படி உருவான மதுரை மாநகரத்திற்குச் சிவபெருமான் தன் சடையிலுள்ள சந்திரனின் அமுதத்தைச் சிந்தி புதிய நகருக்கு ஆசி வழங்கினார் என்கின்றனர்.

குலசேகரப்பாண்டியன் காலத்தில் சிறிய கோயிலாக இருந்ததை கி.மு. 300  - இல் மீனாட்சி தன்னுடைய ஆட்சிக்காலத்தில் மிகப்பெரிய கோயிலாகக் கட்டியிருக்கிறாள். அடுத்தடுத்து வந்த பாண்டிய மன்னர்கள் கோயிலில் பல சந்நிதிகளை நிறுவி தெய்வங்களைப் பிரதிஷ்டை செய்தனர். 1310 கி.பி யில் மாலிகாபூர் என்கின்ற டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் படைத்தலைவன், பாண்டிய நாட்டின் மீது போர் புரிய வந்தபொழுது மீனாட்சி அம்மனின் கோயிலில் இருந்த பொக்கிஷத்தை முழுமையாகக் கவர்ந்து சென்றுவிட்டான். 

சிதலமடைந்து கிடந்த மீனாட்சி கோயிலை, (1559-1600) விஸ்வநாத நாயகர், என்கின்ற அரசர் மீண்டும் கட்டுவித்தார். இப்படி நாயக்கர்கள் வம்சத்தில் வந்த மன்னர்கள், சில்ப சாஸ்திர முறைப்படி இந்தக் கோயிலை வடிவமைத்தனர், புதுப்பித்தனர்.

திருமலை நாயக்க மன்னரால் மேலும் இந்தக் கோயில் விரிவாக்கப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திற்குப் பிறகு மீண்டும் அழிவை சந்திக்க இருந்த மீனாட்சி கோயில், இந்து சமயத்தவர்கள், சேகரித்துக் கொடுத்த நன்கொடைகளால், புதுப்பிக்கப்பட்டு 1995-இல் புதுப்பொலிவுடன் தலைநிமிர்ந்து நின்று, இன்று புதிய ஏழு உலக அதிசயங்கள் என்ற பட்டியலில் இடம் பிடிக்கத் தகுதியானவைகளில் ஒன்று என்று பரிந்துரைக்கப்படும் நிலையை எட்டியுள்ளது. 

இப்படி சிவபெருமானுக்காகக் கட்டப்பட்ட கோயிலில் இன்று மீனாட்சி அம்மனையே பிரதான தெய்வமாகப் போற்றி வணங்குகிறார்கள். அம்பாளுக்கு அபிஷேகம், பூஜை, நெய்வேத்யம் படைத்த பின்னரே சுந்தரேசருக்குப் பூஜைகள் நடந்தேறுகின்றன. ஒரு வீட்டில் பெண்ணின் கை ஓங்கி இருந்தால், இங்கே மதுரை ஆட்சியா என்று சொல்வது வழக்கில் இருந்து வருகிறது.

மீனாட்சி அம்மனுக்கு 12 மாதங்களும் திருவிழாவாக இருக்கிறது. ஓராண்டில் 247 நாட்கள் திருவிழா நடைபெறும் இதில் ஒரு மாதம் நடைபெறும் சித்திரை திருவிழா உலகிலேயே மிக நீளமான திருவிழா என்ற தகுதியைப் பெற்றிருக்கிறது. 400 ஆண்டுகள் பழமையான இந்தத் திருவிழா சோழவந்தான் என்ற இடத்தில்தான் நடந்து வந்தது. அதை மதுரைக்குக் கொண்டு வந்தவர் திருமலை நாயக்க மன்னராவார்.

ஒருமுறை திருமலை நாயக்கருக்கு மண்டை சளி நோய் வந்து மிகவும் துன்பப்பட்டார். ஓர் இரவில், "மதுரைக்குப் போய் திருப்பணி செய்' என்ற அசரீரி ஒலிக்க, மன்னரும் அவ்விதமே செய்ய நோய் நீங்கியது. வைணவரான திருமலை நாயக்கர், மீனாட்சியின் பக்தர் ஆனார். மதுரையைத் தலைநகரமாக்கி, மீனாட்சி கோயிலை விரிவுபடுத்தினார்.

15 நாட்கள் மீனாட்சிக்கான திருவிழா, மீதி 15 நாட்கள் அழகருக்கானது என்ற வகையில் நடந்து கொண்டிருந்த திருவிழாக்களை, சைவர்களுக்கும், வைணவர்களுக்கும் இடையே ஒற்றுமை நிலவ வேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்டு திருமலை நாயக்கர் ஒன்றிணைத்தார்.

துர்வாச மகரிஷியின் சாபத்தால் தவளையாகிப்போன மாண்டூக முனிவர், தன் சாபம் நீங்க வைகை நதிக்கரையில் தவம் செய்ய, அவருக்கு சாபவிமோசனம் கொடுக்கவே, கள்ளழகராக மதுரைக்கு வந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. இது திருமலை நாயக்கர் காலத்துக்கு முன்பிருந்த பழைய புராணம்.

பின்னாளில் இத்திருவிழா மதுரையில் வைகை ஆற்றில் இறங்கும்படியான விழாவாக மாற்றியமைக்கப்பட்டது. இதற்காக மதுரை மீனாட்சியின் அண்ணன் அழகர் தங்கையின் மணத்திற்கு வருவதாகவும், வருவதற்குள் திருமணம் முடிந்துவிடவே, ஆற்றிலிருந்து அப்படியே திரும்பி விடுவதாக புதிய கதையும் புனையப்பட்டது.

எது எப்படியோ, மீனாட்சியின் திருக்கல்யாண வைபவத்தைக் காண, என் கணவருடன் திருமணத்திற்கு முதல்நாளே மதுரை மாநகரத்தை சென்று அடைந்தேன். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கும் இந்த சித்திரை திருவிழாவின் முக்கிய அம்சங்கள்,  மீனாட்சிக்குப் பட்டாபிஷேகம் செய்தல், அன்று அவளுக்கு வேப்பம்பூ மாலை சூட்டப்படுகிறது. பாண்டிய மன்னர்களின் குலதெய்வம் என்பதால், அந்த மாலையைச் சூட்டுகிறார்கள், பிறகு மீனாட்சி திக்விஜயம்,  மீனாட்சிக்கும், சுந்தரேசுவருக்கும் திருக்கல்யாணம்,  தேரில் பவனி,   கடைசியாக அழகர் வைகை ஆற்றிற்கு வருகை புரிதல், என்று சித்திரை திருவிழா அமர்க்களப்படுகிறது.

ஹோட்டலில் இருந்து பொடிநடையாக மதுரை நகரத்தின் கோலாகலங்களைக் காணப் புறப்பட்டோம். சித்திரைத் திருவிழாவின் பத்தாம்நாள் நடக்கவிருக்கும் மீனாட்சி திருக்கல்யாணத்தைக் காண லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்து குவிந்திருந்தனர். இதில் வெளிநாட்டு பயணிகளும் அடக்கம். தலையில் மதுரை மல்லி, நகைகள், பட்டுப்புடவை சகிதம் பெண்கள் வலம் வந்துகொண்டிருந்தனர். வளையல் கடைகள், குழந்தைகளுக்கான பலூன்களை விற்பவர்கள், விளையாட்டுச் சாமான்கள் கடைகள், கமர்கட், சவ்வு மிட்டாய் போன்றவற்றை விற்கும் தள்ளுவண்டிகள், என்று கண்கள் பட்ட இடங்களில் எல்லாம் பலவிதமான பண்டங்கள் விற்பனை ஆகிக்கொண்டிருந்தன. பெண்களுக்குச் சளைத்தவர்கள் இல்லை நாங்கள் என்று ஆண்களும் கண்கவர் ஆடைகளோடு வலம் வந்தனர். பெண் குழந்தைகளில் பலர் மீனாட்சி வேடம் தரித்திருந்தனர், சிறுவர்கள் சிவனாகவும், விஷ்ணுவாகவும் அலங்கரித்துக்கொண்டு சென்றுகொண்டிருந்தனர். ஏன் இப்படி...? 

(தொடரும்)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com