செவ்வாய்க்கிழமை 20 ஆகஸ்ட் 2019

ஆலயமணியின் ஓசையிலே!

Published: 09th June 2019 02:48 PM

திருக்கோயில்களில் வழிபாட்டின்போது பயன்படுத்தப்படும் மங்கல ஒலி எழுப்பும் இசைக் கருவிகளில் ஒன்றாக மணி பயன்படுத்தப்பட்டு வருவதைக் காண்கிறோம். கையில் பிடித்துக் கொண்டு அடிக்கப்படும் மணி, "கைமணி' என அழைக்கப்படுகிறது. இதைத்தவிர "கொத்துமணி',"கண்டாமணி' என்று பல வகைகள் ஆலய வழிபாட்டில் உள்ளன. கண்டாமணி' என்பது ஆலயத்தில் வழிபாடு நடப்பதையும், நேரத்தை அறிவிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. கைமணியின் பிடியின் உச்சிப்பகுதியில், சிவன் கோயிலாக இருந்தால் "நந்தி'; பெருமாள் கோயில் என்றால் "கருடன் அல்லது அனுமன்'; காளி-பிடாரி கோயில் என்றால் "திரிசூலம்' காட்டப் பெற்றிருக்கும். பண்டை நாளில் கோயில்களில் வழிபாடு நடக்கும் பொழுது கைமணி, எறிமணி, தூபமணி போன்றவற்றை செய்து அளிக்கவும் தானம் அளிக்கப் பெற்றதை பல கோயில் கல்வெட்டுச் சான்றுகளின் மூலம் அறிகிறோம்.

காளி, பைரவர், துர்க்கை போன்ற தெய்வத்திருமேனிகளில் தனது கரங்களில் ஒன்றில் "மணியை' பிடித்திருப்பதைப் போன்று சிற்ப வடிவங்களில் காணலாம். பழுவேட்டரையர்கள் எடுப்பித்த மேலப்பழுவூர் அவனிகந்தர்ப்ப ஈசுவர கிருஹம் எனப்படும் இரட்டைக் கோயிலில் கருவறை தேவகோட்டத்தில் உள்ள முருகன் சிற்பத்தில், தனது மேற்கரத்தில் சூலத்துடன் கூடிய மணியை தாங்கியிருப்பது தனிச்சிறப்பாக விளங்குகிறது. திருக்கோயில்களில் நடைபெறும் கும்பாபிஷேக வைபவத்தின் போது வழிபாட்டிற்காக பயன்படுத்தப்படும் "கைமணிக்கு' சிறப்பு வழிபாடு நடைபெறுவதைக் காணலாம். வைணவம் போற்றும் ஆச்சாரியர்களில் ஒருவரான சுவாமி வேதாந்த தேசிகன், திருமலையில் எழுந்தருளி அருள்புரியும் வெங்கடேசப் பெருமாளின் "திருக்கோயில் மணியின்' அம்சமாக - அவதாரமாக சிறப்பித்துப் போற்றப்படுகிறார்.

பல கோயில்களில் காணப்படும் மணிகள் அக்கோயிலின் சிறப்பையும், வரலாற்றுப் பெருமையையும் எடுத்துக் கூறுவதில் பெரும் பங்கு வகிக்கின்றன. ராமேஸ்வரம் திருக்கோயிலுடன் நேபாள மன்னர்கள் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள். இக்கோயிலில் அழகிய வேலைப்பாடுடன் காட்சி தரும் மணி நேபாள மன்னரால் 18-ஆம் நூற்றாண்டு வழங்கப்பட்டதாகும்.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி வட்டத்தில் உள்ள திருக்குறுங்குடிகோயில் சிறப்பான வைணவ திருத்தலமாக விளங்குகிறது. இக்கோயிலில் பெருமாள் சந்நிதிக்கு முன்பாக பெரிய மணி ஒன்று தொங்கவிடப்பட்டுள்ளது. திருவாங்கூர் மன்னர் ஆதித்யவர்மா 1949-இல் செய்தளித்த மணி கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலின் மணியில் இச்செய்தி பாட்டாகப் பொறிக்கப்பட்டுள்ளது. 500 ஆண்டுகளுக்கும் மேலாக இம்மணி திருக்குறுங்குடி நம்பியின் புகழை ஒலித்துக்கொண்டே இருப்பது நமக்கு மகிழ்ச்சியை தருகிறது.

திருச்சிராப்பள்ளி தாயுமான சுவாமி கோயிலில் வழிபாட்டில் இருக்கும் மணியில் "திருச்சினாப்பள்ளி ஸ்ரீ தாயுமான சுவாமிமலை நாத கண்டாமணி - சிவமயம்' என்று புடைப்பு எழுத்துக்களாகக் காணப்படுகிறது. மேலும் இது 1918-ஆம் ஆண்டு நாகப்பட்டினம் ரயில்வே தொழிற்சாலையில் சிருங்டன் என்பவரின் மேற்பார்வையில் செய்யப்பட்டது என்பதையும் அறிய முடிகிறது. திருச்சிராப்பள்ளி என்ற பெயர், அக்கால கட்டத்தில் "திருச்சினாப்பள்ளி' என்று ஆங்கிலேயர்களால் அழைக்கப்பட்டு வந்ததையும் அறியமுடிகிறது.

சிதம்பரம் கோயிலில் வெவ்வேறு இடங்களில் மணிகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. நடராசர் சந்நிதிக்கு அருகே ஒரு மணியில், “வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. நாகப்பட்டினத்திலிருந்த தென் இந்திய ரயில்வே பட்டறையில் செய்யப்பட்டு 1889-ஆம் ஆண்டு அளிக்கப்பட்டதை அறியமுடிகிறது. இக்கோயிலில் உள்ள மற்றொரு மணியில் "சிதம்பரம் நடராஜர் கண்டாமணி காரைக்குடி இளையத்தக் குடிக்கோயிலில் ஒருக்கூருடையான மெய்யப்ப செட்டி மகன் செட்டியப்ப செட்டி உபயம் 1884-ஆம் ஆண்டு வார்ப்பு ராமசுப்பய்யா ஆசாரி' என்று பொறிக்கப்பட்டுள்ளது. மணியினை வடித்து, வார்ப்பு செய்தவர் யார் என்ற குறிப்பினையும் இம்மணியின் மூலம் அறிந்து கொள்கிறோம்.

சிதம்பரம் கோவிந்தராஜப் பெருமாள் கோயிலின் தென்பகுதியில் உள்ள மணியில், "ராமசெயம் கலியுகாதி 4990- ஆம் ஆண்டு  சென்ற சர்வதாரி வருடம் தை மாதம் 24-ம் தேதி ஆடுர் கலிராமகுமாரன் மங்களம் பிள்ளை சிதம்பரம் அம்பலவான பரதேசி பண்ணப்பட்டு வைத்திய சுந்தரம் உபயம்' என்ற வாசகங்கள் காணப்படுகின்றன.

சிதம்பரம் கோயிலில் சந்நிதி நுழைவாயிலின் இடப்புறம் உள்ள பெரிய மணியில் "சிதம்பரம் ஆராய்ச்சிமணி - யாழ்ப்பாணம் முழாய் சின்னப்பபிள்ளை உபயம் - 1884' என்று பொறிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் "முழாய்' என்ற பகுதியைச் சேர்ந்த சின்னப்பபிள்ளை என்பவர் இம்மணியை செய்தளித்தார் என்பதை அறியமுடிகிறது. நூறு ஆண்டுகள் மேற்பட்டும் இன்றும் வழிபாட்டு நேரத்தை அறிவிப்பதற்கு இம்மணியினைப் பயன்படுத்தி வருகின்றனர்.

ஜெர்மனியில் - பேசியெம் என்ற இடத்தில் உள்ள வார்ப்பு ஆலை "மணிகள்' செய்வதில் ஒரு சிறப்பிடம் என்ற புகழ் பெற்று விளங்கியிருக்கிறது. உலகின் பல பகுதிகளுக்கும் இங்கிருந்து மணிகள் வார்ப்பு செய்து அனுப்பப்பட்டுள்ளன.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டத்தில் தொலையனூரில் உள்ள பெரிய கருப்பண்ணசாமி கோயிலில் இரண்டு மணிகள் காணப்படுகின்றன. ஒன்று 1922-ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. மற்றொன்று 1992-ஆம் ஆண்டு, புதுவயல் என்ற ஊரைச் சேர்ந்த சித.பெரியண்ணன் என்பவரால் உபயமாக செய்தளிக்கப்பட்டது. இம்மணியும் ஜெர்மனியில் உள்ள ஆயஎ ஆஞஇஏமங என்ற வார்ப்பு ஆலையில் வார்க்கப்பட்டதை அம்மணியின் மீது காணப்படும் எழுத்துப் பொறிப்பினால் அறிய முடிகிறது.

சிதம்பரம் கோயிலில் தெற்கு நுழைவுவாயிலில் ஒரு மணி காணப்படுகிறது. கோயிலில் மாலை வழிபாட்டின்போது இம்மணி ஒலிக்கப்படுகிறது. இம்மணியின் மேல் காணப்படும் எழுத்துப் பொறிப்பில் "1884-ஆம் ஆண்டு சிதம்பரம் கோயிலுக்கு உபயமாக அளிக்கப்பட்டதை' அறியமுடிகிறது.

"சிதம்பரம் நடேசருக்கு சிங்கப்பூரில் தியம் கவுன்சில் தன் கம் சென் உபயம் - தாரண வருடம்' என்ற எழுத்துக்கள் புடைப்பாகக் காணப்படுகின்றன. இந்த மணி தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவர் கடல் கடந்து சிதம்பரம் கோயிலுக்கு தானமாக அளித்திருக்கும் செய்தி சிறப்பானது.

ஆஸ்திரேலியா அருகில் உள்ள நியூசிலாந்து நாட்டில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டு உடைந்த வெண்கல மணி ஒன்று 1836-ஆம் ஆண்டு  கண்டுபிடிக்கப்பட்டு தற்பொழுது அந்நாட்டு அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

இம்மணியில், முகைய்யதீன் வக்குசு உடைய கப்பல் உடைய மணி” என்று புடைப்பு எழுத்தில் எழுதப்பட்டுள்ளது. இம்மணி இடம் பெற்றிருந்த கப்பல் கி.பி.18-ஆம் நூற்றாண்டில் புழக்கத்திலிருந்த ஒரு வணிகக் கப்பலாக இருக்கக்கூடும் என்பது வரலாற்றுக் குறிப்புகளால் தெரிய வருகிறது. தமிழர்கள் கடல் வணிகத்தில் சிறப்புப் பெற்று விளங்கினர் என்பதற்கு நியூசிலாந்து நாட்டில் கிடைத்த மணி சான்றாக அமைகிறது.

தஞ்சை மாவட்டத்தில் கடற்கரைப் பகுதியிலிருந்து வெண்கல மணி ஒன்றும், சீன செப்புக்காசுகளும் கிடைத்துள்ளன. மணியின் எதிரெதிர் பக்கங்களில் சீன எழுத்துக்கள் காணப்படுகின்றன. சீன மொழியில் “பீன்-ஆங்” என்று அழைக்கின்றனர். ஜப்பானிய மொழியில் இதனை “ஹீ-யான்” என அழைக்கின்றனர். இரண்டுக்கும் “சாந்தி” - அமைதி - சமாதானம் என்பது பொருள். சீன நாட்டுக்கும் தமிழகத்திற்கும் நல்ல நட்புறவு இருந்து வந்ததற்கும், கடல் சார் வரலாற்று ஆய்வுக்கும் முக்கிய சான்றாக விளங்குகிறது.

பூம்புகார் அருகே உள்ள தரங்கம்பாடி சங்க காலத்திலிருந்து ஆங்கிலேயர் காலம் வரையிலான தொடர்ச்சியான வரலாற்றுடன் விளங்குகிறது. பாண்டியர் கல்வெட்டில் இவ்வூர் "சடங்கன் பாடியான குலசேகரபட்டினம்'” எனக் குறிக்கப்படுகிறது. இங்குள்ள டேனிஷ் கோட்டை  1620-இல் தஞ்சையை ஆண்ட  ரகுநாதநாயக்கருடன் வணிக ஒப்பந்தம் செய்து கொண்டு, இக்கோட்டையை டென்மார்க் நாட்டினர் அமைத்தனர். இங்குள்ள சீயோன் தேவலாயத்தில் வைக்கப்பட்டுள்ள மணி டென்மார்க் நாட்டுடன் கொண்டிருந்த தொடர்பினை எடுத்துக் கூறுகிறது.

கோயில் வழிபாட்டிற்காக அளிக்கப்பட்டிருந்தாலும், அதன் மேல் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துப் பொறிப்பு அம்மணி எங்கு வார்க்கப்பட்டது, யாரால் எந்த நாட்டைச் சேர்ந்தவர் அளித்தார் என்ற செய்திகளைக் கூறுகிறது. அனைத்து சமய ஆலயங்களில் காணப்படும் "மணிகள்' ஓர் சிறந்த வரலாற்றுச் சான்றாக அமைகின்றன. சிறப்பாக கடற்கரை அருகில் உள்ள ஆலயங்களில் காணப்படும் - வழிபாட்டில் இருக்கும் மணிகளில் காணப்படும் எழுத்துப் பொறிப்புகளை ஆய்வு செய்தால் மேலும் பல அரிய செய்திகளை அறியலாம்.
திருக்கோயில் மணிகள், இறைவழிபாட்டில் பங்குபெற்று விளங்கினாலும் கோயில் மீது அன்பர்கள் கொண்டிருந்த ஈடுபாட்டினையும் எடுத்துக் கூறும் வரலாற்றுச் சான்றுகளாகத் திகழ்கின்றன.

 

- கி. ஸ்ரீதரன் தொல்லியல் துறை (ஓய்வு), சென்னை
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

இயற்கையை நேசிக்கும் அற்புத மனிதர்!

ரோஜா மலரே!- குமாரி சச்சு
 

தமிழக இளைஞர் சாதனை
பராக்பூர்
ஓர்ச்சா