சோளக்காட்டில் வனக்குடில்!

கொல்லிமலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், அதன் நுழைவாயில் பகுதியான சோளக்காட்டில் வனத் துறை சார்பில், அனைத்து வசதிகளுடன்
சோளக்காட்டில் வனக்குடில்!

கொல்லிமலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், அதன் நுழைவாயில் பகுதியான சோளக்காட்டில் வனத் துறை சார்பில், அனைத்து வசதிகளுடன் கூடிய மூங்கிலால் வேயப்பட்ட தங்கும் குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன.
 இங்குள்ள ஆகாய கங்கை, மாசில்லா நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்வதும், அங்குள்ள குளிர்ந்த சீதோஷ்ண நிலையை அனுபவிப்பதும், இயற்கை சார்ந்த உணவுகள், பழ வகைகளை உண்டு ருசிப்பதும் கொல்லிமலையை நாடி வருவோருக்கு பிடித்தமானவையாகும்.
 கொல்லிமலை- நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலம். அவசியம் காண வேண்டிய இடங்களில் கொல்லிமலையும் ஒன்று. கோடை காலத்திலும், ஆண்டுதோறும் நடக்கும் வல்வில் ஓரி விழாவின்போதும் இங்கு சுற்றுலாப் பயணிகள் வருகையை அதிகம் காணலாம். ஒவ்வொரு இடமாகத் தேடி, தேடிச் சென்று பார்ப்பது இம் மலைப்பகுதியின் சிறப்பாகும். இச்சூழலில் கொல்லிமலையில் சுற்றுலாப் பயணிகளை மேலும் மகிழ்விக்கும் வகையில், மூங்கிலால் வேயப்பட்ட வண்ணக் குடில்கள், மாவட்ட வனத் துறையால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
 சோளக்காடு பகுதியில், ரூ.20 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள மூங்கில் குடில் மற்றும் கட்டடங்கள் அண்மையில் பயன்பாட்டுக்கு வந்தன. கொல்லிமலைக்கு வருவோர் இந்த குடில்களில் தங்குவதற்கு ரூ.1,500 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மூங்கில் குடிலின் உள்பகுதியில் இயற்கை சார்ந்த பொருள்கள் அதிகம் உள்ளன.

இதன் பராமரிப்பையும், வருவாயையும் பழங்குடியினர் நலச்சங்கம் வசம் ஒப்படைக்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். கிடைக்கும் வருவாயைக் கொண்டு குடில்களுக்குத் தேவையான பணிகளையும், பழங்குடியின மக்களுக்கான வசதிகளையும் செய்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், குடில்கள் உள்ள பகுதியில் இயற்கை சார்ந்த உணவகம் அமைக்கவும், மகளிர் குழுக்கள் கொல்லிமலையில் விளையும் பொருள்கள் மற்றும் இதர மலைசார்ந்த உணவு பதார்த்தங்கள், உடைகள், மருத்துவ குணமிக்க தைலங்கள் ஆகியவற்றை விற்பனை செய்வதற்கான நடவடிக்கையும் வனத்துறையால் எடுக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 2-ஆம் தேதி நடைபெறும் வல்வில் ஓரி விழாவின்போது மூங்கில் குடில் அமைந்துள்ள பகுதிகள் அழகுற காட்சியளிக்கும் என வனத் துறையினர் கூறுகின்றனர். இது குறித்து கொல்லிமலை வனச்சரகர் அறிவழகன் கூறியது:
 "இங்கு குளியலறை, கழிவறையானது சுமார் ரூ.2 லட்சம் செலவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வெளிப்பகுதியில் மூங்கில்களும் உள்பகுதியில், மைக்கா போன்ற அட்டையினால் முழுவதுமாக மூடப்பட்டுள்ளது. பத்து அடி உயரத்தில் உள்ள இந்த மூங்கில் குடிலில் மின்சாரம், தண்ணீர், சுடுநீர் உள்ளிட்ட வசதிகள் உள்ளன'' என்றார்.
 - எம்.மாரியப்பன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com