சினிமாவில் என் அடுத்தத் துவக்கம் இது !

"ஆசையே துன்பத்துக்குக் காரணம் என புத்தர் உணர்ந்தது சிறு விநாடிதான். ஆனால், அவர் கடந்து வந்த தூரம் ஒரு வனத்தைக் கடந்த மாதிரி. இதுதான் என் தற்போதைய நிலை.
சினிமாவில் என் அடுத்தத் துவக்கம் இது !

"ஆசையே துன்பத்துக்குக் காரணம் என புத்தர் உணர்ந்தது சிறு விநாடிதான். ஆனால், அவர் கடந்து வந்த தூரம் ஒரு வனத்தைக் கடந்த மாதிரி. இதுதான் என் தற்போதைய நிலை.''தன்னிலை விளக்கம் கொடுத்து பேசுகிறார் நடிகர் துருவா. "ஆண்மை தவறேல்' படத்தின் மூலம் அறிமுகம் இருந்தும், பத்து வருடங்களாக சினிமாவில் இயங்காதவர். தற்போது "சூப்பர் டூப்பர்' படத்தின் மூலம் திரைக்கு வருகிறார்.
 "சின்னச் சின்னத் தவறுகள் எல்லாம் சேரும் போதுதான் பெரிய பெரிய அனுபவங்கள் கைக்கு வரும். அப்படி ஒட்டு மொத்த அனுபவங்களையும் பெற்று விட, இந்த ஒரு வாழ்க்கை போதாது. இதோ நம் பக்கத்தில் நடக்கிற சின்னச் சின்னத் தவறுகளிலிருந்து கூட, அனுபவங்களைப் பெற்றுக் கொள்ளலாம். இது ஏதோ ஒரு உபதேசம் போல் இருக்கலாம். ஆனால் உண்மை.'' இதைச் சொல்லி முடிக்கும் போது, துருவாவின் முகத்தில் அவ்வளவு பிரகாசம்.
 "சினிமாவுக்கு முன்னே பின்னே சம்பந்தம் இல்லாத குடும்பம். கால் போன போக்கு, மனம் போன இடம் என்று திரியும் வயதில் இருந்தே இந்த சினிமா மேல் சிறு ஆசை. அவ்வப்போது வருகிற படங்களின் பெரும் வெற்றி, அது தரும் உத்வேகம் இந்தப் பயணத் தொடக்கத்துக்குப் பெரும் பலம்.
 சினிமாவின் மேல் வெறும் ஆசையை மட்டும் கொள்ளாமல், அதைப் பற்றி தீவிரமாகத் தெரிந்து கொண்டேன். ஆனால், சினிமா வாசலுக்கான திறவுகோல் எங்கேயும் இல்லை. முதல் வாய்ப்பில் ஆயிரம் கஷ்டங்கள். யாரும் தயாரிக்க முன் வரவில்லை. எல்லாவற்றுக்கும் என்னையே தருவது என முடிவு செய்து, முதல் படத்தைத் தயாரித்து நடித்தேன். அதுதான் "ஆண்மை தவறேல்.' பெரிய பட்ஜெட், பெரிய திட்டங்கள் என்று அந்தப் படம் தயாரானது. ஒரு வழியாகப் படம் நல்ல அறிமுகம் தந்தது. பெரும் வெற்றி இல்லை, வசூல் இல்லையென்றாலும் நல்ல சினிமாவின் பக்கம் நின்றது.
 ஆனால், அதன் பின் என்னைச் சந்திக்கக் கூட யாரும் வரவில்லை. எப்போதும் துயரம், தனிமை, நஷ்டம் எல்லாம் சேர்ந்து அழுத்தியது. மன ரீதியாகப் பாதிக்கப்பட்டேன். உடல் ஒத்துழைக்க மறுத்தது. சோதித்துப் பார்த்தால், மன அழுத்தமே இதற்குக் காரணம் என கை விரித்து விட்டார்கள். சுமார் 3 வருடங்கள் வரை வெளியே வரவில்லை. யாரையும் சந்திக்கவில்லை. செல் நம்பர் மாற்றினேன். என்னை நானே தனிமைப்படுத்தினேன். ஒரு நாள் ஜெயிப்பேன் என்று எனக்குள் நானே சொல்லிக் கொண்டேன்.'' புன்னகையுடன் மேலும் பேசுகிறார் துருவா.
 சினிமாவுக்கு வந்த பலருக்கும் நிறையக் கதைகள் இருக்கும். ஆனால் எனக்கென்று அப்படி ஒன்றும் இல்லை. துக்கம், கவலை, மகிழ்ச்சி, கொண்டாட்டம், அன்பு, அழுகை இவையெல்லாம் நிறைய இருக்கிறது. நான் பார்த்து பழகின மனிதர்கள் எல்லாரும் அவ்வளவு நல்லவர்கள். நல்ல நல்ல அனுபவங்கள் கொடுத்தார்கள். சிலருக்குப் பணம்தான் குறியாக இருந்தது. சினிமா, வாழ்க்கை என இரண்டிலும் இருந்த குழப்பங்களைப் புரிந்து கொள்ள அவர்கள்தான் துணை நின்றார்கள். அதுதான் இந்த இடத்துக்கு என்னை கொண்டு வந்திருக்கிறது.
 "இவன் பெரிய ஆளு...' னு சில பேர் எடைப் போட்டார்கள். சிலர் மனசை பார்த்து பார்த்துப் பழகினார்கள். இப்படி வாழ்வு நெடுகிலும் நல்ல ஆசான்கள். எல்லோருக்கும் நன்றிகள். யுகங்களின் காத்திருப்பை ஒரு நொடியின் தரிசனம் துடைத்தெறிவது மனித வாழ்வில்தான் நடக்கும். காத்திருப்பின் வலியைச் சுகமாக்கும் உயிர்கள்தான் பிரபஞ்சத்தின் பெருங்கொடை இல்லையா... எதிர்பார்த்துக் காத்திருப்பது பல நேரங்களில் நடப்பதில்லை. ஆனால், காத்திருந்ததை விடவும் அழகான விஷயங்கள் நடந்து விடுகின்றன.
 சினிமாவில் என் அடுத்தத் துவக்கம் இது. இயக்குநர் ஏகே. குறும்பட உலகில் இருந்து வருகிறவர். சில படங்களைக் கொண்டு வந்து காண்பித்தார். இதையே சினிமாவாக எடுக்கலாம் என்றேன். இல்லை, வேறு கதை இருக்கிறது என நம்பிக்கை கொடுத்தார். அதுதான் இந்த சூப்பர் டூப்பர். சின்னக் கதை, பெரிய கமர்ஷியல் என்று என்னை மாற்றி வைக்கப் போகும் கதை. இந்துஜா, ஆதித்யாராம் என சக நடிகர்கள் துணைக்கு இருந்தார்கள்.
 திரைக்கதையில் அவ்வளவு சுவாரஸ்யம். எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த கதை. சென்னையை மையப்படுத்துகிற கதை. பெரும் சுவாரஸ்யங்களும், அதிர்ச்சிகளும் சம விதத்தில் கலந்திருக்கிற கதை. இந்த நேரத்தில் நான் நடிக்க வேண்டிய படம். எதிர்பார்ப்பது எல்லாம் நடந்தால், இந்தப் படம் வேறு ஒரு நிலையில் உங்களை வந்துச் சேரும். உடம்பும், மனசும் லயித்து இயங்குகிற படம். காலம் கடந்தும் ரசிகர்கள் மத்தியில் நிற்க கூடிய படமாக இருக்கும். இதோ நீங்களும், நானும், நாம் எல்லாரும் பார்த்து ரசிக்கிற இந்த உலகம்தான் கதை. நல்ல படம். நல்ல இடத்துக்கு என்னைக் கொண்டு போகும்.
 பெரிய இடங்களுக்கு இன்னும் பயணப்படவில்லை. அதற்குள் நிறைய பேரின் அன்பும், ஆதரவும் கிடைத்திருக்கிறது. "இயல்பா இருக்கப்பா...'னு நிறையப் பேர் சொல்லுவதில் மகிழ்ச்சி.
 இவற்றையெல்லாம் விடப் போராடி வெற்றிப் பெற துடிக்கும் உதவி இயக்குநர்கள், நல்ல சினிமாவை நேசிக்கும் புதுப்படைப்பாளிகள் எல்லோருக்கும் என் இடம் பிடிக்கும். அந்தளவுக்கு வருவேன். இப்போது தெரிகிற வெளிச்சம் எல்லாம் அற்புதம். இதற்கு உண்மையாக இருக்க வேண்டும் என்பதுதான் என் எண்ணம். நல்ல நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்று காத்திருக்கிறேன்.
 நாலே நாலு நல்ல படங்களில் நடித்தால் போதும். அந்த எண்ண ஓட்டத்தில்தான் ஓடிக் கொண்டே இருக்கிறேன். பெரிய ஸ்டார், சின்ன ஸ்டார் என எந்த வித்தியாசத்தையும் ரசிகர்கள் பார்ப்பதில்லை. கதை இருந்தால் போதும்... இந்த நிலை இன்னும் சில ஆண்டுகள் தொடர்ந்தால், எல்லாமே மாறி விடும். கதைதான் முக்கியம். இதுதான் கதை எனத் தீர்மானமாகப் பிடித்து விட்டால், அந்தக் கதையில் எந்த கதாபாத்திரத்தையும் ஏற்று விடுவேன். ஓடுகிற படத்தில் இருப்பதை விட, கதை உள்ள படத்தில் இருக்கவே ஆசைப்படுகிறேன். இந்த நிலைப்பாடு கடைசி வரை இருந்தால் அழகான வெற்றிகளின் பட்டியல் தொடரும்.
 உன்னதமான நேரம் இது. சுவாரஸ்யமான, தீவிரமான படங்களுக்கான காலம்தான் இனி. அப்படி வரும் படங்களில் நான் நிச்சயம் இருப்பேன். கேட்டதை விட, நினைத்ததை விட எல்லாமே அடுத்தடுத்து நல்லதாகவே நடந்து கொண்டு வருவதால், இது நிச்சயம்.
 நெடுந்தூரம் பயணப்பட்டு வந்திருக்கும் இயக்குநர்கள், நல்ல நல்ல கதைகள், நெருக்கமான மனிதர்கள் என எல்லாமும் கைக்கு எட்டும் தூரத்தில் இருக்கிறது. சினிமா ஒரு பதற்றத்துடன் நிற்க வேண்டிய இடம்தான். ஆனால் நம்பிக்கையோடு உழைத்தால், ஆசீர்வதிக்கப்பட்ட இடம் கிடைக்கும். என் சினிமா பயணத்தில் கிடைத்த அனுபவம் இது. எல்லாவற்றுக்கும் நேரம் எடுத்து, புதிது புதிதாக யோசித்து உழைக்கத் தயாராக இருக்கிறேன். அப்படிப் பார்த்தால் இனி வரும் படங்கள்தான் எனக்கான துவக்கம்'' என கண்கள் மலர்ந்து நிற்கிறார் துருவா..
 - ஜி.அசோக்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com