ஆன்மாக்களை முத்தியடையச் செய்யும் கங்கை!

"ஒருமுறை பிரம்மா, காசிக்கு எதிராக வானுலகங்களை வைத்து எடை போட்டார். காசி நகரம் இருந்த தட்டுத் தாழ்ந்தது.
ஆன்மாக்களை முத்தியடையச் செய்யும் கங்கை!

சிந்தை கவர்ந்த  திருவிழாக்கள் 77 - சாந்தகுமாரி சிவகடாட்சம்
 "ஒருமுறை பிரம்மா, காசிக்கு எதிராக வானுலகங்களை வைத்து எடை போட்டார். காசி நகரம் இருந்த தட்டுத் தாழ்ந்தது. ஆனால் எல்லா கடவுள்களுடன் இருந்த வானுலகங்களோ, லேசாக
 இருந்ததினால் உயர்ந்தது.''
 - ஆதிசங்கரர்
 காசி நகரத்தின் பெருமையை, இதைவிட அழகாக யாராலும் சொல்லியிருக்க முடியாது. கங்கையாலும், அதைத் தன் தலையில் வைத்திருக்கும் காசி விஸ்வநாதராலும், அங்கே வாழும் பண்டிதர்கள், யோகிகள், முனிவர்கள், தவசிகள், மேன்மக்களாலும் புனிதம் அடைந்து, வானுலகங்களைவிட உயர்ந்து இருப்பதை ஆதிசங்கரர் சுட்டிக் காட்டுகிறார். ஞானத்தாலும், பக்தி மார்க்கத்தாலும் எடை கூடிய காசி தாழ்ந்து பூலோகத்தில் இருக்கிறது, ஆனால், வானுலகமோ அவை அற்று லேசானதால் மேலே இருக்கிறதாம்.
 "அவன் அருளாலே அவன் தாள் வணங்கி' என்று சிவபுராணம் கூறுவதுபோல, அந்த ஈஸ்வரனை வணங்குவதற்கு மட்டுமல்லாமல் அவன் ஜோதிர்லிங்கமாக மிளிரும் காசிக்கு செல்வதற்கும் அவன் அருள் வேண்டியிருக்கிறது.
 13-ஆவது நூற்றாண்டைச் சார்ந்த ஸ்கந்த புராணத்தில், 11 ஆயிரம் செய்யுள்கள் காசியின் பெருமையை வர்ணிக்கின்றன. அதில் சொல்லியிருப்பதுபடி, ஒருமுறை முருகப்பெருமான் அகஸ்தியர் முனிவரையும், அவருடைய மனைவி லோபமுத்ராவையும் சந்திக்கிறார். அவர்கள் மெய்சிலிர்த்து, முருகனின் பெருமைகளைப் பாடுகின்றனர். அப்பொழுது முருகன் சொல்கிறார், "நான் நினைத்தால் உலகின் எந்தப் பாகங்களுக்கு வேண்டுமானாலும் செல்லலாம். ஆனால் மிகக் கடுமையான தவங்களை மேற்கொள்கிறேன் என்றாலும், என்னால் இதுவரை காசி நகரத்திற்குச் செல்ல முடியவில்லை. சிவனின் கடாட்சம் இருந்தால்தான் காசியை அடைய முடியும். பிறகு அந்தப் புனித காசியை விட்டுச் செல்வது என்பது முடியாத காரியமாக ஆகிவிடும்.'
 "ஓ அகஸ்தியரே, லோபமுத்ராவே நீங்கள் மிகவும் அதிர்ஷ்டம் செய்தவர்கள், ஏனெனில் நீங்கள் நீண்டகாலம் காசியில் வாழ்ந்தீர்கள். ஆகையினால் அகஸ்தியரே நான் உங்கள் உடம்பின் பாகங்களைத் தொடுகிறேன். காசியின் புனித மண்ணைத் தொட்ட பலனை இதனால் நான் அடைவேன்' என்றார். இதை விட காசியின் பெருமையை விளக்க வார்த்தைகள் வேண்டுமா!
 காசி விஸ்வநாதரை தரிசிப்பதற்கு முன் கங்கையில் நீராடக் கிளம்பினோம். ஆதிகாலத்தில் 84 படித்துறைகளைக் கொண்டிருந்த கங்கை நதியின் கரையில் இன்று முப்பது மட்டுமே மிச்சம் இருக்கின்றன. அதில் ஐந்து படித்துறைகள் மிகவும் முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றன. காசியில் கங்கைக்கரைக்குச் சென்றால் பார்க்காமல் வரக்கூடாது என்கின்ற வரிசையில் முதல் மூன்று இடத்தை மூன்று படித்துறைகள் பிடித்திருக்கின்றன. அவை, மணிகர்ணிகா படித்துறை, தச அஷ்வமேத படித்துறை, அரிச்சந்திரன் படித்துறை ஆகும்.
 மோட்டார் படகில், புனித கங்கையின் மீது பயணித்து, எல்லாப் படித்துறைகளையும் பார்த்துக் கொண்டு வந்தோம். எங்களுக்குக் கைடாக வந்த இளைஞர் அமரேஷ்க்கு வயது இருபத்தைத்துக்குள் தான் இருக்கும். ஆனால் காசியின் வரலாற்றைக் கரைத்துக் குடித்திருந்தார். மிக அழகான ஆங்கிலத்தில் படித்துறைகளின், வரலாற்றை விளக்கிக் கொண்டு வந்தார்.
 படகு தசஅஷ்வமேத படித்துறையை நெருங்கியது. அதைச் சுட்டிக்காட்டி அமரேஷ் சொல்லத் தொடங்கினார்." மேடம், புராணக்கதையின்படி இப்படித்துறையில் பிரம்மா அஷ்வமேத யாகம் செய்யும்பொழுது பத்து குதிரைகளை (அஷ்வம்) பலியிட்டதினால் இதற்கு "தசஅஷ்வமேத' படித்துறை என்ற பெயர் வந்திருக்கிறது. இது காசி விஸ்வநாதர் கோயிலுக்கு மிக அருகில் அமைந்துள்ளது. பிரம்மா இங்குப் படித்துறை அமைத்துச் சிவபெருமானை எழுந்தருளச் செய்தார் என்றும் கூறுகிறார்கள்' என்றார்.
 "இன்று மாலை இங்கே நடக்கும் கங்கை ஆர்த்திக்கு உங்களைப் படகில்தான் அழைத்து வரப்போகிறேன். இதைக் காண கூட்டம் அலைமோதும், நெரிசலில் சிக்கிக் கொள்ளாமல், தீப ஆராதனையை, பின்பக்கமாகப் பார்க்காமல், முன்னால் படகில் இருந்து பார்ப்பதே வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்' என்றார்.
 "இப்படிப்பட்ட கங்கை ஆர்த்தி தினந்தோறும் அரங்கேறுகிறதுதானே' என்றேன். "ஆமாம். மேடம், இப்படித்துறையில் கங்கை ஆறு, அக்னி தேவன், சிவபெருமான், சூரியதேவன் மற்றும் முழுப் பிரபஞ்சத்திற்கும், பூசாரிகளால் நாள்தோறும் மாலையில் கங்கை ஆற்றுக்கு ஆர்த்திப் பூஜை நடத்தப்படுகிறது. மேலும் செவ்வாய்க்கிழமை தோறும் மற்றும் முக்கியமான சமயத்திருவிழாக்களின் போதும் சிறப்பு கங்கை ஆர்த்திப் பூஜைகள் நடத்தப்படுகிறது' என்றார்.
 மணிகர்ணிகா மற்றும் அரிச்சந்திரன் படித்துறைகளில், பிணங்களை எரித்துக் கொண்டிருந்தனர். காவி துணியால் போர்த்தப்பட்டிருந்த பிணங்கள் வரிசையாக அந்தப் படித்துறைகளில் படுக்க வைக்கப்பட்டிருந்தன. புகை மண்டலங்கள் சூழ, கொழுந்துவிட்டு எரிந்த தீயைப் பார்த்தபொழுது தானாகவே நம்முள் நான் என்கின்ற அகங்காரம் தொலைந்து, ஞானம் குடியேறுகிறது. எதற்காக இங்கே பிணங்கள் எரிக்கப்படுகின்றன. ஏன் இறந்தவர்களின் சாம்பலைக் கரைக்க இந்துக்களில் பலர் கடல் கடந்தும் இங்கே வருகிறார்கள். என்னுள் எழுந்த கேள்வியை, நான் அமரேஷிடம் வெளிப்படுத்த அவர் சொல்லத் தொடங்கினார்.
 "மன்னன் சகரன் சூரிய வம்சத்தில் தோன்றியவன். அவன் அசுவமேத யாகம் செய்தான். இந்திரன் தனது பதவி பறிபோய்விடுமோ என்று பயந்து, யாகக் குதிரையைத் திருடி, இமாலயத்தில் கடும் தவமியற்றி வந்த கபிலர் என்ற மகாமுனியின் ஆசிரமத்தில் கட்டிவைத்து விட்டான். குதிரையைத் தேடி வந்த சகரனின் புதல்வர்கள் முனிவரைத் துன்புறுத்த, அதனால் கோபம் அடைந்த அவர், ராசகுமாரர்களையும் அவர்களுடன் வந்த அனைவரையும் தனது கோபப் பார்வையால் எரித்துச் சாம்பல் ஆக்கிவிட்டார். தனது பிள்ளைகள் அனைவரும் இறந்துவிட்டதால் மனமுடைந்த சகர மன்னன் தனது பேரன் அம்சுமான் என்பவனுக்கு முடிசூட்டிவிட்டுக் கானகம் சென்று தவம் செய்து முத்தியடைந்தான்.
 அம்சுமானிடம், பல மகான்கள் சொன்னார்கள். சகரனின் புத்திரர்கள் முத்தி அடையவில்லை. அவர்கள் நற்கதி அடையவேண்டும் என்றால் எரிந்துபோன அவர்களின் சாம்பல் மீது தேவர்களின் உலகில் பாய்ந்து செல்லும் கங்கையின் நீரைத் தெளித்தால் மட்டுமே சாபவிமோசனம் பெற்று நற்கதி அடைவார்கள்' என்றனர்.
 கங்கையைப் பூமிக்குக் கொண்டுவர அம்சுமானால் முடியவில்லை. அவனது மகன் அசமஞ்சனாலும் முடியவில்லை. ஆனால் அசமஞ்சனின் மைந்தன் பகீரதன் தனது முன்னோர்களின் ஆன்மாக்கள் முத்தியடையக் கங்கையைப் பூமிக்குக் கொண்டுவர வேண்டிக் கடுந்தவம் செய்தான். அவனது தவத்தைக் கங்காதேவி ஏற்றுப் பூமிக்கு வரச் சம்மதித்தாள். சிவபெருமான் கங்கையின் வேகத்தை அடக்கி பூமியில் நதியாக ஓடச் செய்தார். இவ்வாறு ஓடிய கங்கை நதியில் பகீரதனின் முன்னோர்களின் அஸ்திகள் கரைக்கப்பட்டன. அதனால் அவர்கள் முத்தி பெற்றனர். அன்றிலிருந்து இந்துக்கள் கங்கையில் அஸ்தியைக் கரைத்து முன்னோர்களின் ஆன்மாக்களை முத்தியடையச் செய்து வருகின்றனர்' என்று சொல்லி முடித்துக்கொள்ள, என் கைகள் கங்கையை நோக்கிக் குவிந்தன.
 கங்கையில் புனித நீராடி மகிழ்ந்தோம். அன்று மாலை நாள்தோறும் திருவிழாவாக நடைபெறும் கங்கை ஆர்த்தியைக் காணப் புறப்பட்டோம்.
 (அடுத்த இதழில் நிறைவுபெறும்)
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com