மாற்றத்தை நோக்கி மாற்றுத்திறனாளிகள்!

நம்பிக்கையோடு எந்தத் தொழிலிலும் ஈடுபட்டால் நிச்சயம் அதில் வெற்றி பெறலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக திகழ்கின்றனர் தூத்துக்குடியைச்
மாற்றத்தை நோக்கி மாற்றுத்திறனாளிகள்!


நம்பிக்கையோடு எந்தத் தொழிலிலும் ஈடுபட்டால் நிச்சயம் அதில் வெற்றி பெறலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக திகழ்கின்றனர் தூத்துக்குடியைச் சேர்ந்த 15 மாற்றுத்திறனாளிகள். தங்களுக்கு உள்ள சிறிய குறைபாடுகளை பற்றி கவலைப்படாமல் மாவட்ட நிர்வாகத்தின் உதவியோடு அமைக்கப்பட்ட  உணவகத்தை நடத்தி மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கின்றனர்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வருவோர் அனைவரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது "ட்ரீம் கிச்சன்' என்ற அந்த உணவகம். காலை, மாலை, இரவு என மூன்று வேளையும் உணவு வழங்கும் அந்த உணவகத்தில் பணிபுரியும் 15 பேரும் மாற்றுத்திறனாளிகள்.  

தங்களது பணி குறித்தும், உணவகத்தின் நோக்கம் குறித்தும் தொடர்கிறார் உணவகத்தை நிர்வகித்து வரும் 33 வயது  பி.காம். பட்டதாரியான மாற்றுத்திறனாளி கண்ணன்:

 ""அரசு வேலையை மட்டுமே எதிர்நோக்கி இருக்காமல் தனியார் துறையிலும் ஏதேனும் வேலைவாய்ப்பு அளித்தால் உதவியாக இருக்கும் என பலமுறை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் மனு அளித்தோம். பல நாள்களுக்குப் பிறகு இந்த உணவகத்தை நடத்தும் பணியை எங்களிடம் ஒப்படைத்தார். 3 பெண்கள் உள்பட 15 பேர் தினமும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்.

காலையில் இட்லி, பொங்கல், மதியம் சாம்பார் மற்றும் அசைவ குழம்புடன் சாதம், இரவு சப்பாத்தி, தோசை என்றும் தயார் செய்கிறோம். மேலும், காபி, டீ, குளிர்பானங்கள், பப்ஸ் உள்ளிட்ட பேக்கரி வகை உணவுகளும் தயாரித்து விற்பனை செய்கிறோம். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வருவோர் மட்டுமின்றி ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பணியாளர்களும் எங்களுடைய வாடிக்கையாளர்கள் ஆகிவிட்டனர்.

தன்னம்பிக்கையோடு நாங்கள் உணவகத்தை நடத்தி வருகிறோம். பொதுமக்கள் ஆதரவு அளித்தால் எங்கள் உணவகம் மேலும் வளரும். சுப நிகழ்ச்சிகள், விழாக்களுக்கு தேவையான உணவுகளுக்கு ஆர்டர் அளித்தால் அதையும் செய்ய தயாராக இருக்கிறோம். அப்படி ஆதரவு கிடைக்கும் பட்சத்தில் மாற்றுத்திறனாளிகள் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உதவியாக இருக்கும்'' என்றார் அவர்.

இந்த உணவகம் அமைந்த விதம் குறித்து அதற்கு முழு முயற்சி மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியை சந்தித்தோம்: ""வாரம்தோறும் திங்கள்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் வேலைவாய்ப்பு கேட்டு ஏராளமான மாற்றுத்திறனாளிகள் மனு அளித்த வண்ணம் உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் "ட்ரீம் கிச்சன்' என்ற பெயரில் உணவகம் மற்றும் பேக்கரி தொடங்கப்பட்டுள்ளது.

இந்த உணவகத்துக்கு தேவையான கட்டுமான பணிகள் மற்றும் பூங்கா அமைக்க ராம்கோ நிறுவனத்தின் மூலம் ரூ. 6 லட்சமும், உணவகம், கழிவறை, கிச்சன் கட்டுமானம், பேக்கரி அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு சவுத் கங்கா  புராஜெக்ட் நிறுவனம் மூலம் ரூ. 15 லட்சமும்,  ஐஓசிஎல் நிறுவனம் மூலம் ரூ.8.47 லட்சம் மதிப்பில் உணவக கிச்சனுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் கணினி உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் மற்றும் மாற்றத்திறனாளிகளுக்கு தேவையான பயிற்சிகள் வழங்கப்பட்டது.

இந்த உணவகத்தில் நெகிழிகளை பயன்படுத்தாமல் பாக்குமட்டை உள்ளிட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்களையே பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் வசம் உணவகம் ஒப்படைக்கப்பட்டுள்ளதன் மூலம் மாற்றுதிறனாளிகள் வாழ்வாதாரம் உயர வாய்ப்பு உள்ளது. மக்களின் ஆதரவைத் தொடர்ந்து அடுத்தக்கட்டமாக மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான உதவிகளை செய்ய மாவட்ட நிர்வாகம் முன்வரும்'' என்றார் அவர்.

அரசு வேலை மற்றும் அரசின் சலுகைகளை மட்டும் எதிர்பார்க்காமல் மாற்றத்தை நோக்கி நடை போடும் மாற்றுத்திறனாளிகள் நடத்தும் உணவகம் மென்மேலும் வளர அனைவரும் ஆதரவு அளித்து வருவது கூடுதல் சிறப்பு. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com