திரை கொண்டாட்டம்: புது அனுபவம் - அமலாபால்

மக்கள் மனதில் நிற்கும் கதாபாத்திரத்தை தேடிக்கொண்டிருந்த எனக்கு இப்படம் மூலம் அது நிறைவேறி இருக்கிறது. மக்களின் ரசனைகளுக்கு ஏற்ப


நடிப்பில் முத்திரை 

சமீபத்திய நடிப்பால் கவனம் தொடுகிறார் துரை சுதாகர். ஏற்கெனவே "தப்பாட்டம்' படத்தில் கதாநாயகனாக அறிமுகமான இவர். தற்போது "களவாணி 2' படத்துக்காக வில்லன் வேடம் ஏற்றுள்ளார்.  இது குறித்துப் பேசும் போது... "களவாணி 2' படத்தில் ஏற்று நடித்திருந்த அரசியல்வாதி வேடம் பரவலான பாராட்டுக்களைப் பெற்று தந்துள்ளது.  நடிக்கும்போதே இந்த கதாபாத்திரம் என்னை மெருகேற்றியது. இதற்கு முழு காரணம் இயக்குநர்  சற்குணம். 

பல படங்களில் கதாநாயகனுக்கே பெயர் கிடைக்கும். ஆனால், இந்தப் படத்தில் விமல், ஓவியாவுடன் சேர்த்து வில்லனாக நடித்த எனக்கும் பெயர் கிடைத்திருக்கிறது. இது எனக்கு சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது.

மக்கள் மனதில் நிற்கும் கதாபாத்திரத்தை தேடிக்கொண்டிருந்த எனக்கு இப்படம் மூலம் அது நிறைவேறி இருக்கிறது. மக்களின் ரசனைகளுக்கு ஏற்ப நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இப்போது மேலோங்கி இருக்கிறது. அடுத்து வரலட்சுமி நடிப்பில் உருவாகி வரும் "டேனி' படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறேன். வில்லன் வேடம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. நம்பியார், ரகுவரன் இருவருமே எனக்கு வில்லன் கதாபாத்திரங்களுக்கு ரோல் மாடல்'' என்றார் துரை சுதாகர்.

அசுரகுரு


இயக்குநர் மோகன்ராஜாவின் மாணவர் ராஜ்தீப் எழுதி இயக்கி அறிமுகமாகும் படம் "அசுரகுரு'.

விக்ரம் பிரபு, மகிமா நம்பியார், யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்தியாவையே வியப்பில் ஆழ்த்திய தமிழக ரயில் கொள்ளை பின்னணியைக் கதை களமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. கதை குறித்து இயக்குநர் ராஜ்தீப் பேசும் போது..""கொள்ளையடிப்பதற்கான திட்டங்கள் நிறைய இந்தப் படங்களில் இருக்கும். அது மாதிரி ஒரு படம் இயக்க நினைத்து எழுதியதுதான் இது. இங்கே ஒருவனுக்குப் பணம் மீது அத்தனை வெறி. 

பணத்துக்காக எதையும் செய்யத் துணிந்தவன். எதற்காக அவனுக்கு இவ்வளவு வெறி, வேட்கை... இதைச் சொல்லுவதுதான் படம். அன்பாக வாழ்வதை விட இங்கே பணக்காரனாக வாழத்தான் எல்லாரும் ஆசைப்படுகிறார்கள்..

மாதத்துக்கு ஒன்று, ஏரியாவுக்கு ஒன்று என நடந்த மோசடி வேலைகளைப் பேப்பரில் படித்து, அது தொடர்பான ஆட்களைச் சந்தித்தேன். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் கொள்ளையர்கள், அவ்வளவு புத்திசாலிகள். நிலப்பரப்பு, மக்கள் மனநிலை, பொருளாதாரம் எல்லாத்தையும் கணித்துதான் வெளியே வருகிறார்கள்.அப்படிப்பட்ட ஒருவனின் கதைதான் இது'' என்றார் இயக்குநர்.

கடத்தல் கும்பல் கதை 

குண்டுடர் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வரும் படம் "நம்பர் 9 பஜனை கோயில் தெரு'.

ஹரி, கிரி இருவரும் நள்ளிரவு திருட்டுத் தொழிலில் ஈடுபட்டு வருபவர்கள். ஒரு கட்டத்தில் இருவரும் கடத்தல் கும்பலிடம் சிக்குகிறார்கள். இவர்கள் இருவருக்கும் தெரியாமலேயே கடத்தல் கும்பலின் பொருள் இவர்களிடம் இருப்பதால் கடத்தல் கும்பல் இவர்களைச் சுற்றி வளைக்க, இதை அறிந்த போலீஸ் இந்த இருவரையும், கடத்தல் கும்பலையும் துரத்துகிறது. இதிலிருந்து ஹரியும் கிரியும் எப்படித் தப்பித்தார்கள் என்பதே கதை.

காதல், கவர்ச்சி, நகைச்சுவைக்கு முக்கியத்துவம் வைத்து ஜனரஞ்சகமான பொழுதுபோக்குப் படமாகத் தயாராகி வருகிறது. சித்து, மகேஷ் மஞ்ச்ரேக்கர்,  ராஷ்மி கெüதம், ஷ்ரத்தா தாஸ் நடிக்கின்றனர். பிரவீன் சத்ரு கதை எழுதி இயக்குகிறார். படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன.

புது அனுபவம் 


"மேயாத மான்' படத்தைத் தொடர்ந்து ரத்னகுமார் இயக்கி வரும் படம் "ஆடை'. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இதில் ஆடை இல்லாமல் அமலா பால் தோன்றுவது போல் ஒரு காட்சி இடம்பெற்று, பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது. இதுகுறித்து அமலாபால் பேசும் போது...

""இது ஒரு அழகிய பயணமாக இருந்தது. கதாநாயகியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம். பாதிக்கப்பட்ட பெண் அதிலிருந்து எப்படி மீள்கிறாள் என்ற கருத்தில் உடன்பாடில்லாமல் படம் நடிப்பதையே விட்டுவிட முடிவு செய்திருந்த தருணத்தில் ஆடை படத்தின் கதையைப் படித்ததும் உற்சாகமாக ஒப்புக் கொண்டேன்.

இருப்பினும், படப்பிடிப்பு ஆரம்பிக்கும்போது ஒரு சிறு தயக்கம் இருந்தது. உடனே இயக்குநரிடம் நாம் அனைவரும் ஒரு குழுவாகப் பணியாற்றினால் தான் இப்படம் சிறந்த படமாக வரும் என்று கூறினேன். அதை அவர் ஏற்றுக் கொண்டதால் அனைவரும் ஒன்றாகப் பணியாற்றினோம்.

இது எனக்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கும் புது அனுபவமாக இருக்கும்'' என்றார் அமலாபால்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com