சிதைவின் விளிம்பில் சித்தன்னவாசல்!

ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட குடைவரை மற்றும் ஓவியக் கலைகளைப் பறைசாற்றும் மையங்களில் ஒன்றாகக் கருதப்படும் சித்தன்னவாசல்
வீழ்ந்த மரத் துண்டுகள் அகற்றப்படாத நிலை.
வீழ்ந்த மரத் துண்டுகள் அகற்றப்படாத நிலை.


ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட குடைவரை மற்றும் ஓவியக் கலைகளைப் பறைசாற்றும் மையங்களில் ஒன்றாகக் கருதப்படும் சித்தன்னவாசல் ஓவியங்கள் ஏறத்தாழ அழிந்தும், சுற்றுலா மையத்துக்கான அத்தனை அம்சங்களும் கேள்விக்குள்ளாகி இருக்கின்றன.

புதுக்கோட்டையிலிருந்து விராலிமலைக்குச் செல்லும் சாலையில் 15 கி.மீ தொலைவில் உள்ளது சித்தன்னவாசல். புதுக்கோட்டையின் பிரதான சுற்றுலாத்தலம். இந்திய ஓவியக் கலையில் தமிழ்நாட்டின் பங்கைப் பறைசாற்றும் மிக முக்கியமான ஓர் இடம் இது. 

சித்தன்னவாசல் முத்தமிழ்ப்பூங்காவில் சேதமடைந்த இரும்புக் கதவுகள்.

சித்தன்னவாசல் குன்றின் கிழக்கு முகமாகக் காணப்படும் ஏழடிப்பட்டம், மேற்கு முகமாகக் காணப்படும் குடைவரைக் கோயில் ஆகியன மத்திய அரசின் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. இவையிரண்டும் மிக முக்கியமான மனித குல வரலாற்றையும் அப்போதே அவர்களுக்கு இருந்த கலை அறிவையும் படம்பிடித்துக் காட்டும் ஆவணங்கள்.

இவ்விரு பகுதிகளுக்கும் செல்ல தனித்தனியே ரூ. 25 கட்டணம் செலுத்த வேண்டும். என்ன தான் தொல்லியல் துறை ஆள் போட்டு - வேலி போட்டுப் பாதுகாத்தாலும் சித்தன்னவாசல் பற்றிய குறிப்புகளில் சொல்லப்படும் அளவுக்கான - அச்சில் கிடைக்கும் வண்ண ஓவியங்களை - இங்கே முழுமையாகப் பார்க்க முடியவில்லை. 

முத்தமிழ்ப்பூங்காவில் கஜாவால் வீழ்ந்து.

இயற்கை வண்ணத்தால் தீட்டப்பட்ட இந்த அரிய வகை ஓவியங்கள் ஏறத்தாழ அழிந்தே போயிருக்கின்றன. எஞ்சிய ஓவியங்களையாவது பாதுகாப்பதற்கான சரியான வழியையும் யாரும் இதுவரை முன்வைக்கவில்லை.

விடுமுறை காலங்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். ஆனால், இவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள முத்தமிழ்ப் பூங்கா மற்றும் சிறுவர் பூங்கா பராமரிப்பு இல்லாமல் உள்ளது. 

கஜாப் புயலால்  முத்தமிழ்ப் பூங்காவின்  நட்டநடுவே ஒரு பெரிய மரம் இன்னமும் அகற்றப்படாமல் கிடக்கிறது. இரு வழிகளில் தமிழன்னை சிலை உள்ள வழியில் உடைந்த இரும்புக் கதவு சீரமைக்கப்படவில்லை. விழுந்த மரங்களைத் துண்டாக்கி அடுக்கினார்களே தவிர இன்னும் எடுத்துச் செல்லவில்லை. கப்பல் போல வடிவமைக்கப்பட்டிருந்த கான்கிரீட் அமைப்பு, சுனாமியால் பாதிக்கப்பட்ட கப்பலைக் குறிக்கும் அளவுக்கு சிதைந்துப் போயிருக்கிறது.

சித்தன்னவாசலில் மேற்கு முகப்பில் உள்ள குடைவரைக் கோவில்.

இவ்விரு பூங்காக்கள் மற்றும் படகு இல்லத்தைப் பார்வையிட மட்டும் நபர் ஒன்றுக்கு ரூ. 10 கட்டணம். படகில் சவாரி செல்ல நபர் ஒன்றுக்கு ரூ. 25. இரண்டு படகுகள் மட்டுமே இயங்குகின்றன. மற்றவை சேதமடைந்து கரையில் கவிழ்ந்து கிடக்கின்றன.

தொல்லியல் வரலாற்றைப் பார்வையிடுவதற்கான கட்டணத்துடன் அந்த இடத்தைப் பற்றிய குறிப்பை அச்சிட்டு வழங்கினால் நல்லது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com