அரசு பள்ளியை தரம் உயர்த்தும் இளைஞர்கள்

அரசு பள்ளியை தரம் உயர்த்தும் இளைஞர்கள்

சேலத்தில் இயங்கும் 36 அங்கன்வாடி மையங்களை புதுப்பித்து தனியார் பள்ளிகளுக்கு நிகராக அதனை உருவாக்க வேண்டும் என்று


பராமரிப்பின்றிக் கிடக்கும் அரசு அங்கன்வாடி பள்ளிகளை முற்றிலும் வண்ணம் பூசி, குழந்தைகளுக்குச் சீருடை, அடையாள அட்டை போன்றவற்றை இலவசமாக வழங்கி  தனியார் பள்ளிக்கு நிகராக மாற்றியமைத்து வருகிறார்கள் சேலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர்.

இந்த இளைஞர் குழுவுக்குத் தலைமையேற்றுள்ள பிரதீப்பிடம் பேசினோம்:
""அரசுப்பள்ளிகளில் மரக்கன்றுகளை நாங்கள் நடச் சென்றோம். அப்போது தான் அங்குக் கழிவறை வசதி கூட இல்லாமால் குழந்தைகள் கஷ்டப்படுவது தெரியவந்தது. மேலும் சேலத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் 25 மாணவர்களுக்குக் குறைவாக இருக்கும் விவரமும் எங்களுக்குத் தெரியவந்தது. அதற்குக் காரணம் பள்ளிகளில் எந்த வசதியும் இல்லை என்று அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் சொன்னார்கள். 

சேலத்தில் இயங்கும் 36 அங்கன்வாடி மையங்களை புதுப்பித்து தனியார் பள்ளிகளுக்கு நிகராக அதனை உருவாக்க வேண்டும் என்று நினைத்தோம்.நாங்கள் முதலில் சீரமைக்க நினைத்தது சின்னம்மாபேட்டை அங்கன்வாடி பள்ளி. இது இடியும் நிலையில் இருந்தது. மாநகராட்சி அதிகாரிகளிடம் இது தொடர்பாக மனு அளித்தோம். பள்ளியை சீரமைக்க அரசு நிதி ஒதுக்கவில்லை என்றார்கள். உடனே நாங்களே எங்கள் கையிலுள்ள சிறு தொகையை சேகரித்து இடியும் நிலையில் இருந்த கட்டடத்தை முதலில் சீரமைத்தோம். 

இதனால் குழந்தைகள் பாதுகாப்பான சூழ்நிலையை உணர்ந்தார்கள். முழுக்க வெள்ளை அடித்துக் கொடுத்தோம். மேலும் குழந்தைகளுக்குத் தேவையான விளையாட்டுப் பொருட்களையும் வாங்கி கொடுத்தோம். இதனால் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப மறுத்த பெற்றோர்கள் தானாக கொண்டு வந்து சேர்த்தார்கள். 

அதனைத் தொடர்ந்து தனியார் பள்ளிகளுக்கு நிகராக அம்மாபேட்டையிலுள்ள அங்கன்வாடி பள்ளியை மாற்றினோம். முதல் பள்ளியை விட இங்கு கூடுதலாக பள்ளி மாணவர்களுக்கு நாங்கள் சீருடை, அடையாள அட்டை தயார் செய்து வழங்கினோம். பள்ளி முழுக்க வண்ண மயம் ஆக்கினோம். இதற்கு அந்தப் பகுதி மக்கள் எங்களுக்குப் பெரிதும் உதவி செய்தார்கள். 

மொத்தமாகப் பள்ளியை சீரமைக்க 1 லட்சத்து 40 ஆயிரம் செலவானது. இதில் பெரும் பங்கு அந்தப்பகுதி மக்கள் கொடுத்து உதவினார்கள். மேலும் எங்கள் குழுவில் உள்ள உறுப்பினர்களுக்கு  எலக்ட்ரீசியன் வேலை, பிளம்பிங், கொத்தனார் வேலை, வெள்ளை அடிப்பது போன்றவை  தெரியும் என்பதால் இந்தக் கூலி என்ற செலவு கிடையாது. 

 நாங்கள் அம்மாபேட்டை பள்ளியை தயார் செய்து கொடுத்ததற்கு பல தரப்பினரும் இடமிருந்து பாராட்டு வந்தது.

அதனைத் தொடர்ந்து மூன்றாவது அல்லிக்குட்டை அங்கன்வாடி பள்ளியை சீரமைத்துத் தருமாறு அங்குள்ள மக்கள் கோரிக்கை வைத்தனர். மேலும் இந்த ஆண்டு அரசு பல அங்கன்வாடி மையங்களின் தரத்தை உயர்ந்தியுள்ளது. உடனே அந்தப்பள்ளிக்கு சென்று அனைத்து விஷயங்களையும் மாற்றினோம். 

இப்போது அங்கன்வாடி பள்ளி தனியார் பள்ளிக்கு நிகராக விளங்குகிறது. நாங்கள் பணி மேற்கொண்ட மூன்று பள்ளிகளிலும் தற்போது மாணவர் சேர்க்கை நூறு சதவிகிதம் எட்டிவிட்டது. எங்கள் கஷ்டம் வீண் போகவில்லை. அந்தப்பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்க பலரும் முன் வந்து இருக்கிறார்கள். ஆனால் பள்ளியில் இடமில்லை. அடுத்த மாதம் மற்றொரு பள்ளியில் பராமரிப்பு பணிகளைச்  செய்ய இருக்கிறோம்''  என்கிறார் பிரதீப். 

இது போன்று தமிழகதிலுள்ள அனைத்து இளைஞர்களும்  நினைத்தால் பல அரசுப்பள்ளிகள் புது வாழ்வு பெறும். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com