திங்கள்கிழமை 19 ஆகஸ்ட் 2019

பக்தியோடு உருவாக்கப்படும் விக்ரகங்கள்!

By - வனராஜன்| Published: 07th July 2019 12:33 PM


சோழர் காலத்திய சிலை வடிவமைப்பதில் முக்கியமானவர் கோபி கிருஷ்ணன். கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சுவாமி விக்ரகங்கள் செய்து வருகிறார். சென்னை கொசப்பேட்டையிலும் சிலை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார். சுவாமி விக்ரகங்கள் செய்யப்படும் பின்னணி குறித்து அவரிடம் விரிவாகக் கேட்டோம்:
எங்களுடைய சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள முடையூர் கிராமம். தாத்தா,  தந்தை எனப் பரம்பரையாக இந்த தொழிலைச் செய்து வருகிறோம். சென்னையிலுள்ள கொசப்பேட்டைக்கு தொழில் ரீதியாக வந்து இங்கே தங்கிவிட்டார்கள். திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலுள்ள மூல விக்ரக சிலை என்னுடைய தாத்தா செய்தது. எங்களுடைய முன்னோர் கற்களில் சிலை வடித்தனர். இப்போது நாங்கள் உலோகத்தில் சிலை செய்கிறோம்.

சிலை எப்படி உருவாக்கப்படுகின்றன?

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என பஞ்ச பூதங்களுக்குப்  பயந்தே மனிதன் வாழ்ந்தான். எனவே அவற்றை வழிபடத் தொடங்கினான். மனிதனுக்குப்  பக்தி வந்தது. பக்தி மனிதனை மாற்றி நல்வழிப்படுத்தியது. கடவுளை சிலைகளாக வடிவமைத்துக் கோயில் கட்டி வணங்கினான். இதற்காகத்தான் சிலைகள் உருவாகின. முதலில் கல் சிற்பங்கள் உருவாக்கப்பட்டன. அவை மூலவர்  என்று அழைக்கப்பட்டன. பின்னாளில் செம்பு மற்றும் ஈயத்தால் ஆன செப்பு திரு மேனிகள் செய்யப்பட்டன. தொடர்ந்து செம்பு, பித்தளை, ஈயம், தங்கம், வெள்ளி ஆகிய 5 உலோகங்களால் செய்யப்பட்ட பஞ்சலோக சிலைகள் தயாரிக்கப்பட்டன. இதில் செம்பு 80 சதவீதமும்,  துத்தநாகம் 14 சதவீதமும், ஈயம் 3 சதவீதமும், தங்கம் மற்றும் வெள்ளி சிறிதளவும் சேர்க்கப்படுகின்றன. இவை உற்சவராக ஊரை சுற்றி வந்து மக்களுக்கு அருள்பாலிக்கின்றன.  

சிலைகள் செய்யப்படும் அளவுகள் என்ன?

நாங்கள் 6 அங்குலம் முதல், 4 அடி வரை சிலைகளை வடிவமைக்கிறோம். பெருமாள் சிலை, முருகன் சிலை, அம்பாள் சிலை, விநாயர் சிலை போன்றவற்றை 6 அங்குலம் முதல் வடிவமைக்கலாம். இதன் விலை மூவாயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன. ஒவ்வொரு சிலைக்குப் பின்னாலும் சிறுசிறு நுணுக்கங்கள் உள்ளன. 

விநாயகர் சிலை, அம்பாள் சிலை, முருகன் சிலை போன்றவற்றை சாந்தமாகவும், புன்னகையுடனும் வடிவமைப்போம். காளி, ஆஞ்சநேயர் போன்ற சிலைகளைச் சற்று உக்கிரமாக வடிவமைக்க வேண்டும்.  சிவன் சிலை, புத்தர் சிலை போன்றவற்றை 4 முதல் 6 அடி வரை வடிவமைக்கலாம். நாங்கள் வடிவமைக்கும் சிலைகள் சென்னை விக்டோரியா ஹால், பெங்களூர், புதுதில்லி என பல இடங்களில் விற்பனை செய்யப்படுகின்றன. பொதுவாக, 2 அடி உயர சிலை தயாரிப்பதற்குக் குறைந்தது 45 நாட்களாகும். மழைக்காலம் என்றால் கூடுதல் நாட்கள் தேவைப்படும். சிலையின் உயரத்துக்கு ஏற்ப அதிக நாட்கள் தேவைப்படும்.

சிலை தயாரிப்பின் பின்னணியில் நடக்கும் முக்கியமான விஷயங்கள் என்ன?

சிற்ப சாஸ்திரத்தை அடிப்படையாகக்கொண்டு வடிவமைக்கிறோம்.  இந்தச் சிலை செய்யும் பணியிலுள்ள நாங்கள் அசைவம் சாப்பிடுவதில்லை. அன்றாடம் எங்கள் பணியைத் தொடங்கும் முன்பு தெய்வ வழிபாடு செய்துவிட்டு தான் பணிகளைத் தொடங்குகிறோம். சிற்ப சாஸ்திரப்படி ஒவ்வொரு சிலைக்கும் ஆயுட் காலம் நிர்ணயிக்கப்படுகிறது. சிற்பங்கள் உருவாக்க பொருத்தங்களும் பார்ப்போம். குறைந்தது 8 பொருந்தங்களாவது இருக்க வேண்டும். அதில் முக்கியமானது ஆயுட்காலப் பொருத்தம். ஆயுள் பொருத்தம் பார்த்து செய்தால் சிலைகளின் ஆயுள் குறையாது.

சாமி விக்ரகம் கல் என்றால் ஒரு மண்டலம் அவை தண்ணீரில் இருக்க வேண்டும். பஞ்சலோக சிலை என்றால் 48 நாள்கள் நவதானியத்தில் வைத்திருப்பார்கள். அதன் பின்பு பூஜைகள் செய்து சுவாமிக்குக் கண் திறப்பார்கள்.இது கும்பாபிஷேகத்தின் போது நடைபெறும் நடைமுறைகள். வீடுகளில் அழகிற்காக  வைக்கப்படும் சிலைகளுக்கு இது போன்ற எதுவும் செய்வதில்லை. காட்சிப் பொருளாக வைக்கக்கூடிய சிலைகளுக்கு வேலைப்பாடு என்பதே சுவாமி சிலைகளை விட அதிகமாக இருக்கும். நாங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு சித்தி புத்தி விநாயர் விக்ரகத்தை உருவாக்கி மும்பைக்கு அனுப்பினோம். இந்த விநாயகருக்கு வலது, இடது பக்கம் என மொத்தம் 16 கைகள் இருக்கும். இது எனக்கு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது.

கும்பகோணம் பகுதியைச் சுற்றி அதிகம் சிலைகள் தயாரிக்கப்படுவதன் காரணம் என்ன?

ஒரு சிலை  அழகாக உருவாவதற்கு அடிப்படை தேவை மண். கும்பகோணத்தைச் சுற்றியுள்ள குறிப்பாக சுவாமி மலையில் உள்ள காவிரி ஆற்றில் வண்டல் மண் கிடைக் கிறது. இதுபோன்ற மண்  கிடைப்பது அரிது. வண்டல் மண்ணின் தரம் சிறிது குறைந்தாலும் சிலைகளில்  விரைவில் மாற்றங்கள் ஏற்படகூடும். 

அதனால் தான் இந்தப்பகுதியில்  அதிகம் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளுக்கு அதிக அளவில் சிலை ஏற்றுமதி செய்யப்படுகிறது. 

இன்றைய இளைய தலைமுறையினர் சிலைகள் பற்றி தெரிந்து கொள்கிறார்களா?

முன்பு போல் தற்போது சிலை விற்பனை நடைபெறுவதில்லை. சிலை கடத்தல் என நாள்தோறும் செய்திகள் வரவே தற்போது நாங்கள் தயாரிக்கும் சிலைகளை வாங்கவே பொதுமக்கள் தயங்குகிறார்கள். மேலும் உலோகங்களுக்கான ஜி.எஸ்.டி வரி 12 சதவீதம். இதனால் சிலைகளின் விலை அதிகமாகிவிட்டது. இதனை மத்திய அரசு குறைத்தால் நலிவடைந்த பல கைவினை கலைஞர்கள் மறுவாழ்வு பெறுவார்கள். என்னுடைய வாழ்நாள் வரை விக்ரகங்கள் தயாரிப்பில் இருப்பேன். என்னுடைய வாரிசுகளுக்கு இந்தத் தொழில் வேண்டாம் என நினைக்கிறேன். வருமானம் இல்லாமல் அவர்கள் நாள்தோறும் கஷ்டப்படக்கூடாது என்கிறார் கோபி கிருஷ்ணன்.  

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

இயற்கையை நேசிக்கும் அற்புத மனிதர்!

ரோஜா மலரே!- குமாரி சச்சு
 

தமிழக இளைஞர் சாதனை
பராக்பூர்
ஓர்ச்சா