எம்ஜிஆரும் நானும்..! - கே.பி.ராமகிருஷ்ணன்

எம்ஜிஆருக்கு சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மெய்காப்பாளராக பணியாற்றியுள்ளவர் கே.பி.ராமகிருஷ்ணன்.
எம்ஜிஆரும் நானும்..! - கே.பி.ராமகிருஷ்ணன்

எம்ஜிஆருக்கு சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மெய்காப்பாளராக பணியாற்றியுள்ளவர் கே.பி.ராமகிருஷ்ணன். எம்ஜிஆரின் "நாடோடி மன்னன்' திரைப்படம் தொடங்கி அவரது கடைசி படமான "மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்' வரையிலான படங்களில் சண்டை காட்சிகளில் மட்டுமின்றி எம்ஜிஆரின் இரட்டை வேட காட்சிகள் அமைந்துள்ள படங்களில் எம்ஜிஆரின் மற்றொரு வேடத்திற்கு டூப் நடிகராகவும் 1982-ஆம் ஆண்டு முதல் எம்ஜிஆரின் உத்தரவின்படி ஜெயலலிதாவுக்கு பாதுகாவலராகவும் பணியாற்றியுள்ளவர் இவர். எம்ஜிஆர் உடனான கே.பி.ராமகிருஷ்ணன் தனது அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்:
 எம்ஜிஆரை முதன் முதலில் எப்போது சந்தித்தீர்கள் ?
 1945 -இல் சென்னை வால்டாக்ஸ் சாலையில் 15 ரூபாய் வாடகையில் அவர் தனது தாயாருடன் குடியிருந்த போது சந்தித்தேன். அப்போது நான் அவர் வீட்டிற்கு அருகேயுள்ள பால் கடையில் வேலை பார்த்து வந்தேன். பால் கடை என்றால் உணவகமும் சேர்ந்தே அமைந்த கடை அது. இருப்பினும் இரவு 12 மணி வரை சூடான மசாலா பாலே அங்கு பிரதான வியாபாரம் என்பதால் வால்டாக்ஸ் ரோடு பால் கடை அப்போது பிரபலம். அந்த சமயத்தில் எங்கள் கடைக்கு எம்ஜிஆரும் அவரது அண்ணன் பெரியவர் சக்ரபாணியும் சாப்பிட வருவார்கள். அப்போது முதலே அவர்களிடம் பழக்கம் ஏற்பட்டு பின் ஒரு பொங்கல் நாளில் தலைவரின் இல்லத்திற்கு எனது சக நண்பர் சீதாராமனுடன் சென்றிருந்தேன்.
 எம்ஜிஆர் வீட்டில் யாரெல்லாம் இருந்தனர்?
 அவரது இல்லம் சென்றபோது அவரது அன்னையைதான் முதலில் கண்டோம். எங்களை அன்னையார் உள்ளே அழைத்தார்கள் வீட்டினுள் எம்ஜிஆர், அவரது மனைவி சதானந்தவதி அம்மையார், பெரியவர் சக்ரபாணி, அவரது மனைவி மீனாட்சி அம்மையார், சக்ரபாணியின் மைத்துனர் குஞ்சப்பன் போன்றோர் இருந்தனர். எங்களை மிகுந்த அன்புடன் எம்ஜிஆரும் அவரது தாயாரும் வரவேற்று பொங்கல் உணவு அளித்தார். பின் மலர்ந்த முகத்துடன் அன்னையார் பொங்கல் பரிசாக காலணா காசு கொடுத்தார். இது என் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவம். அன்றைய காலகட்டத்தில் எம்ஜிஆர் சினிமாவில் பிரபலமாகவில்லை. சிறுசிறு வேடங்களில் மட்டுமே நடித்து வந்தார்.பெரிய அளவில் பொருளாதார வசதியில்லை மிகவும் கஷ்டப்பட்டுதான் வாழ்நாளை கழித்து வந்தார். அப்படி இருந்தும் தங்களை நாடி வரும் என்போன்றோர்க்கு உணவும் அளித்து பணமும் கொடுத்து அனுப்பி வைத்தார் அன்னையார்.
 திரைப்படங்களில் எப்போது நடிக்கத் துவங்கினீர்கள் ?
 பால் கடையில் வேலை பார்த்து வந்த போதே உடற்பயிற்சிகள் தற்காப்புக் கலைகள் கற்றுக்கொண்டேன். அப்போது பிரபலமாக இருந்த ஜெமினி, போன்ற நிறுவனங்களுக்கு எங்கள் கடையிலிருந்து தான் உணவு வாங்குவார்கள். அப்படி ஒரு சமயம் பி.யு.சின்னப்பா மூன்று வேடங்களில் நடித்த "மங்கையர்க்கரசி' எனும் படப்பிடிப்பு 1949 - இல் கீழ்ப்பாக்கம் நியூட்டன் ஸ்டூடியோவில் நடைபெற்று வந்தது. அங்கு எடுக்கப் பட வேண்டிய சிலம்ப சண்டை காட்சிக்கு சில ஸ்டண்ட் வீரர்கள் தேவை பட்டனர். அப்போது ஸ்டண்ட் கலைஞர்களுக்கு யூனியன் எல்லாம் கிடையாது. எங்கள் உணவகத்தில் பாக்யா பிச்சர்ஸ் சினிமா கம்பெனிக்கு உணவு வாங்க வரும் நண்பர் ஒருவர் உதவியால் முதன் முதலாக எனக்கும் வேறு சிலருக்கும் சண்டை காட்சி ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.
 அதற்குப் பிறகு தொடர்ந்து சினிமாவில் நடிக்க முடிவெடுத்தீர்களா? இல்லை சந்தர்ப்பம் அமையவில்லையா?
 மூன்று நாள் படப்பிடிப்பில் எங்களுக்கு கிடைத்த சம்பளம் 150 ரூபாய். எங்கள் கடையில் மாத சம்பளமே 40 ரூபாய் தான். எனவே சினிமாவில் நடிக்கும் ஆசை ஏற்பட்டு அனைத்து கம்பெனிகளுக்கும் சென்று வந்தேன். இறுதியில் ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன் என்னை நேர்காணல் செய்து தேர்வு செய்து அவரது படங்களில் வாய்ப்பு தந்தார். அதன்படி ஜெமினி தயாரிப்பில் 1953-இல் வெளியான "ஒளவையார்' படத்தில் ஓரிரு காட்சிகளிலும்,தொடர்ந்து "கொஞ்சும் சலங்கை', "வஞ்சிக் கோட்டை வாலிபன்', "இன்சானியத்' {இந்தி படம்- மற்றும் நாராயணன் கம்பெனி சார்பில் "மனம் போல் மாங்கல்யம்', "கணவனே கண் கண்ட தெய்வம்', பின் மாடர்ன் தியேட்டர்ஸ் "மகேஸ்வரி', தொடர்ந்து "மாமன் மகள்', "வாழ்விலே ஒருநாள்', "பெண்ணின் பெருமை', "சதாரம்', "மல்லிகா' , "மணாளனே மங்கையின் பாக்கியம்', "சபாஷ் மீனா', "கன்னியின் சபதம்', "மக்களை பெற்ற மகராசி' போன்ற படங்களில் சிறு ஸ்டண்ட் காட்சியிலும் மற்ற காட்சிகளிலும் நடித்து தொடர்ந்து எம்ஜிஆரின் "நாடோடி மன்னன்' படம் முதல் தொடர்ச்சியாக அவரது படங்களில் நடிக்க துவங்கினேன்.


 எம்ஜிஆரின் படங்களில் பங்கெடுத்தது குறித்து?
 எம்ஜிஆரின் படங்களில் நடிப்பதற்கு முன் ஸ்டண்ட் பலராமன் மாஸ்டர் குழுவில் நாங்கள் பணியாற்றி வந்தோம் பின் முதன் முதலாக 1956 -இல் எம்ஜிஆரின் வெளிவராத "அதிரூப அமராவதி' எனும் திரைப்படத்தில் ஸ்டண்ட் காட்சி ஒன்றில் நடித்து பின் தொடர்ந்து "நாடோடி மன்னன்" முதல் "மதுரை மீட்ட சுந்தர பாண்டியன்' வரை பல்வேறு எம்ஜிஆர் படங்களில் சண்டை காட்சிகளில் மட்டுமின்றி மற்ற பல காட்சிகளிலும் நடிக்கும் பாக்கியம் ஏற்பட்டது. திரைப் படங்களில் எம்ஜிஆருடன் நடித்து வந்த காலத்தே அவரது எம்ஜிஆர் நாடக மன்ற நாடகங்களிலும் நடித்து வந்தேன். அந்த பாக்கியத்தையும் எங்களுக்கு அளித்திருந்தார் எம்ஜிஆர்.
 எம்ஜிஆரின் இரட்டை வேடக் காட்சிகளில் "டூப்' நடிகராக நடித்த அனுபவம் குறித்து?
 முதன் முதலாக "நாடோடி மன்னன்' திரைப் படத்தில் மன்னனும் நாடோடியும் நேர் எதிரே சந்திக்கும் காட்சியில் அவரது ஒரு வேடத்தில் நடிக்க வாய்ப்பு தந்தார் எம்ஜிஆர். தொடந்து அப்படத்தின் இறுதிக் காட்சியில் கயிற்றுப் பாலம் அறுந்து விழும் காட்சியிலும் எம்ஜிஆரின் மற்றொரு வேடத்தில் நடித்தேன். இக்காட்சி வாகினியில் பிரம்மாண்ட செட் போடப்பட்டு படமாக்கப்பட்டது. இப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து பல்வேறு அவரது இரட்டை வேடக் காட்சிகள் அமைந்த படங்களில் நடிக்கும் பாக்கியம் கிட்டியது.
 எம்ஜிஆரின் எத்தனை திரைப்படங்களில் இரட்டை வேட காட்சிகளில் தோன்றி நடித்துள்ளீர்கள்?
 "ஆசை முகம்' , "மாட்டுக்காரவேலன்' ," குடியிருந்த கோயில்', " நீரும்நெருப்பும்' "பட்டிக்காட்டுப்பொன்னையா', "சிரித்து வாழ வேண்டும்', "நினைத்ததை முடிப்பவன்', "நாளை நமதே', "ஊருக்கு உழைப்பவன்' போன்ற திரைப்படங்களில் ஆரம்பம் முதல் இறுதிவரை எம்ஜிஆர் இருவராக நேர் எதிரே தோன்றும் காட்சிகளில் அவரது மற்றொரு வேடத்தில் நடிப்பதற்கான பாக்கியமும் எனக்கு அமைந்தது. அது மட்டுமின்றி "ஆசைமுகம்', "நீரும் நெருப்பும்', "சிரித்து வாழ வேண்டும்', "நினைத்ததை முடிப்பவன்' போன்ற திரைப்படங்களிலும் இரட்டை வேடங்களில் எம்ஜிஆர் தோன்றி நடித்த சண்டை காட்சிகளிலும் எம்ஜிஆருக்கு எதிர்புறம் தோன்றும் அவரது மற்றொரு வேடத்தில் நடிக்கும் நல் வாய்ப்பையும் எம்ஜிஆர் தந்தது எனது வாழ்நாள் பாக்கியமே.
 - தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com