ரேஸ் பைக் சாம்பியன்!

சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர் ஜகன்குமார். இவரது பெற்றோர் குமார்-லதா.
ரேஸ் பைக் சாம்பியன்!

சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர் ஜகன்குமார். இவரது பெற்றோர் குமார்-லதா.

தந்தை குமார் முதலில் சென்ட்ரிங் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். தற்போது ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். 

ஜகன்குமார் மற்றும் அவரது நண்பர்களுக்கு பள்ளிப்பிராயம் முதலே சைக்கிள் பந்தயம் நடத்துவது விருப்பமான ஒன்றாக இருந்தது. திருவல்லிக்கேணியிலேயே அடிக்கடி சைக்கிள் பந்தயம் நடத்துவது வழக்கம். கோபாலபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தவுடன், புதுக்கல்லூரியில் சேர்ந்து பி.காம் படித்து முடித்தார். சென்னை அடுத்த இருங்காட்டுக் கோட்டையில்  கடந்த 1990-இல் மோட்டார் சைக்கிள், கார் பந்தயத்துக்கான ஓடுபாதை அமைக்கப்பட்டது. அங்கு அடிக்கடி மோட்டார் பைக் பந்தயங்கள் நடைபெறும். 

ரேஸ் பந்தயத்தில் ஆர்வம் கொண்ட ஜகன்குமாரும், இருங்காட்டுக்கோட்டைக்கு நண்பர்களுடன் சைக்கிளில் சென்று போட்டியை கண்டு களிப்பது வழக்கம். அப்போது நாமும் ரேஸ் பைக் வீரராக மாற வேண்டும் என்ற உந்துதல் அவரிடம் ஏற்பட்டது.

இதையடுத்து தனது வசிப்பிடம் அருகே வாடகைக்கு முதன்முதலில் டிவிஎஸ் விக்டர் பைக்கை எடுத்து பழகினார் ஜகன். தொடர்ந்து பல்வேறு வகை மோட்டார் பைக்குகளில் பழகி, போட்டியில் பங்கேற்ற ஜகனுக்கு டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் முழு ஆதரவு தர முன்வந்தது. கடந்த 2009 - ஆம் ஆண்டு முதல் டிவிஎஸ் குழுமத்தின் அங்கமாக உள்ளார் ஜகன்.

தொடர்ந்து தேசிய மோட்டார் பைக் ரேஸ் பந்தயத்தில் சாம்பியனாக வலம் வரும் ஜகன்குமார் இதுகுறித்து கூறியதாவது:

""பள்ளியில் பயிலும் போதே சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சைக்கிள் பந்தயங்களை நடத்துவோம். அதே போல் 2006-இல் இருங்காட்டுக்கோட்டையில் மோட்டார் பைக் பந்தயத்தைக் காண நண்பர்களோடு சைக்கிளிலேயே சென்றோம். பின்னர் பைக்கை வாடகைக்கு எடுத்து அடிப்படை பயிற்சி பெற்றேன். அடுத்த 2007-இல் நடைபெற்ற ரேஸ் பைக் பந்தயத்தில் இரண்டாம் இடம் பெற்றேன்.

பொருளாதார ரீதியில் பின்தங்கிய குடும்பம் என்பதால் கல்லூரியில் பயிலும் போது வீடு வீடாகச்சென்று பேப்பர் போட்டு வந்தேன். தொடக்கத்தில் எனது குடும்பத்தினர் இதற்கு ஆதரவு தரவில்லை. பின்னர் எனது திறமையைப் பார்த்து முழு ஊக்கம் தந்தனர்.

டிவிஎஸ் நிறுவனம் ஆதரவு

எனது செயல்பாட்டை பார்த்து டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் எனக்கு முழு ஸ்பான்சர் செய்கிறது. கடந்த 2009- ஆம் ஆண்டு முதல் தற்போது வரை இங்கேயே உள்ளேன். தமிழகத்தில் பைக் ரேஸ் பந்தயம் ஓரளவு பிரபலமாக உள்ளது. மற்ற மாநிலங்களில் போதிய விழிப்புணர்வு இல்லை.

தமிழகத்தில் சென்னை, கோவையில் இதற்கான ஓடுபாதை உள்ளது. ஆசிய அளவில் சீனா, மலேசியா, தாய்லாந்து, இந்தோனேஷியாவில் பைக் ரேஸ் பந்தயம் சிறப்பாக நடத்தப்படுகிறது. இந்தியாவில் பைக் ரேஸ் என்றாலே அச்சப்படுகின்றனர் அல்லது செலவை நினைத்து மலைக்கின்றனர். 

கடந்த 2011 முதல் (2012 தவிர)  2018 வரை தேசிய சாம்பியனாக உள்ளேன். அதே நேரத்தில் இந்தோனேஷியாவில் 2015-இல் நடைபெற்ற ஆசிய போட்டியிலும் பட்டம் வென்றேன்.

ஒரு சுற்று (லேப்) என்பது 4 கி.மீ தூரம் உடையது. ஒரு போட்டி 8 சுற்று கொண்டதாக இருக்கும். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவை, சென்னை என போட்டி நடக்கும்.

தற்போது 165 சிசி பைக்கை பயன்

படுத்தி வருகிறேன். என்னுடன் சக வீரர் அஹமதுவும் பயிற்சியில் உள்ளார். ஓசூர், அல்லது இருங்காட்டுக் கோட்டையில் பயிற்சி மேற்கொள்வோம். ரேஸ் பைக்கை போட்டியின் தேவைக்கு ஏற்ப வடிவமைத்து டிவிஎஸ் நிறுவனத்தினரே தருவர். 

தினமும் காலை, மாலை இரு வேளையும் உடல்தகுதி பயிற்சி, ரேஸ் பயிற்சியில் ஈடுபடுகிறேன். இளம் வீரர்களின் வேகத்துக்கு ஈடுதர வேண்டியுள்ளது. எனக்கு கிடைத்துள்ள அனுபவத்தின் மூலம் இளம் வீரர்களை உருவாக்க பாடுபடுவேன். 

வரும் ஆசிய பைக் ரேஸ் பந்தயத்தில் கலந்து கொள்ளும் முனைப்பில் பயிற்சி பெற்று வருகிறேன். இதுதொடர்பாக டிவிஎஸ் நிறுவனத்தினர் அறிவிப்பர்'' என்றார் ஜகன்குமார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com