தினம்  ஒரு  மொழி  பேச...!

உங்களுக்கு விருப்பமான  மொழியை நீங்கள் தேர்ந்தெடுங்கள்... அது இந்தியாக இருக்கலாம்... ஜெர்மன், சீன, ஜப்பானிய  மொழியாக இருக்கலாம் ..
தினம்  ஒரு  மொழி  பேச...!

உங்களுக்கு விருப்பமான  மொழியை நீங்கள் தேர்ந்தெடுங்கள்... அது இந்தியாக இருக்கலாம்... ஜெர்மன், சீன, ஜப்பானிய  மொழியாக இருக்கலாம் .. சில மணி நேரங்களில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் மொழிகளில்  சரளமாகப்  பேச வைக்கிறேன்' என்கிறார் விஸ்வநாதன் தம்பியண்ணா. முப்பத்தைந்து ஆண்டுகளாக   இதுவரை சுமார் ஒரு லட்சம் பேருக்கு இந்தி, பஞ்சாபி, தெலுங்கு போன்ற இந்திய மொழிகளையும், ஜப்பான், கொரிய, சீன, ஜெர்மன் மொழிகளையும்  எழுதப் படிக்க  பேச  கற்றுக் கொடுத்துள்ளார் தம்பியண்ணா. தம்பியண்ணாவுக்கு சொந்த ஊர் மதுரை.  சும்மா விளையாட்டாக இந்தி படிக்கப் போனவர். இன்று  அவரால்  பிறரை  இந்தியில் பேச எழுத வாசிக்க வைக்க முடிகிறது.  இதற்காக  மதுரை, கோவை  சென்னை என்று  அடுத்தடுத்து பயணிக்கும்  தம்பியண்ணா    தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்:

""மதுரையில் தென்னக  இந்தி பிரச்சார சபாவில் இந்தி வகுப்புகள் நடக்கும். நானும் சேர்ந்து இந்தி படிக்க ஆரம்பித்தேன்.   படிக்க கட்டணம் உண்டு. ஒரு நாள்  இந்தி மொழியில் "பிரவிண்'  தேர்வுக்கு தேர்வு நடக்கிறது.  அதனால்  வேறு நிலைகளில் படிக்கும் மாணவர்களுக்கு வகுப்பு இல்லை என்று அறிவித்தார்கள். "ஒரு பிரிவு மாணவர்களுக்கு  தேர்வு என்றால் இதர மாணவர்களின்  வகுப்பை ஏன் ரத்து செய்ய வேண்டும்.. பணம் கட்டித்தானே படிக்கிறோம்..'   என்று கோபம் என்னுள் எழுந்தது.  அந்தக் கோபத்தை இந்திப் புத்தகத்தில் காண்பித்தேன். 

அந்த ஒரு நாள் முழுக்க மீண்டும் மீண்டும்  இந்திப் புத்தகத்தை வாசித்தேன். அப்போது ஒரு விஷயம் புரிந்தது. இந்தி  மொழியை  மூன்று நாட்களுக்குள் பேச முடியும்னு எனக்கு தெரிஞ்சு போச்சு.  இரண்டு நாள் மேலும் அந்தப் புத்தகத்தை மாறி மாறி படித்தேன்.  நான்காம் நாள் வகுப்பில் இந்தி பேசினேன். ஆசிரியர்  உட்பட   அனைவரும்  என்னை அதிசயமாகப் பார்த்தனர். 

வேறு மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் இந்தியில் பட்டப்படிப்பு தேர்வு பெற்றிருந்தாலும், இந்தி  சரளாமாய் பேச வராது. ஆனால் அவர் எழுதுவார்.. வாசிப்பார். எந்த மொழியையும் பேசக் கத்துக்கணும். அதுதான் முக்கியம். அப்போதுதான் அந்த   குறிப்பிட்ட  மொழியைப்  பேசுபவர்களிடம் சென்றடைய முடியும். அதைத்தான் நான் செய்து வருகிறேன். முதலில் இந்தியில் பேசக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தேன். பல ஆண்டுகளாக இந்தப் பணி தொடர்ந்தது. எனக்கு ஒரு மொழியை  பேச வைப்பது எளிது. ஒரு மொழியை கொஞ்சம் படித்தாலே அதில் உள்ள சூட்சுமம் எனக்கு விளங்கிவிடும். என்னிடம் வெளிநாட்டு மொழிகள் தெரிந்தவர்கள் இருக்கிறார்கள். அவர்களைக் கொண்டு  வகுப்பில் இருப்பவர்களைப்    பேச வைக்கிறேன். 

ஒரு மொழியை  பேசும் போது சிலவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும். "பேசும்  அல்லது பேசப் போகிற விஷயம் ஏற்கெனவே நடந்ததா...  இனி நடக்க உள்ளதா'  என இரண்டு காலங்களையும்,  பிறகு  "நீங்கள்', "நான்', "அவர்' என மூன்று நிலைகளையும்  அதற்குள்ள  வேறுபாட்டினை புரிந்து கொண்டால்  சுலபமாக ஒரு மொழியை பேசத் தொடங்கலாம்.  

என்னிடம் ஜப்பானிய மொழி  தெரிந்த ஒருவர்  இந்தி படிக்க  வந்தார்.  நான் அவருக்கு இந்தி சொல்லிக் கொடுத்து அவரிடம்  ஜப்பானிய மொழியைக் கற்றுக் கொண்டேன். ஜப்பானிய மொழியை கற்றுக் கொள்வதற்கு முன், ஜப்பானிய சித்திர எழுத்து வடிவத்திற்கு  முன்னோடியாக இருந்த  "ரேடிக்கல்' முறையினைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். ரேடிக்கல்' முறையினை கற்றுக் கொண்டால்,  ஜப்பானிய  சித்திர  எழுத்துக்களை எளிதில் புரிந்து கொள்ளலாம்.  வாசிக்கவும் செய்யலாம். தமிழ்நாட்டில் ஜப்பானிய மொழி கற்றுக் கொள்கிறவர்கள் அனைவருக்கும் உடனடியாக வேலை கிடைக்கும். அந்த  அளவுக்கு ஜப்பான் மொழி தெரிந்தவர்களின் தேவை  உருவாகியுள்ளது. எப்படி  இந்தி கற்றுக் கொண்டால்,  இதர வட மொழிகளான குஜராத்தி, பஞ்சாபி, காஷ்மீரி  மொழிகளை பேசிக் கற்றுக் கொள்ளலாமோ,  அதே போன்று  ஜப்பானிய  மொழியைக் கற்றுக் கொண்டால்  கொரிய,  சீன மொழிகளைப் பேசுவதும் எளிதாகிவிடும்.  அந்த யுக்தியைப் பயன்படுத்தி

அந்த மொழியில் எழுத, படிக்க பேசத் தெரிந்தவர்களைக்  கொண்டு அந்த மூன்று மொழிகளையும்  கற்றுக் கொடுக்கிறோம்.  

இந்தி மொழியில்  பாண்டித்தியம்  பெற்றிருக்கும்  நான்  தமிழ் -இந்தி- ஆங்கிலம் அகராதியை உருவாக்கியிருக்கிறேன். இந்த மாதிரி அகராதி  தமிழ் நாட்டில் இல்லை. தமிழில் என்ன நினைக்கிறோமோ அதற்கான இந்தி சொற்களை  தேர்வு செய்ய இயலாமல் போகிறது. அதனால், இந்தி படித்திருந்தாலும் எழுத, பேச வாசிப்பதில் தடங்கல்கள் அதிகம் ஏற்படுகின்றன.  எனது அகராதி  இந்தியில்  பொருத்தமான  சொற்களைத் தேர்ந்தெடுக்க உதவுகிறது.  இந்த அகராதியை  மாணவர்களுக்கு மட்டுமே வழங்குகிறேன். சந்தையில் பிரசுரம் செய்வதில்லை. இந்தி வகுப்புகளை நேரடியாகவும்,  ஆன்லைன் மூலமாகவும் நடத்தி வருகிறேன்.  

பிற மொழியைக் கற்பது  சிரமமான  காரியம் இல்லை. பல மொழிகளைத் தெரிந்து கொண்டால் எந்தத் தயக்கமும் இன்றி  யார் தயவும் இன்றி பயணிக்கலாம்... பல இடங்கள் சுற்றி வரலாம். மொழிபெயர்த்து  வருமானம் ஈட்டலாம்.  மொழி பெயர்ப்பாளர்களாக  பணி புரியலாம்... தன்னம்பிக்கை பெருகும்... பொது அறிவு கூடும்''  என்கிறார்  தம்பியண்ணா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com