இயற்கையை மீட்கும் இளைஞர்கள்!

விளைநிலங்கள் எல்லாம் வீடுகளாக மாறி வருகின்றன. காடுகளையும் மனிதர்கள் விட்டு வைப்பதில்லை. இந்த சூழ்நிலையிலும் இயற்கையைக் காப்பது நம்முடைய கடமை என்ற முழக்கத்துடன்,  மரங்களை வளர்ப்பதில்
இயற்கையை மீட்கும் இளைஞர்கள்!

விளைநிலங்கள் எல்லாம் வீடுகளாக மாறி வருகின்றன. காடுகளையும் மனிதர்கள் விட்டு வைப்பதில்லை. இந்த சூழ்நிலையிலும் இயற்கையைக் காப்பது நம்முடைய கடமை என்ற முழக்கத்துடன்,  மரங்களை வளர்ப்பதில் தனி அக்கறை காட்டி வருகிறது இளைஞர் படை ஒன்று. அவர்களின் ஒருங்கிணைப்பாளரான கணேசிடம் பேசினோம்.

எங்களுடைய நண்பர் ஒருவர் தான் விதைப்பந்து உருவாக்கும் ஐடியாவைக் கொடுத்தார். இப்போது "தாம்பரம் மக்கள் குழு' என்ற பெயரில் இந்த இயற்கையை வளர்க்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எங்களுடைய சேவையை பற்றிக் கேள்விப்பட்டு பள்ளி, கல்லுரிகளில் இருந்து அழைப்பு வரும். அங்கு எங்கள் குழுவில் உள்ளவர்கள் சென்று  விதைப்பந்து தயாரிப்பது, அதை எங்கெல்லாம் வீசுவது போன்ற செயல்முறை விளக்கத்தை அளித்து வருகிறோம். 

விதைப்பந்து தயாரிப்பது எப்படி?

விதைப்பந்திற்கு வளமான மண், மாட்டு சாணம், சிறு தானிய விதைகள் ஆகியவை சேர்ந்த கலவை தான் தேவை. இந்த கலவைக்கு மண் 5 பங்கும், மாட்டுச் சாணம் 3 பங்கும், சிறுதானிய விதையானது ஒரு பங்கும் எடுத்துக்கொள்ள வேண்டும். இக்கலவையில் ஆடு மற்றும் மாடுகளின் சாணத்தையே எருவாக பயன்படுத்தலாம். மூன்றையும் நன்றாகக் கலந்து நீர் சேர்த்து மாவு போன்று பிசைந்து சிறு உருண்டைகளாகச் செய்தால் விதைப்பந்து தயார். விதைப்பந்து மரமாகிவிடும் என்று நம்புகிறீர்களா?

இது நம்பிக்கை சார்ந்த விஷயமில்லை. செயல்முறை சார்ந்த விஷயம். நாங்கள் முதலில் விதைப்பந்து தயாரித்து அதனை நாங்கள் வசிக்கும் பகுதியில் வீசினோம். அது செடியாக வளர ஆரம்பித்தது. இதனை உறுதி செய்த பிறகு விதைப்பந்து தயாரிப்பில்  இறங்கினோம். மேலும் நாங்கள் தயாரிக்கும் விதைப்பந்தானது, மழை பெய்து முளைப்பதற்கு ஏற்றச் சூழ்நிலையில் விதைப்பந்து தட்டையாக உருகி விதைகள் முளைப்பதற்குத் துணை புரியும். உருண்டையில் உள்ள மண், வேர்கள் வலுவாக மண்ணில் நிலைக்க உதவும். காடுகளை உருவாக்குவதற்கு விதைப்பந்து முறை சரியான தீர்வாக அமையும். நாம் சுற்றுலா போன்ற வெளி இடங்களுக்குச் செல்லும்போது தரிசு நிலங்களில் விதைப்பந்தை வீசினால் போதும் விதைப்பந்துகள் வளர்ந்து காடுகளாகிவிடும். இதுவரை, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விதைப்பந்துகளை தமிழகம் முழுவதும் பரப்பி இருக்கிறோம். இந்த விதைப் பந்துகள் ஓராண்டு வரை பூச்சி அரிக்காமல், கெட்டுப் போகாமல் இருக்கும். மேலும், திருமணம், பிறந்தநாள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு இலவசமாக வழங்கியும் வருகிறோம்.

எந்த வகை மரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்?

வேப்பம், பூவரசு, புங்கை, நாவல்பழம், சீதாப்பழம், வில்வம், விளாம்பழம், இலந்தை என அனைத்து வகை விதைகளைச் சேகரித்து தான் விதைப்பந்து தயாரிக்கிறோம்.  சென்னையின் புறநகர்ப் பகுதியில் குறிப்பாக தாம்பரம் சுற்று வட்டார பகுதியில் ஒரே வகை மரம் மட்டுமே இருப்பதை தெரிந்து கொண்டோம். முடிந்தளவு விதைப்பந்து தயாரித்து தன்னார்வ தொண்டர்கள் உதவியுடன் வண்டலூர், வேங்கைவாசல், காந்திநகர் பகுதியிலுள்ள அடர்ந்த காடுகளில் விதைகளை தூவியுள்ளோம். அவை விரைவில் மரங்களாக உருவாகிவிடும்.

காடுகளை உருவாக்க விதைப்பந்து சரியான தீர்வாகுமா?

இது தொன்மையான எகிப்திய நாட்டு விவசாய முறையாகும். இரண்டாம் உலகப் போருக்குப்பின் ஜப்பான் நாட்டில்       விளை நிலங்களைத் தவிர்த்து எரிமலை சாம்பல் படிந்த பகுதியில் விதைப்பந்துகளை வானிலிருந்து தூவியே காடுகளை உருவாக்கினர். நாம் சுற்றுலா போன்ற வெளி இடங்களுக்குச் செல்லும்போது தரிசு நிலங்களில் விதைப்பந்தை வீசினால் போதும் விதைப்பந்துகள் வளர்ந்து காடுகளாகிவிடும். விதைப்பந்து வீசிய இடத்தில் இதற்கு என்று நாம் எவ்வித பராமரிப்பும் செய்ய வேண்டியதில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com