பஞ்சம் பிழைக்க பச்சை பூமி வேண்டும்....

"மிகத் துணிச்சலாக ஒரு படத்தை எடுத்து வந்திருக்கிறேன். இத்தனை நாள் நான் வாழ்ந்ததற்கான அடையாளம்தான் இந்தப் படம்
பஞ்சம் பிழைக்க பச்சை பூமி வேண்டும்....

"மிகத் துணிச்சலாக ஒரு படத்தை எடுத்து வந்திருக்கிறேன். இத்தனை நாள் நான் வாழ்ந்ததற்கான அடையாளம்தான் இந்தப் படம். இதை நான் கர்வமாக சொல்லவில்லை; பெருமையாக சொல்லிக் கொள்கிறேன்'' - சிலாகித்துப் பேசுகிறார் இயக்குநர் புதியவன் ராசையா. "மண்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்கெனவே பரிச்சயமானவர். ஈழ யுத்த முடிவுக்குப் பின் தமிழ் நில வாழ்க்கைப் பதிவுதான் "ஒற்றை பனை மரம்'.
 
 "நான் ஈழத்துக்காரன். சின்ன வயதில் இருந்தே தேசபக்தி, மத நல்லிணக்கம், மனிதநேயம் என்று சொல்லிச் சொல்லி வளர்த்தார்கள். இறுதி யுத்தத்துக்குப் பின் லண்டனுக்கு போய் விட்டேன். சில ஆண்டுகள் கழித்து ஈழத்துக்கு திரும்பிய போது, என் கிராமமே எனக்கு அடையாளம் தெரியவில்லை. அந்த அளவுக்கு போரின் சுவடுகள் எங்கள் தாய் மண்ணை சூறையாடி விட்டது. அங்கிருந்த நிலை, எங்களின் வாழ்க்கை பற்றி ஆராய்ந்த போதுதான் ஈழத் தமிழர்கள் பற்றிய விசாலமான பார்வை கிடைத்தது. ஈழத்தில் இறுதிக்கட்டப் போரில் நடந்த கொடூரங்கள் எல்லோருக்கும் தெரியும். இணையத்தில் அதற்கு சாட்சிகள் நிறைய இருக்கிறது. ஆனால் அதற்கு பிந்தைய வாழ்க்கை பற்றி நிறைய பேருக்கு தெரியாது. அதைப் பற்றி ஆழமாக யோசித்த போதுதான் இந்தக் கதைக்கான தீப்பொறி எனக்குள் வந்து விழுந்தது.'
 
 படம் என்ன பேச வருகிறது...
 இப்போது இலங்கை தமிழர்களுக்கான அரசியல் என்பது இறுதிக் கட்டப் போருக்கு பிந்தைய குழப்பமான அரசியல். ஊடகங்களும், பொழுதுபோக்குகளும் மலிந்து விட்ட நாட்டில் பொதுமக்களுக்கான அரசியல் ஈர்ப்புகள் மழுங்கடிக்கப்படுகின்றன. வசதி வாய்ப்புகளும், அநீதிகளும் பெருகி விட்ட சமூகத்தில் எந்த அரசியலை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் சாபம் போல் விதிக்கப்பட்டு இருக்கிறது. ஊழலும், அலட்சியங்களும் பெருகி விட்ட சமூகம், 30 ஆண்டு கால ஈழப் போராட்டம் கண் முன்னே வீழ்ந்த கொடூரம்... இந்த தலைமுறை தமிழர்களின் வரலாற்றை, எங்களை தாளாத துயரமாக அழுத்திக் கொண்டு இருக்கின்றது. காலங்காலமாக பேசி பேசி, எங்களை தெருவில் இறக்கி விட்டு, தலைவர்கள் எல்லாம் மாளிகைகளை உள்பக்கமாக சாத்திக் கொண்டு விட்டார்கள். அநீதிகளுக்கு எதிராக அணி திரட்ட, வழி நடத்த, ஒன்று சேர்க்க முடியாத அத்தனை தலைவர்களுக்கும் குற்ற உணர்வை கொடுக்கும் விதமாக இந்த களம் உருவாகி வந்திருக்கிறது.
 
 போருக்குப் பிந்தைய நிலையை சொல்லுவதில் கூட, இன்னும் சிரமங்கள் இருப்பதாக தெரிகிறதே...
 குழப்பமான அரசியல்தான் அதற்கு காரணம். அரசியலும், வாழ்க்கையும் அங்கிருப்பவர்களை பந்தாடிக் கொண்டே இருக்கிறது. சரியான வழிகாட்டுதல்கள் இல்லாமல் நிறைய இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்ட விஷயம், இன்னும் இந்த உலகத்துக்கு தெரியவில்லை. கடந்த தலைமுறை போய் சேர்ந்து விட்டது. மிஞ்சியவர்கள் எல்லாம் புதியவர்கள். போரை நேரில் பார்க்காத பிள்ளைகள் நிறைய பேர் வந்து விட்டார்கள். அவர்களுக்கு இந்த காலம் தந்திருப்பது இயலாமையும் கோபமும் கையறுநிலையும்தான். இந்த தலைமுறைக்கான இன எழுச்சி என்பது இன்னும் 50 ஆண்டுகளுக்கு கிடையாது. அந்தளவுக்கு அங்கே பாதிப்புகள்.
 இப்போது அங்கே என்னென்ன நடக்கிறது என்கிற உண்மையை உருக்கமாக சொல்லியிருக்கிறேன். என் மகனை டாக்டராக்க வேண்டும், கலெக்டராக்க வேண்டும் என ஆசைப்படுகிறவர்களுக்கு மத்தியில், ஈழத்துல மட்டும் "என் மகன் அகதி ஆகணும்' என்று ஆசைப்படுகிறார்கள். அப்படியாவது அவன் எங்கேயாவது உயிரோடு, அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிறவனாய் இருந்தால் போதும் என்று நினைப்பது எவ்வளவு பெரிய வலி. அந்த வலிகளைத்தான் நான் படமாக கொண்டு வந்து பதிவு செய்திருக்கிறேன்.
 
 நிறைய சமரசங்கள் செய்ய வேண்டி இருக்குமே...?
 இலங்கையில் இருக்கும் ஐ.நா. சபை அலுவலகம் முன்"என் மகன் உயிரோட இருக்கானா..?' என்று விடை தெரியாத கேள்விகளோடு, புகைப்படங்களை வைத்துக் கொண்டு நிற்கும் ஆயிரக்கணக்கான பெற்றோர்களை எனக்குத் தெரியும். அது தினம் தினம் மரணத்தைச் சந்தித்துத் திரும்புகிற மாதிரியான வலி. அதை வார்த்தைகளில் சொல்ல முடியாது. 10 லட்சத்துக்கும் மேலான இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக சிதறிப்போய் விட்டார்கள். கடந்த நூற்றாண்டின் மிகப் பெரிய இன அழிப்பு அங்கே நடந்திருக்கிறது. அவர்களின் சொந்தங்கள் என்ன ஆனார்கள் என்று தெரியாது. என்னை நான் ஓர் ஈழத் தமிழனாக உணர்ந்து இந்தப் படத்தை உருவாக்கியிருக்கேன். அதனால் எந்த சமரசமும் செய்யவில்லை.
 
 அப்போ அரசியல் அதிகம் இருக்குமா...?
 இதில் சிங்கள ராணுவத்தோட தவறுகள், புலிகள் பக்க நியாயங்கள் என்று கருத்து சொல்லவில்லை. நடந்துக் கொண்டிருக்கிற உண்மையை அப்படியே அச்சு அசலாகப் பதிவு செய்திருக்கிறேன். செங்காடு, சிறுகரடு, காடு, கள்ளிகள் எல்லாமே போய் விட்டன.
 பஞ்சம் பிழைக்கவும், பசியாற்றவும் பச்சை பூமி வேண்டும். வலிகளும், வேதனைகளும் மட்டுமே இருக்கிற உண்மையான பதிவைக் கொடுத்திருக்கிறேன். என் நிலம், என் மக்கள் சார்ந்த கதை என்பதால் நானே முக்கிய கதாபாத்திரம் ஏற்று விட்டேன். நவயுகா, அஜாதிகா புதியவன், பெருமாள் காசி, மாணிக்கம் ஜெகன், தனுவன் இப்படி பலர் நடிக்கிறார்கள். எங்கள் வலி, வாழ்க்கையை தயாரிக்க முன் வந்த ஆர். எஸ். எஸ். பிக்சர்ஸ் தணிகைவேல் சாருக்கு ஆயிரம் நன்றிகள்!
 - ஜி.அசோக்
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com