இயற்கையை நேசிக்கும் அற்புத மனிதர்!

இயற்கை மீது ஆர்வம் கொண்டவர் சென்னை பம்மலைச் சேர்ந்த இந்திர குமார். மழைநீர் அறுவடை பற்றி தனது மகன் படிக்கும் பள்ளிக்குச் சென்று விளக்கிக் கூறியுள்ளார்.
இயற்கையை நேசிக்கும் அற்புத மனிதர்!

இயற்கை மீது ஆர்வம் கொண்டவர் சென்னை பம்மலைச் சேர்ந்த இந்திர குமார். மழைநீர் அறுவடை பற்றி தனது மகன் படிக்கும் பள்ளிக்குச் சென்று விளக்கிக் கூறியுள்ளார். அப்போது கிடைத்த வரவேற்பையடுத்து, ஐடி பணியில் இருந்தவர் தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு மழை நீர் அறுவடை குறித்து அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் சமூக ஆர்வலராகச் செயல்படத் தொடங்கியுள்ளார். தொடர்ந்து, எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் அமைப்பு மூலமாக ஆயிரக்கணக்கான வீடுகள், கல்லூரிகள், தொழிற்சாலைகளில் மழைநீர்ச் சேகரிப்பு அமைப்பைச் செயல்படுத்தி இருக்கிறார். இது குறித்து இந்திரகுமாரிடம் கேட்டோம்:
 "மனிதன் உயிர் வாழ காற்று, உணவு, நீர் அவசியம். இன்றைய காலகட்டத்தில் இவை அனைத்துமே இயற்கையானதாகவும் ஆரோக்கியமானதாகவும் இல்லை. ஆனால், நாம் நினைத்தால் அதை ஆரோக்கியமானதாக மாற்றலாம்.
 முதலில் மழைநீர் சேகரிப்புக்காக என்னுடைய வீட்டைச் சுற்றியும் 2 அடி அகலம், 4 அடி ஆழத்தில் உறிஞ்சு குழிகளை அமைத்தேன். மழைக்காலத்தில் மழை நீரை பூமிக்கு அனுப்பாவிட்டாலும் கோடைக்கால மழையை நிச்சயம் பூமிக்குள் அனுப்ப வேண்டும் அப்போது தான் நிலத்தடி நீர் குறையாது.
 என்னுடைய வீடு சாலையை விடத் தாழ்வானதாக இருந்தாலும் மழை பெய்தால் எதிர்வீட்டில் தேங்கி நிற்கும் தண்ணீர் கூட என் வீட்டைச் சுற்றி நிற்காததற்கு இந்த உறிஞ்சி குழிகளே காரணம். இந்தப் பகுதியைச் சுற்றி விழும் ஒவ்வொரு துளி மழைநீரையும் பூமி அப்படியே உறிஞ்சி விடுவதால் மழைநீர் தேங்காது.
 எப்படி இது சாத்தியமானது?
 பொதுவாக சாலையை விட வீடு உயரமாக இருக்கும்படியும், வீட்டுக்கு முன்பு காலி இடம் இருக்கும்படியும் தான் வீட்டைக் கட்டுவார்கள். ஆனால், இதிலிருந்து சற்று வித்தியாசமாக யோசித்தேன். வீட்டின் முன்பக்கத்தை சாலையில் இருந்து தாழ்வாகவும், பின்பக்கத்தில் காலி இடம் விட்டும் கட்டி இருக்கிறேன்.
 இதனால் சாலையில் தேங்கும் தண்ணீர் என் வீடு பள்ளத்தில் இருப்பதால் வீட்டைத் தேடி ஓடி வரும். அந்த மழைநீரை சேமித்து வைத்துக் கொள்வேன். 1996 முதல் மழை நீர் அறுவடையைச் சிறப்பாகச் செய்து வருகிறேன். சென்னை மாநகரமே தண்ணீர் இல்லாமல் தவித்தாலும் என் வீட்டில் இதுவரை தண்ணீர் பிரச்னை வந்ததே கிடையாது. என் தோட்டத்தில் இருக்கும் ஒரு செடியின் இலை கூட காயாது .
 மழைநீர் அறுவடை மட்டுமின்றி நாம் பயன்படுத்தும் நீரையும் இயற்கையான முறையில் சுத்திகரிக்க முடியும். வீட்டில் சமையலறையில் இருந்து வெளியேறும் நீரை அப்படியே செடிகளுக்குப் பயன்படுத்தலாம். குளியலறை நீரில் சோப்பு கலந்திருக்கும் என்பதால் அந்த நீர் வெளியேறும் பாதையில் கல்வாழை, அலகேசியை நட்டுவைத்துவிட்டால் ரசாயனங்களை இந்தச் செடிகள் உறிஞ்சிக் கொண்டு சுத்தமான நீராக வெளியேற்றும்.
 குப்பைகளை உரமாக்குவது
 குப்பைகளை தூக்கி தெருக்களில் வீசினால் நாளைய தலைமுறை குப்பையின் கோபுரத்தில் தான் வளர வேண்டிய நிலை ஏற்படும். குப்பைகளில் மக்கும் தன்மையுள்ள குப்பைகள் நமக்குக் கிடைத்த பொக்கிஷம். எனது வீட்டில் சேரும் காய்கறிக் கழிவுகள் உள்ளிட்ட குப்பைகளைத் தனியாகக் கூடாரம் அமைத்து மாட்டுச் சாணம் தெளித்து அவற்றை உரமாக மாற்றுகிறேன்.
 20 ஆண்டுகளாக நான் சேர்த்து வைத்து வரும் குப்பைகளை மண்புழு உரமாக மாற்றி இயற்கை விவசாயிகளுக்கு விற்பனையும் செய்து வருகிறேன். வீட்டுத் தோட்டத்தில் காய்ந்து விழும் இலைச்சறுகுகளை சுத்தமாக இல்லை என்று கூட்டிப் பெருக்கி அள்ளிப் போட்டுவிடாதீர்கள். தாவரங்கள் சூடு தாங்காமல் தன்னை சுற்றி இலைகளை உதிரச் செய்து தனக்குத் தானே குளிர்ச்சியை தேடிக்கொள்ளும் ஒரு இயற்கையான நிகழ்வு அது.
 காய்ந்த சறுகுகளை 2 சிமெண்ட் ரிங்குகள் அமைத்து அதில் சேகரித்து வைத்து அவ்வப்போது சாணத்தைத் தெளித்துக் கொண்டே வந்தால் நல்ல உரம் கிடைக்கும் இவற்றை வீட்டுத் தோட்டம், மாடித் தோட்டத்திற்குப் பயன்படுத்தலாம். காய்கறிக் கழிவுகள் மட்டுமல்ல மாமிச கழிவுகள் ஆகியவற்றையும் காயவைத்து அறைத்துச் செடிகளுக்கு உரமாக்க முடியும். என் வீட்டில் மக்கும் குப்பைகள் அனைத்தையுமே உரமாக்கி விடுவேன்.
 நீர் மேலாண்மை
 தண்ணீரை சுத்தப்படுத்த ஆர்.ஓ, அதிக விலை கொண்ட ஃபில்டர்கள் எல்லாம் தேவை இல்லை ஒரே ஒரு தேற்றான்கொட்டை போதும். செப்புக்குடத்தில் தண்ணீர் ஊற்றி வைத்து ஒரே ஒரு தேற்றான் கொட்டையைப் போட்டால் போதும் சுவையான சுத்தமான குடிநீரை நிம்மதியாகப் பருகலாம்.
 உங்கள் வாழ்க்கையில் நீங்கள் இன்று செய்யும் ஒரு சிறிய மாற்றம், எதிர்கால சந்ததியினருக்கு இயற்கையான வாழ்க்கையைத் தரும். நீரை முறையாகச் சேமித்து ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நாமே அடித்தளம் போட்டு வைப்பது அவசியமாகும்'' என்கிறார் இந்திரகுமார்.


-வனராஜன்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com