உலகம் சுற்றிய தம்பதி...!

கொச்சியில் டீ விற்கும் விஜயன் - மோகனா தம்பதி இதுவரை 23 வெளிநாடுகளுக்குச் சுற்றுலா சென்று வந்து இந்தியாவின் ஆச்சரிய தம்பதிளாகி இருக்கிறார்கள்.
உலகம் சுற்றிய தம்பதி...!

கொச்சியில் டீ விற்கும் விஜயன் - மோகனா தம்பதி இதுவரை 23 வெளிநாடுகளுக்குச் சுற்றுலா சென்று வந்து இந்தியாவின் ஆச்சரிய தம்பதிளாகி இருக்கிறார்கள். அமிதாப் பச்சன் இந்தத் தம்பதிகளைப் பாராட்டிய பிறகுதான் இந்தத் தம்பதிகள் அகில இந்திய அளவுக்குப் பிரபலமானார்கள். விஜயன் - மோகனா குறித்து தயாரிக்கப்பட்ட செய்திப்படத்திற்கு "ஃபிலிம் ஃபேர்' விருதும் கிடைத்துள்ளது. இதுவரை சுற்றுலாவுக்காக 35 லட்சம் ரூபாய் செலவு செய்திருக்கும் விஜயன் மோகனா தம்பதி பெரிய அல்லது நடுத்தரப் பணக்காரர்களாக இருப்பார்கள் என்று நினைத்தால் அது தவறு.
 கொச்சியில் காந்தி நகர் பகுதியில் விஜயன், மோகனா சிறிய ஹோட்டலை நடத்தி வருபவர்கள் அதுவும் முழு நேரக் கடையல்ல. காலை ஆறிலிருந்து பதினொரு மணி வரை மட்டுமே. மாலையில் நான்கு முதல் எட்டு மணி வரை மட்டுமே கடை திறந்திருக்கும். இங்கு விலை குறைவாகவும், சுத்தமாகவும் இருப்பதால் வாடிக்கையாளர்கள் அதிகம்.
 சிறு கடையை நடத்துபவர்களுக்கு 23 நாடுகள் சுற்றி வருவது எப்படிச் சாத்தியமானது ..?
 விஜயன் பேச ஆரம்பித்தார். பத்தாம் வகுப்பில் பாஸ் ஆனாலும் எனது படிப்பு நின்று போனது. மேலே படிக்க வசதியில்லை. எங்கள் பரம்பரைத் தொழில் டீ பலகாரம் உண்டாக்கி சைக்கிளில் கடை கடையாய் போய் விற்பது. டீ விற்றுக் கொண்டிருந்த என்னைப் புண்ணியத் தலங்களுக்குச் சென்றுவரும் யாத்ரீகர்களுக்கு உணவு தயாராக்குவதில் உதவி செய்ய பணி அமர்த்தினார்கள். அப்பா துணிச்சலுடன் என்னை அனுப்பி வைத்தார். அந்த ஒரு மாதம் சுற்றுப் பயணம் தான் முதல் சுற்றுப்பயணம். பிறகு என் அண்ணன், " வா ஹரித்துவார் போய்ட்டு வரலாம்' என்று அழைத்தார் . இது இரண்டாம் சுற்றுப்பயணம் .
 சிறுகச் சிறுக சேமித்து இரண்டு மகள்களுக்கும் திருமணம் செய்து வைத்தேன். நடு நடுவே திருப்பதி போய் வருவோம். வாடகை வீட்டில் வாழ்ந்தது போதும் போதும் என்றாகிவிட்டது... அத்தியா
 வசிய வசதிகள் உள்ள வீட்டை விலைக்கு வாங்கினேன். கடமைகள் எல்லாம் செய்து முடித்ததும் 2007-இல் திருப்பதி போனோம் ... தரிசனம் முடிந்து வெளியே வந்து நின்றோம். அப்போது வானத்தில் விமானம் ஒன்று பறந்து சென்றது அதைப் பார்த்த மோகனா " "நாமெல்லாம் விமானத்தில் ஏறி பறக்க முடியுமா..'" என்று பெருமூச்சு விட்டார்.
 திருப்பதியிலிருந்து கொச்சி திரும்பிய ஒன்றிரண்டு நாட்களில் செய்தித்தாளில் வெளிநாடு சுற்றுலா போவதற்கான விளம்பரம் வெளியாகி இருந்தது. பெயர் கொடுக்க ஓடிப் போனேன். சும்மா பெயர் கொடுத்தா சரிப்படாது. பத்தாயிரம் ரூபாய் முன்பணம் செலுத்த சொன்னாங்க. முன்பணம் அடைச்சு பெயர் பதிவு செய்ததும், " பாஸ்போர்ட் கொடுத்திட்டு போங்க' என்றார்கள். அப்போது தான் "பாஸ்போர்டின் ஞாபகம் வந்தது.. பாஸ்போர்ட் அப்ளை செய்தோம். முழுப் பணம் கட்டி 2007-இல் வளைகுடா நாடுகள் இஸ்ரேல், பாலஸ்தீன், எகிப்து சென்று வந்தோம்
 இப்படி 2010-இல் மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, 2012-இல் ஐரோப்பா நாடுகள் சென்று வந்தோம். சுற்றிய நாடுகளின் எண்ணிக்கை மொத்தம் 23. அமெரிக்கா, லத்தீன் அமெரிக்க நாடுகள் பார்த்து விட்டோம் . வரும் அக்டோபரில் 24 , 25 ஆவது நாடுகளாக ஆஸ்திரேலியா நியூசிலாந்து போகிறோம்.
 திரைப் படங்களில் பார்த்து ரசித்த இடங்களை நேரில் பார்க்கும் போது ஏற்படும் மகிழ்ச்சி இருக்கிறதே அதை வார்த்தையில் சொல்ல முடியாது. "அன் ஈவினிங் இன் பாரிஸ்' படத்தைப் பார்த்துவிட்டு, பாரிஸ் நகரை, ஈபில் டவரைப் பார்த்தேன் பிரமாண்டமாக இருந்தது .. டூரில் உடன் வரும் பயணிகள், " கொச்சியில் என்ன செய்கிறீர்கள்' .." என்று விசாரிப்பார்கள். " சின்ன டீ ஸ்டால் நடத்துகிறேன்..' என்றால் நம்பமாட்டார்கள்... பெரிய ஹோட்டலா இருக்கும் இல்லைன்னா இவ்வளவு செலவு செய்து வெளிநாடு டூர் வரமுடியுமா என்று எதிர் கேள்வி போடுவார்கள். "என்ன சொன்னாலும் என் பேச்சு எடுபடாது என்பதால் நாங்கள் மெளனமாக இருந்து விடுவோம்.'
 இந்தத் தம்பதிகள் "அதிக உலகநாடுகள் சுற்றிய இந்தியத் தம்பதி' என்ற சாதனை செய்திருக்கிறார்கள்.
-பிஸ்மி பரிணாமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com