திங்கள்கிழமை 19 ஆகஸ்ட் 2019

நிழலாகும் நிஜங்கள்!

Published: 11th August 2019 10:27 AM

பெரும் ஆளுமையின் வாழ்க்கையை ஆவணப்படுத்தும் நோக்கம் மட்டுமே இருந்த வாழ்க்கை வரலாற்றுப் படங்கள், தற்காலத்தில் வணிக லாபம், அரசியல் நோக்கம், கொள்கைப் பரப்புரை எனப் பல வடிவங்களில் உருவாக்கப்படுகின்றன. இந்த வகையில் மோடி, ஜெயலலிதா, எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் என அரசியல் கட்சித் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு படங்கள் உருவாகி வருகின்றன.
 இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் கடந்த சில ஆண்டுகளில் இந்தியா முழுக்க வந்துகொண்டிருக்கின்றன. "கப்பலோட்டிய தமிழன்', "வீரபாண்டிய கட்டபொம்மன்', "ராஜராஜசோழன்' என தமிழ் வரலாற்று அடையாளங்களாகத் திகழ்ந்தவர்களின் படங்கள் மட்டுமே ஒரு காலத்தில் வெளியாகி வந்தன. இந்த வகைப் படங்களில் நடிகர் சிவாஜி கணேசன் நடித்துப் பெரும் புகழ் பெற்றார்.
 தமிழில் மணிரத்னத்தின் தைரியமான முயற்சி "இருவர்'. 1997-ஆம் ஆண்டு வெளியானது. அரசியலிலும், சினிமாவிலும் தமிழகத்தையே ஆட்டிப்படைத்த எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவான படம். ஆனால் அவர்களின் வாழ்க்கைதான் என்று மணிரத்னம் எதிலும் குறிப்பிடவில்லை. இருப்பினும் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுக் கொண்டாடப்பட்ட படம். பல பிரச்னைகளைத் தாண்டி வெளியானது.
 இதே பாணியில் மும்பை தாராவியில் கோலோச்சிய வரதராஜ முதலியாரின் வாழ்வைத் தழுவி மணிரத்னம் உருவாக்கிய "நாயகன்', நெல்லை மாவட்டம் சீவலப்பேரியில் வாழ்ந்து மறைந்த பாண்டியனின் வாழ்வைத் தழுவிய "சீவலப்பேரி பாண்டி', கோவில்பட்டியில் வாழ்ந்த வீரப் பெண்மணி வீரலெட்சுமியின் வாழ்க்கையைத் தழுவி உருவான "கோவில்பட்டி வீரலெட்சுமி', அம்பானியின் வெற்றிக் கதையை படமாக்கிய மணிரத்னத்தின் "குரு', நடிகை சில்க் ஸ்மிதாவின் சினிமா பயணத்தைத் தழுவி உருவான "தி டர்ட்டி பிக்சர்' எனப் பல படங்களை இதற்கு உதாரணமாகசொல்லலாம்.
 தற்போது இந்த வகையில் இந்தியா முழுமையும் உள்ள ஆளுமைமிக்க அரசியல் கட்சித் தலைவர்களின் வாழ்க்கையைத் தழுவி படமாக்கும் பாணி தொடங்கியுள்ளது. தமிழ் மட்டுமன்றி ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என எல்லா மொழிகளிலும் இதுதான் இன்றைய புதுப் பாணியாகவும் இருக்கிறது.
 "நடிகையர் திலகம்', "செல்லுலாய்ட்', "பேட்மேன்', "ராமானுஜன்' என ஏதோவொரு துறையின் சாதனையாளர்களைப் பற்றி ஒருபுறம் வந்துகொண்டிருந்தாலும், "சஞ்சு', "ஆக்ஸிடென்டல் பிரைம் மினிஸ்டர்', "என்.டி.ஆர்' என உள்நோக்கத்துடன் எடுக்கப்படும் வாழ்க்கை வரலாற்றுப் படங்களும் திரைக்கு வந்துகொண்டுதான் இருக்கின்றன.
 எம்.ஜி.ஆர்
 முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரை நினைவுகூர்ந்து தமிழக அரசு கொண்டாடி வந்த நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக, இந்தப் படம் அரசு சார்பில் வெளியாகப்போகிறது. அரசே தயாரிப்பதால் இந்தப் படத்தில் எம்.ஜி.ஆர் பற்றிய எதிர்மறையான காட்சிகள் இடம்பெறாது எனவும், அதனால் இது ஒரு முழுமையான பயோபிக்காக இருக்காது என்றும் சினிமா விமர்சகர்களால் கூறப்படுகிறது.
 என்.டி.ஆர்
 இந்த ஆண்டு தொடக்கத்தில் தெலுங்கில் என்.டி.ஆரின் வாழ்க்கைப் படம் வெளியானது. தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான என்.டி.ராமராவின் வாழ்க்கையை மையப்படுத்தியது இது. மற்ற படங்களைப் போல் இல்லாமல் இது இரண்டு பாகங்களாக வெளியாகிறது. ராமராவின் திரைத்துறை வாழ்க்கையை முதல் பாகமான "கதாநாயகுடு (கதாநாயகன்)' படத்திலும், அரசியல் வாழ்க்கையை "மஹாநாயகுடு (மகாநாயகன்)' என இரண்டாம் பாகத்திலும் படமாக்கினர். ஏற்கெனவே முதல் பாகம் வெளியாகியுள்ள நிலையில், விரைவில் "மஹாநாயகுடு' திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 என்.டி.ஆராக பாலகிருஷ்ணா நடிக்க, "வானம்' திரைப்படத்தை இயக்கிய கிருஷ் இந்த இரண்டு படங்களையும் இயக்கியுள்ளார். இதே போன்று என்.டி.ஆரின் வாழ்க்கை வரலாற்றை ராம்கோபால் வர்மாவும் வேறு ஒரு கோணத்தில் இயக்கியிருக்கிறார். ராமராவின் இரண்டாவது மனைவி லக்ஷ்மி பார்வதியின் கண்ணோட்டத்தில் சொல்லப்படும் திரைக்கதையில் அமைந்திருக்கும் இந்தப் படத்துக்கு, "லக்ஷ்மிஸ் என்.டி.ஆர்' எனப் பெயரிட்டுள்ளனர். வெளியுலகத்துக்குத் தெரியாத பல செய்திகள் இந்தப் படத்தில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயலலிதா
 தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படங்கள் எத்தனை உருவாகும் என இப்போது சொல்ல முடியாது. அந்தளவுக்கு அறிவிப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இயக்குநர்கள் ஏ.எல்.விஜய், பிரியதர்ஷன், கௌதம் மேனன், லிங்குசாமி, பாரதிராஜா எனப் பலரால் ஜெயலலிதா வாழ்க்கை திரைப்படம், வெப் சிரீஸ் போன்ற இரண்டு வடிவங்களிலும் உருவாக்கப்படுகின்றன.
 இதில், பிரியதர்ஷனின் படம் "தி அயர்ன் லேடி' என்றும், கௌதம் மேனன் எடுக்கும் படம் பயோபிக் "குயின்' எனவும் பெயரிடப்பட்டு, படப்பிடிப்பும் தீவிரமாக நடந்து வருகிறது. பிற இயக்குநர்களின் படங்கள் அறிவித்த நிலையிலும், திரைக்கதை எழுதும் நிலையிலும் இருக்கின்றன.
 நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளதால், ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் இருந்த இறுதி 75 நாள்கள் குறித்த காட்சிகளைத் திரைப்படத்தில் சேர்ப்பதில் சட்ட சிக்கல்கள் இருப்பதாகப் பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏ.எல்.விஜய் இயக்கவுள்ள படத்தில் ஜெயலலிதாவாக நித்யாமேனன் நடிக்கிறார்.
 பால்தாக்கரே
 "மஹாராஷ்ட்ரா மராத்தியருக்கே' என்ற உணர்வையும் முழக்கத்தையும் வலுவாக அரசியல் களத்தில் உச்சரித்த தலைவர்களில், பால் தாக்கரே முதன்மையானவர். இனவாதம், பிரிவினைவாதம், அடிப்படைவாதம் எனப் பல வாதங்களுக்குள் அடக்கப்பட்டாலும், இன்று வரை பெரும்பான்மையான மராத்தியருக்குத் தாக்கரே சூப்பர் ஹீரோதான். அப்படிப்பட்டவரின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி மராத்தி, ஹிந்தி என இரண்டு மொழிகளிலும் கடந்த ஜனவரியில் வந்தது.
 மன்மோகன் சிங்
 மற்ற படங்களைப்போல் வாழ்க்கையை மொத்தமாகச் சொல்லாமல், மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலகட்டத்தை மட்டும் விவரிக்கும் படமாக இருந்தது, "தி ஆக்ஸிடெண்டல் பிரைம் மினிஸ்டர்'. மன்மோகன் பிரதமராக இருந்தபோது, 2004 முதல் 2008 வரை பிரதமர் அலுவலகத்தின் ஊடகப் பிரிவு ஆலோசகராகச் செயல்பட்ட சஞ்சய் பாரு 2014 பாராளுமன்றத் தேர்தலுக்கு முன் எழுதி வெளியிட்ட "தி ஆக்ஸிடெண்டல் பிரைம் மினிஸ்டர்' புத்தகத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் இது. மன்மோகனை ஹீரோவாகவும், சோனியா காந்தியை வில்லியாகவும் வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், 2004 முதல் 2014 வரை பத்தாண்டு கால காங்கிரஸ் ஆட்சி வலுவாக விமர்சிக்கப்பட்டிருக்கும்.
 திரைக்கதையில் தொய்வு இருந்தாலும், இந்தப் படம் தனக்கான கடமையைச் செவ்வனே செய்து முடித்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
 மோடி
 சுரேஷ் ஓபராய் மற்றும் சந்திப் எஸ் சிங் ஆகியோரின் தயாரிப்பில் பிரதமர் நரேந்திர மோடியின் இளமைக்காலம் மற்றும் அரசியலில் அவர் அடைந்த வளர்ச்சி ஆகியவற்றை விவரிக்கும் வர்த்தக ரீதியான வாழ்க்கை வரலாறு திரைப்படம் தமிழ் உள்பட 23 மொழிகளில் தயாராகியுள்ளது. இந்தப்படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் விவேக் ஓபராய் நரேந்திரமோடியாக நடிக்கிறார். நரேந்திர மோடியின் தேநீர் கடை நாள்கள் முதல் பிரதமராகி அவர் மேற்கொண்ட திட்டங்கள் வரை அனைத்தையும் அலசும் ஒரு படமாக இருக்கும் என கூறப்படுகிறது.


-ஜி.அசோக்
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

இயற்கையை நேசிக்கும் அற்புத மனிதர்!

ரோஜா மலரே!- குமாரி சச்சு
 

தமிழக இளைஞர் சாதனை
பராக்பூர்
ஓர்ச்சா