திங்கள்கிழமை 19 ஆகஸ்ட் 2019

தமிழர்களின் வரலாற்றுப் பதிவு!

DIN | Published: 11th August 2019 09:56 AM

"போராட்டம் என்பது, வெற்றுக் கூச்சல்களோ அல்லது கண்ணீர் கதறல்களோ அல்ல. அது நம் வாழ்வுரிமைக்கான வலி. அது எப்படியும் ஒலிக்கலாம். அதற்கென விதிமுறைகளோ, வடிவங்களோ கிடையாது என்பதுதான் மெரீனா போராட்டம் நமக்கு சொல்லி சென்ற செய்தி. இளைஞர்கள், மாணவர்கள் வைத்து எழுப்பிய நெருப்பு, அநீதிக்கு எதிராக ஒன்று திரளாத சமூகத்தையும், வறட்டு மௌனம் காக்கும் போலி ஜனநாயகத்தையும் பொசுக்கும் நெருப்பு என்பதை அதிகார மையங்கள் புரிந்துக் கொண்டதுதான் இந்த போராட்டத்தின் வெற்றி. அந்த போராட்டத்தின் முழு வடிவம்தான் இந்தப் படம். ‘ படத்தின் சில காட்சிகளை ஓட விட்டப்படி பேசத் தொடங்குகிறார் இயக்குநர் எம்.எஸ்.ராஜ். இயக்குநர் சேரனின் உதவியாளர். பெரும் சர்ச்சை, சென்சார் குளறுபடிகள், நீதிமன்ற தீர்ப்புகளை தாண்டி இந்த மாதம் திரைக்கு வருகிறது "மெரீனா புரட்சி.'

உங்களுக்கு எப்படி இந்த யோசனை வந்தது?
ஜனவரி 16-ஆம் நாள், தமிழ்நாடு முழுக்க செய்தி பரப்பப்பட்டது. "இளைஞனே விழித்தெழு... விடியட்டும் வாடிவாசல்...'' அந்த செய்தி காட்டுதீப் போல் அலையடித்து பரவியது. அடுத்த நாளில் மெரீனாவில் பதாகைகளும், கறுப்புச் சட்டைகளுமாக சில நூறு பேரோடு தொடங்கியது இந்தப் போராட்டம். அடுத்தடுத்த நாள்களில் விஷயம் தெரிந்து, தங்களுடைய ஊர்களிலேயே ஒவ்வொருவரும் இது போன்ற போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்தனர். கோவை, மதுரை, திருச்சி, சேலம் என போராட்டம் தீயாக பரவியது.
சிதறிக் கிடந்த கோபம் ஓரிடத்தில் குவிந்தது. இலக்கு இல்லாமல், தலைமை இல்லாமல், குமுறிக் கனலும் நெருப்பை ஒன்று சேர்க்க முடியாததுதான் துயரமாக இருந்தது. ஊழலும் அலட்சியங்களும் பெருகி விட்ட சமூகம், 30 ஆண்டு கால ஈழ போராட்டம் கண் முன்னே வீழ்ந்த கொடூரம்.. இந்த தலைமுறையின் வரலாற்றை, தமிழ் இளைஞர்களை தாளாத துயரமாக அழுத்திக் கொண்டிருந்தது. அதனால் யாரும் போய் அழைக்கவில்லை. தன்னெழுச்சியான இளைஞர்கள் தங்களது நட்பு வட்டங்களின் வழியே இதை கொண்டு போய் சேர்த்தனர். அப்படித்தான் எனக்கும் செய்தி வந்தது. நானும் அந்தப் போராட்டத்தில் ஒரு துளியாகத்தான் கலந்துக் கொண்டேன். நேரம் செல்ல செல்ல அங்கு நடந்த காட்சிகளில் ஒரு உயிர்ப்பு ஓட்டிக் கொண்டிருப்பதை பார்த்தேன். அப்படித்தான் இந்தக் கதையும் கிளர்ந்தெழுந்தது.

உணர்வுகளை படமாக்கும் போது யோசிக்க வேண்டிய முக்கிய அம்சம் இது...
ஆமாம், அதை சரி வர புரிந்து பதிவு செய்திருக்கிறேன். லட்சக்கணக்கான இளைஞர்கள் கூடியது வெறும் ஜல்லிக்கட்டுக்காகத்தான் என நினைத்தால், அதை விட அறியாமை எதுவும் கிடையாது. உண்மையில் இன்றைய தலைமுறைக்கான அரசியல் என்பது, உலக மயமாக்கலுக்குப் பிறகான குழப்பமான அரசியல். அதை கலைந்து பார்ப்பதற்கான ஒரு களமாக போராட்டக் களத்தைப் நான் பார்த்தேன். அதை விட அதிகாரமும், வெளிநாட்டு நிறுவனங்களும் நம் மீது நிகழ்த்திய அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டமாகவும் இது இருந்தது என்பதுதான் நிஜம்.
அதைத்தான் போராட்ட களம் வெளிப்படுத்தியது. மெரீனா மட்டுமில்லாமல் தமிழ்நாடு முழுக்கவே கோலா கம்பெனிகளுக்கு எதிரான தொடர் முழக்கங்கள் எழுப்பப்பட்டதே, அதற்கு சாட்சி. கூடவே பயிர்களுக்காக உயிர் விடும் விவசாயிகளுக்காகவும் அவர்களுடைய குரல் ஒலிக்கத் தவறவில்லை. மண்ணைக் காப்பது தொடங்கி அத்தனை பேரும் சர்வதேச அரசியலை எல்லாம் அவ்வளவு எளிமையாக உரையாடினர். தமிழ்நாட்டின் மூலை முடுக்குகள் எங்கும் ஒலித்த குரல்கள் நம் பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும் காப்பதற்கான குரல்களாகவே இருந்தன. நம்முடைய விளையாட்டிலும் குடிக்கும் கோலாவிலும் அரசியல் உண்டு என்ற கல்வியை போராட்டக் களத்தில் இருந்து வீட்டுக்கு எடுத்துச் சென்றதுதான் இதன் வெற்றி. இது எல்லாமும் அப்படியே பதிவாகியிருக்கின்றன.

சினிமாத்தன்மைக்காக சில விஷயங்களை திரிக்க வேண்டி வந்ததா?
எந்த திரிப்பும் இருக்காது. போராட்டக் களத்தின் தன்மையை உணர்ந்து, அதை காட்சியாக்கி அப்படியே பதிவு செய்திருக்கிறேன். தமிழர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ, அங்கெல்லாம் இந்தப் போராட்டம் பதிவாகி இருக்கிறது. அத்தனை இடங்களில் நடந்த போராட்டக் காட்சிகளையும் எடுத்து இதற்கு பிரம்மாண்ட வடிவத்தை ஏற்படுத்தியிருக்கிறேன். அவ்வளவு உழைப்பு இருக்கிறது.

நடிகர்கள் இல்லாத படமா..?
போராட்டக் களத்தில் என்னை ஈர்த்தவர்கள் எல்லோருமே இருக்கிறார்கள்.. இவர்களுக்குத்தான் கதையின் பிரதான கதாபாத்திரங்கள். அவர்கள் போராட்டதில் கலந்து கொண்ட விதம், அவர்களின் உணர்வுகளுக்குப் பின்னால் இருக்கும் காரணம் என கதை போகும். மற்றபடி போராட்ட உணர்வுகளே எங்கெங்கும் இருக்கும். படம் பார்க்கும் ஒவ்வொருவரும் போராட்டத்தில் இருப்பதை போன்று உணருவார்கள். பல நெகிழ்ச்சிகளும், சுவாரஸ்யங்களும் கலந்த பதிவாக இருக்கும். நான் இந்த களத்தை புலனாய்வு செய்தது போல், படத்தில் நவீன்குமார், ஸ்ருதி என இரண்டு பேர் ஆய்வு செய்வார்கள். இது மட்டுமே படத்துக்கான சித்தரிப்பு.

தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்கு மிக முக்கியமானதாக அமைய வேண்டுமே...?
அது பெரும் அனுபவம். தனித்துவமான தமிழர்களின் போராட்டத்தை பயன்படுத்தியிருக்கிறோம். இதை வெள்ளித்திரையில் பார்க்கவே பிரமிப்பாக இருக்கும். அதிக நபர்கள் ஒரு ஃப்ரேமில் இருக்கும் படமாகவும் இதுதான் இருக்கப்போகிறது. 15 லட்சம் பேருக்கும் மேலானவர்கள் இருக்கிறார்கள். ஆர். வேல்ராஜ் ஒளிப்பதிவு. இசைக்கு அல்ரூபினியா, ஒலி வடிவமைப்புக்கு தபஸ் நாயக், படத்தொகுப்புக்கு தீபக் என ஏற்கெனவே தங்களின் திறமைகளை நிரூபித்தவர்கள், துணைக்கு வந்தார்கள். நினைத்தப்படியே கைக்கு வந்து சேர்ந்திருக்கிறது தமிழர்களின் வரலாற்று போராட்டப் பதிவு.
- ஜி.அசோக்

 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

இயற்கையை நேசிக்கும் அற்புத மனிதர்!

ரோஜா மலரே!- குமாரி சச்சு
 

தமிழக இளைஞர் சாதனை
பராக்பூர்
ஓர்ச்சா