செவ்வாய்க்கிழமை 16 ஜூலை 2019

வந்துவிட்டது பசுமைப் பள்ளி

DIN | Published: 28th April 2019 08:50 AM

தெருக்குவுக்குத் தெரு ஏராளமான பள்ளிகள் வந்துவிட்டன. கலைக்கல்லூரி, பொறியியல் கல்லூரி இல்லாத மாவட்டங்களே கிடையாது. ஏன் மருத்துவக் கல்லூரிக்கும் பஞ்சமில்லை. தலைமுறைகளாக விவசாயம் செய்த பலரும் நிலத்தை விற்றுவிட்டு நகரத்தில் தஞ்சம் அடைந்துவிட்டார்கள். நிலைமை இப்படி மாறிவரும் நிலையில் தங்களுடைய புத்திசாலிதனத்தால் உலகிலுள்ள அனைவரையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறார்கள் அஷிதா, அனீஷ் நாத் தம்பதியர், ஐ.டி நிறுவனத்தில் லட்சங்களில் கிடைத்த வேலையை உதறிய இவர்கள் விவசாயப்பள்ளி ஒன்றை ஆரம்பித்து இருக்கிறார்கள்.
 உத்தரப்பிரதேசத்தில் பாஷிம் கான் என்னும் கிராமத்தில் விவசாயத்துக்காகவே "த குட் ஹார்வெஸ்ட் ஸ்கூல்' என்ற விவசாயத் தொடக்கப்பள்ளி தொடங்கியிருக்கிறார்கள்.
 பள்ளியை செயல்படுத்துவதற்காகவே புர்வா கிராமத்தில் நிலத்தை வாங்கியிருக்கிறார்கள். இந்தக் கிராமத்தின் சிறப்பு என்னவென்றால், ஆண் குழந்தைகளுக்கு மவுசு அதிகம். அவர்களை மட்டுமே படிக்கப் பள்ளிக்கு அனுப்பி வைப்பார்கள். பெண் குழந்தை என்றால் அம்மா, அப்பாவுக்கு வலதுகரமாக இருக்க வேண்டும். அவர் சொல்வதைச் செய்ய வேண்டும். அவர்கள் விவசாய வேலை செய்யும் போது அதற்கு உதவியாகச் செயல்பட வேண்டும். இந்த நிலையை இந்தக் கிராமத்தில் மாற்ற வேண்டும் என்ற எண்ணம் தான் அஷிதா, அனீஷ் நாத் தம்பதியர் பள்ளி ஆரம்பிக்கக் காரணம். முதலில் இந்தப் பள்ளி ஆரம்பிப்பதற்குக் கிராமத்தில் உள்ளே ஏராளமானோர் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.
 உங்கள் குழந்தைகளுக்கு நாங்களே விவசாயம் செய்யச் சொல்லிக் கொடுத்துப் பணம் சம்பாதிக்க வைக்கிறோம் என்றதும் சிகப்பு கொடி காட்டியவர்கள் எல்லாம் சிரித்தபடியே பச்சை கொடி காட்டி விட்டார்கள். மற்ற பள்ளி போல் இந்தப்பள்ளி என வகுப்பறைகள் கிடையாது. மரத்தடி தான் வகுப்பறை, தோட்டம் தான் செய்முறைக் கூடம். விளையாட்டு வகுப்பு என்றாலே காய்கறி பறிப்பது தான்.அதனால் குழந்தைகள் அனைவரும் அழாமல் ஜாலியாகப் பள்ளிக்கு வந்துவிடுகிறார்கள்.
 பள்ளியில் பாடங்கள் தான் என்ன? விதைகளைச் சேகரிப்பது, செடிகளை நடுவது, நெல் அறுவடை செய்வது, பூச்சிகளை அழிப்பது, களை நீக்குதல், ஆடு, மாடுகளைப் பராமரிப்பது என நாள்தோறும் சிறுகுழந்தைகளைச் சிறந்த விவசாயி ஆக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. மேலும் கற்கும் சுமை தெரியாத வகையில் மாணவ, மாணவர்களுக்கு இந்தி, ஆங்கிலம் போன்ற பிற மொழிகளும் பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்தச் சமூகத்தில் அவர்கள் படித்த விவசாயிகளாக வலம் வர வேண்டும்.
 இந்த வித்தியாசமான முயற்சி பற்றி அஷிதா, அனீஷ் நாத் தம்பதிகளிடம் பேசினோம்:
 "இனி வரும் காலங்களில் நாட்டின் நிலையே தலைகீழாக மாறிவிடும். அனைவரிடமும் பணம் இருக்கும். ஆனால் சாப்பிடுவதற்கு உணவு பண்டங்கள் இருக்காது என்ற நிலை வரும். காரணம் விவசாயம் என்பது முற்றிலும் அழியும் நிலையில் உள்ளது. பல தலைமுறைகளாக விவசாயம் செய்த குடும்பங்கள் கூட இன்று விவசாயத்தை விட்டுவிட்டார்கள். கிராமங்கள் பல நகரமாக மாறிவிட்டன. நிலத்திலுள்ள நீர் பெரும்பாலும் உறிஞ்சப்பட்டு விட்டது. சராசரி மனிதர்கள் போல் நாங்கள் இருவரும் பணம் சம்பாதிக்க முடிந்தாலும் நிம்மதியாக வாழ முடியவில்லை. இந்தச் சமூகத்தில் ஏதாவது சிறிய அளவில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்று நினைத்தோம்.

 நீண்ட நாள் யோசனைக்குப் பிறகு உருவானது தான் இந்த விவசாயப்பள்ளி திட்டம். குறிப்பாக ஆண் குழந்தைகளை விட, பெண்கள் தான் எங்கள் பள்ளியில் அதிகம் பேர் படிக்கிறார்கள். விவசாயத்திற்கான முக்கியத்துவம் என்ன என்பதை நமது இளைய தலைமுறை தெரிந்து கொண்டால் தான் மாற்றம் உருவாகும். நம் நாட்டில் இருக்கும் பள்ளிகளில் பாடத்துடன் விவசாயத்தைச் சேர்த்து சொல்லிக் கொடுத்தால், அழிந்து வரும் விவசாயத்தில் புது மாற்றம் உருவாகும்'' என நம்பிக்கையுடன் பேசிவிட்டு தோட்டத்திற்குள் பாடம் சொல்லிக் கொடுக்கத் தயாராகிறார்கள் அஷிதா, அனீஷ் நாத் தம்பதியினர்.
 - விஷ்ணுப்ரியா
 
 
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

அரசு பள்ளியை தரம் உயர்த்தும் இளைஞர்கள்
இசையறிஞர் ப. முத்துக்குமாரசாமி நினைவாக... இசையோடு வாழ்வு!
மாற்றத்தை நோக்கி மாற்றுத்திறனாளிகள்!
என்றும் இருப்பவர்கள்!
சிதைவின் விளிம்பில் சித்தன்னவாசல்!