வெள்ளிக்கிழமை 23 ஆகஸ்ட் 2019

வண்ண மழையில் நனைய வைக்கும் விழா - சாந்தகுமாரி சிவகடாட்சம்

DIN | Published: 28th April 2019 08:46 AM

சிந்தை கவர்ந்த திருவிழாக்கள் 65
"கடவுள் உனக்கு வாழ்வின் எல்லா வண்ணங்களையும் பரிசாக அளிக்கட்டும்.''
- ஹோலியின் மொழி
எங்கள் கார் பிருந்தாவனத்தை நோக்கி வேகமெடுத்துச் சென்று கொண்டிருந்தது. அங்கே பிரேம் மந்திர், மதன்மோகன் கோயில் போன்ற பல பெருமை வாய்ந்த கிருஷ்ணனுக்காகவே கட்டப்பட்ட கோயில்கள் இருந்தாலும் பங்கி பிகாரி (Banki Bihari) என்ற கோயில் தலைசிறந்து விளங்குகிறது. எப்பொழுதும் பக்தர்களால் நிறைந்து காணப்படுகின்றது என்பதினாலும், அங்கே கோயிலுக்குள்ளே கொண்டாடப்படும் ஹோலியை வாழ்நாளில் ஒருமுறையாகிலும் பார்க்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருப்பதினாலும் அங்கே ஹோலியை காண சென்று கொண்டிருந்தோம்.
பங்கி பிகாரி கோயிலுக்கு இட்டுச் செல்லும் குறுகிய தெருக்களில் நடந்து சென்றோம். இந்த இடம் என்று இல்லை. பிருந்தாவனம் முழுவதிலுமே, ஜனங்கள் திரளாகப் பொங்கிப் புறப்பட்டு சென்று கொண்டிருந்தார்கள். ஹோலி தினம் என்பதினால் உத்திரப்பிரதேசத்தின் பல பகுதிகளில் இருந்தும் இந்தியாவின் பல பாகங்களிலிருந்தும் மக்கள் வந்து குவிந்திருந்தனர். ஹோலி பண்டிகையின் நாயகனே கிருஷ்ணன்தானே! தெருக்கள் எல்லாம் திருவிழாவின் கோலாகலத்தை அள்ளித் தெளித்துக் கொண்டிருந்தன.
பெரிய தாம்பாளங்களில் பலவிதமான ஹோலி வண்ணப் பொடிகள் குவித்து வைக்கப்பட்டு இருந்தன. மக்கள் தங்களுக்குப் பிடித்த வண்ணப் பொடிகளை வாங்கிச் சென்று கொண்டிருந்தனர். ஹோலியின் போது வீசி அடிக்கப்படும் பொடி கண்களை உறுத்தாமல் இருக்க விற்கப்படும் கூலிங்கிளாஸ், தலையில் பட்டு, முடியின் வண்ணம் மாறுபடாமல் இருக்க, விற்கப்பட்ட தலைப்பாகைகள் என்று கடைகளில் விரிக்கப்பட்டிருந்தன. ஆண், பெண் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைவரும் அணிந்து கொள்ளலாம் என்ற வகையில் பலவிதமான வண்ணத் துணிகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட தலைப்பாகைகள், என்னை இருகரம் நீட்டி வாங்கிக் கொள் என்று அழைப்பதுபோல் தோன்ற, அவற்றில் ஒன்றை வாங்கி என் தலையில் அணிந்து கொண்டேன்.
பங்கி பிகாரி கோயிலை நெருங்க, நெருங்க தெருக்கள் மேலும் குறுகிப் போயின. தெருக்களின் இருபுறங்களிலும் பலவிதமான கடைகள், ஸ்ரீ கிருஷ்ணனை அலங்கரிக்கத் தேவையான உடைகள், மயில் பீலிகள், நகைகள், கிரீடங்கள், புல்லாங்குழல்கள் இதைத்தவிர உத்திரப்பிரதேசத்திற்கே உரித்தான பலவிதமான இனிப்பு பண்டங்கள் விற்கும் கடைகள் என் சிந்தையைக் கவர்ந்தன.
ஜனத்திரளுக்கு நடுவே நீந்திச் சென்றோம் என்றேச் சொல்லலாம். கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்த போது ஜனத்தைப் பார்த்தவுடன் நான் அதிர்ந்து போனேன். பலவிதமான வண்ணக் கலவைகளால் அவர்கள் உருமாறிப் போயிருந்தனர். ஒரு சந்தில் திரும்பினோம். மேலே இருந்த குடியிருப்பு ஒன்றில் இருந்து ஒரு பக்கெட் நிறைய சாயத் தண்ணீரை ஒருவர் கவிழ்க்க அது பலருடைய தலையில் விழுந்து அவர்களை பிங்க் வண்ணத்தில் ஜொலிக்க வைத்தது. நல்லவேளை நாங்கள் தப்பித்தோம் என்று நினைத்து முடிக்கும்முன் என் தலையிலும் முதுகிலும் பச்சை வண்ண ஹோலிப்பொடி அப்பப்பட்டது, யார் அது என்று புருவத்தை நெளித்து திரும்பிய முகத்தில் சிகப்பு வண்ணப்பொடி பூசப்பட்டது பூசிய பெண் சிரிக்க, என்னால் கோபப்பட முடியவில்லை, அவளோடு சேர்ந்து சிரித்தேன்.
பங்கி பிகாரி கோயிலுக்குள் நான் நுழையவில்லை. ஜன நெருக்கடியில் அடித்துச் செல்லப்பட்டேன். என் கணவரின் நிலையும் அப்படியாகவே இருந்தது. எப்படியோ, தப்பிப் பிழைத்து, பக்கவாட்டில் இருந்த படிக்கட்டுகள் வழியாக முதல் மாடியை அடைந்து அங்கே இருந்து வெகு நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்டு இருந்த பங்கி பிகாரி என்று அழைக்கப்படுகின்ற கிருஷ்ணனின் விக்கிரகத்தைப் பார்த்தேன். அதன் அழகில் மதி மயங்கினேன். நான் மட்டுமா மயங்கினேன், அங்கே கூடியிருந்த ஜன சமுத்திரம், தன்நிலை மறந்து கிருஷ்ணனின் அழகில் மயங்கி, அவன் நாமத்தைச் சொல்ல, பாடி, ஆடி, கைகளைத் தட்டி, ஆனந்தக் கூத்தாடி, வண்ணப் பொடிகளை வாரி இறைத்து, அந்த இடத்தில் வானவில்களை உருவாக்கிக் கொண்டிருந்தது. 
ஸ்ரீ கிருஷ்ணனின் அருகில் இருந்த குருமார்கள் அவர்கள் பங்கிற்கு கலர் பொடிகள் அடங்கிய பாக்கெட்டுகளை ஒரு பக்கம் கிழித்து ஜனங்களை நோக்கி வீச, ராக்கெட்டுகள் போலவும், வண்ண மிசைல்கள் போலவும் அவைகள் வண்ணங்களைத் தெறிக்கச் செய்து மக்களை வண்ண மழையில் நனைய வைத்தது.
தலை முதல், கால் வரை வண்ணப் பொடிகள் அப்பிக் கொள்ளாமல் அங்கே இருந்து வெளியே வரமுடியாது. பங்கி பிகாரியை அடிக்கடி திரைச்சீலையைக் கொண்டு மூடி சிறிது இடைவெளிக்குப் பிறகு திறந்து கொண்டிருந்தனர். ஏன் இப்படி? என்ற என் கேள்விக்குப் பதிலாகக் கிடைத்த சரித்திரக் கூற்று என்னைத் திக்குமுக்காட வைத்தது.
ஸ்ரீ கிருஷ்ணனின் காலத்தில் ஸ்ரீ கர்கசாரியா (Garga charya) யாதவர்களுடைய குலகுருவாக இருந்தார். அவரை வசுதேவர் தன்னுடைய மகன்களான கிருஷ்ணன், பலராமனுடைய பேர் வைக்கும் விழாவை நடத்திக் கொடுக்க அழைத்தாராம். இந்த கர்கசாரியாவின் வழித் தோன்றலில் வந்தவர்தான் சுவாமி ஹரிதாஸ் என்ற துறவி.
இவர் சிறு வயது முதலே ஸ்ரீ கிருஷ்ணனின் மீது அதீத பக்தியில் திளைத்திருப்பாராம். வளர்ந்து வாலிபனாக ஆன பிறகும் பிருந்தாவனத்திற்குச் சென்று ஸ்ரீ கிருஷ்ணனின் மீது பாடல்களைப் பாடி துதித்தவண்ணம் இருந்திருக்கிறார். அப்பொழுது எல்லாம் அடர்ந்த காடாக விளங்கிய பிருந்தாவனத்தில் ஓர் இடத்தில் அவர் பஜனையில் ஈடுபட்டிருந்த பொழுது, அங்கே சென்ற அவருடைய சீடர்கள் ஓர் இடத்தில் பேரொளி வீசிக் கொண்டிருப்பதைப் பார்த்து வியந்து அது என்ன என்று தங்களுடைய குருவைக் கேட்க, அங்கே கிருஷ்ணனும், ராதையும் நடனமாடிக் கொண்டிருக்கிறார்கள் என்று ஹரிதாஸ் சுவாமிகள் சொல்ல, தன் சீடர்களுக்கு ராதையும், கிருஷ்ணனும் காட்சி அளிக்க வேண்டினாராம்.

அப்படிக் காட்சி அளித்த அவர்களின் ஒளி பொருந்திய முகங்களை மற்ற மானிடக் கண்கள் பார்க்க முடியாது என்பதினால், ஹரிதாஸ் சுவாமிகளின் விருப்பப்படி அவர்கள் இருவரும் இணைந்து உருவான சிலைதான் பங்கி பிகாரி. இன்றும் பங்கி பிகாரியின் கண்களைச் சிறிது நேரம் உற்று நோக்கினால் பார்ப்பவர்கள், பார்வை இழந்து போவார்கள் என்பதினால், சிறிது நேரத்திற்கு ஒருமுறை திரை கொண்டு மூடுவார்கள். பக்தியிலும், வண்ணத்திலும் மூழ்கி எழுந்து வெளியேறினோம். அங்கே இருந்து ஸ்ரீ கிருஷ்ணனின் பிறப்பிடமான மதுராவை நோக்கிச் சென்றபொழுது வழியெங்கிலும், மக்கள் தீமூட்டிக் கொண்டிருந்தனர். ஏன் இப்படிச் செய்கிறார்கள்...?
(தொடரும்)

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

இயற்கையை நேசிக்கும் அற்புத மனிதர்!

ரோஜா மலரே!- குமாரி சச்சு
 

தமிழக இளைஞர் சாதனை
பராக்பூர்
ஓர்ச்சா