வெள்ளிக்கிழமை 23 ஆகஸ்ட் 2019

தெலுங்கு நாடோடிக்கதை: மன்னருக்கு உதவிய மந்திரி

DIN | Published: 28th April 2019 08:47 AM

கோதாவரி நதிக்கரையோரம் ஒரு சிறிய ராஜ்ஜியத்தின் மன்னர் நரசிம்மாவின் மாளிகையில் ஒரே பதற்றம். மன்னர், மந்திரி பாபுஜி, சிப்பாய்கள் அனைவரும் படபடப்பாய் இருந்தனர். இதைக் கண்ட அரண்மனைச் சேவகன் ஒருவர் தளபதியிடம் விசாரித்தார்.
 "என்ன தளபதியாரே! மாளிகையே அல்லோகலப்படுது... என்ன விஷயம்?''
 "உனக்குச் சேதி தெரியாதா? மன்னருக்குச் சொந்தமான பொருள்கள் ஒவ்வொன்றாகக் காணாமல் போகுதாம். எல்லாம் விலையுயர்ந்த சாமான்கள். அதுதான் எல்லோரும் ஆலோசனை பண்ணிட்டிருக்காங்க'' என்றார்
 அரசவையில் மன்னர் நரசிம்மா. மந்திரியை அழைத்தார். ""பாபுஜியாரே! இந்த திருட்டை எப்படி கண்டுபிடிப்பது? ஒரு வழி சொல்லுங்களேன்.''
 மந்திரி பாபுஜி வயதிலும், அனுபவத்திலும் முதிர்ந்தவர். எந்தப் பிரச்னை என்றாலும் மன்னர் அவரைத்தான் ஆலோசனை கேட்பார். இப்போதும் அதே போல கேட்டதும் பாபுஜி யோசித்தார்.
 பின்னர் மன்னரைத் தனியே அழைத்தார். "அரசே, திருடு போன பொருள்கள் எல்லாமே மாளிகையில் இருந்தவை. எல்லாம் விலையுயர்ந்தவை.'' அப்படியென்றால் என்று இழுத்தார்.
 "ஏன் தயங்குகிறீர்கள்? பாபுஜி? எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள்'' என்றார்.
 "நம் மாளிகையில் இருக்கும் பொருள்கள் பற்றி நன்கு தெரிந்த இங்குள்ள யாரோ ஒருவர் தான் இந்த திருட்டு வேலையைச் செய்து வருகிறார்கள் என்பது என் அபிப்ராயம்.''
 "அப்படியா? நீங்கள் யார் மேலாவது சந்தேகப்படுகிறீர்களா?''
 பாபுஜி, குரலைத் தணித்து கொண்டார். ""நீங்கள் புதிதாகப் பணியில் அமர்த்தியுள்ளீர்களே! அந்த சேனாதிபதி கிருஷ்ணாவின் மீது தான் எனக்குச் சந்தேகம். அவன் பேராசைக் கொண்டவன். ஆரம்பத்திலிருந்தே அவன் மீது எனக்கு நம்பிக்கையில்லை'' என்று கூறினார்.
 "அப்படியா? சொல்கிறீர்கள். எனக்கென்னவோ அப்படித் தோன்றவில்லை. கிருஷ்ணாவைப் பார்த்தால் நல்லவர் போல்தான் தெரிகிறது.''
 ""நீங்கள் நம்பமாட்டீர்கள் எனத் தெரியும். பொறுத்திருந்து பாருங்கள்'' என்று சொல்லிவிட்டு மந்திரி போய்விட்டார்.
 அன்று இரவு மன்னரின் கழுத்திலிருந்த விலையுயர்ந்த நவரத்தின மாலை திருடுபோய் விட்டது. காலையில் எழுந்ததுமே மன்னர் அதிர்ச்சியுற்று உடனே மந்திரியை வரவழைத்தார்.
 ""பாபுஜி! இறுதியில் என் கழுத்திலேயே கை வைத்துவிட்டானே அந்த திருடன். உடனே கண்டுபிடித்தாக வேண்டும்'' எனக் கோபமாகக் கர்ஜித்தார் மன்னர்.
 ""கொஞ்ச நேரம் பொறுங்கள் மன்னரே! அந்த சேனாதிபதி வரட்டும். நடப்பதைப் பாருங்கள்.''
 சிறிது நேரத்தில் சேனாதிபதி வந்தார். "என்ன அநியாயம் மன்னா? தங்கள் மாலை களவு போய்விட்டதாமே? ஆணையிடுங்கள்.. அந்த கயவன் தலையைக் கொய்து வருகிறேன்'' எனப் பதறினார்.
 அப்போதுதான் வருவது போல அங்கு வந்த மந்திரி ""மோசம் போய்விட்டோம்... மன்னா'' எனக்குரல் கொடுத்தார்.
 "என்ன நடந்தது? மந்திரியாரே
 களவு போனது நவரத்தின மாலை மட்டுமல்ல. நமது கஜானாவும் தான். கஜானாவே காலி.''
 அவரது அலறலைக் கேட்ட அரசவை உறுப்பினர்கள் அனைவரும் கூடினர். பரபரப்பாய்ப் பேசினர். அப்போது சேனாதிபதி மெதுவாக அங்கிருந்து நழுவினார்.
 இதை கவனித்த மந்திரி மன்னருக்குச் சைகை காண்பித்தார். மன்னரும் அவரைப் பின் தொடர்ந்தார்.
 இருவரும் சத்தமில்லாமல் சேனாதிபதியைப் பின் தொடர்ந்தனர். வேகமாகச் சென்ற சேனாதிபதி ஒரு பாழடைந்த மாளிகைக்குள் சென்றார். அங்கு படுத்திருந்த இருவரை எழுப்பினார்.
 ""நான் சொல்லும் பொருள்களை மட்டும் தானே திருடச் சொன்னேன். அதற்குத் தானே மன்னரின் அறைக்குச் செல்லும் சுரங்கப்பாதையெல்லாம் காண்பித்தேன். உங்களை யார் கஜானாவைக் காலி செய்யச் சொன்னது?'' என்று உறுமினார்.
 "அய்யய்யோ.. சாமி நீங்க சொன்னீங்கன்னு மகாராசா கழுத்தில் இருந்த மாலையை மட்டும் தான் எடுத்து வந்தோம். கஜானாவைப் பற்றி எங்களுக்கு ஒண்ணுமே தெரியாது'' என புலம்பினார்.
 இந்த உரையாடலைக் கேட்ட மன்னருக்கு உண்மை விளங்கியது. சேனாதிபதியை கைது செய்யச் சொல்லி தகுந்த தண்டனையும் வழங்கினார்.
 மதியூக மந்திரியின் விவேகத்தைப் பாராட்டினார்.
 -எம்.ஜி.விஜயலஷ்மி கங்காதரன்
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

இயற்கையை நேசிக்கும் அற்புத மனிதர்!

ரோஜா மலரே!- குமாரி சச்சு
 

தமிழக இளைஞர் சாதனை
பராக்பூர்
ஓர்ச்சா