வியாழக்கிழமை 21 பிப்ரவரி 2019

நவீன கொய்யா ரகங்களின் பிரம்மா!

By  -  பீ.ஜெபலின் ஜான்| Published: 02nd December 2018 12:00 AM

"படித்து மேதையாக மாறுவோர் பலர்.  ஆனால், படிப்பு  அதிகம் இல்லாத சிலரை இயற்கையே மேதையாக படைக்கிறது.  உலகில்  புதிய படைப்புகளை உருவாக்கும் பிரம்மாக்களாக மாறிவிடுகின்றனர் இந்த படிக்காத மேதைகள். அந்தப் பட்டியலில் இருப்பவர்தான் புதுவை மாநிலம், வில்லியனூர் அருகே கூடப்பாக்கத்தைச் சேர்ந்த விவசாயி பத்மஸ்ரீ டி .வெங்கடபதி ரெட்டியார் (73). இவர் 4-ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர்.

இவரது முழுநேர வேலை,  வாழ்க்கை,  பொழுதுபோக்கு  எல்லாமே வேளாண் ஆராய்ச்சியில் ஈடுபடுவதுதான்.  1982-ஆம் ஆண்டில் புதுச்சேரியில் நடந்த மலர் கண்காட்சியில் கனகாம்பரம் பூக்களில் புதிய ரகங்களை விளைவித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.

பின்னர் சவுக்கு, கரும்பு போன்ற பயிர்களில் குறைவான காலத்தில் அதிகப்படியான விளைச்சலைத் தரக்கூடிய வகைகளை உருவாக்கினார். இவரது சேவையை பாராட்டும் வகையில் 2012-இல் அமெரிக்க பல்கலைக்கழகம்,  தஞ்சாவூர் பெரியார் - மணியம்மை பல்கலைக்கழகம் ஆகியவை  இவருக்கு முனைவர் பட்டங்களை வழங்கின.

2012-இல் "பத்மஸ்ரீ ' விருது வழங்கப்பட்டது.  இந்தியாவில் வேளாண் துறையில் முதல் பத்மஸ்ரீ விருது பெற்றவர் என்ற பெருமைக்குரியவரும் இவரே.

தற்போது வெங்கடபதி ரெட்டியாரின் வழியில் அவரது மகள்  ஸ்ரீலட்சுமியும் வேளாண் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். இதன் விளைவாக ஜம்மு - காஷ்மீர்,  இமாச்சல பிரதேசம்,  உதகை,  கொடைக்கானல் போன்ற குளிர் பிரதேசங்களில் விளையக்கூடிய ஆப்பிள் பழங்களை வெப்பம் மிகுந்த கடலோரப் பகுதிகளிலும் விளைவிக்க முடியும் என்பதை சாதித்து காட்டியுள்ளார் ஸ்ரீலட்சுமி. 

மேலும் இவர் தனது தந்தையுடன் சேர்ந்து,  2 அடி உயரம் கொண்ட கத்தரிக்காய்,  கேரட்,  பீட்ரூட் போன்ற காய்கறி வகைகளையும் விளைவித்து வியக்க வைத்துள்ளார்.  6 வயது முதலே தனது தந்தையின் வேளாண் ஆராய்ச்சிக்கு பல்வேறு வகையில் உதவியாக இருந்து வந்த ஸ்ரீலட்சுமி தற்போது நவீன கொய்யா ரகங்களைக் கண்டுபிடித்துள்ளார்.

காமா கதிர்வீச்சைப் பயன்படுத்தி புதிய ரக கனகாம்பரங்களை உருவாக்கி புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி பெயரை 6 மாதங்களுக்கு முன்பு சூட்டினர் வெங்கடபதி ரெட்டியாரும், அவரது மகள் ஸ்ரீலட்சுமியும்.

தங்களது ஆராய்ச்சி குறித்து வெங்கடபதி ரெட்டியாரும்,  ஸ்ரீ லட்சுமியும் நம்மிடம் பேசியதில் இருந்து...

கொய்யாவை ஆய்வு செய்ய தேர்வு செய்தது ஏன்?

இந்தியர்களின் உணவுப் பழக்கத்தில் இருந்து பிரிக்க முடியாதது கொய்யாக் கனி.  உடல் ஆரோக்கியத்துக்கு கொய்யா முக்கிய பங்காற்றுகிறது என்பது பலருக்கும் தெரியவில்லை. 100 கிராம் எடையுள்ள கொய்யாவில் கால்சியம் 18 கிராம்,  மெக்னீசியம் 22 கிராம்,   பொட்டாசியம் 40 முதல் 417 கிராம் வரையும், பாஸ்பரஸ் குறிப்பிடத்தக்க அளவிலும் உள்ளன. மேலும், கொய்யாவில் வைட்டமின் சி, லைக்கோபின் இருப்பதால் தோல் பாதுகாக்கப்படுகிறது.  மனித உடலில் மலட்டுத் தன்மை ஏற்படுவதைத் தடுக்க கொய்யா உதவுகிறது. கொய்யாவில் இருக்கும் பொட்டாசியம் தாதுக்கள் ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது. ஆரஞ்சு பழத்தில் இருக்கும் அளவுக்கு வைட்டமின் சி கொய்யாவில் இருப்பதால், கண் பார்வைக்கும் நல்லது.  லைக்கோபின் இருப்பதால் புற்றுநோய் வளர்ச்சிக்கான செல் வளர்ச்சியை கொய்யா குறைக்கும். பெண்களுக்கு மார்பகங்களில் ஏற்படும் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் குறைக்கிறது. கொய்யாவில் 12 சதவீத நார்சத்து இருப்பதால், மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க உதவுகிறது.  கருவுற்ற தாய்மார்களுக்கு கரு நன்றாக வளர கொய்யா உதவுகிறது.  இதுபோல, மனஅழுத்தம்,  எடை குறைப்பு,  சளி-இருமல்,   முகச்சுருக்கத்தை தடுத்தல் என கொய்யாவின் நன்மையை விவரித்துக் கொண்டே போகலாம்.  ஏழைகளுக்கும் எளிதாக கிடைக்கும் கனியில் இத்தகைய மருத்துவ குணங்கள் இருப்பதை உணர்ந்து இதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதால்தான் கொய்யா கனியில் புதிய ரகங்களை ஆய்வு செய்ய முடிவு செய்தேன். 

இந்தியாவில் கொய்யா அறிமுகம் ஆனது எப்போது? தற்போது உள்ள ரகங்கள் என்னென்ன? 

இந்தியாவுக்கு வந்த போர்ச்சுக்கீசியர்களால் 17-ஆம் நூற்றாண்டில் கொய்யா அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது சர்வதேச அளவில் சீனாவுக்கு அடுத்தப்படியாக இந்தியாவில்தான் கொய்யா அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.  லக்னெள 49, பனாரஸ், தாய்வான் பிங்க், ஆர்க்கா கிரண், அலகாபாத் சபேதா, ஆர்கா அமுல்யா, ஆர்கா ரேஷ்மி, ஆம்கா மிருதுளா, லலித் கொய்யா, பன்னீர் கொய்யா ஆகிய இனங்கள் தற்போது பரவலாகப் பயிரிடப்பட்டு வருகின்றன. இதில் லக்னெள,  பனாரஸ் தவிர மற்ற ரகங்கள் அதிக மகசூல் தரும் வல்லமை பெற்றவை.

உங்களது புதிய ரக கண்டுபிடிப்பு என்ன? அதற்கும் பழைய ரகங்களுக்கும் உள்ள வித்தியாசம்? 

லக்னெள 49 கொய்யாவில் சிவப்பு நிறத்தை,  இளம் சிவப்பு நிறமாக மாற்றி 15 புதிய ரகங்களை உருவாக்கியுள்ளேன். காமா கதிர்வீச்சு,  அயல் மகரந்த சேர்க்கை, ரசாயன மரபணு மாற்றம் ஆகிய முறைகளில் இந்த ரகங்கள் உருவாக்கப்பட்டன.  பனாரஸ் கொய்யாவில் இருந்தும் இதே முறைகளைக் கையாண்டு அதில் 15 புதிய ரகங்களை உருவாக்கியுள்ளேன்.  ஆர்க்காகிரண் கொய்யாவில் இருந்து அதே முறைகளில் 15 ரகங்களை உருவாக்கியுள்ளேன். அலகாபாத் சபேதா கொய்யா இனத்தில் உள்ள சதைப் பகுதி வெள்ளை நிறமாகவே இருக்கும்.  அதையும் காமா,  கதிர்வீச்சு,  அயல் மகரந்த சேர்க்கை, ரசாயன மரபணு மாற்றம் ஆகிய முறைகளில் சிவப்பு நிற கொய்யா ரகமாக மாற்றியுள்ளேன். 

ஆர்க்கா அமில்யா கொய்யா இனம் வெள்ளையாக இருக்கும். இதையும் அதே முறைகளில் சதைப் பகுதியை சிவப்பு பகுதியாக 15 புதிய ரகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.  நாட்டு வெள்ளை கொய்யாவை சிவப்பு கொய்யா ரகமாக மாற்றியுள்ளேன்.  லலித்கோவா கொய்யா இனத்தில் சதைப் பகுதி இளஞ்சிவப்பு நிறமாக இருக்கும். இதை கருஞ்சிவப்பு நிற ரகமாக மாற்றியுள்ளேன்.  வெள்ளை நிற பன்னீர் கொய்யாவை சிவப்பு நிறமாக மாற்றியுள்ளேன். கிட்டதட்ட இதுவரை 100 புதிய ரகங்களை உருவாக்கியுள்ளேன்.

ஏற்கெனவே இருக்கும் ரகங்களை விட, புதிய ரகங்கள் அதிக மகசூல் தரக்கூடியது.  ஒரு காயின் எடை  200 முதல் 250  கிராம் வரை  இருக்கும். ஓராண்டில் ஏக்கருக்கு 12 முதல் 30 டன் விளைச்சல் தரும்.  புதிய ரகங்களைக் கண்டுபிடித்து அதில் ஒரு செடியைத் தேர்வு செய்து அதிலிருந்து micropropagation முறையில் கோடிக்கணக்கான செடிகளை குறைந்த காலத்தில் உற்பத்தி செய்ய இயலும்.  இந்த முறையில் இந்தியாவின் முழு தேவைக்கும் கொய்யா கன்றுகளை எங்களால் வழங்க முடியும்.

மேலும், எனது மகள் லட்சுமிதான் கொய்யாவில் புதிய ரகங்களை உருவாக்க முக்கிய ஆதரவாக உள்ளார். பொதுவாக பெரும்பாலான கொய்யா ரகங்கள் உள் பகுதியில் வெள்ளையாக இருக்கும். சிவப்பு நிறமாக இருந்தால் மருத்துவக் குணம் அதிகம் இருக்கும். 

உங்கள் மகளுக்கும் வேளாண் ஆராய்ச்சியில் ஆர்வம் வந்தது எப்படி?

நான் வேளாண் ஆய்வில் ஈடுபடும் போது சிறு வயதில் இருந்தே எனக்கு உதவியாக இருந்து வருகிறார். 6 வயதில் இருந்தே திசு வளர்ப்பு முறையை அறிந்து கொண்டார். புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடியின் பிறந்த தினத்தையொட்டி, அவரது  பெயரில் புதிய கனகாம்பரம் ரகங்களை கடந்த ஜனவரியில் எனது மகள் அறிமுகம் செய்தார். எங்களது வீட்டுக்கு நேரடியாக வந்து வேளாண் ஆய்வுக் கூடத்தைப் பார்வையிட்ட  ஆளுநர் கிரண் பேடி எனது மகளின் ஆர்வத்தை பாராட்டிச் சென்றார். 

புதிய கண்டுபிடிப்புகளுக்கு அரசு அதிகாரிகள் ஊக்கம் தருகிறார்களா?

எனது கண்டுபிடிப்புகள் குறித்து அறிந்த இந்திய வேளாண் ஆராய்ச்சி குழும உதவி இயக்குநர் ஜெனரல் டி.ஜானகிராமுக்கு தொடர்ந்து தகவல் தெரிவித்து வருகிறேன்.  அவரது உத்தரவுபடி,  தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இந்தத் தொழில்நுட்பத்தை பகிர்ந்து கொள்ள நானும், எனது மகளும் முடிவு செய்துள்ளோம்.  பிற பல்கலைக்கழகங்களிலும் எங்களது புதிய ரகங்கள் உருவாக்கப்பட்ட  தொழில்நுட்பத்தை இலவசமாக பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறோம். எங்களது வீட்டுக்கு ஆளுநர் கிரண் பேடி வந்த போது, புதிய தொழில்நுட்பம் குறித்து அவருடன் ஆலோசனை நடத்தினோம். 

இதையடுத்து, புதுச்சேரி காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தில் ஓர் ஏக்கரில் கொய்யா சாகுபடி செய்ய நிலம் ஒதுக்க அவர்  உத்தரவிட்டார். இதில், எங்களது சொந்த செலவில் கொய்யா சாகுபடி செய்து (அடர் நடவு முறையில்) முதல் ஆண்டில் ஏக்கருக்கு 10 டன், இரண்டாவது ஆண்டில் 15 டன்,  மூன்றாவது ஆண்டில் 25 முதல் 30 டன் கொய்யா சாகுபடி செய்தும், ஓராண்டுக்கு சராசரி வருவாய் ரூ. 10 லட்சம்  ஈட்டித் தருவதாக   உறுதி அளித்துள்ளோம்.

கொய்யா சாகுபடிக்கு உரம் பயன்படுத்தப்படுமா?

முற்றிலும் இயற்கையான முறையில் மட்டுமே கொய்யா சாகுபடி செய்து வருகிறோம்.  ரசாயன உரம் இடுவதில்லை. முதல் உழவில் 10 டன் தொழு உரம் இடப்படும்.  ஏக்கருக்கு அடர் நடவு முறையில் 2,200 செடிகள் நடவு செய்யப்படும்.  நட்ட முதல் மாதத்தில் காய் பிஞ்சு விடும்.  ஆனால், செடி நன்கு வளர அந்த பிஞ்சுகளைப் பறித்துவிட வேண்டும்.  6 மாதங்களுக்கு பின்பு 2 அடி உயரத்தில் செடி இருக்கும் போது மகசூல் இடலாம். 4 மாதங்களில் ஒரு செடிக்கு 150 காய்கள் வரும்.  இதற்கு சொட்டு முறையில் தண்ணீர் விட வேண்டும்.  இதனால், செடிகள் நன்கு வளரும். இதில் கிடைக்கும் காய்கள் மனித உடலுக்கு ஆரோக்கியத்தை தரும்'' என்றனர் வெங்கடபதி ரெட்டியாரும்  ஸ்ரீலட்சுமியும். 

 படங்கள்:  கே.ரமேஷ்

More from the section

எம்ஜிஆரின் கண் கண்ட கடவுள்!
சிந்தை கவர்ந்த  திருவிழாக்கள் 55: கராட்சு குன்சி மிதவைகள் திருவிழா
என்றும் இருப்பவர்கள்! - 3. கு.அழகிரிசாமி
சீன- தமிழர் உறவு: கல்வெட்டு சொல்லும் உண்மைகள்!
பயணங்களில் அபூர்வம் நிகழ்கிறது!