தினமணி கதிர்

மன்னாதி மன்னன்

25th Sep 2023 07:02 PM | பிஸ்மி பரிணாமன்

ADVERTISEMENT

உலகில் பெரும்பாலான நாடுகள்  ஜனநாயக நாடுகளாக மாறிவிட்டாலும்,   சில நாடுகளில்  இன்றைக்கும்  மன்னர்கள் ஆட்சி நடக்கத்தான் செய்கிறது. அப்படியான மன்னர்களில் மிகவும் பணக்காரர் தாய்லாந்தின் வஜிரலோங்கோர்ன்.  

இவர்  'பத்தாம் ராமர்' என்றும் தாய்லாந்து நாட்டு மக்களால்  மரியாதையுடன் அழைக்கப்படுகிறார். 

தாய்லாந்தில்  ராமாயணத்தின் தாக்கம்  இன்றைக்கும் உள்ளது.  தாய்லாந்து மொழியில்  'ராமாயணம்'   அந்த நாட்டின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டுள்ளது. அதனால்தான் தாய்லந்தின் மன்னர்களை 'ராமர்'  பரம்பரையில்  வருகின்றவர் என்று ஒவ்வொரு மன்னரையும்  மதிக்கின்றனர்.  

மன்னர் வஜிரலோங்கோர்ன்னிடம் அளவுக்கு அதிகமான வைரங்கள், நவரத்தினங்கள் குவிந்து கிடக்கின்றன.  

ADVERTISEMENT

இவரது சேகரிப்பில்  உலகின் மிகப் பெரிய வைரமான பிரவுன் கோல்டன் ஜூபிளி இடம் பிடிக்கிறது.  இந்த 545.67 கேரட்  வைரத்தின்  மதிப்பு 98 கோடி ரூபாயாகும் (இந்திய மதிப்பில்).  

மன்னரின்    சொத்தின்  மதிப்பு  மட்டும் சுமார் 3 லட்சம் கோடி ரூபாய். அரண்மனை  6560 ஹெக்டரில்  கட்டப்பட்டுள்ளது. இந்த வளாகத்தில்  பல அரசு கட்டடங்கள், மால்கள், நட்சத்திர விடுதிகள் உள்ளிட்டவை இயங்குகின்றன.  

தாய்லாந்தின் பல பெரிய வங்கிகள், நிதி,  தொழில்  நிறுவனங்களில் பல ஆயிரம் கோடிகள்  மன்னர் முதலீடு செய்துள்ளார்.  அதனால் அவரது வருமானம்  யாரும் கணிக்க முடியாத அளவுக்கு எக்கச்சக்கம். 

மன்னர் என்பதால்  ஆடம்பர வாழ்க்கைக்காக அதிகமாகச் செலவு செய்ய வேண்டி வந்தாலும்  வஜிரலோங்கோர்ன் செலவு செய்யத் தயங்காதவர்.  

மன்னரிடம்  38 விமானங்கள்   சொந்தமாக இருக்கின்றன.  எல்லா ரக விமானங்களைத் தவிர  ஹெலிகாப்டர்களையும் வாங்கி வைத்துள்ளார். விமானங்கள், ஹெலிகாப்டர்களைப்  பராமரிக்கவே ஆண்டுக்கு  524 கோடி ரூபாய் செலவாகிறது.  

இவரிடம் விலை  உயர்ந்த சொகுசு கார்களின்  எண்ணிக்கை  1300.  ஆடம்பரக் கப்பல்களுடன், உலகின் மிகப் பெரிய கப்பலும் மன்னருக்குச் சொந்தம். 

கப்பல்களில்  ஆங்காங்கே  தங்கத்தினால் வேலைப்பாடுகள் தாராளமாகச் செய்யப் பட்டுள்ளது.  இவ்வளவு  சொத்துகள் இருந்தாலும்,  அலுக்காமல் தொடர்ந்து  விமானங்கள், கப்பல்கள்,  ஆடம்பரக்  கார்களை வாங்கிக்  குவித்து வருகிறார் மன்னர் வஜிரலோங்கோர்ன்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT