அவர் சொன்ன பெயரைக் கேட்டபோது ஒரு விநாடி நான் திகைத்துத்தான் போனேன் என்றாலும், அதிர்ச்சி அடைந்தேன் என்று சொல்ல முடியாது. பி.வி. நரசிம்ம ராவுக்கும் பிரணாப் முகர்ஜிக்கும் இடையேயான நட்பு அத்தகையது என்பதால், இதில் வியப்படைய ஒன்றுமில்லை.
நரசிம்ம ராவுக்காக ஜாமீன் வழங்கியவர் பிரணாப் முகர்ஜியின் மனைவி சுவ்ரா முகர்ஜி. சுவ்ரா என்பது அவரது அதிகாரபூர்வப் பெயர் என்றாலும், நெருங்கிய வட்டாரங்களில் அவர் கீதா தீதி என்றுதான் அழைக்கப்படுவது வழக்கம். 'தாதா', 'தீதி' என்றால் அண்ணன், அக்கா என்று பொருள் (பிரணாப்தா என்பது பிரணாப் தாதா என்பதன் சுருக்கம்).
பிரணாப் முகர்ஜியின் மனைவி கீதா முகர்ஜி குறித்து வெளியுலகத்திற்கு, முக்கியமாக தென்னிந்தியாவில் அதிகம் தெரியாது என்றாலும், அவர் தனித்தன்மையுள்ள ஆளுமையாக இருந்தவர். பிரணாப் முகர்ஜி திருமணம் செய்து கொண்டபோது அவரது வயது 17. தனது 74-ஆவது வயதில், 2015 ஆகஸ்ட் 18-ஆம் தேதி, குடியரசுத் தலைவரின் மனைவியாக, இந்தியாவின் முதல் பெண்மணியாகத்தான் அவர் உயிர் பிரிந்தது. பிரணாப் முகர்ஜியின் நகர்வுகளில் எல்லாம் அவருடன் அமைதியாகப் பின்தொடர்ந்த கீதா முகர்ஜிக்கு, இன்னொரு முகமும் உண்டு. அவர் மிகச் சிறந்த இசைக் கலைஞர்.
வரலாறு, அரசியல் அறிவியல் இரண்டிலும் முதுகலைப் பட்டம் பெற்ற கீதா முகர்ஜி, சிறிது காலம் ஆசிரியையாகப் பணியாற்றியவர். மிகச் சிறந்த இசைக் கலைஞரான அவர், ரவீந்திரநாத் தாகூரின் பாடல்களை இசைக்கும் (ரவீந்திர சங்கீத்) மிகச் சிறந்த பாடகி. கீதாஞ்சலி என்கிற பெயரில் குழு ஒன்று அமைத்து ரவீந்திரநாத் தாகூரின் கருத்துகளை நாட்டிய நாடகங்களின் மூலமும், ரவீந்திர சங்கீத் மூலமும் உலகின் பல்வேறு பகுதிகளில் பரப்பிய பெருமையும் அவருக்கு உண்டு.
கீதா முகர்ஜியும் சரி, அவரது மகள் ஷர்மிஸ்தா முகர்ஜியும் சரி எந்த இடத்திலும் பிரணாப் முகர்ஜியின் பெயரையோ, பதவியையோ வெளிப்படுத்துவது கிடையாது. கீதா முகர்ஜி ஓர் ஓவியர் என்பதுடன், எழுத்தாளராக இரண்டு புத்தகங்களை வங்காள மொழியில் எழுதி இருக்கிறார். இந்திரா காந்தியுடனான அவரது சந்திப்புகள், சம்பவங்கள், தொடர்புகள் குறித்த புத்தகம் வங்க மொழியில் மிகப் பிரபலம்.
உடன்பிறவா சகோதர சகோதரியாக நரசிம்ம ராவும், கீதா முகர்ஜியும் இருந்தனர் என்பதை நான் பலமுறை பார்த்து வியந்திருக்கிறேன். பிரணாப் முகர்ஜியின் வீட்டிலிருந்து நரசிம்ம ராவுக்குச் சில நாள்கள் உணவு தயாரித்து அனுப்பப்படுவது உண்டு. அதேபோல, பிரணாப்தாவுடன் உணவருந்த நரசிம்ம ராவ் வந்தும் பார்த்திருக்கிறேன்.
அவர்களுக்கு இடையே இருந்த குடும்ப ரீதியிலான நட்புறவும் நெருக்கமும் எனக்கு நன்றாகத் தெரியும் என்பதால், கீதா முகர்ஜி நரசிம்ம ராவுக்கு ஜாமீன் வழங்க முற்பட்டதைப் புரிந்து கொள்ள முடிந்தது. அப்போதைக்குக் கைதாகி, ஜாமீனில் உடனடியாக வீட்டிலேயே நரசிம்ம ராவ் விடுவிக்கப்பட்டாலும், அவரது பிரச்னைகள் ஓய்ந்துவிடவில்லை.
அன்று இரவு கிரேட்டர் கைலாஷில் உள்ள பிரணாப் முகர்ஜியின் வீட்டுக்குப் போயிருந்தேன். மேற்கு வங்கத்திலிருந்து சில கட்சித் தலைவர்கள் அவரைப் பார்க்கக் காத்திருந்தனர். அவர்களுடன் நானும் காத்திருந்தேன். நரசிம்ம ராவின் வழக்குரைஞர்களுடன் பிரணாப் முகர்ஜி முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிவித்தனர்.
எல்லோரும் வங்க மொழியில் பேசிக் கொண்டிருந்த நிலையில், நான் மட்டும் தனித்து விடப்பட்டதுபோல, ஓர் ஓரமாக அமர்ந்திருந்தேன். நல்ல வேளையாக, சிறிது நேரத்தில், அந்தமான் நிகோபார் தீவுகளின் மக்களவை உறுப்பினர் மனோரஞ்சன் பக்தா உள்ளே வந்தார். ஏற்கெனவே தெரிந்தவர் என்பதால், அவர் நேராக என் அருகில் வந்து அமர்ந்தபோது சற்று நிம்மதி ஏற்பட்டது.
உத்தர பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து, அஜித் சிங்கின் உதவியாளர் சமர்பால் சிங் சொன்னதுபோல, எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை இல்லாத நிலைமை ஏற்பட்டிருந்தது. மொத்தம் 425 இடங்களில், தேர்தல் நடந்த 424 தொகுதிகளில் பாஜக கூட்டணி 177 இடங்களிலும், சமாஜவாதி கட்சி தலைமையிலான ஐக்கிய முன்னணி 122 இடங்களையும், பகுஜன் சமாஜ் கட்சி - காங்கிரஸ் கூட்டணி 100 இடங்களையும் பெற்றிருந்தன.
ஐக்கிய முன்னணியை ஆதரிக்க பகுஜன் சமாஜ் கட்சி தயாராக இல்லை. பாஜக அல்லாத ஆட்சி அமைப்பதுதான் குறிக்கோள் என்றால், ஐக்கிய முன்னணியில் உள்ள சமாஜவாதி, ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் ஏன் பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதி தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவளிக்கக் கூடாது என்பது கான்ஷிராமின் வாதம். அப்படி ஆதரவளிக்கத் தாமதித்தால், பாஜகவின் ஆதரவை நாடத் தயங்கமாட்டோம் என்றும் அவர் எச்சரித்திருந்தார்.
'உத்தர பிரதேசத்தில் என்ன நடக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?' என்று மனோரஞ்சன் பக்தாவை நான் கேட்டேன்.
'காங்கிரஸ் செயலிழந்துபோய் இருக்கிறது. காங்கிரஸ் தலைமையில் ஆட்சி, மாயாவதி துணை முதல்வர், ஐக்கிய முன்னணி ஆதரவு தர வேண்டும் என்று நாம் சொல்லத் தயங்குகிறோம். மத்தியில் எங்கள் தயவில் ஐக்கிய முன்னணி ஆட்சி அமைந்திருக்கும் நிலையில், உத்தர பிரதேசத்தில் அவர்கள் ஏன் காங்கிரஸை ஆதரிக்கக் கூடாது?'
பக்தாவின் கேள்வியில் நியாயம் இருப்பதாக எனக்குத் தோன்றியது. 1977 முதல் தொடர்ந்து ஆறு முறைகளாக அந்தமான் - நிகோபார் தீவுகளிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் காங்கிரஸ் உறுப்பினர் என்பதால், அவரது அரசியல் அனுபவமும், கணிப்பும் சரியாகத்தான் இருக்க முடியும் என்று நான் நினைத்தேன். பிரணாப் முகர்ஜியின் நம்பிக்கைக்கும், அன்புக்கும் பாத்திரமான தூய்மையான அரசியல்வாதி மனோரஞ்சன் பக்தா என்று முன்பே ஒருமுறை குறிப்பிட்டிருக்கிறேன்.
'என்ன நடக்கப் போகிறது என்று நீங்கள் சொல்லவில்லையே...'
'சொல்வதற்கு என்ன இருக்கிறது? காங்கிரஸ் சட்டப்பிரிவு 356-ஐப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தும் என்று குற்றம்சாட்டுபவர்கள், இப்போது அதே பாணியில் உத்தர பிரதேசத்தில் கவர்னர் ஆட்சியைக் கொண்டு வருவார்கள்.'
நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போது, பார்வையாளர்கள் அறையிலிருந்து பிரணாப் முகர்ஜியின் அறைக்குச் செல்லும் கதவு திறந்தது. வழக்குரைஞர்கள் ஆர்.கே. ஆனந்தும், ஐ.யு. கானும் இன்னும் சிலரும் வெளியேறினார்கள். எம்.பி. என்பதால் உடனடியாக மனோரஞ்சன் பக்தா அழைக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து மேற்கு வங்கத்திலிருந்து வந்திருந்த காங்கிரஸ் தொண்டர்கள், வெவ்வேறு குழுக்களாக உள்ளே சென்று பிரணாப்தாவை சந்தித்தனர்.
எல்லோரும் போன பிறகு, ஏறத்தாழ நடுநிசி நேரத்தை ஒட்டித்தான் கடைசி ஆளாக நான் உள்ளே நுழைந்தேன். அவர் சோர்ந்து போயிருக்கிறார் என்பதைக் குங்குமப் பூபோலச் சிவந்திருந்த அவரது முகம் தெரிவித்தது. நாற்காலியிலிருந்து எழுந்திருந்து, தனியாகப் போடப்பட்டிருந்த சோபாவில் வந்து அமர்ந்தார். என்னையும் அமரச் சொன்னார்.
'இப்போதெல்லாம் அடிக்கடி மோதிலால் நேரு மார்க்கில் உன்னைப் பார்க்க முடிகிறதே, அங்கே உனக்கு என்ன வேலை?'
'அப்படியெல்லாம் எதுவும் இல்லை. ஸ்ரீகாந்த் ஜிச்கருடன் அங்கே வருகிறேன், அவ்வளவுதான். நீங்கள் அங்கே இருக்கிறீர்கள் என்பதும் ஒரு காரணம். நரசிம்ம ராவ்ஜி மீது தொடரப்பட்டிருக்கும் வழக்குகளில் நியாயம் இல்லை என்று எனக்குத் தோன்றுகிறது, அதுவும் காரணம்.'
'வேலையை விட்டுவிட்டு அங்கே இருப்பதால், என்ன பிரயோஜனம்? நரசிம்ம ராவ் பிரச்னையைப் பரபரப்பு செய்தியாக்கி ஆதாயம் தேடுவதாக இருந்தால் சரி. உனக்கு அதுவும் நோக்கமில்லை. பிறகு ஏன் உனது நேரத்தை வீணாக்குகிறாய்?'
'நிஜமாகவே தெரியவில்லை. நீங்கள் அங்கே இருப்பதால், நானும் வருகிறேன். எனக்குத் தனிப்பட்ட முறையில் நரசிம்ம ராவைத் தெரியாது...'
'அப்படியா, நிஜமாகவா? அவரை உனக்கு நன்றாகத் தெரியும் என்றல்லவா நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்...'
'அறிமுகம்கூடக் கிடையாது. அவர் என்னைப் பார்த்திருக்கலாம்.
ஆனால், நான் யார், என் பெயர் என்ன என்றெல்லாம் அவருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.'
பிரணாப் முகர்ஜி சிரித்தார்.
'பி.வி.யைக் குறைத்து மதிப்பிடாதே. நீ யார், உனக்கு என்ன பின்னணி, நீ யாரிடம் எல்லாம் தொடர்பில் இருக்கிறாய், எப்படிப்பட்டவர் என்று உன்னுடைய முழு ஜாதகத்தையும் தெரிந்து கொள்ளாமல், உன்னை 9, மோதிலால் நேரு மார்க்கில் நுழைவதற்கு அவர் அனுமதித்திருக்க மாட்டார். அது போகட்டும், நானே உன்னை அவருக்கு அறிமுகப்படுத்துகிறேன்.'
நான் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தேன். அவரே தொடர்ந்தார்.
'உனக்கு நான் ஒரு வேலை தரப்போகிறேன். நீயும் பக்தாவும் உத்தர பிரதேச நிலவரம் குறித்துப் பேசிக் கொண்டிருந்ததாக அவர் சொன்னார். நாளை காலையில் நீ சந்திரசேகர்ஜியை என் சார்பில் சென்று சந்திக்க வேண்டும். காங்கிரஸ் தலைமையில் உத்தர பிரதேசத்தில் ஆட்சி அமைந்தால், அதற்கு முலாயம்சிங் யாதவ் சம்மதிப்பாரா என்று அவர் மூலம் தகவல் தெரிந்து வர வேண்டும். சந்திரசேகர்ஜி சொன்னால், முலாயம்சிங்கும், கான்ஷிராமும் தட்டமாட்டார்கள் என்று எனக்குத் தெரியும்.'
'நீங்கள் சொன்னதாக அவரிடம் நான் சொல்லலாமா?'
'தாராளமாக... என்னை சந்தித்தது பற்றியும், நான் அவரைக் கேட்டுக் கொண்டதாகவும் சொல்லலாம், தவறே இல்லை...'
நான் சரி என்று தலையை ஆட்டினேன்.
'இவ்வளவு நேரமாகிவிட்டதே, சாப்பிட்டாயா? எப்படி போகப்போகிறாய்?'
'தெரியவில்லை. ஆட்டோ கிடைக்கும். இல்லையென்றால், இரவு நேர பஸ் கிடைக்கும்...'
'அதெல்லாம் வேண்டாம். இங்கேயே சாப்பிடு. இரவு மூன்று மணி விமானத்தில் எனது உறவினர் லண்டனில் இருந்து வருகிறார். அவரை அழைக்கக் கார் போகிறது. அந்தக் காரில் உன்னை கொண்டுபோய் விடச் சொல்கிறேன். முதலில் சாப்பிடு...'
உதவியாளரைக் கூப்பிட்டு என்னைச் சாப்பிட அழைத்துச் செல்ல உத்தரவிட்டார். நான் கரோல்பாக் குருத்வாரா சாலை வீட்டுக்கு வந்து சேர்ந்தபோது அதிகாலை 2 மணி...
காலையில் சுமார் எட்டு மணிக்குள் முன்னாள் பிரதமர் சந்திரசேகர்ஜியை சந்திக்க 3, செüத் அவென்யூவுக்குக் கிளம்பிய நான், நேராக அங்கே சென்றிருக்க வேண்டும். நான் செய்த சிறிய தவறு, பிரணாப் முகர்ஜி மிகச் சாதுர்யமாக செயல்படுத்த நினைத்த அரசியல் நகர்வைத் தடம் புரள வைத்துவிட்டது!
(தொடரும்)