தினமணி கதிர்

தனித்த பறவையின் சலனங்கள்

1st Oct 2023 12:00 AM | உஷாதீபன்

ADVERTISEMENT

 

அந்த ஆலமரத்தைப் பார்த்தபோது அதன் விழுதுகளைப் பிடித்துக் கொண்டு தொங்கி ஆட வேண்டும் என்று தோன்றிவிட்டது யக்ஞராமனுக்கு. விபரீத ஆசைதான். ஆனாலும் தோன்றுகிறதே? அப்பாவோடு அந்தச் சாலையில் நடந்து போகும்போது விழுது பிடித்து ஆடியது. ஆசை தீர ஆடித் தீர்த்துவிட்டு வரட்டும் என்று பொறுமையாக அமர்ந்திருப்பார். எங்கு ஏறி எங்கு குதித்தாலும் கண்டுகொள்ள மாட்டார். குறை சொல்லுதல், கண்டித்தல்... என்பதெல்லாம் கிடையாது. ஆனால் அவரின், அம்மாவின் அன்றாட வாழ்வியலைப் பார்த்துப் பார்த்து வளர்ந்த பக்குவமுண்டுதான்.

நான்கைந்து விழுதுகளைச் சேர்த்துப் பிடித்தார். தலைக்கு மேல் அரையடி உயரத்தில்தான் இருந்தன அவை. இழுத்துப் பிடித்து ஒரு தம் கட்டி, காலைத் தரையில் உதைத்தால் ஆடி விடலாம். மனதுக்குள் ஆசை அலையிட்டது. ஒரு வேளை அறுந்து விழுந்துவிட்டால்! எங்கிருந்தாவது திட்டுதல் வருமோ?

சாலைப் பக்கம் திரும்பிப் பார்த்தார். வாகனங்கள் விரைந்து சென்று கொண்டிருந்தன. நடப்பவர்கள் தங்கள் போக்கில் நேர் பார்வையாகப் போய்க் கொண்டிருந்தார்கள். உள்ளூர் சந்தைக்கு வந்து திரும்பும் கிராம மக்கள். மாட்டு வண்டிகள். நின்று யாரோ ஒருவர் விழுதில் தொங்குகிறாரே என்று வேடிக்கையா பார்க்கப் போகிறார்கள்? அவரவருக்கு ஆயிரம் வேலை.

ADVERTISEMENT

அந்த மரத்தை மீண்டும் கீழிருந்து மேல் உயரம் வரை பரந்து நோக்கினார். குறைந்தது நூறு ஆண்டுகளுக்கும் மேலேயே இருக்க வாய்ப்புண்டு. சிறுவயதில் நண்பர்களோடு மரத்து மேலே ஏறி, கிளைக்குக் கிளை தாவி, அங்கிருந்து விழுதுகளைப் பிடித்துக் கொண்டு கீழ்நோக்கித் தொங்கி, பேயாட்டம் போட்டிருக்கிறோம். ஒருமுறை கூட அந்த விழுதுகள் அறுந்து விழுந்ததில்லை. இப்போது கொத்தாகப் பிடித்துக் கொண்டிருப்பவைகளும் அதே விழுதுகள்தானா? இல்லை வேறா?

அந்தச் சாலையின் வரிசையிலான பல மரங்கள் இவரின் நினைவில் நின்றவை. நாவற்பழ மரங்களில் ஏறி பழத்தை உதிர்த்துப் பொறுக்கிக் கொண்டு ஓடியதும், ஒப்பந்ததாரர் விரட்டியடித்ததும்! இன்று நினைத்தாலும் அடக்க முடியாத சிரிப்புத்தான் வருகிறது. புளிய மரங்களில் கல்லை விட்டடித்து கீழே விழும் விதைப் பழங்களைச் சேகரித்து தின்னுதல், புளிய முத்துகளைச் சேர்த்து வைத்து அம்மாவிடம் கொடுத்தல். வாசலில் கூவிக் கூவிக் கேட்டு அதை வாங்கிப் போகவும் ஆளிருந்ததே!

ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்குப் பின்னர், யக்ஞராமன் சொந்த ஊர் வந்திருக்கிறார். நகர்ப்புறம் போனதோடு, சொந்த ஊர் உறவு விட்டுப் போனது. தான் வந்திருப்பது யாருக்கும் தெரியாது. தெரியக் கூடாது. அதுதான் அப்போதைய அவரது விருப்பம். அப்படிச் சென்று வருவதில் ஏதோவொரு சுவாரஸ்யம் இருப்பதாக உணர்ந்தார்.

வாடகைக்குக் குடியிருந்த மூன்று தெருக்களில் ஏறக்குறைய ஒருவர் கூடப் பழையவர்கள், தன் கூடப் படித்தவர்கள் என்று யாருமில்லை. யார் கண்ணிலும் பட்டுவிடக் கூடாதே என்கிற கவனத்தில் ஒரு ரவுன்ட் வந்து விட்டார்.

எழுபது ஆண்டுகள் நிறைவுற்ற வேளையில் தன் வயதொத்த யாரும் இருப்பதாகவும் தெரியவில்லை. தெரிந்தவர்போல் இருந்தவருக்கும் இவரை அடையாளம் தெரியவில்லை.

நின்று பழைய நினைவுகளை அசைபோடலாம் என்று ஏனோ எண்ணமில்லை.

இல்லையென்றால் தாவித் தாவிக் குதித்து நீச்சலடித்த ஆற்றின் நடுநாயகமான அந்த யானைக்கல், குதிரைக்கல்லை.. அத்தனை நேரம் ஒற்றையாய் அமர்ந்து அப்படிப் பார்த்துக் கொண்டிருப்பாரா? இன்று என்னை யாருமே சீந்துவதில்லை. எல்லோரும் மறந்து விட்டார்கள். ஆறே இல்லையே? அன்று சிறு மலையாய்த் தோன்றிய அந்தக் கற்கள் இன்று சின்னஞ்சிறுசாய் குறுகி நின்றன. அதற்கும் மூப்பு வந்துவிட்டதோ? கண்ணீர் முட்டியது இவருக்கு. மனுஷன் எழுபது, எழுபத்திரண்டுல போயிடணும். அதிக காலம் இருக்கக் கூடாது. நமக்கும் சிரமம். அடுத்தவங்களுக்கும் கஷ்டம்! -தினமும் இதைத்தானே வேண்டிக்கொண்டேயிருக்கிறார்?

நிறைய வீடுகள் மாறியிருந்தன. நடுநடுவே கல்யாண மண்டபங்கள் தோன்றியிருந்தன. கார் ஷெட்டுகள் தென்பட்டன. 'பாழ்' என்று சொல்லப்படும் புதர்கள் அடங்கிய வெற்றிடங்கள் ஒன்றும் இல்லை. விளையாடிவிட்டு ஒன்றுக்கிருக்க ஒதுங்கிய இடம் அவை. பாம்பு, தேள், நட்டுவாக்காலி என்று பார்த்து ஓட்டம் எடுத்தாலும், திரும்பவும் சிரமபரிகாரத்துக்கு அங்குதான் ஒதுங்கும் பிள்ளை மனம். அவசரத்துக்கு இயற்கை உபாதை கழித்த இடமும் அதுதான். இப்போது நினைத்தால் சிரிப்புதான்.

ஒன்றிரண்டு கவர்ன்மென்ட் ஆபீஸ்கள் கூட முளைத்திருந்தன. வீதிகள் அமைதியாயிருந்தது. ஆள்கள் நடமாட்டமேயில்லை. ஆபீஸ் நாளில் பரபரப்பாகலாம்.
வீட்டுக்கு வீடு திண்ணைகள்- அதில் படுத்து உருண்டவர்களின் கதையைக் கிளறின. தெருக் குழாய்கள் இடிபாடுகளாய்த் தென்பட்டன. வியர்க்க வியர்க்க நாள் பூராவும் நாயாய் அலைந்து விளையாடிவிட்டு ஊர்ப் புழுதி அத்தனையையும் மேலே பரத்திக் கொண்டு அந்தத் தெருக் குழாயில் வந்து கையேந்தித் தண்ணீர் குடித்து தாகம் ஆற்றியது நினைவுக்கு
வந்தது.

ஆற்று மணலில் நாள் முழுதும் உருண்டு புரண்டுவிட்டு, ஓடுகாலில் சென்று தலைப்பகுதியில் ஊற்றெடுக்கும் இடத்தில் இரு கைகளையும் குவித்து நீரை அள்ளி உறிஞ்சி தாகம் தீர்த்தது நினைவுக்கு வந்தது.

வீட்டு வாசலில் தண்ணீரோடு நிரம்பிக் காட்சியளிக்கும் வாளிகள் இல்லை. ஓரத்துச் சாக்கடைகள் ஓட்டமில்லாமல் தேங்கிக் கிடக்கின்றன. வருடம் ஐம்பது, அறுபது தாண்டியும் இன்னும் அதற்கு விமோசனமில்லை. பாதாளச் சாக்கடைகள் உருப்பெறவில்லை. பூமியில் தண்ணீர் அடியாழத்துக்குப் போய் பலகாலமாயிற்று என்றார்கள். வீட்டுக்கு வீடு தண்ணீர்க் குழாய் வந்தபாடில்லை. பிளாஸ்டிக் குடங்களைக் கட்டிக் கொண்டு சைக்கிளில் சிலர் பறப்பதைப் பார்க்க முடிந்தது. இண்டு இடுக்கு இல்லாமல் நிறையக் குடங்களை அடுக்கிக் கொண்டு ஒரு ஆள் டிரை சைக்கிளில் போகும் காட்சி மனதைப் பதற வைத்தது.

இப்போது தண்ணீர் எங்கிருந்து வருகிறது? மினரல் வாட்டர் என்றொரு சிறிய வேன் போய்க் கொண்டிருந்தது. ஒரு குடம் பன்னிரெண்டு ரூபாய் என்றார்கள். அந்த வேன் டேங்கை என்று சுத்தம் பண்ணினார்களோ? எல்லாமும் இங்கே காசாகிவிட்டது. இருப்பவன்தான் சமாளிக்க முடியும். இல்லாதவன் சீரழிய வேண்டியதுதானா?

வாத்தியார் அகோபிலம் வீடு.. எல்லாம்அப்படியே இருந்தது. புதிது புதியதாகப் பெண்மணிகள் நடமாடிக் கொண்டிருந்தார்கள். பழைய தலைமுறை ஆள்கள் எவரும் தென்படவில்லை. இவர்கள் அவரின் உறவுகள்தானா அல்லது வேற்று ஆள்களா? திண்ணையில் மாட்டியிருக்கும் அவர் தன் சைக்கிளோடு நிற்கும் போட்டோ மட்டும் கறையேறி அப்படியே தொங்கிக் கொண்டிருந்தது. வேற்று ஆள்கள் என்றால் அதை அகற்றி இருப்பார்களே என்று தோன்றியது. அன்று சைக்கிள் வைத்திருந்த ஒரே ஆசிரியர் அவர்தான்.அதில்தான் மூன்று தெருக்களையும் சுற்றிச் சுற்றி வருவார். விளையாடிக் கொண்டிருக்கும் பசங்களை விரட்டிப் பிடித்துக் கண்டித்து வீட்டுக்கு அனுப்புவார். தன்னலமற்ற சேவை அது. ஏழைப் பையன்களுக்கு இலவசமாக டியூஷன் எடுப்பார். ஒவ்வொரு பிள்ளை மீதும் தனிக் கவனம்.

பள்ளிக்குச் செல்லும்போது கோயில் தெரு சுந்தர்ராஜன் வாத்தியார் பத்துக் குழந்தைகளை உடன் அழைத்துச் செல்வார். கட்டுக் குடுமியும், கோட்டும் பஞ்சகச்சமும் நெற்றியில் துலங்கும் குங்குமம் சந்தனமும், அப்படியே காலில் விழுந்து வணங்கத் தோன்றும். ' ஒவ்வொரு பிள்ளைகளையும் முன்னேற்றணும், நல்ல உத்தியோகத்துக்குப் போகச் செய்யணும், குடும்பத்தைக் காப்பாத்துறானா என்று கண் குளிரப் பார்க்கணும்' என்று ஆதங்கப்பட்டு உழைத்த அந்த தியாகத் தலைமுறை இனி வரவா போகிறது? நல்லாசிரியர் விருது பெற்றபோது அந்த ஊரே மகிழ்ந்தது. 'இந்த விருதுக்காகவா நான் பண்ணினேன் இதையெல்லாம்?'- இது அவர் கேள்வி.

திண்ணையில் உட்கார்ந்து தெருக் கம்பத்தின் வெளிச்சத்தில் படித்ததும், வாடகைக்குக் குடியிருந்த அந்த வீடும் அப்படியேதான் இருந்தன. யாரும் வசிக்கவில்லை அங்கே? மின்சார வசதியில்லாத வீடு இன்னும் அப்படியேதான் இருந்தது. சற்றே பாழடைந்தது போல! உள்ளே போய்ப் பார்ப்போமா? என்று தோன்றிய ஆசையை அடக்கிக் கொண்டார்.
அன்று அகல அகலமாய்த் தோன்றிய தெருக்கள் இன்று ஏன் இப்படிக் குறுகிப் போயின. அந்த வழியாகத்தான் இருட்டில் பெட்டியைத் திருடிக் கொண்டு சிலர் ஓடினார்கள். இனம் தெரியாமல் விரட்டிப் பிடிக்க ஓட, மண்டையில் விழுந்த அடியும், அதன் பின் தெருவே அப்பாவை அழைத்துக் கொண்டு ஆஸ்பத்திரி போனதும், எல்லோரும் கூட்டமாய் போலீஸ் ஸ்டேஷன் போய் நின்றதும், எடுத்துச் சென்ற பெட்டியை ஆற்றுக்கு அந்தப்புறம் தென்னம்தோப்பு தாண்டி இருக்கும் காய்ந்த வயற்காட்டில் கொட்டி, பாதுகாத்து வைத்திருந்த சில நகைகளையும், பட்டுப் புடவைகளையும் எடுத்துக் கொண்டு, மற்றதைப் பெட்டியோடு அப்படியே விட்டு விட்டு ஓடி விட்ட திருடர்கள் பின்னாளில் பிடிபட்டனர்.
அப்போது, 'அடையாளம் சொல்லுங்க சாமி! இவிங்கதானா?'என்று கேட்க, அப்பா, 'போனாப் போகட்டும் விடுங்க?' என்று சொல்லிவிட்டதும், அந்த நாளின் நினைவலைகள் அப்பாவின் இரக்க குணத்துக்குச் சான்றாய்.

என்றோ எங்கோ ஒரு தவறு, திருட்டு நடக்கும். இன்று அப்படியா? அதுவே வாழ்க்கையாய் மாறி விட்ட காலம் இது! தவறுகளும் குற்றங்களும் நடக்காத நாள்தான் ஏது?
இந்த நிமிடம் வரை, தான் யார் என்று எவருக்கும் அங்கே தெரியாது. எல்லாரும் புது முகங்களாய் இருந்தார்கள். தலைமுறை இடைவெளி மாற்றத்தில் பழைய ஆள்கள் எவருமில்லை அந்த ஊரில். ஒன்று படிப்படியாக இறந்திருக்க வேண்டும்அல்லது தன்னைப்போல் வேற்றூருக்கு நகர்ந்திருக்க வேண்டும்.

யாருமே சொந்த ஊரைப் பார்க்க வேண்டும் என்று வருவதில்லையா? எவருக்கும் ஆர்வமில்லையா? அடிப்படை ஒழுக்கத்தையும், வாழ்வின் நியமங்களையும் கற்றுக் கொடுத்த ஊரல்லவா அது? அந்த ஊரில் வளர்ந்துதானே வெளியிடங்களுக்குப் போய் நிலைத்தோம்? அங்கு கற்றுக் கொண்ட நல்லொழுக்கமும், கட்டுப்பாடும்தானே இன்றுவரை நிலைத்து வழி நடத்துகிறது?

' என்னடா எந்நேரமும் விளையாட்டு? விளையாண்டது போதும். போய்ப் படிக்கிற வழியைப் பாரு?

சாயங்காலம் ஆச்சுன்னா கோயிலுக்குப் போய் கும்பிட்டுட்டு, சட்டுன்னு பாடம் படிக்க உட்காராம இங்கென்ன சினிமா கொட்டகைப் பக்கம் அலைஞ்சிட்டிருக்கே! போ.. போ.. வீட்டுக்கு ஓடு. உங்கப்பாட்ட சொல்லணுமா?'

'ஓட்டல்ல வேலை பார்த்து, உங்கப்பா உங்களைப் படிக்க வைக்கிறார். தெரியுமோல்லியோ? நீ இப்படி ஊர் சுத்திட்டிருந்தீன்னா எப்படி? நாளைக்கு நீ வேலைக்குப் போயி, அவாளை உட்கார வச்சுக் காப்பாத்த வேண்டாமா? இங்கே திருவிழாக் கூட்டத்துலே தினமும் சுத்திட்டிருந்தீன்னா? வீட்டுக்குப் போய்ப் படிக்கிற வழியப் பாரு? ஓடு.. உங்க அம்மாகிட்ட சொன்னேனா, சட்டு வத்தக் காய்ச்சி ஒரு இழுப்பு இழுத்துப்பிடுவா?, தெரிஞ்சிக்கோ? ஏது காசு உனக்கு? யாரு கொடுத்தா? உங்க அம்மாகிட்டச் சொல்றேன்.'

ஊரில் இருந்த ஒவ்வொருவருக்கும் என்னவெல்லாம், எப்படியெல்லாம் அக்கறை இருந்தது? மற்றவர் பிள்ளைதானே என்று யாரும் விட்டதில்லையே? விலகிப் போனதில்லையே? பணக்காரர், ஏழை என்கிற வித்தியாசமில்லாமல் மனிதனுக்கு மனிதன் சமம், ஏற்றத்தாழ்வு என்பது எதுவுமில்லை என்று வாழ்ந்த அருமையான ஜீவன்களாயிற்றே.தன் கண் காணும் ஒவ்வொருவரும் வாழ்வில் ஏற்றம் காண வேண்டும் என்று ஆசைப்பட்ட மனிதர்களாயிற்றே!

இவைகளை மானசீகமாய் அனுபவிக்க, புதுப்பித்துக் கொள்ளத்தான், யாருக்கும் தெரியாமல், எவருக்கும் சொல்லாமல் இங்கே வந்திருக்கிறேனா? அந்த ஆத்மார்த்தமான நல் உணர்வு அழிந்து போய்விடக் கூடாது என்றுதான் இந்த அமைதி காக்கிறேனா?

'ஓட்டல்ல வேலை பார்த்தாரே, அவர் பிள்ளைதானே நீ?' என்பார்களோ? வேலை பார்த்து சம்பாரிச்சுத்தானே குடும்பத்தைக் காப்பாத்தி உயர்த்தி நிறுத்தினாரு? தான் உண்டு தன் வேலையுண்டுன்னுதானே இருந்தாரு? அவர மாதிரி முன்னேறின குடும்பம் ஒண்ணைச் சொல்லு பார்ப்போம்? யாரேனும் முரணாய், யோசிக்காமல் ஏதேனும் கேட்டு வைத்தால், இன்று அவர் பதில் இதுவாய்த்தான் இருக்கும்.

வாழ்க்கையையே தியாகமாக்கி தெய்வமான மனுஷனைக் காண்பிங்க பார்ப்போம்! வாய்விட்டுக் கத்த வேண்டும்போல் இருந்தது. அப்பா அம்மாவின் தியாகங்களை எண்ணி எண்ணி மனம் பெருமிதம் கொண்டது. ஆனாலும் இளம் பிராயத்து விளையாட்டுக்கள் என்றும் மறக்க முடியாதுதான். இன்று மீண்டும் செய்ய முடியாதவைகளாயிற்றே அவைகள். முடியுமென்றால்தான் இந்த ஆலமர விழுதிலேயே ஆடித் தீர்த்திருக்கலாமே!

சிறுவயதில் பக்கத்துக் கிராம மாரியம்மன் கோயில் திருவிழாவுக்கு வீட்டில் சொல்லாமல் போய் வந்ததும், 'ஏன் அங்கெல்லாம் போனே! ஏது காசு? யாரு கொடுத்தா? எங்கயானும் திருடினியா? உள்ளதச் சொல்லு! இல்லன்னா அடிச்சே கொன்னுடுவேன்!' என்று அம்மா தொடையில் இழைத்ததும், அடியாத பிள்ளை படியாது என்பது எவ்வளவு நிஜமாகிவிட்டது? இன்று பள்ளிக் குழந்தைகளை ஆசிரியரே தொட முடியாதே? கண்டிச்சு வளர்க்காத பிள்ளை கட்ட மண்ணாத்தான் போகும் என்பார்களே! அது எத்தனை சத்தியமான வார்த்தைகள்? அம்மா கொடுத்த காசில் அரையணாவுக்கு கலர் சர்பத் வாங்கி பெரிய கண்ணாடி கிளாசில் வயிறு நிரம்பக் குடித்தோமே? அந்த ருசி இன்று வருமா?

எதிர்த்தாற்போல் இருந்த பெட்ரோல் பங்க்கின் நுழைவாயிலில் இருந்த பாலத் திட்டில் உட்கார்ந்தார். அந்த பங்க்கும் எதிரே அந்த மரமும் எத்தனை வருடங்களாய் இருக்கின்றன? வாக்கிங் வருகையில் அங்கேதானே மணிக்கணக்காய் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்போம்?

படம் போடப் போவதற்கு அடையாளமாய் கடைசிப் பாட்டாய் 'மருதமலை மாமணியே முருகையா?' கேட்டவுடன்தானே வீட்டுக்குக் கிளம்புவோம்? ஆனால் அன்று மனதில் இருந்த நிம்மதி இன்று இல்லை.

சொந்த ஊருக்கு யக்ஞராமன் வந்திருப்பது பார்கவிக்குத் தெரியாது. மதுரை வீட்டில்தான் இருப்பதாக நினைத்துக் கொண்டிருப்பாள். அங்கிருந்து சென்னை சென்ற பின் போகவும் வரவும் என்று இன்றுவரை அலைச்சல் தொடருகிறதுதான். ' நான் வரலை' என்று அவள் சொல்லிவிட, 'கிட' என்று விட்டு விட்டு இவர் கிளம்பி விடுகிறார்.

அவளுடன் வந்து ஒரு மாதமேனும் தனியே இருக்க வேணும் என்கிற அவாதான். வந்தால்தானே? தனக்கிருக்கும் ஆசை மற்றவருக்கும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியுமா? அவளுக்கென்று தனி சிந்தனை உண்டுதான். அவளுக்குப் பையனோடு இருப்பதில்தான் விருப்பம்.

கல்யாணம் பண்ணினமா, தனிக்குடித்தனம் வச்சமா, கிளம்பினமான்னு இருக்க வேண்டாமா? அதென்ன பையனோடு பசையாக ஒட்டிக் கொண்டிருப்பது? அது அவன் மனைவிக்குப் பிடிக்கலாம், பிடிக்காமலும் போகலாம். வாய்விட்டுச் சொல்லத் தயங்கலாம் அல்லது இருந்து தொலைச்சிட்டுப் போகட்டும் என்றும் நினைக்கலாம்.
யார் மனசுக்குள் என்ன இருக்கும் என்று யார் கண்டது?

அப்பா, அம்மாவிடம் எப்படி இதைச் சொல்வது என்கிற தயக்கத்தோடு யோசித்துக் கொண்டிருக்கலாம். எது சமயம் என்று காத்திருக்கலாம்.எப்படி வெளியேற்றுவது? அவர்களாகக் கழன்று கொண்டால் தேவலை, பழி இல்லாமல் போகும்.

சாவு வந்தாலும் தேவலை. அதற்கு நாள் வர வேண்டுமே! கழுத்தைப் பிடித்தா நெறிக்க முடியும்? இவளுக்கென்ன நஷ்டம். வயசான காலத்துல அவங்க எங்க போவாங்க? உங்க அப்பா, உங்க தாத்தா பாட்டியை வச்சுக் காப்பாத்தலயா? அதுபோல எங்கப்பாம்மாவை நான் வச்சுக் காப்பாத்தறேன். இதில உனக்கென்ன நஷ்டம்? எங்கம்மா என்ன சும்மாவா உட்கார்ந்திருக்காங்க? தினமும் சமையல் வேலையை அவுங்கதான கவனிக்கிறாங்க? கிச்சன் கன்ட்ரோல் அவுங்க கைலதான இருக்கு. நீ ஜாலியாத்தான இருக்கே? வாரா வாரம் ஓட்டல்ல போய் உன் விருப்பத்துக்குத் திங்கறோமில்லை? பிறகென்ன? கம்னு இரு.என்று சொல்லி அடக்கியிருப்பானோ? அவ்வளவு தைரியசாலியா நம் பையன்? இவருக்கு நம்பிக்கையில்லைதான். அவன் பொண்டாட்டியின் காலைப் பிடிக்கிறவன் என்று. ஆண் மகனுக்கு எது அழகு? தன்னொழுக்கம். தன் கடமை தவறாதிருப்பது. தான் இருக்கும் இடத்தில் இருந்தால் அந்த மதிப்பு தானே வந்து சேர்கிறது? வராமல் விலகி விடுமா என்ன? நியாயத்தை எடுத்துச் சொல்லத் திராணி இல்லாதவன் என்ன ஆம்பளை?

எல்லாச் சண்டையும் போட்டு ஓய்ந்து, இப்போது அவனும் அமைதியாகிவிட்டான். எப்பப் பார்த்தாலும் எதுக்கு சண்டை? என்று அவளோடு அளவாகத்தான் பேச்சு வைத்துக் கொண்டிருக்கிறான். கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்கிறான். இவனாகப் போய் அவளிடம் எதுவும் பேசுவதில்லை. அவளும் இவனிடம் வந்து நிற்பதில்லை. ஒரே வீட்டில் தனித்தனியாக இருக்க முடியுமா? ஏன் முடியாது? தீவுகளாய் வளைய வர வேண்டியதுதான்.

வாரத்தில் ஒருநாள் கோயிலுக்குச் செல்கையில் சேர்ந்து செல்கிறார்கள். வரலை என்று கூறினால் அதுக்கு ஒரு சண்டை கிளம்பும். 'உன் குணத்துக்கு யாருக்குத்தான் உன்னைப் பிடிக்கும்? புகுந்த இடத்தில் எப்படியிருக்க வேண்டும்' என்று அப்பன் ஆத்தாள் சொல்லியே கொடுத்திருக்க மாட்டார்களா? நாளைக்கு இன்னொரு வீட்டுக்குச் செல்லும் பெண்ணை எப்படி வளர்த்திருக்க வேண்டும்? இப்படியா ஒரு பொம்பளப் பிள்ளையை வளர்ப்பது? இதற்காக அவர்கள் வெட்கப்பட வேண்டாமா? வயிற்றெரிச்சல் தாளவில்லை யக்ஞராமனுக்கு.
பெற்றோர் செய்த பாவம் பிள்ளைகளைச் சாரும் என்பார்கள். அப்படி என்ன பாவம் செய்தேன்? முன் ஜென்மத்துப் பாவம் இப்போது தொடர்கிறதோ? பையனுக்கு சரியாகப் பார்த்து முடிக்கவில்லயோ என்கிற சந்தேகம் இன்னும் அவரை வாட்டிக் கொண்டுதான் இருக்கிறது. இனி என்னதான் செய்ய முடியும்? இருப்பதை வைத்து ஓட்ட வேண்டியதுதான். நமக்கு அட்ஜஸ்ட் ஆகலைன்ன நாம அட்ஜஸ்ட் ஆகிக்க வேண்டிதான்! பையனுக்கு அந்த மெச்சூரிட்டி இருக்கத்தான் செய்கிறது. வாழ்ந்தாக வேண்டுமே!

ஆனால் இவருக்குள் புழுக்கம் தீர்ந்தபாடில்லைதான். அதற்காகவே அவர் மாதம் ஒருமுறை எப்படா ஊர் போவோம் என்று கிளம்பி விடுகிறார். கண்ணிலிருந்து மறைந்தால் போதும் என்கிற நிலைக்கு வந்து விட்டார். அவர்கள் வாழ்க்கையை அவர்கள் வாழட்டும், என் கூட வந்து விடு என்றால் பாவி அசைய மாட்டேன் என்கிறாளே? கொஞ்சமாவது கூர் இருக்கிறதா உனக்கு என்று பலமுறை திட்டிவிட்டார். சுரணை இருந்தால்தானே? சண்டையோ, சச்சரவோ ஒருத்தருக்கொருத்தர் சரியாய்ப் போகும்! நாமும் கூட இருந்து கழுத்தறுத்தால்தான் அது பகையாய் மாறும். பொறுமிப் பொறுமி வெடிக்கும். ஒரு வேளை அந்தப் பெண்ணின் ஆழ் மனத்தில் தனிக் குடித்தனம் நடத்தணும் என்கிற ஆசையிருந்தால்? சொன்னால் அது தன் அப்பா காதுக்குப் போய் சண்டையாய் வெடிக்கும் என்கிற பயமோ?
சம்பந்தியே கூட அதுவாய் அப்படி நடந்தால் நடக்கட்டுமே என்று நினைக்கலாம். நாம இதிலெல்லாம் தலையிட்டோம் என்று இருக்க வேண்டாம் என்று ஒதுங்கியிருக்கலாம். பிக்கல் பிடுங்கல் இல்லாமல் தன் பெண் விட்டேற்றியாய், ஜாலியாய், சந்தோஷமாய் இருக்க வேண்டும் என்று எந்தத் தகப்பன் விரும்ப மாட்டான்? இவருக்குள் படம் ஓடிக் கொண்டேதான் இருந்தது.
ஊருக்குப் போக ரிசர்வ் பண்ணி விட்டு அந்த நல்ல நாளுக்காகக் காத்திருக்கிறார். என்னவெல்லாம் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும், அங்கு போய் என்னென்ன லோக்கல் வேலைகளைக் கவனிக்க வேண்டும், சமையலுக்கு என்னவெல்லாம் சுருக்கமாய் வாங்கி வைக்க வேண்டும் என்று பட்டியலிட்டுக் கொள்கிறார்.

எந்தச் சண்டையும் சச்சரவும் இல்லாத மயான அமைதியை அவர் மனது நாடுகிறது. யாருடைய குறுக்கீடும் இல்லை என்பதை ஊரில் தன் தனி வீட்டில் இருக்கும்போது நினைத்து நினைத்து சந்தோஷப்பட்டுக் கொள்கிறார். மனைவி வரவில்லையே என்ற வருத்தமிருந்தாலும், தனியாய் இருப்பதிலே ஒரு சிறப்பு சுகம் கண்டார். அவர் மனது சந்நியாச நிலையில் தற்போது பயணித்துக் கொண்டிருந்தது. எல்லாமும் கடைசியில் வெறுமையில்தான் முடிகின்றன என்று இப்போது நினைக்க ஆரம்பித்திருந்தார். எத்தனை கோடி கோடிப் பேர் வாழ்ந்து மறைந்த உலகம் இது. அவர்களெல்லாம் நினைக்கப்படுகிறார்களா என்ன? முன்னோர்களின் நினைவு நாளின் போது மூன்றாவது தலைமுறை பேர் சொல்லுங்கோ என்னும் போது தற்போதைய தலைமுறைப் பெயர்தான் மூன்றாவது தலைமுறைக்கும் என்று சொல்வதில்லையா? அப்படித்தான் இருந்திருக்கும் என்கிற ஊகத்தில் சொல்வதுதானே அது? அதற்கு முன்பு, அதற்கும் முன்பு, இருந்து வாழ்ந்து மறைந்த இந்த வம்சத்தவர்களின் பெயர்களை யாரேனும் சொல்ல முடிகிறதா? எல்லாமும் அடையாளம் தெரியாமல் போவதுதான் கடைசியில். எண்ணப் பறவைகள் சிறகடித்துப் பறந்தன யக்ஞராமனுக்கு. தத்துவார்த்தமாய் மனதில் உருப்பெறும் எண்ணச் சிதறல்கள் அவர் மனதுக்குப் பிடித்திருந்தது. இந்த வகைத் தனிமையையும், அமைதியையுமே தன் மனது விரும்புகிறது என்று உணர்ந்தார்.

' மீதி வாழ்க்கையை நாம் வாழ்வோம். அவர்களின் புதிய வாழ்க்கையை அவர்கள் வாழட்டும்' என்கிறார் இவர். கேட்டால்தானே? என்று அவர்கள் அனுபவப்படுவது? அவர்கள் குடும்பத்தை அவர்கள் நடத்தட்டுமே! சின்ன வயசுதானே! 'மாங்கு மாங்கு' என்று வேலை செய்தாலும், ஓய்ந்து போகப் போவதில்லை. வளரும் மரம்! வேலை செய்யச் செய்ய உரம் பெறத்தான் செய்யுமேயொழிய தளர்ந்தா போகும்? தளர்ச்சியெல்லாம் ஐம்பது வயதுக்கு மேல்தான் என்று சொன்னால் கேட்டால்தானே? கூட இருந்தே கழுத்தறுப்பேன் என்று சொல்லிவிட்டாள். அம்மாவை விரட்ட அவனுக்கும் தைரியமில்லை. பெண்டாட்டியை அடக்கவே தைரியமில்லையே, பயந்து சாகிறானே? அப்புறம் எப்படி பெற்று வளர்த்த அம்மாவைச் சமாளிக்கப் போகிறான்? இடுக்கி நடுவில் மாட்டிக் கொண்டு முழிக்கிறான்.

எங்கள் ரெண்டு பேருடைய சேமிப்பும், பென்ஷனும் இருக்கிறதே! விட முடியுமா? விரட்டி விட்டால் நாளைக்கு ஏதேனும் தர்ம ஸ்தாபனத்துக்கு எழுதி வைத்து விட்டுப் போய் விட்டால்? ஆளைப் பிடிக்கிறதோ இல்லையோ அந்தக் காசைப் பிடித்தே ஆக வேண்டும். அப்பொழுதுதான் ஊரிலுள்ள அந்த வீடும் கைக்கு வந்து சேரும். அதை வாடகைக்கு விட்டால் வேண்டாம் என்றா இருக்கிறது? இருபத்தஞ்சாவது வங்கிக் கணக்கில் மாதா மாதம் சேராதா? அது காசில்லையா. அந்தக் காசு வந்தால் கசக்குமா? ஒன்றுக்கு இரண்டுக்கு என கக்கூஸ் வாசலில் காசு வசூலிக்கிறான். அந்தக் காசு நாறுமா என்ன? நாற்றத்தைப் பொறுத்துக் கொண்டு அவன்தானே கிடையாய்க் கிடக்கிறான்?

உலகமே இப்படித்தான். இவ்வளவுதான். இருந்தால்தான் உறவு. இல்லையென்றால் பிளவு. 'காசேதான் கடவுளடா! அந்தக் கடவுளுக்கும் இது தெரியுமடா! கைக்குக் கை மாறும் பணமே உன்னைக் கைப்பற்ற நினைக்குது மனமே!' என்று நினைத்துக் கொண்டே எப்படி அறைக்கு வந்து சேர்ந்தோம் என்று ஆச்சரியமாயிருந்தது. நினைவுகளிலேயே மீதி வாழ்க்கை கழிய வேண்டும் என்றிருக்கிறது போலிருக்கிறது.

பொழுது விடிந்ததும் நாளை படித்த பள்ளியைப் போய்ப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. இலவசக் கல்வி தந்து கல்விக் கண் திறந்த காமராசரை எண்ணி மனம் விம்மியது. அவரில்லையென்றால் எஸ்.எஸ்.எல்.சி வரை கூடப் படித்திருக்க முடியாது. அப்பா மாதிரி ஓட்டல் உத்தியோகத்துக்குப் போயிருக்க வேண்டியதுதான். அந்தக் கரண்டி பிடிக்கும் உத்தியோகம் தன் பிள்ளைகளுக்கு வரக்கூடாது என்றுதானே உயிரை விட்டார் அவர்.

அத்தனை வறுமையிலும் இலவச மதிய உணவுக்கு அனுப்பவில்லையே? பள்ளி இறுதித் தேர்வுக்கு வெறும் பதினோரு ரூபாய்தான் கட்டணம் எனினும் அதையும்கூட அன்று கட்ட முடியாமல் ஒரு நிலச்சுவான்தாரின் வீட்டுக்குப் பாட்டி அழைத்துச் சென்றதும், 'எம் பேரனுக்குப் பணம் கட்ட இன்னிக்குக் கடைசி நாள்! நீங்கதான் கொடுத்து உதவணும்' என்று சொல்லி, 'விழுடா அவர் காலில்...' .என்று கருணைத் தொகை வாங்கி வந்து மதியம் மணி மூன்று ஆன அந்தக் கடைசி நிமிடத்தில் தலைமையாசிரியரிடம் சென்று பரீட்சைக் கட்டணம் செலுத்திய அந்தக் காட்சி அவர் கண் முன்னே நிழலாடியது.

அப்போது, அவரையறியாமல் நெஞ்சம் விம்மியெழும்ப, கண்ணீர் பெருக்கெடுத்தது யக்ஞராமனுக்கு. சுற்று முற்றும் ஒரு முறை பார்த்தார். பள்ளி வாசல்படி உள்ளே நுழையும் இடத்தில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து நமஸ்கரித்தார். கொஞ்ச தூரத்தில் வாட்ச்மேன் நிற்பது தெரிந்தது. அவர் கையில் ஒரு ஐந்நூறு ரூபாய் நோட்டைத் திணித்தார். அவர் நெஞ்சுருகிக் கும்பிடும்போது அப்பா ஞாபகம் வந்தது. கைகளை ஆதுரமாகப் பிடித்துக் கொண்டார். கண்களில் நீர் பெருகியது.

இருக்கும் மீதி நாள்களையும் இப்படியே தனித்து இருந்து கழித்து விடுவோமா என்று ஒரு கணம் தோன்றியது. நேரம் ஆக ஆக அந்தச் சிந்தனை தீவிரப்பட்டுக்கொண்டேயிருந்தது அவரிடம். ஏகாந்த நாயகனாய் மனதுக்குள் தன்னை வரித்துக் கொண்டார்

யக்ஞராமன்.

ADVERTISEMENT
ADVERTISEMENT