தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சூரிய வெளிச்சத்தில் கண் கூசாமல் இருக்க..?

1st Oct 2023 12:00 AM

ADVERTISEMENT

 

எனக்கு வயது 88. ஒருமுறை பூச்சி தாக்கியதில் கண் பாதிப்பு அடைந்தது.  சூரிய வெளிச்சத்தில் வெளியே சென்றால் கண் கூசுகிறது. கண்களில் நீர் வடிகிறது. மேலும், தோல் அரிப்பு, தொண்டை எரிச்சல்,  முழங்கால் மூட்டு வலி, இடுப்பு, தோள்பட்டை வலி, மலச்சிக்கல் போன்றவையும் உள்ளன. இவை குணமாக ஆயுர்வேத மருந்துகள் என்ன சாப்பிடலாம்?

-க.வை.ராமகிருஷ்ணன்,
குமாரபாளையம்.

கண் சார்ந்த உபாதைகளைக் குணப்படுத்தக் கூடிய 'திரிபலை' எனும் கடுக்காய், நெல்லிக்காய் மற்றும் தான்றிக்காயின் கூட்டணியால் தயாரிக்கப்படும் சூரண மருந்து விற்பனையில் உள்ளது. சுமார் பத்து கிராம் சூரண மருந்தை, அரை லிட்டர் தண்ணீரில் கலந்து கொதிக்கவிட்டு, கால் லிட்டராக வற்றியதும் வடிகட்டி வெதுவெதுப்பாக இருக்கும்போதே, காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும். தொண்டை எரிச்சல், மலச்சிக்கலையும் கண் உபாதையும் சேர்த்தே குணமடையச் செய்யும் சிறப்பு இந்த மருந்துக்கு உள்ளது. 

ADVERTISEMENT

வயோதிகத்தின் விளைவால் ஏற்படும் தோல் சுருக்கம், அரிப்பை ஏற்படுத்துகிறது.  தோலில் நீர்ப்பசை வற்றுவதாலும், உணவு வழியே வர வேண்டிய ஊட்டத்தின் குறைவினாலும் தோல் அரிப்பு, வயோதிகத்தில் பலருக்கும் ஏற்படுகிறது. 

இளஞ்சூடான வேப்பெண்ணெய்யை உடல் முழுவதும் அதாவது தலை முதல் உள்ளங்கால் வரை தடவி, முக்கால் மணி நேரம் முதல் ஒருமணி நேரம் வரை ஊறிய பிறகு, சிறிது வேப்பம்பட்டை போட்டு ஊறிய வென்னீரால், எண்ணெய் பிசுக்கை அகற்றுவதற்காக குளிக்கப் பயன்படுத்தவும்.

முழங்கால் மூட்டுவலி, இடுப்பு வலி, தோள்பட்டை வலி போன்றவை எலும்புகளுக்கு இடையே உள்ள ஜவ்வுகளின் வரட்சியையும், இரு எலும்புகளுக்கு இடையே உள்ள ஜவ்வுகளின் குறைவையே எடுத்துரைக்கின்றன. 

தூய விளக்கெண்ணெய்யை இளஞ்சூடாக வலி உள்ள பகுதிகளில் தடவி, சிறிது நேரத்துக்குப் பிறகு தடவிய பகுதிகளின் மீது வென்னீர் ஒத்தடம் கொடுத்தால், எண்ணெய்ப் பசையின் வீரியம் உள்ளிறங்கி, உட்புறப் பசையை உருவாக்கி சிறந்த வலி நிவாரணியாகச் செயல்படும். 

காலையில் முன்குறிப்பிட்ட வேப்பெண்ணெய் சிகிச்சையையும், மாலையில் விளக்கெண்ணெய் சிகிச்சையையும் செய்துகொண்டால் நல்ல பயன் கிடைக்கும். அதுபோலவே, முன்குறிப்பிட்ட திரிபலைக் குடிநீரில் பத்து மில்லி விளக்கெண்ணெய்யையும் கலந்து குடித்தால், குடல் பகுதியில் பசை ஏற்படுவதுடன் மலம் மற்றும் குடல் வாயும் எளிதில் தம்மிடம் விட்டு நகர்ந்து, நெகிழ்ந்து வெளியேறும்.

நம் வசமில்லாத தன்னிச்சையாக குடலில் ஏற்படும் அசைவுகளை, வயோதிகத்தில் வாயுவின் ஆதிக்கத்தினால் பலரும் இழக்கக் கூடும் என்பதை நன்கறிந்திருந்த நம் முன்னோர், சமையலில்  விளக்கெண்ணெயை பயன்படுத்தி உடலைப் பாதுகாத்துக் கொண்டனர். அவ்விடத்தை, தற்சமயம் நல்லெண்ணெய், கடலை எண்ணெய், பாமாயில், சூரியகாந்தி எண்ணெய் போன்றவை பிடித்துக் கொண்டிருக்கின்றன.

நீங்கள் உணவில் உருக்கிய பசு நெய்யையும், தாராளமாக, சூடான சாதத்துடன் கலந்து பயன்படுத்தலாம். இதனால் குடல் சார்ந்த நரம்பு மண்டலம் வலுப்பெறும். குடல் அசைவுகளை உறுதிப்படுத்தும். மூலிகை நெய் மருந்துகளாகிய சுகுமாரம்கிருதம், இந்துகாந்தம் கிருதம், விதார்யாகிருதம் போன்றவை வயோதிகர்கள் பயன்படுத்த வேண்டிய தரமான ஆயுர்வேத தயாரிப்புகளாகும்.

சூடாறிப் போன உணவை நீங்கள் தவிர்ப்பது நலம். சமைத்த அரை- முக்கால் மணி நேரத்திலேயே உணவைச் சாப்பிடுவதால் அதிலுள்ள இளஞ்சூடானது குடலெங்கும் பரவி நின்று, உண்ட உணவை நெகிழ்த்தி, காலதாமதமின்றி செரிக்க உதவும். இதனால் கல்லீரல், மண்ணீரல், நுரையீரல், சிறுநீரகம் போன்றவற்றின் செயல்பாடுகள் அனைத்தும் தொய்வின்றி நடக்கும்.

(தொடரும்)

ADVERTISEMENT
ADVERTISEMENT