தினமணி கதிர்

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 132

எஸ். காசி விஸ்வநாதன்


பாஜக தலைவர் எல்.கே. அத்வானியை சந்திக்கச் சென்றேன். அவரது வீட்டின் வரவேற்பறையில் தொண்டர்கள்,  தலைவர்கள் என்று ஒரே கூட்டம்.  சந்திக்க முடியுமா என்கிற சந்தேகம், உள்ளே நுழையும்போதே ஏற்பட்டுவிட்டது. வரவேற்பறையிலும் வெளியிலும் குழுமி இருந்தவர்களைக் கடந்து உள்ளே போய், அவரது உதவியாளர் பரேக்கிடம் எனது அடையாள அட்டையை நீட்டியபோது சிரித்துக் கொண்டே அதை வாங்கிக் கொண்டார்.

"இன்றைக்கு நீங்கள் பேட்டி எடுக்க முடியும் என்று தோன்றவில்லை. எதிர்பாராதவிதமாக பார்வையாளர்கள் வந்துவிட்டனர். உத்தர பிரதேசத் தேர்தலும், நடக்க இருக்கும் கெளடா அரசின் நம்பிக்கைத் தீர்மானமும்தான் காரணங்கள். என்னை உள்ளே அழைத்தால், நீங்கள் வந்திருப்பதைத் தெரிவிக்கிறேன்'' என்று கூறி அவரது இருக்கைக்கு அருகில் என்னை அமர வைத்தார்.

சிறிது நேரத்தில் அத்வானியின் அறை அழைப்புமணி அடித்தது. உதவியாளர் உள்ளே சென்றார். அவர் திரும்பி வந்ததும், உள்ளே செல்லுமாறு எனக்கு சைகை செய்தார். 

அறையில் முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, ஜஸ்வந்த் சிங் உள்ளிட்ட முக்கியமான பல தலைவர்கள் அவருடன் அமர்ந்திருந்தனர். மேஜைக்கு எதிரில் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் இரண்டாவது வரிசையின் ஓர் ஓரத்தில் அமர்ந்தேன்.

"பேட்டிக்கு எல்லாம் சாத்தியமில்லை. இப்போது பேட்டி கொடுத்து என்ன சொல்லிவிட முடியும்? நம்பிக்கைத் தீர்மானம் முடிந்த பிறகு பேட்டியை வைத்துக் கொள்ளலாம்'' என்று அவர் சொன்னபோது, புரிதலுடன் 
தலையாட்டினேன்.

"சென்னையில் என்ன நடக்கிறது? அந்தப் பரபரப்பை விட்டுவிட்டு நீங்கள் ஏன் தில்லியில் இருக்கிறீர்கள்?''

அத்வானி கேட்ட கேள்வி நான் எதிர்பார்க்காதது அல்ல.

"உங்கள் பேட்டிக்காகத்தான் கிளம்பவில்லை. மேலும், நம்பிக்கைத் தீர்மானம் முடிந்ததும் போகலாம் என்று காத்திருக்கிறேன்...''

"நம்பிக்கைத் தீர்மானத்தில் உங்களுக்கு சந்தேகம் இருக்கிறதா என்ன?''

"இல்லை, இல்லை. என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்போமே என்று நினைத்தேன், அவ்வளவுதான்.''

"கருணாகரனையோ, பிரணாப் முகர்ஜியையோ சந்தித்தீர்களா?'' என்கிற அத்வானியின் கேள்வி என்னை நிமிர்ந்து உட்கார வைத்தது. அதைத் தெரிந்து கொள்ளத்தான் எனக்கு நேரம் ஒதுக்கப்பட்டது என்பது புரியத் தொடங்கியது.
"இரண்டு பேரையும் சந்திக்கவில்லை. ஏன் அவர்களைப் பற்றி இப்போது தெரிந்து கொள்ள விரும்புகிறீர்கள்?''

"காங்கிரஸின் வருங்காலம் என்ன என்பதை அவர்கள்தான் தீர்மானிக்க முடியும். அவர்கள் இருவரும் நரசிம்ம ராவுக்கு ஆலோசனை வழங்கினால், காங்கிரஸ் தப்பித்துவிடும். ஆனால், அவர்களும் நரசிம்ம ராவ் விலக வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்று நான் கேள்விப்படுகிறேன். அதன் உண்மைத்தன்மை தெரியவில்லை. அதனால்தான் உங்களிடம் கேட்கிறேன்'' என்றார் அத்வானி.

"நரசிம்ம ராவ் மீது நேரிடையாக வழக்குப் பதிவு செய்யாமல், அவரது உறவினர் மீது வழக்குப் பதிவு செய்ய பிரதமர் தேவே கெளடா முடிவெடுத்திருக்கிறார் என்று எங்களுக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. சிதம்பரமும், அமலாக்கத் துறையை முடுக்கிவிட்டு ஜெயலலிதா, சசிகலாவுக்கு நெருக்கடி கொடுக்க உத்தரவு இட்டிருக்கிறார். நரசிம்ம ராவின் மகன் பிரபாகர் ராவ் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம்.'' இந்தத் தகவல்களைத் தந்தது ஜஸ்வந்த் சிங்.

எனக்கு அவர்கள் தகவல் தருகிறார்களா, அல்லது அது தொடர்பான வேறு தகவல்கள் தெரியுமா என்று எதிர்பார்க்கிறார்களா, இல்லை மேலும் தகவல்களைத் திரட்டத் தூண்டுகிறார்களா என்று புரியவில்லை. காங்கிரஸை வழக்குப் போட்டு அடக்கி வைப்பதுதான் பிரதமர் கெளடாவின் திட்டம் என்பதை அவர்கள் பேசுவதிலிருந்து தெரிந்து கொண்டேன். அந்த முக்கியமான தலைவர்கள் விவாதிக்கும் இடத்தில் எனக்கு இனிமேலும் வேலை இல்லை என்பதை உணர்ந்து நானாகவே விடைபெற்று வெளியே வந்துவிட்டேன்.

அடுத்த சில நாள்களில் கெளடா அரசின் மீதான நம்பிக்கைத் தீர்மானத்திற்காக மக்களவை கூடியது. வழக்கம்போல, ஆதரித்தும் எதிர்த்தும் பலர் பேசினார்கள். பாஜகவும், காங்கிரஸூம் ஆட்சி அமைக்கும் எண்ணத்தில் இல்லை என்பதால் குரல் வாக்கெடுப்பின் மூலம் நம்பிக்கைத் தீர்மானம் நிறை
வேற்றப்பட்டது.

ஜூன் 12-ஆம் தேதி நம்பிக்கைத் தீர்மானம் நிறைவேறுவதற்குக் காத்திருந்ததுபோல, ஜார்க்கண்ட் எம்.பி.க்களுக்கு லஞ்சம் வழங்கிய புகாரின் அடிப்படையில் முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சென்னையில் கடுமையான மழை என்பதால், நான் எனது பயணத்தை தள்ளிவைத்துவிட்டு தில்லியிலேயே தங்கிவிட்டேன்.

கருணாகரன் தில்லியில் இல்லை. முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவுக்கு எதிராகக் காங்கிரஸில் ஒருசிலர் களமிறங்கி, மாற்றத்துக்கான கோரிக்கையை எழுப்பத் தொடங்கி இருந்தனர். தேர்தல் தோல்விக்குப் பிறகு, செய்தித் தொடர்பாளர் வி.என். காட்கில் பழைய உற்சாகம் இல்லாமல் இருந்ததால், அவரை சந்தித்தாலும் அதிகமாக எதுவும் பேசுவதில்லை. 

பிரணாப் முகர்ஜியை சந்தித்து நீண்ட இடைவெளி ஏற்பட்டுவிட்டதால், அவரை சந்திக்கத் தோன்றியது. அத்வானி போன்றவர்கள் கூறியதுபோல, காங்கிரஸில் ஏதாவது மாற்றம் ஏற்படுமானால் அதன் பின்னணியில் நிச்சயமாகக் கருணாகரனும் பிரணாப் முகர்ஜியும் இருக்கக்கூடும் என்பதும் உண்மை. அதனால் அவரது வீட்டிற்கு நேராக செல்வது என்று முடிவெடுத்தேன்.

கிரேட்டர் கைலாஷில் இருந்த அவரது வீட்டிற்குப் போனபோது அவர் கொல்கத்தாவில் இருப்பதாகச் சொன்னார்கள். நான் வந்திருந்த தகவலைப் பதிவு செய்துவிட்டுக் கிளம்பிவிட்டேன். அக்பர் ரோடு காங்கிரஸ் கட்சித் தலைமையகம், ஆட்சி போனதிலிருந்து களையிழந்து காணப்பட்டது. தொண்டர்கள் வருவது கணிசமாகக் குறைந்துவிட்டது.

எதற்கும் போய்ப் பார்ப்போம் என்று அங்கே சென்றபோது, ஆர்.கே. தவானின் அறையில் ஷீலா தீட்சித், குலாம்நபி ஆசாத், அசோக் கெலாட் மூவரும் அவருடன் அமர்ந்திருந்தனர். அறைக்கு வெளியே இருந்த உதவியாளர் அறையில் யாருமே இருக்கவில்லை. அறைக்கு வெளியே இருந்த கட்சிக்காரர் ஒருவர்தான் அந்தத் தலைவர்கள் உள்ளே இருப்பதை எனக்குத் தெரிவித்தார். நான் உதவியாளர் அறையில் சென்று அமர்ந்தேன்.

உள்ளே காரசாரமான விவாதம் நடந்து கொண்டிருந்தது. நரசிம்ம ராவ் கட்சித் தலைவர் பதவியிலிருந்தும், நாடாளுமன்றக் கட்சித் தலைவர் பதவியிலிருந்தும் விலகுவதன் மூலம்தான் காங்கிரஸைக் காப்பாற்ற முடியும் என்பது ஷீலா தீட்சித்தின் வாதம். அதை குலாம்நபி ஆசாத் ஏற்கவில்லை. அவருடைய கருத்துப்படி, ஐக்கிய முன்னணி அரசுக்கு ஆதரவு தொடரும் ஒவ்வொரு நாளும் காங்கிரஸூக்கு பலவீனம் ஏற்படும் என்பதுதான்.

அத்வானி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கூறிய கருத்துகளை ஆர்.கே. தவானின் அறையில் கூடியிருந்த தலைவர்களும் வெளிப்படுத்தினர். காங்கிரஸ் செயற்குழுவைக் கூட்ட வேண்டும் என்றும், அதில் இந்தப் பிரச்னையை விவாதிக்க வேண்டும் என்றும் ஆர்.கே. தவானும், அசோக் கெலாட்டும் கருத்துத் தெரிவித்தனர். அந்த விவாதத்தைக் கேட்டபடி அமர்ந்திருந்தபோது, அங்கே நுழைந்தார் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த தேவேந்திர துவிவேதி.

அவர் அறைக்குள் நுழைந்தபோது, சபை சீக்கிரத்தில் கலையாது என்று உணர்ந்து நான் அங்கிருந்து கிளம்பிவிட்டேன். காங்கிரஸிலும், வெளியிலும் நரசிம்ம ராவின் தலைமைக்கு எதிர்ப்பு வலுக்கிறது என்பதும், தேவே கெளடா அரசு அவர் மீது நடவடிக்கையை முடுக்கிவிடும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்பதும் எனக்கு உறுதியானது.

அடுத்த இரண்டு நாள்களில் பிரணாப் முகர்ஜியின் வீட்டிலிருந்து அவரை வந்து சந்திக்கும்படி தகவல் வந்தது. அக்பர் ரோடு அலுவலகத்தில் இருந்த ஓர் அறைக்கு வந்து விடும்படி அவரது உதவியாளர் தெரிவித்தார்.

பிரணாப் முகர்ஜிக்காக நான் அக்பர் ரோடு அலுவலகத்தில் காத்திருந்தேன். அந்தக் கட்டடத்தின் பின்புறம் அமைந்த அறையில்தான் அவர் வழக்கமாக அமர்வது வழக்கம். வழக்கம்போலக் கையில் சில கோப்புகள், பத்திரிகைகளுடன்தான் வந்தார். அறையில் சென்று அமர்ந்ததும் என்னை வரச் சொன்னார். உள்ளே போனபோது, வழக்கமாக "கம்.. கம்..' அழைப்பு இல்லை. அன்று அவர் உற்சாகமிழந்து காணப்பட்டதுபோலத் தெரிந்தது.

அவரது மேஜைக்கு எதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்தேன்.

"இத்தனை நாள்களாக எங்கே போய்விட்டாய்? வரவே காணோமே...''

"நீங்கள்தான் பிஸியாகி விட்டீர்கள். அதுவும் நீங்கள் வெளியுறவுத் துறை அமைச்சரான பிறகு, அடிக்கடி வெளிநாடுகளுக்குப் போய்விட்டீர்கள். உங்களைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று நினைத்துத்தான் வரவில்லை.''

"நானும் எல்லோரையும் பார்ப்பதையும், சந்திப்பதையும் தவிர்த்து வந்தேன். பிரதமர் நெருக்கடியில் இருக்கும்போது, நான் மெளனமாக இருப்பதுதான் சரி. அவரிடம் மட்டும்தான் எனது கருத்துகளைப் பகிர்ந்து கொள்வது என்று முடிவெடுத்திருந்தேன்.''

"மரியாதை நிமித்த சந்திப்புக்களையும், தங்கள் மீது அபிமானம் வைத்திருக்கும் என் போன்றோரையும் கூடவா தவிர்க்க வேண்டும்?''

"ஆமாம்'' என்பதுபோலத் தலையாட்டினார். வழக்கம்போலத் தனது பைப்பைப் பற்ற வைத்தபடி என்னிடம் சொன்னார் - 

"காங்கிரஸ் மிகவும் தர்ம சங்கடமான கட்டத்தைக் கடந்து கொண்டிருக்கிறது. கூட்டணி ஆட்சிக்காலம் தொடங்கிவிட்டது. அடுத்த மூன்று நான்கு தேர்தல்களில்  கூட்டணி ஆட்சிதான் அமையும்...''

"அதற்குப் பிறகு?''

"தெரியாது. சொல்ல முடியாது. காங்கிரஸ் அல்லது பாஜகவின் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைந்தால் மட்டும்தான், நிலையானதாக இருக்கும்.''

"இப்போது பதவி ஏற்றிருக்கும் தேவே கெளடா அமைச்சரவை அதிக நாள்கள் தாக்குப் பிடிக்காது என்று கூறுகிறீர்களா?''

"தொடங்கும் போதே தடுமாற்றம் தெரிகிறதே, என்ன செய்ய? காங்கிரஸைப் பிளவுபடுத்தவோ, பலவீனப்படுத்தவோ பிரதமர் கெளடா முற்படுவது அவருக்கே நல்லதல்ல. தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளத்தான் உன்னை அழைத்தேன். அங்கே என்ன நடக்கிறது? மூப்பனார்ஜியின் நிலைமை என்ன?''

"நான் அங்கே போகவில்லை. மூப்பனாருக்கு எந்தவித வேலையும் தமிழகத்தில் இல்லை. திமுக வலுவாக ஆட்சியில் அமர்ந்திருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் ஜெயலலிதா கைது செய்யப்படலாம் என்று செய்திகள் வருகின்றன.''

"கருணாநிதி அரசியல் தெரிந்தவர். ஜெயலலிதாவைக் கைது செய்வது என்று முடிவெடுத்தால், மக்கள் மத்தியில் ஆதரவில்லாத இந்த நேரத்தில் செய்ய வேண்டும். தாமதிப்பது தவறு. ஆனால், அவரைக் கைது செய்வதால், அவர் மீது அனுதாபம் ஏற்படாது என்று என்ன நிச்சயம்?''

"ஜெயலலிதாவைக் கைது செய்ய மாட்டார்கள். சசிகலாவைத்தான் கைது செய்வார்கள். அவரை அப்ரூவராக்கி அதற்குப் பிறகு ஜெயலலிதாவைக் கைது செய்வார்கள் அல்லது அவர்மீது வழக்குத் தொடுப்பார்கள்.''

பிரணாப் முகர்ஜி எதுவும் பேசவில்லை. நான் அதிகப்பிரசங்கித்தனமாக அவரிடம் பேசிவிட்டேனோ என்று நினைத்து மெளனமானேன்.

"நாளைக்குக் கருணாகரன்ஜி தில்லி வருகிறார். அவர் வீட்டில் சந்திப்போம்'' என்று பிரணாப் முகர்ஜி சொன்னபோது, நான் எழுந்து விடை பெற்றேன்.

காங்கிரஸ் தலைவர் நரசிம்ம ராவ் அப்போது எடுத்த அதிரடி முடிவு, தேவே கெளடா அரசை மட்டுமல்ல, பாரதிய ஜனதா கட்சியினரையும் ஏன் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலரையும்கூட அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்தது எப்படி? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT