தினமணி கதிர்

மாமன் மகள்

மா. மகாராஜன்

சுவரில் மாட்டியிருந்த கடிகாரத்தைப் பார்த்தார் சிவகாமி. மாலை மணி 5.40. அதிகபட்சம் பதினைந்து நிமிஷங்களில் சுபாஷ் வந்துவிடுவான். நினைத்தபடியே தெருவை பார்க்க ஆரம்பித்தார்.
சுபாஷ் வருவதை பார்த்ததும், கீழே சென்று கதவைத் திறப்பதற்கும், சுபாஷ் வண்டியை நிறுத்திவிட்டு, உள்ளே வருவதற்கும் சரியாக இருந்தது.
"என்னம்மா?'' என்று கேட்டபடியே உள்ளே வந்து அமர்ந்தான் சுபாஷ்.
அந்த "என்னம்மா'வில் "நான் வருவதற்கு முன்னமே, தயாராக வந்து கதவை திறக்கிறாயே, எதாவது முக்கியமான விஷயமா?' என்ற கேள்வி அடங்கி இருந்ததை புரிந்து கொண்டாள் சிவகாமி.
"இல்லைப்பா, எல்லா வேலையும் முடிஞ்சிட்டு, மேலே வந்து உட்கார்ந்துகிட்டு இருந்தேன். நீ வர்றது தெரிஞ்சோன்ன, கீழே இறங்கி வந்தேன். வேற ஒண்ணுமில்லை. ''
"அப்படின்னா சரி.'' என்று சொன்னவனிடம், "முகத்தைக் கழுவிட்டு வா. டீ எடுத்திட்டு வர்றேன்'' என்று சொல்லிவிட்டு சமையல் அறைக்குள் நுழைந்தாள் சிவகாமி.
"சுந்தரம் மாமா, நாலஞ்சு முறை போன் செய்தாராம். நீ எடுக்கவே இல்லையாம்'' என்று டீ கொடுத்துவிட்டு, கேட்ட அம்மாவை பார்த்து சிரித்தபடியே, "அதானே பார்த்தேன். இப்ப புரியுது'' என்று சொன்னான்.
"சே... சே... அதுக்காக இல்லைப்பா. அவர் எனக்கு போன் பண்ணி சொன்னாரு. சாதாரணமா அப்படி செய்ய மாட்டியே. அதான் கேட்டேன்.''
"ஓ. அவருதான அது. பதினோரு மணியிலேயிருந்து, தொடர்ச்சியா அஞ்சாரு முறை போன் வந்திச்சு. அவரு நம்பர நான் ஸ்டோர் பண்ணி வைக்கலை. எப்போதும் மாதிரி, தேவையில்லாம போன் நிறைய வரும். அது மாதிரி நினைச்சுதான் எடுக்கலை. மத்தபடி அவரு நம்பருன்னு தெரிஞ்சே எடுக்காம இல்லை. என்ன, எதாவது ஒப்பாரி வச்சாரா?''
"அப்படியெல்லாம் இல்லப்பா. வர்ற ஞாயிற்றுக்கிழமை சென்னை வர்றாராம். உன்னை பார்க்கணுமா. அதான் எங்கேயும் போகாம, கொஞ்சம் வீட்ல இருக்க சொன்னாரு!''
"என்னம்மா ஆச்சரியமா இருக்கு?''
"இதில ஆச்சரியப்பட என்னப்பா இருக்கு?''
"என்னம்மா இப்படி கேட்டிட்டிங்க. நாம சென்னை வந்து ஒன்பது வருஷம் ஆகப் போகுது. எத்தனையோ முறை சென்னைக்கு வந்துட்டு போயிருக்காரு! அப்பெல்லாம் வராதவரு, இப்ப வரப்போறேன்னு சொல்லியிருக்காரே. அதை நினைச்சு ஆச்சரியப்பட்டேன். சரி அத விடுங்க! எதுக்காக வர்றாராம்?''
"அதெல்லாம் ஒண்ணும் சொல்லலை!''
"சும்மா சொல்லுங்கம்மா. கண்டிப்பா வர்ற காரணத்தை சொல்லியிருப்பாரு!''
"உண்மையிலேயே எனக்கு தெரியாதுப்பா. தெரிஞ்சா சொல்ல மாட்டேனா?''
" ஆமாம், அவரு பொண்ணுக்கு என்ன வயசு இருக்கும்?''
"இருபது, இருபத்தொண்ணு இருக்கும்ன்னு நினைக்கிறேன். ஏன்?''
"அவரு பொண்ண, உனக்கு மருமகளா ஆக்கிக்க சம்மதமான்னு கேட்க கூட வரலாம்?''
"நல்ல விஷயம்தானே!''
"அவருக்கு. நமக்கு இல்ல. என்னம்மா, மறந்திட்டிங்களா?''
கேட்டவனை கொஞ்சம் யோசனையோடு பார்த்தார்.
"சுபாஷ் . ஒண்ணு சொன்னா தப்பா எடுத்துக்காதே. அவரு எதுக்காக வந்தாலும் சரி. மரியாதை குறைவா எதுவும் பேசிடாதே. என்னதான் இருந்தாலும், என்னோட அண்ணன். வயசுக்கு மரியாதை கொடுத்தே ஆகணும்!''
"என்னம்மா, அண்ணன் பாசமா? அப்பப்ப பழச கொஞ்சம், ஞாபகப்படுத்தி பார்த்துக்குங்க. சரியா? அப்பா இறந்த பிறகு நம்ம வாழ்க்கை
எப்படி மாறிப் போனது! சென்னைக்கு நாம எந்த நிலைமையில வந்தோம். ஏதோ கடவுள் புண்ணியத்தில ஒரு வழி கிடைச்சுச்சு! அது மட்டும் நடக்கலன்னா? நாம உயிரோட இருந்திருப்போமாங்கிறதே சந்தேகம்தான், இல்லையா?''
"நான் எதையும் மறக்கலைப்பா. அவுங்க செஞ்சதையே நாமளும் செய்தா, வித்தியாசம் இல்லாம போயிடும், அதுக்காகச் சொன்னேன்!''
"நீங்க சொல்றது நூறு சதவிகிதம் சரிதான்! அதெல்லாம் அடுத்தவங்க உணர்ச்சிய புரிஞ்சுக்கிறவங்களுக்கு. உதவி செய்ய முடியலைன்னாலும், ஆறுதலா வார்த்தை சொல்றவங்களுக்கு. உங்க அண்ணன் மாதிரி ஆளுங்களுக்கு கிடையாது. அவங்களுக்கெல்லாம் இரக்கமே காட்ட கூடாது!''
தான் பேசியதை கேட்டு, கலவரத்துக்கு போன அம்மாவை ஆறுதல்படுத்துவதற்காக, "சரிம்மா, மொத வரட்டும். எப்படி பேசறது, நடந்துக்கிறதுன்னு அப்ப முடிவு பண்ணலாம்!'' என்று சொல்லியபடியே தன் அறைக்குள் நுழைந்து அமர்ந்தான். மனதில் பழைய நினைவு தலைகாட்ட
ஆரம்பித்தது...
"வாடா சுபாஷ். ஆச்சரியமா இருக்கு? என்ன விஷயம்?'' என்று கேட்டபடியே, "சுபாஷ் வந்திருக்கான். அவனுக்கும் சேர்த்து டீ எடுத்திட்டு வா!'' என்றவாறு உள்ளே குரல் கொடுத்தார் சுந்தரம்.
"ஒண்ணுமில்ல மாமா, நான் பிளஸ் 2 பாஸ் பண்ணிட்டேன்.''
"சரி.''
"நல்ல மார்க். மேலே படிக்கணும்!''
"சரி.''
"பிரிச்ச சொத்தில, அம்மாவுக்கு சேர வேண்டியதை, அவசியமான நேரத்தில கொடுக்கிறேன்னு சொல்லி இருந்திங்களாம். அதான் இப்ப கொடுத்தா, ரொம்ப உதவியா இருக்கும்ன்னு அம்மா கேட்டு வரச் சொன்னாங்க!'' என்று சுபாஷ் தயங்கியபடி சொல்ல, அதை கேட்டதும் நக்கல் சிரிப்பை சுந்தரம் வெளிப்படுத்தினார்.
"சரியா போச்சு போ! விஷயம் தெரிஞ்சிருந்தா, வந்திருக்கவே மாட்டே. உங்க அப்பா திடீர்ன்னு முடியாம விழுந்திட்டாரே? அதுக்கு ஆன மருத்துவச் செலவெல்லாம் நான்தான் பார்த்துகிட்டேன். இருந்தும் காப்பாத்த முடியலைங்கிறது வருத்தமான விஷயம்தான். இறந்தப்ப ஆன செலவும் நான்தான் பார்த்தேன். சொல்லி காமிக்கிறேன்னு தப்பா நினைக்காதே! அதுமட்டுமில்லே. உங்க அப்பா ஏலச்சீட்டு விஷயத்திலேயும், கடனாளி ஆயிட்டாரு. வீட்டுக்கெல்லாம் தெரிய வேணாம்ன்னு, எங்கிட்டதான் வந்து நின்னாரு. தங்கச்சி புருஷனாச்சேன்னு, அதையும் நான்தான் அடைச்சேன். இதெல்லாம் எதுக்கு சொல்றேன்னா. கொடுக்கிறதுக்கின்னு ஒண்ணும் கிடையாது. இன்னும் சொல்லப்போனா, என் கைக்காசு போனதுதான் மிச்சம்.''
அவர் சொன்னதை கேட்ட சுபாஷ் உள்ளுக்குள் அதிர்ந்தான். அவர் பொய் சொல்கிறார் என்று புரிந்தாலும், காட்டிக் கொள்ள முடியாத சூழ்நிலையில் தான் இருப்பதை அறிந்து கொண்ட சுபாஷ், "உண்மையிலே இது எதுவுமே எனக்கு தெரியாது மாமா'' என்று சொன்னான்.
"உங்க அம்மாவுக்கே தெரிஞ்சிருக்காது. சரி அதெல்லாம் விடு. மொதல்ல டீ குடி.''
டீயை எடுத்து அவனிடம் கொடுக்க, வாங்கி குடித்து முடித்துவிட்டு, "அதெல்லாம் விடுங்க மாமா. நான் மேலே படிக்கணும். நீங்கதான் உதவி செய்யணும். உங்களைவிட்டா, எங்களுக்கு வேற யாரும் கிடையாது'' என்று தடுமாற்றம் இல்லாமல் சுபாஷ் பேசி முடித்தான்.
"அது சரி. என்னோட சூழ்நிலை தெரியாம, சுலபமா நீ கேட்டுட்ட. என் நிலைமையும். உன்ன மாதிரிதான் சுபாஷ். இங்க பாரு, நான் சில விஷயங்களைச் சொல்றேன். புடிக்குதோ இல்லையோ, கேட்டுக்க. நான் உங்க அம்மாகிட்ட முன்னாடியே சொன்னேன். பிளஸ் 2 படிக்க வைக்க வேணாம். அப்புறம் டிகிரி படிக்க ஆசைப்படுவான். படிக்க வைக்க ரொம்ப கஷ்டப்படணும்ன்னு. உங்க அம்மா, நான் சொன்னதை கேட்கலை. பார்த்தியா நான் சொன்ன மாதிரியே மேலே படிக்க, மத்தவங்க உதவிய எதிர்பார்க்க வேண்டி இருக்கு. தேவையா இது. தேடி வந்து கேட்டதுக்காக, ஏதோ ஆயிரமோ, இரண்டாயிரமோ தர்றேன். வாங்கிக்க. அதுக்கு மேலே என்னால ஒண்ணும் பண்ண முடியாது!''
"தயவு செய்து அப்படி சொல்லாதிங்க மாமா. ரொம்ப நம்பிக்கையோட உங்கள தேடி வந்தேன்!''
"புரிஞ்சுக்காம பேசாத சுபாஷ். நான் வச்சுகிட்டா, இல்லேன்னு சொல்றேன். உண்மையிலேயே இல்லை!'' என்று கொஞ்சம் வார்த்தையில் கோபத்தை காட்டினர்.
"சரிங்க மாமா, நீங்க கொடுக்கலைன்னா கூட பரவாயில்லை, இன்னொரு உதவி பண்ணுங்க. நீங்க சொன்னா, பெரிய வீட்டு செட்டியார் பணம் தருவாரு. அதையாவது செய்யுங்க மாமா. பிளீஸ்..!''
"அடடா! உன்கூட பெரும் பிரச்னையா இருக்கு. என் தகுதிக்கு அந்த ஆள்கிட்ட போய் நிக்க சொல்றியா? இங்க பாரு முடிவா சொல்றேன், உன்கிட்ட வசதி இருந்தா டிகிரி படி. இல்லேண்ணா படிக்கிற ஆசைய மூட்டை கட்டி போட்டுட்டு, எதாவது வேலைக்கு போற வழிய பாரு. அதான் உனக்கு நல்லது அதவிட்டுட்டு உதவி, கிதவின்னு இங்க வர்ற வேலை வச்சுக்காத. சொல்லிட்டேன்!'' என்று முகத்தில் அடித்தது போல் பேசிவிட்டு உள்ளே செல்ல, மனம் சிதறியவனாய், எதுவும் முடியாதவனாய் வெளியேற ஆரம்பித்தான் சுபாஷ்...
"டேய் சுபாஷ். என்னடா ஆச்சு உனக்கு. ரொம்ப நேரமா கூப்பிடறேன். பதிலே காணும்!'' என்று கேட்டுக்கொண்டே உள்ளே வந்த அம்மாவை பார்த்து, "பழசை நினைச்சு பார்த்தேம்மா!'' என்றான்.
"பழசா?''
"ஆமாம்மா, உங்கண்ணன் எனக்கு சொல்லி கொடுத்த வாழ்க்கைப் பாடத்தை நினைச்சு பார்த்தேன். சிரிப்பு வந்துச்சு. அவரு சொல்லி கொடுத்தத, அவருக்கே சொல்லி கொடுக்கலாமான்னு யோசிக்கிறேன்!'' என்று சொன்னவனை அச்சத்தோடு பார்த்த சிவகாமி.
"வேணாம் சுபாஷ். அவரு இப்ப கஷ்டத்தில இருக்கிறதா கேள்விப்பட்டேன். நாம் மேலும் நோகடிக்கக் கூடாது. தப்பு.''
"அப்படியும் ஒரு நினைப்பு வருது. ஆனா, அவரு அன்னைக்கு பேசின பேச்சு. மறக்க முடியலைம்மா. உதவி செய்ய முடியலங்கிறதோட நிறுத்தி இருந்தா கூட விட்டிருக்கலாம். ஆனா, காசு இல்லாத உனக்கெல்லாம் எதுக்கிடா படிப்புங்கிற மாதிரி பேசி, ரொம்ப கேவலப்படுத்திட்டாரு. அன்னைக்கு அவ்வளவு பேசிட்டு, எந்த மூஞ்சியோட இங்க வர்றாருன்னு தெரியலை. மறந்திருப்போம்ன்னு, மறந்திட்டு வர்றாரு. பார்க்கலாம்!'' என்று வெளியே சென்றவனை, என்ன நடக்கப் போகிறதோ என்ற பயத்தோட பார்த்துக் கொண்டிருந்தார் சிவகாமி.
சொன்னபடியே ஞாயிற்றுக்கிழமை வந்த சுந்தரத்தை உபசரித்து, "மொத குளிச்சிட்டு வாங்க. சாப்பிட்டுட்டு எதா இருந்தாலும், பொறுமையா பேசலாம். நான் கம்பெனிக்கு லீவு விட்டுட்டேன்!'' என்று சுபாஷ் சொன்னான்.
"சரிப்பா.' என்ற சுந்தரத்தை, "அண்ணே, இப்படி வா. அதான் பாத்ரூம். போய் குளிச்சிட்டு வா. இந்தா துண்டு!'' என்று அனுப்பினாள் சிவகாமி.
"ஏன் மாமா, நாம பார்த்து எத்தனை வருஷம் இருக்கும்?''
குளித்து முடித்து, காலை உணவையும் முடித்துக் கொண்டு வந்து அமர்ந்த சுந்தரத்தை பார்த்து கேட்டான். முதல் கேள்வியிலேயே அதிர்ந்தார். இருந்தாலும், "சரியா ஞாபகம் இல்ல சுபாஷ்!'' என்று சமாளித்து கொண்டு பதில் சொன்னார்.
"எப்படி இருக்கும்!'' என்று சொன்னவனை குழப்பத்தோடு பார்த்தார்.
"இன்னும் என்னென்ன பேசப் போகிறானோ' என்ற குழப்பம் வேறு!
"இல்லை மாமா, ரொம்ப நாளாச்சு, அதோட இல்லாம, உங்களுக்கும் வயசாச்சு! அதனால் சொன்னேன்!''
"சரியா சொன்ன, போன வாரம் நடந்ததே, ஞாபகத்துக்கு வரமாட்டேங்குது'' என்று ஏதோ சமாளித்தார்.
"சரி அதெல்லாம் விடுங்க. காரணம் இல்லாம வரமாட்டிங்க. சொல்லுங்க, எதாவது ரொம்ப முக்கியமான விஷயமா?''
"அப்படித்தான் சுபாஷ். சுதாவுக்கு கல்யாணம் செய்ய முடிவெடுத்து, ரெண்டு, மூணு இடத்துல மாப்பிள்ளை பார்த்தோம். ரொம்ப எதிர்பார்க்கிறாங்க. அத தாங்கிற அளவுக்கு நான் இப்ப இல்லை. அப்பதான் ஒரு யோசனை வந்திச்சு. உங்கக் கிட்ட பேசி பார்க்கலாம்ன்னு, மாமிதான் சொன்னா. ஆயிரம்தான் இருந்தாலும் உறவு விட்டு போக கூடாதில்லை. என்ன நான் சொல்றது!''
இதைக் கேட்ட சுபாஷ் கிண்டலாக சிரித்துவிட்டு பேச ஆரம்பித்தான்.
"அதாவது உங்களைத் தேடி வந்தவங்க எதிர்பார்த்தத, உங்களால செய்ய முடியாம போனதால், எங்களைத் தேடி வந்திருக்கிங்க. இல்லேன்னா, வந்திருக்க மாட்டிங்க. சரியா?'' என்று கத்தியல் அறுப்பது போன்ற வார்த்தைகளைக் கேட்ட சுந்தரம் பரிதாபமாக சிவகாமியை பார்த்தார். பின்னர், சுபாஷுக்காக திரும்பி, "பழச மனசில வச்சுகிட்டு பேசாத சுபாஷ். அப்ப நீ வருத்தப்படற மாதிரி எதாவது பேசியிருந்தா, மன்னிச்சுடுப்பா!'' என்றார்.
"அது எப்படி மாமா மறக்க முடியும். நீங்க சுலபமா சொல்லிட்டிங்க. இது என்ன சினிமாவா? மறப்போம், மன்னிப்போம்ன்னு, காட்சிய சுபமா முடிக்க. அன்னைக்கு செய்ய கூடிய நிலைமையிலதான் நீங்க இருந்திங்க! அது எனக்கு நல்லாவே தெரியும். இருந்தும் அத நான் பெரிசா எடுத்துக்கில. ஆனா, செட்டியார்கிட்ட ஒரு வார்த்தை சொல்ல சொன்னதுக்கு, முடியாதுன்னு சொன்னததான், என்னால மறக்க முடியலை. இருந்தாலும் உங்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கேன். ஏன்னா? அன்றைய உங்களோட பேச்சுக்கு காரணம், உங்ககிட்ட இருந்த பணம். அத நானும் நேர்மையான முறையில சம்பாதிக்கணும்ன்னு வெறியோட, கடுமையா உழைச்சேன். கடவுள் புண்ணியத்தில, பிரச்னைகள் இல்லாம நிம்மதியா இருக்கேன். ஆனா பழச மறக்கல. அதனால அது விட்டுபோககூடாது, இது விட்டுப்போககூடாதுன்னு தேவையில்லாம பேசாதிங்க!'' என்று வெட்டு ஒன்று, துண்டு ரெண்டு என்ற கணக்கில் பேசினான்.
"என்ன பேசுவது, எப்படி ஆரம்பிப்பது' என்று தெரியாமல் விழித்த சுந்தரத்துக்குக் கை கொடுக்கும் வகையில், "சுபாஷ், சொல்றேன்னு கோபப்படாதே. பழச மறந்திட்டு. மாமா சொல்ற மாதிரி, சுதாவை கல்யாணம் பண்ணிக்கப்பா! அதனால உனக்கு மதிப்பு கூடத்தான் செய்யும். அதோட இல்லாம அவ உனக்கு ஏத்தப் பொண்ணுதாப்பா?'' என்றாள் சிவகாமி.
"ஆமாம் சுபாஷ். அவளுக்கும் உன்மேல பிரியம்தான். நான் உன்ன பார்க்க வர்றேன்னு தெரிஞ்சோன்ன, அவளுக்கு எம்ராய்டரி நல்லா தெரியும், உன்ன எம்ராய்டரி செய்திருக்கா பாரு! இதை என்கிட்ட கொடுத்தப்ப என்னை அவருக்கு புடிக்குதோ, இல்லையோ, மறுக்காம வாங்கிக்க சொல்லுங்க. ஏன்னா, இத நான் ரொம்ப புடிச்சுதான் செஞ்சேன்னு சொல்லுங்கன்னு சொன்னா. பாருப்பா!'' என்று அவனிடம் கொடுக்க, "எப்படியும் நினைச்சதை முடிக்கணும்ங்கிற சகல ஏற்பாடோட வந்திருக்கிங்க!'' என்ற நக்கல் வார்த்தைகளோடு வாங்கியவன், உள்ளுக்குள் அதிர்ந்தான்.
அந்த அளவு அசத்தலாக இருந்தது. அப்படியே அதை அம்மாவிடம் கொடுக்க, வாங்கிய சிவகாமி, "அச்சு அசலா பண்ணிருக்கா. அய்யோ அப்படி இருக்கு. ஆமாம் அது எப்படி அவ்வளவு சரியா, பண்ணியிருக்கா?'' என்று சுபாஷ் கேட்க நினைத்ததை கேட்டார்.
"சுபாஷோட லேட்டஸ்ட் போட்டோ, சுலோசனா பையன் உதயா வீட்ல இருந்திச்சு. ஒரு தடவை அங்க போன சுதா, அத பார்த்திட்டு அப்படியே பண்ணிட்டா! '
"நல்லா இருக்கு. வாழ்த்துகள். அதுக்காக நீங்க சும்மா தர வேணாம். அதுக்கு ஒரு அமௌண்ட் வாங்கிக்கிங்க!'' என்று சுபாஷ் சொன்னதை கேட்டு அதிர்ந்த சுந்தரம், சிவகாமி இருவரில், சுதாரித்த சிவகாமி "வேணாம் சுபாஷ். புடிக்கலைன்னு தெளிவா சொல்லிடு. இப்படி அதிகப்படியா பேசாத!'' என்றாள்.
"என்னம்மா. உங்க அண்ணனை
மனசில வச்சுகிட்டு பேசறீங்களா? அவரு அளவுக்கு நான் மோசம் கிடையாதும்மா. அவரு இல்லன்னு சொன்னாரு, நான் கொடுக்கிறேன்னு சொல்றேன். அது எப்படிம்மா தப்பாகும்?''
மேற்கொண்டு ஏதோ பேச போன சிவகாமியை தடுத்த சுந்தரம், "வேணாம்மா, விட்டுடு!'' என்று சிவகாமியிடம் சொல்லிவிட்டு, சுபாஷுக்காக திரும்பி, "உனக்கு பிடிக்கலைன்னு புரிஞ்சுப் போச்சு சுபாஷ். எனக்கு ஏற்கெனவே தெரியும். இருந்தாலும், மாமி உன்ன நம்பினா, அதான் என்னை இங்கு வர வச்சுச்சு. எனக்கு உன்மேல கோபம் கிடையாது. செஞ்சதுக்கு பலன். சுதாவுக்கு என்னவோ, அது கண்டிப்பா கிடைக்கும். இனிமேல் ஒருத்தன் பொறக்கப் போறது கிடையாது. பத்திரிகை அனுப்பி வைக்கிறேன். கண்டிப்பா வரணும். சரியா?'' என்று அத்தனை சோகத்தையும், இல்லாதவாறு காட்டிகொண்டு பேசி எழுந்தார்.
"என்ன கிளம்பிட்டிங்க? இருந்து சாப்பிட்டு போங்க. அப்புறம் கல்யாணத்துக்கு பணம் எவ்வளவு தேவைன்னு சொல்லுங்க. தர்றேன், திருப்பி கொடுக்க தேவையில்லை'' என்றவனுக்கு, "வேணாம் சுபாஷ். என்னோட நிலைமை ரொம்ப கீழ வந்திட்டுதான். ஒத்துக்கிறேன். அதுக்காக என்னை ரொம்ப கேவலமா நினைச்சிடாதே!'' என்று கோபத்தோட வெளியேறிய சுந்தரத்தைப் பிடித்து, வலுக்கட்டாயமாக உட்கார வைத்தான் சுபாஷ்.
"மாமா உட்காருங்க. எதுக்கு தேவையில்லாம கோபம். உடம்புக்கு எதாவது ஆயிடப் போகுது. இப்ப என்னா, நான் சுதாவை கல்யாணம் பண்ணிக்கணும். அதான?'' என்று கேள்வி கேட்டுவிட்டு, அம்மா, மாமா என்று இருவரையும் மாறி, மாறி சுபாஷ் பார்த்தான்.
இருவரும், "இவன் என்ன, சீரியஸாக பேசுகிறானா, விளையாடுகிறானா' என்ற கேள்வியோடு அவனையே பார்த்துக் கொண்டிருக்க அவனே பேச ஆரம்பித்தான்
"மாமா, உதவின்னு உங்கக் கிட்ட வந்து நின்ன என்கிட்ட, நீங்க உதவின்னு வந்து நிக்கிறிங்க. இதிலே இருந்து என்ன தெரியுதுன்னா? எதுவும் நிரந்தரம் கிடையாது. மாறும். அன்னைக்கு நான் இருந்த மாதிரி, இன்னைக்கு நீங்க இருக்கிறிங்க. நாளைக்கு என்னோட நிலைமையும் மாறலாம். மாறாதுங்கிற நிச்சயம் கிடையாது. எல்லாமே மேலே இருக்கிறவன் செய்ற விளையாட்டு. அதனால...'' என்று சுபாஷ் நிறுத்தினான்.
"என்ன சொல்லப் போகிறான்' என்கிற ஆவலோடு இருவருமே அவன் முகம் நோக்க, "சுதாவை நான் கல்யாணம் பண்ணிக்கிறேன். சந்தோஷம்தானே?'' என்று பொட்டென்று சொல்லி முடித்தான்.
"நிஜமாதான் சொல்றியா?'' என்று சுந்தரம் நம்ப முடியாதவராய் கேட்டார்.
"ஆமாம் மாமா. உண்மையிலேதான் சொல்றேன். உங்க பசங்க, பொண்டாட்டி பேச்ச கேட்டுட்டு தனியா போயி, உங்கள கண்டுக்காம இருக்கறது, உங்களுக்கும் முன்ன மாதிரி வேலை இல்லங்கிறது! எல்லாமே எனக்கு தெரியும். அப்பவே முடிவு பண்ணிட்டேன். சுதாவை கல்யாணம் பண்ணிக்கலாமுண்ணு. இருந்தாலும் கேட்ட உடனேயே சம்மதம் சொல்லியிருந்தா, ஒரு கிக் இல்லாம போயிருக்கும். அதுக்குதான் இப்படி எல்லாம் சீன் போட்டேன்!'' என்று சொன்ன சுபாஷை பார்த்து, "ரொம்ப நன்றிப்பா!'' என்றபடி கை உயர்த்த ஆரம்பித்தவரை "அட நீங்க வேற மாமா!'' என்று சுபாஷ் தடுத்தார்.
"எனக்கு அப்பவே தெரியும். எம் புள்ளயாவது, தப்பா பேசறதாவது. தங்கமாச்சே. நீர் அடிச்சு நீர் விலகுமா?'' என்று பெருமைப்பட்ட சிவகாமியை, "போதும்மா, போய் மத்தியான சாப்பாடு தயார் பண்ணுங்க!'' என்றவனுக்கு "இதோ'' என்று சிவகாமி மகிழ்வோடு உள்ளே சென்றார்.
சுந்தரம் ஊருக்கு போன் போட ஆரம்பித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

தமிழகத்துக்கும் இந்த பரிதாப நிலை ஏற்படுமா? அச்சத்தில் மக்கள்!

மேஷத்துக்கு பணவரவு! உங்க ராசிக்கு?

சிதம்பரத்தில் திருமாவளவன், விழுப்புரத்தில் ரவிக்குமார் மீண்டும் போட்டி!

ஈரோட்டில் திமுக களமிறக்கும் 3 அமைச்சர்கள்: 2014 தோல்வியில் இருந்து மீட்டெடுப்பார்களா?

காங். தேர்தல் அறிக்கைக்கு ஒப்புதல்? கார்கே தலைமையில் செயற்குழு கூட்டம்

SCROLL FOR NEXT