தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வாயு உபாதைக்கான சிகிச்சை

எஸ். சுவாமிநாதன்

நரம்புகள், தசை நார்கள், எலும்புகள், பூட்டுகள் போன்ற உடல் பகுதிகள் வாயுவின் தாக்கத்தினால் இன்று பலரும் அவதியுறுவதைக் காண்கிறோம். வாயு என்ற ஒரு விஷயத்தை ஆராய்ச்சிகளின் மூலம் கண்டறிய முடியாததால் நவீன விஞ்ஞானம் அதை ஏற்பதை மறுக்கிறது. அவ்வாறிருக்க வாயுதான் என்று உறுதியாக எதை வைத்து ஆயுர்வேதம் கூறுகிறது. இந்த உபாதைகளுக்கான பொதுவான ஆயுர்வேத சிகிச்சை என்ன?

-செல்வராஜ்,
ஆவடி.

குணம் மற்றும் செயல்வடிவங்களால் மட்டும் தம் சீற்றத்தை உணர்த்தும் வாத- பித்த- கப தோஷங்களின் உபாதைகளை அவற்றுக்குத் தகுந்தாற்போல சிகிச்சைகள் செய்து குணப்படுத்த முடிவதால், அவற்றில் இருப்பிடத்தை உடலில் தெளிவுபட ஆயுர்வேதம் உபதேசித்திருக்கிறது. 

ஆன்மா- மனம்- புலன்கள்- புலப் பொருட்கள் ஆகியவற்றின் வரிசையான தொடர்பினால்தான் நமக்குப் பொருள் பற்றிய அறிவு ஏற்படுகிறது. இவற்றில் ஏதேனும் ஓர் இடத்தில் தொடர்பு அறுந்துவிட்டால், புலப் பொருட்கள் விவரம், மணம் வழியாக ஆன்மாவிற்குக் கிட்டாது.  இந்த விஷயத்தையும் நவீன விஞ்ஞானம் ஏற்க மறுக்கிறது. ஆனால், அதுதான் உண்மை என்று ஆயுர்வேதம் போற்றுகிறது.

தசைப்பிடிப்பு, பூட்டுகளினுள்ளே உள்ள தசை நார்கள் கிழிதல், எலும்பினுள் ஏற்படும் கடும் வலி, தோலிலுள்ள முடிவிரைப்பு, கை- முதுகு- தலைப்பகுதிகளில் ஏற்படும் விரைப்பு, கை-கால் முடக்கம், கூன் விழுதல், கருப்பையில் சிசு வளராமல் அழிதல், தூக்கமின்மை, விந்தணுக்கள் குறைபாடு, மாதவிடாய் கோளாறு,  நரம்புகளும் தசைகளும் வெட்டி இழுத்தல் போன்ற வாயுவின் குணச்சீற்றத்தினால் ஏற்படும் மேலும் பல உபாதைகளுக்குத் தீர்வாக கீழ்காணும் சிகிச்சை முறைகளை ஆயுர்வேதம் செய்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

மூலிகை நெய் மருந்துகள், மாமிச கொழுப்பு, மூலிகைகளால் காய்ச்சப்பட்ட எண்ணெய்கள், மஜ்ஜை போன்றவைகளில் எது நோயாளிகளுக்குத் தேவை என்பதை அறிந்து குடிப்பதற்காக வழங்கப்பட வேண்டும். 

சில நாட்களில் நோயாளிகளுக்கு அவை மீது வெறுப்பு ஏற்படும். அதன்பிறகு, அவற்றை மேலும் தொடராமல் நிறுத்தி பால், கறிகாய்களால் வெந்தெடுக்கப்பட்ட சூப், மாமிச சூப் போன்றவைகளில் சேர்க்கப்பட்ட நெய் அல்லது  மஜ்ஜை  போன்றவை குடிப்பதற்காக வழங்கப்பட்டு, உடல் வன்மை வளரும் விதம் செய்ய வேண்டும். 

நன்கு வெந்த அரிசி சாதத்துடன் பால், அரிசி, கடலை வகைகள், புளிப்பான உணவு வகைகள் வேக வைக்கப்பட்டு, தேவையான உப்பு கலந்தவைகளை உணவாக ஏற்கச் செய்தல், ஆசன வாய் வழியாக மூலிகை மருந்துகளை தைலமாக உட்செலுத்தி, குடலை எண்ணெய்ப் பசை ஏற்படும் வகையில் செய்து, மூலிகைக் கஷாயங்களை அதன் பின் ஆசனவாய் வழியாகக் கொடுத்து, குடலை சுத்தப்படுத்துதல், மூக்கினுள் சொட்டு மருந்துகள் விடுதல், உடலை வலுவாக்கும் விதம் புஷ்டி தரும் உணவுகளைக் கொடுத்தல் போன்ற சிகிச்சை முறைகளைக் கையாள வேண்டும்.

மேற்குறிப்பிட்ட சிகிச்சை முறைகளால் உடல் நன்றாக நெய்ப்பைப் பெற்றுள்ளதை அறிகுறிகளால் அறிந்ததும், உடலிலிருந்து வியர்வை வழிந்தோடும்  வகையில் மூலிகை நீராவிக் குளியல், மூலிகைத் தழைகளால் சூடாக்கப்பட்ட விரிப்பின் மீது கிடத்தல் போன்றவை செய்தல் அவசியமாகும். இதன் மூலமாக, உட்புற நெய்ப்பானது உருகி, குடல், ரத்தம், ரத்தக் குழாய்கள், நாடி நரம்புகள், மூளை, பூட்டுகள், எலும்புகள், தசை நார்கள் ஆகியவற்றில் தங்கியுள்ள வாயுவின் குணங்களைத் தன்னுடன் ஓட்டச் செய்து, குடலுக்கு வழிந்தோடி வந்து சேர்ந்துவிடும். 

குடலுக்கு வந்துள்ளதை அறிகுறிகளின் வாயிலாக அறிந்தவுடன், மேலும் ஆசன வாய் வழியாகக் கடத்தப்படும் மூலிகைத் தைலங்கள், கஷாயங்கள், உடலெங்கும் தேய்க்கப்படும் மூலிகை மருந்துகள் மூலமாக, அவற்றை முழுவதுமாக வெளியேற்றி உடலில் வாதத்தினால் ஏற்படும் பல உபாதைகளையும் குணப்படுத்தலாம்.

 (தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மஞ்சள் எச்சரிக்கை: தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம்!

அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி; 25 பேர் படுகாயம்!

ரூ.1,60,00,00,00,00,000 கடன் தள்ளுபடி: ரமணா பட பாணியில் ராகுல் குற்றச்சாட்டு

சாதிவாரி கணக்கெடுப்பை எந்த சக்தியாலும் தடுக்கமுடியாது: ராகுல்

அரசியல்வாதிகள் பாணியில் வீதி வீதியாகச் சென்ற பட இயக்குநர் ஹரி: இதற்காகவா?

SCROLL FOR NEXT