தினமணி கதிர்

ஹார்மோன்...

ஜங்ஷன்


"உழைச்சது போதும். குடும்பச் சுமையை இறக்கிவச்சிட்டு அக்கடான்னு இருக்கலாமுன்னு நினைச்சா, வந்த மருமகள் இன்னும்கூட சுமையை ஏத்துறதுமில்லாம, மகனையும் பிரிச்சுருவா போலிருக்கே?'' என்ற யோசனையோடு மீனாட்சி இட்லியை பிட்டு வாயில் போட்டாள்.

மருமகள் உமட்டும் ஓசை காதையும், நெஞ்சையும் அறுவியது. இவள் விழுங்கிய இட்லி தொண்டைக்கும் நெஞ்சுக்கும் இடையே அடைத்து நின்றது. ஒரே வீட்டுக்குள் அங்கே அவள் உமட்டும்போது இங்கே எப்படி சாப்பிடமுடியும்? ஒரு தட்டைஎடுத்து மூடி வைத்துவிட்டு , ஒரு டம்ளர் தண்ணியைக் குடித்து தொண்டையில் சிக்கிய இட்லியைக் கீழே இறக்கிட்டு, கையைக் கழுவி, துடைத்தபடி மருமகளிடம் ஓடினாள்.

மருமகள் கழுவுத் தொட்டியில் உமிழ்நீர் ஒழுகக் குனிந்து , உமட்டிக் கொண்டிருந்தாள்.

"தங்கம் ஒன்னும் சாப்பிடாம வெறும் வயிற்றில் இப்படி உமட்டிகிட்டே இருந்தா தொண்டை வயிறெல்லாம் புண்ணாயிரும் தங்கம். வாயைக் கொப்பளித்து, மூஞ்சியை கழுவு; கொஞ்சம் ஆரஞ்சு ஜுஸ் குடி . இனிப்பும், புளிப்பும் கலந்த ஆரஞ்சு சாறு உமட்டலை நிப்பாட்டும்''.

"வாடி தங்கம்' என்று அணைத்து அவளது அறை இருக்கையில் உட்கார்த்திட்டு, பிழிந்து வைத்திருந்த ஆரஞ்சு சாறை குடிக்கச் செய்தாள். மருமகள் குடித்தவுடன், நெஞ்சை நீவிவிட்டாள்.

"உமட்டலை நினைச்சுகிட்டே தேவாமிர்தம் சாப்பிட்டாலும் மெய்யில சேராது. இந்தச் சமயத்தில் இப்படித்தான் இருக்கும். அதனால உமட்டலையே நினைச்சுகிட்டு இருக்காதே . கொஞ்ச நேரம், காமெடி, பாட்டுன்னு எதாவது பாரு . கவனத்தை மாற்று; அவன் நைட் டூட்டி முடிஞ்சு வர்ற நேரம்தான் . ரெண்டு பேரும் இட்லி சாப்பிடுவீக?'

மீனாட்சிக்கு வயிறு கவ்வி பிசைந்தது; வயிற்று பசியா, மாதாந்திர வலியா, தெளிவில்லை. கூடத்துக்கு வந்து மூடிய தட்டை திறந்து சாப்பிட உட்கார்ந்தாள். சுவர் கடிகாரத்தில் மணி பத்து ஒலித்தது. உலையை வைத்துவிட்டு வந்தால் உலை கொதிப்பதற்குள் , இட்லியை தின்னுறலாம் என்று அடுப்படிக்குள் போனாள். உலை வைத்துக் கொண்டு இருக்கும்போது மகன் அடுப்படிக்குள் வந்துவிட்டான்.

"என்னம்மா , கவிதா சாப்பிடலையா! மேஜையில் தட்டில் பாதி இடலி பிய்த்தபடி இருக்கு ?''

"வாடா தவமிருந்து பெத்த மகனே, வந்ததும் , வராததுமா, பெண்டாட்டி தின்னாளா ? ,

இல்லையானு அக்கறையோட கேட்கிறவன், அம்மா பசியாறினாளா, இல்லையான்னு நினைப்பாவது இருக்கா ? அவளும் திங்க மாட்டேங்கிறா! நாமலாவது , ரெண்டு இட்லியை விழுங்கி பசி அமர்த்தலாமுன்னு உக்கார்ந்தா? அவ உமட்டுறா ; நான் எப்படி சாப்பிடறது. அவளை தேர்த்தி ஆரஞ்சு ஜுஸ் குடிக்க வச்சுட்டு வந்தேன். நீ வந்துட்டே!''


"சரிம்மா? இதுக்கேன் சத்தம் போடறே. இந்த நேரத்தில ஹார்மோன் பிரச்னையில அவ அப்பிடித்தான் இருப்பா? சிடுசிடுன்னு இருக்காளேன்னு நீ கண்டுக்காதே ; குழந்தை பிறந்தா சரியாயிருவா?'' என்று மகன் சொல்லிக்கொண்டே மனைவியிடம் ஓடினான்.

அம்மாவோ மதியத்துக்கான வேலையைத் தொடங்கி வைத்துவிட்டு, பிட்ட இட்லியை விழுங்கினாள். வயிற்றில் இட்லி விழுந்தும் கூட , வயிற்றுப் பிசைவு அடங்கவில்லை. நனைந்து பிசுபிசுத்த ஆடைகளை குளியலறையில் மாற்றி வந்தாள். அடைமழை ஓய்ந்தாலும் கூரை ஒழுகலின் சொட்டல்கள் ஓயவில்லை. பழுத்த பனையோலை மாதிரி உடல் படபடத்தது. குளிர்ந்த நீரை மெல்ல பருகினாள். சில்லிட்ட நீர் இறங்கியதும் வலி மறைந்ததா, மரத்ததான்னு தெரியலை. அடுப்படி போய் சாம்பாருக்குத் தயார் செய்து அடுப்பில் வைத்தாள். நடுக்கூடத்தில் இருந்தபடியே, மகன் அறைப் பக்கம் நோக்கி, தம்பி, ரெண்டுபேரும் வந்து சாப்பிடுங்கடா, மணி பதினொன்னாகப் போகுது !''

"கத்தாதம்மா , இதோ வந்துர்றோம் .''

மருமகள் காலை உணவை அவர்களது அறைக்கு எடுத்துச் சென்று ஒருவருக்கு ஒருவர் ஊட்டிக் கொண்டனர். அடுப்படியிலிருந்த அம்மாவின் காதுகள் உணர்ந்தன. "ம்ம்..அவுங்க நல்லா இருந்தா சரி "என்று பாத்திரங்களோடு பேசினாள். கொதித்து மணந்த சாம்பாரை தாளிதம் செய்யும்முன் , தாளித வாசனை மருமகளுக்கு எட்டாதிருக்க உள்காற்று வெளியேற்றியை சுழல விட்டாள் . மகன் சாப்பிடும்போது அவள் உமட்டிவிடக் கூடாதல்லவா !

சொந்தம் விட்டுவிடக் கூடாதுன்னு எலும்பு மருத்துவம் படித்த மகனுக்கு, பல் வைத்தியம் படித்த அண்ணன் மகளைக் கட்டி வைத்தாள். கல்யாணத்துக்கு முந்தி, "அத்தை', "அத்தை' என்று சுற்றி வந்தாள். இப்போது புருஷனைத் தவிர மற்றவர்களைக் கண்டுகொள்வதில்லை. மீனாட்சி அவளது தலைமுறை மாமியார்கள் போல் இல்லாமல் , மருமகளை மகளைப்போல தான் பாவிக்கிறாள்.

மருமகள் காலப்போக்கில் சரியாகிவிடுவாள் என்று நினைத்தாலும், புறக்கணிப்பின் வதை தாங்க முடியவில்லை; தவிக்கிறாள். இவளது கணவர் உண்ண, உறங்க வீட்டுக்கு வருவார். மற்ற நேரமேல்லாம் ஓய்வூதியர் சங்கமுன்னு பொதுச் சேவையில் மூழ்கிவிடுவார்.

"ஏங்க, வீடு தங்கி, நம்ம பிள்ளைங்க எப்படி இருக்காகன்னு பார்த்து அவுங்களோடு கலந்து பேசலாமில்ல ? இப்படி சங்கம் அங்கமுன்னு திரிஞ்சா எப்படி ?''

"நீ, சொல்றது சரிதான். தப்பில்லை. ஆனா, நமக்கு வாலிபத்தில் எண்ணெய் குறையக் குறைய ஜொலிப்பும் துடிப்பும் கூடுது! நானும் பழைய நினைப்பில எதாவது சொல்ல , நீ வள்ளுன்னு விழுக , பிள்ளைங்க மத்தியில நமக்குள்ளே ஏன் வீண் ரசாபாசமுன்னுதான், அடக்கிகிட்டு ஒதுங்கிப்போறேன். நா வீடே கிடைன்னு உம் பின்னாலேயே திரியணுமுனா சொல்லு. நான் ரெடி.

"உங்களைப்பத்தி தெரியும்; போய், வேலையைப்பாருங்க !''

மகனும், மருமகளும் மாலைநேர நடை போய் திரும்பினார்கள். வீட்டிற்குள் நுழைந்ததும் மருமகள் சரசரன்னு அவர்களது அறைக்குள் போய்விட்டாள்.
அம்மா ,மகனிடம் , "நான் சொன்னதை கவிதாகிட்ட சொன்னியா ?''

"அம்மா, கர்ப்பக் காலத்தில் ஹார்மோன் கூடுதலா சுரக்கிறதால உடல் மென்மையாகஇருக்கும். மனசில் பல்வேறு சிந்தனைகளும், கற்பனைகளும் தோன்றிக் கொண்டே இருக்கும். அதனாலதான் அவள் உங்களை கண்டுகொள்ளாமல் புறக்கணிப்பதாகத் தோன்றுகிறது. பிரசவத்துக்குப் பின் எல்லாம் சரியாகிருவா?''

"என்னடா பொல்லா ஹார்மோன் பிரச்னை ? நா ரெண்டு பிள்ளைகளைப் பெத்தேன். உங்கக்கா ரெண்டு பிள்ளைங்கப் பெத்துருக்கா? எங்களுக்கெல்லாம் இல்லாத ஹார்மோன் பிரச்னை உம் பொண்டாட்டிக்கு மட்டும் வந்திருக்கு ? உம் பொண்டாட்டியை தலையில் தூக்கிட்டு ஆடுற !''
"அம்மா எல்லாத்துக்கும் கர்ப்பக் காலத்தில் ஹார்மோன் பிரச்னைகள் இருக்கும்மா ?

அப்ப உள்ள சூழ்நிலையில் , நீங்க எதாவது வீட்டு வேலைகளைச் செஞ்சுகிட்டு இருந்திருப்பீக. உங்களுக்கு தெரியலை. அவகவனத்தை வேற பக்கம் திருப்பாததே காரணம்.''
"ஆமாடா, துவைச்ச துணியை மடிச்சு வை, வீட்டுக்கும் வாசலுக்கும் நடன்னு சொன்னா, மூஞ்சியைத் தூக்கிவச்சுகிட்டு எதிரி மாதிரி பார்க்குறா. அவளை நீதான் தலையில் தூக்கிகிட்டு ஆடுற !
"அம்மா, சும்மா இரும்மா? நீ அவளை தூக்கிட்டு ஆடுறேன்னு சொல்றே! ஐம்பது வயசு பெண்களுக்குள்ள உடல் ரீதியான பிரச்னைகள் அம்மாவுக்கும் இருக்கு! அனுசரிச்சு போன்னு அவகிட்ட சொன்னா, அவ , உங்கம்மாவையே தூக்கிவச்சு பேசுறீங்கன்னு என்னை விரட்டுறா? நீங்க ரெண்டுபேரும் என்னமும் பண்ணிக்கிங்க; என்னை ஆளை விடுங்க . நான் நைட்டூட்டிக்கு போகணும்!'' என்று சொல்லிவிட்டு, கிளம்பிவிட்டான்.
"அப்பாவுக்கு மகன் தேவலை ! என அம்மா நினைத்துக்கொண்டாள்.
இப்படி நிமிஷங்கள் நகர்ந்த ஒருநாள். மகன் தனது அம்மாவிடம், "இன்னிக்கு ஐந்தாம் மாதத்துக்கான மருத்துவ ஆலோசனைக்கு மகப்பேறு மருத்துவரிடம் ஒப்புதல் கிடைச்சிருக்கு . இன்னைக்குன்னு நான் நாலு பேருக்கு மூட்டு அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டியதிருக்கு! நீ காலை பத்து மணிக்கு கவிதாவை மருத்துவரிடம் அழைச்சு போயிட்டு வாம்மா, ப்ளீஸ் . நீங்க போய் நர்ஸிடம் சீட்டைக் கொடுத்து இன்னாருன்னு சொன்னதும் உங்களை டாக்டர் உள்ளே கூப்பிட்டுருவாக, காத்திருக்க வேண்டியதில்லை. சரியா?'' என்று தாடையைப் பிடித்து கொஞ்சினான்.
அப்பா வாடகை கார் அமர்த்திக் கொடுத்தார். குடும்ப வாரிசை சுமந்துகொண்டிருக்கும் மருமகளை நோகாமல் , அலுங்காமல் சகல அனுசரிப்புகளுடன் மருத்துவமனைக்கு அம்மா அழைத்துச் சென்றாள். மருத்துவமனையில் செவிலியர், இவர்களைப் பார்த்ததும் அன்பு காட்டி உட்கார்த்தி, மருத்துவரிடம் உள்ளே போன நோயாளி வந்ததும் , இவர்களை உள்ளே அனுப்பினாள். மகிழ்ச்சியாக இருந்தது.
மூத்த மகப்பேறு மருத்துவர், இவர்களை அமர்த்தி கனிவாக விசாரித்தார். உள்ளறைக்குள் கவிதாவை அழைத்துச் சென்று உடல் ரீதியாக சோதித்ததும், சில விவரங்களை இதமாக விசாரித்தபடி வலியுணராமல் ஊசியை செலுத்தினார். கவிதா உடைகளை சரிசெய்துகொண்டு மருத்துவரிடம் வந்தாள்.
"உங்க பேரக் குழந்தை நல்லா இயல்பா வளருதும்மா . கவலைப்பட ஒன்றுமில்லை. டாக்டர் கவிதா , கர்ப்பிணிகள் என்னென்ன சாப்பிடணும், எப்படி உடல் சோர்ந்து போகாமல், பராமரிக்கணும் என்பதெல்லாம் உங்களுக்கு தெரிந்தது தான். நீங்கள் இந்த கையேட்டில் குறிப்பிட்டபடி, உண்டு, சில உடற்பயிற்சிகளை மேற்கொண்டால் சுகப்பிரசவம் உறுதி. சரியா. நீங்க அடுத்த மாதம் இதே தேதி போன் செய்துவிட்டு வாங்க!'' என்று மகப்பேறு மருத்துவர் கூறியவாறே இருவரது முகங்களையும் ஊடுருவிப் பார்த்தார்.
மாமியாரும், மருமகளும் எழுந்தனர்.
"அம்மா நீங்க மட்டும் இருங்க. உங்ககிட்ட ஐந்து நிமிஷம் பேசணும் . கவிதா, நீங்க மருந்து வாங்கிட்டு வெளியே இருங்க ப்ளீஸ்!''
மருமகள் கவிதா , கலவரமுகத்தோடு வெளியே கதவோரம் ஒதுங்கினாள். மாமியார் வெளிரிய முகத்தோடு மருத்துவர் முன் அமர்ந்தாள் .
"அம்மா, உங்க கண்ணில் ரத்தப் பசையே இல்லை . மெனோபாசில் சிரமப்படுறீங்க போலிருக்கு. பொங்கி ஆர்ப்பரித்த அலைகள் உள்வாங்கிய கடற்கரை கணக்கா வறண்டிருக்கு மேனி.
மீனாட்சி கண்களில் இரண்டுதுளிகள் திரண்டு விழட்டுமான்னு அனுமதி கேட்டு நின்றது.
"கவலைப்பட ஒண்ணுமில்லைம்மா. இயற்கை நமக்கு கொடுத்த பாதுகாப்புக் கவசத்தை பறித்துக் கொண்டது. அதுதான் ரத்தச் சேதாரம் . இதை தவிர்க்கவும் முடியாது . அனைத்து இலைகளும் உதிர்ந்து விட்டாலும், வேர் தனக்கு கிடைக்கும் உணவை எல்லாம் திரட்டி மரத்தின் கிளைகளை உயிர்ப்பித்து தளிர்க்க செய்வது மாதிரி, நமக்கு கிடைக்கும் சத்தான ஆகாரங்களை உண்டு, இயங்கி, நம்மைச்சுற்றி உள்ளவர்களைக் காக்கும் கடமை இருக்கு. இந்தக் கையேட்டில் குறிப்பிட்ட உணவுவகைகளை சாப்பிடுங்க. சரியாகிறலாம். இனிமே , பூக்கவோ, காய்க்கவோ முடியாவிட்டாலும் தாய் வாழை , ஈன்ற கன்று வளர்ந்து , குலைவிடும்வரை சாயாது காத்திருப்பது போல நாமும் அடுத்த தலைமுறை உருவாகும் வரை காத்திருக்கும் கடமை இருக்கு ! மனம் தளராதீங்க, உங்க பேரக் குழந்தை நல்ல முறையில் வளருது. இவ்வளவு சொல்லும் நானும் என்னோட ஒழுக்கை டைபர் போட்டு மறைச்சுக்கிட்டுதான் உட்கார்ந்திருக்கேன். தடுக்க முடியாததை மதியால் தாங்கித் தான் ஆகணும். அதனால் கவலைப்படாம இதிலுள்ளபடி சாப்பிடுங்க . போயிட்டுவாங்க. வாழ்த்துகள்.''
மீனாட்சி , மருத்துவரை வணங்கி கதவைத் தள்ளி திறந்தாள். மருமகள், மாமியாரை அணைத்து தோள்மீது கைபோட்டு, "ஏத்தே உங்க வலியை என்கிட்டே சொல்லியிருக்கலாமில்லை!'' என்றபடி தாங்கி நடத்தினாள்.
"கவிதா , விடுப்பா, யாரும் பாக்கிறவங்க, நான் பிரசவ டாக்டரை பார்க்கவந்ததாக நினைச்சு சிரிக்கப் போறாங்க !'' என்று பிரியாவை உதறி மீனாட்சி நிமிர்ந்து நடந்தாள் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT