தினமணி கதிர்

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 144


ஆளுநர் சென்னா ரெட்டியை சந்தித்த அடுத்த நாள், நான் 'துக்ளக்' அலுவலகம் சென்றேன். சோ சார் அடுத்த வார இதழுக்கு எழுதிக் கொண்டிருப்பதாகச் சொன்னார்கள். மதலையின் மேஜைக்குப் போனேன். ரமேஷ், சத்யா, சுவாமிநாதன் ஆகியோருடன் தில்லி அரசியல் குறித்து நானும், நான் இங்கு இல்லாமல் இருந்த காலத்தில் தமிழகத்தில் அரங்கேறிய அரசியல் நிகழ்வுகள் குறித்து அவர்களும் பகிர்ந்து கொண்டோம்.

சோ சார் எழுதி முடித்த பிறகு, இன்டர்காமில் அவரை அழைத்து நான் வந்திருக்கும் தகவலைத் தெரிவித்தார் மதலை. மாடியில் இருந்த அறைக்கு சென்றேன்.

ஆளுநர் சென்னா ரெட்டியை சந்தித்ததாகவும், அவர் சோ சாரை உடனடியாகப் பார்க்க விரும்புவது குறித்தும் தெரிவித்தேன். சிரித்தபடியே என்னிடம் கேட்டார் சோ சார் ''ஜெயலலிதா சி.எம்மா இருந்தபோது, பல தடவை என்னை சென்னா ரெட்டி ஃபோனில் கூப்பிட்டிருக்கிறார். மணிக்கணக்கில் நாங்கள் பேசியும் இருக்கிறோம். என்னிடம் பேச வேண்டும் என்றால் ஃபோனில் பேசலாமே, அதற்கு ஏன் உங்கள் மூலம் தகவல் அனுப்ப வேண்டும்?''

''நீங்கள் கேட்டது எனக்கும் தோன்றியது. என் மூலம் உங்களுக்கு அவர் தகவல் தெரிவிக்க வேண்டிய அவசியம் என்ன என்று நானும் யோசிக்காமல் இல்லை...''
''வேறென்ன சொன்னார் அவர்?''

''பிரதமர் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்னை வரப் போகிறார். அதற்கு முன்னர் உங்களை சந்தித்துப் பேச வேண்டும் என்று சொன்னார், அவ்வளவுதான்.''

ஒரு சில விநாடிகள் சோ சார் அமைதியாக இருந்தார். ஏதோ யோசிக்கிறார் என்று தெரிந்தது. என்னிடம் எதுவும் சொல்லவில்லை. மதிய உணவுக்கான நேரம் நெருங்கிவிட்டதை சோசாரிடம் நினைவுபடுத்தினார் ரமேஷ். நான் விடைபெற்றுக் கொண்டு அங்கிருந்துநகர்ந்தேன்.

சோ சார் எழுப்பிய கேள்வி என்னை யோசிக்க வைத்தது. ஆளுநர் சென்னா ரெட்டி ஏன் தொலைபேசியில் சோ சாரைத் தொடர்பு கொள்ளவில்லை? ஒருவேளை தனது உடையாடல்கள் ஒட்டுக்கேட்கப் படுகின்றன என்று ஆளுநர் சென்னா ரெட்டி சந்தேகப்பட்டாரா என்று நினைக்கத் தோன்றியது.

சோ சாரும், ஆளுநர் சென்னா ரெட்டியும் சந்தித்தார்களா, பேசினார்களா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால், யாரும் எதிர்பார்க்காத விதத்தில், ஜெயலலிதாவால் ஓர் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையை நம்பவே முடியவில்லை. அப்படி என்னதான் இருந்தது அந்த அறிக்கையில்?

''சசிகலாவுடன் இனி உறவு இல்லை; சுதாகரன் எனது வளர்ப்பு மகன் அல்ல; நான் சுதந்திரமாகச் செயல்படுவேன்; யாருக்கும் நான் சொந்தமல்ல'' இவைதான் ஜெயலலிதா விடுத்த அந்த அறிக்கையின் சாரம்சம்.

''ஒரு குடும்பத்தோடு எனக்கு இருந்த தொடர்பை மையப்படுத்தி, கடந்த சில மாதங்களாக எனக்கு எதிராக எழுந்த விமர்சனங்கள், பத்திரிகைகளில் கேலி, எதிர்மறையான அரசியல் தாக்குதல்கள் ஆகியவற்றுக்கு வெளிப்படையாக எனது நிலையைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்'' என்று தொடங்கியது ஜெயலலிதாவின் நான்கு பக்க அறிக்கை.

''ஆரம்பத்தில் இந்தக் குற்றச்சாட்டுக்களை அரசியல் உள்நோக்கத்தோடு கூறப்படும் விமர்சனங்கள் என்று கருதி ஒதுக்கி வந்தேன். சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் சட்ட திட்டங்களுக்கு அப்பாற்பட்ட ஓர் அதிகார மையமாக, செயல்பட்டு வந்தனர் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் பதிந்துவிட்டது தெளிவாகத் தெரிகிறது.

சசிகலா குடும்பத்தினர் குறித்து மிகைப்படுத்தப்பட்ட செய்திகளும் உண்டு. நாகரிகக் குறைவான விமர்சனங்களும் உண்டு. உண்மைக்குப் புறம்பான கட்டுக்கதைகளும் உண்டு. சில உண்மைச் சம்பவங்களும், செய்திகளும் உண்டு. வளர்ப்பு மகன் சுதாகரனின் திருமணம், அந்தக் குடும்பத்தில் முழுக் கட்டுப்பாட்டில் நான் இருப்பது போன்ற உணர்வை மக்கள் மத்தியில் உருவாக்கிவிட்டது.

கஷ்டமான காலகட்டங்களிலும், சோதனையான சூழ்நிலைகளிலும் உற்ற தோழியாக, உடன்பிறவாத சகோதரியாக சசிகலா எனக்கு உறுதுணையாக இருந்தார் என்ற நன்றி உணர்வு எனக்கு இருக்கவே செய்கிறது. கட்சியினரின் வேண்டுகோளுக்கிணங்க, சசிகலாவிடமிருந்தும், சுதாகரனிடமிருந்தும் நான் முழுமையாக விலகி இருக்க வேண்டிய கட்டாயமும் அவசியமும் ஏற்பட்டுள்ளது. அவர்களைவிடக் கட்சியின் நலன்தான் முக்கியம் என நான் கருதுகிறேன்'' என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார் ஜெயலலிதா.

''சுதாகரனை நான் சட்டபூர்வமான முறையில் வளர்ப்பு மகனாகவோ, சுவீகார புத்திரனாகவோ ஏற்றிருக்கவில்லை. வாய்மொழியாக வளர்ப்பு மகனாக அறிவித்திருந்தேன். அவ்வளவுதான். சுதாகரன் எனது வளர்ப்பு மகன் அல்ல என்பதை அனைவருக்கும் அதிகாரபூர்வமாகத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்'' என்பதும்; ''எனது சிந்தனைகளும், செயல்பாடுகளும், முடிவுகளும், செய்கைகளும் எந்த தனிப்பட்ட நபராலோ, குடும்பத்தாலோ கட்டுப்படுத்தப்பட்டதில்லை. இனிமேலும் கட்டுப்படுத்த இடம் தரமாட்டேன்'' என்றும்; ''கட்சியினர் அனைவருக்கும் தாயாகவும், சகோதரியாகவும் என்றென்றும் இருப்பேன். தனிப்பட்ட எவருக்கும் நான் சொந்தமல்ல'' என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்த ஜெயலலிதாவின் கடைசி வரி இப்படி அமைந்திருந்தது

''யார் மீதும் பகை உணர்வோ, வெறுப்போ இன்றி முழுமனதோடும், மிகுந்த நல்லெண்ணத்தோடும் இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்!''

ஜெயலலிதாவின் அறிக்கை வெளிவந்த சில நிமிடங்களில், அது குறித்து முதலில் கருத்துத் தெரிவித்தவர் முதல்வர் கருணாநிதிதான். அதிமுகவினர் பலருக்கும்கூட, முதல்வர் கருணாநிதியின் மூலம்தான் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டிருப்பதே தெரியவந்தது.

''உயிர்த் தோழியைப் பிரியமாட்டேன் என்கிறார் ஒருநாள். மறுநாளே பிரிந்துவிட்டேன் என்கிறார். அதற்கு மறுநாள் சிறைக்குச் சென்று பார்க்கிறார். இது என்ன பழக்கமோ எனக்குப் புரியவில்லை. இன்றைக்குக்கூட, 'பிரிந்துவிட்டேன். அவருக்கும் கட்சிக்கும் தொடர்பு இல்லை' என்று உடன்பிறவாச் சகோதரியைப் பற்றி ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டுள்ளதாகத் தகவல் வந்துள்ளது'' என்கிற முதல்வர் கருணாநிதியின் கருத்தை ஜெயலலிதா அறிக்கையுடன் இணைத்தே காட்சி ஊடகங்கள் ஒளிபரப்பின.

ஆளுநர் சென்னா ரெட்டிக்கு பிரணாப் முகர்ஜி எழுதிய கடிதத்துக்கும், ஆளுநர் சென்னா ரெட்டி துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி சந்திப்புக்கும், ஜெயலலிதா அறிக்கை வெளிவந்ததுக்கும் தொடர்பு இருந்ததா என்று எனக்குத் தெரியாது. அதை உறுதி செய்ய என்னால் இயலவில்லை. ஆனால், சில நாள்களுக்கு முன்னர் சசிகலாவை சிறைச்சாலை சென்று சந்தித்து ஆறுதல் சொன்ன ஜெயலலிதா, திடீரென்று இப்படியொரு அறிக்கை வெளியிட்டது ஏன் என்கிற கேள்வி, ஏதாவது தொடர்பு இருக்கக் கூடும் என்கிற ஐயப்பாட்டை என்னில் எழுப்பாமல் இல்லை.

எனது சந்தேகத்தை அகற்றுவதற்கான வாய்ப்பு வழக்குரைஞர் கபில் சிபில் உருவில் வந்தது. ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஜெயலலிதாவைக் கைது செய்ய தடைகோரி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், ஜெயலலிதாவுக்காக வாதாட தில்லியிலிருந்து மூத்த வழக்குரைஞர் கபில் சிபில் சென்னை வந்திருந்தார். அப்போது அவர் காங்கிரஸ் கட்சியில் சேரவில்லை. வழக்குரைஞராக இருந்தார், அவ்வளவே.

தில்லியில் அவரை ஏற்கெனவே சந்தித்திருக்கிறேன் என்பது மட்டுமல்ல, நீதிபதி ராமசாமியின் பதவி நீக்க வழக்கில், நாடாளுமன்றத்தில் கபில் சிபில் முன்வைத்த ஐந்து மணி நேர வாதத்தில் மனதைப் பறிகொடுத்த பலரில் நானும் ஒருவன். தமிழகத்தைச் சேர்ந்த திறமையான நீதிபதிகளில் ஒருவர் வி. ராமசாமி. அவருக்கு எதிராக 14 குற்றச்சாட்டுக்களை முன்வைத்து 108 எம்.பி.க்கள் அவரைப் பதவி நீக்கம் செய்ய மனு கொடுத்தனர்.

பஞ்சாபில் பயங்கரவாதிகளுக்கு எதிராகத் துணிந்து நின்ற நீதிபதி ராமசாமி மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் அற்பமானவை. அதிக அளவில் தொலைபேசியைப் பயன்படுத்தினார், காரில் சென்னைக்குப் பயணித்தார், வீட்டுக்கு பர்னிச்சர்கள் வாங்கினார் போன்ற குற்றச்சாட்டுகள் அவர்மீது சுமத்தப்பட்டன. வழக்கை விசாரிக்க கமிட்டி அமைக்கப்பட்டது. கடைசியில், நாடாளுமன்றத்தில் அவரது பதவி நீக்கத் தீர்மானம் விவாதத்துக்கு வந்தது.

உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகளைப் பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு மட்டுமே உண்டு என்கிறது நமது அரசியல் சாசனம். அவையில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே பதவி நீக்கம் உறுதிப்படும்.

1993 மே 10ஆம் தேதி, கபில் சிபிலின் வாதத்தைக் கேட்பதற்காக நிறைந்திருந்த நாடாளுமன்ற கேலரியில் நானும் அமர்ந்திருந்தேன். அதற்கு முன்னும், பின்னும் நாடாளுமன்றத்தில் அதுபோன்று நீதிபதி பதவி நீக்கத் தீர்மானம் விவாதிக்கப்பட்டதில்லை.

கபில் சிபிலின் வாதத்தைத் தொடர்ந்து நீதிபதி ராமசாமியின் பதவி நீக்கத் தீர்மானம் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. 196 பேர் அதற்கு ஆதரவாக வாக்களித்தனர். காங்கிரஸ் உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. பதவி நீக்கத்துக்குத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு இல்லாததால் தீர்மானம் தோல்வி அடைந்தது. நீதிபதி ராமசாமியின் பதவி பிழைத்தது.

நாடாளுமன்ற வாதத்துக்கு அடுத்த நாள், நான் கபில் சிபிலை சென்று சந்தித்தேன். அவரை பேட்டியும் எடுத்தேன். அது முதல், அவருடன் தொடர்பு ஏற்பட்டு இன்றுவரை தொடர்கிறது.

சென்னைக்கு ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான வாதத்துக்காக வந்திருந்த வழக்குரைஞர் கபில் சிபிலை உயர்நீதிமன்றத்தில் சந்திக்கச் சென்றேன். அன்று காலையில் அவர் போயஸ் கார்டனில் ஜெயலலிதாவுடன் காலை சிற்றுண்டி அருந்தி, வழக்கு குறித்து ஆலோசனை நடத்தி இருந்தார் என்று நான் கேள்விப்பட்டதால், அவரை சந்திப்பதில் முனைப்பாக இருந்தேன். அன்று இரவு விமானத்தில் தில்லி திரும்புவதாக இருந்ததால், விமானநிலையம் செல்லும்போதுதான் அவரது காரில் பயணித்தபடி பேச முடிந்தது.

''இப்போதைக்கு ஜெயலலிதாவைக் கைது செய்வதற்கு மட்டும்தான் தடை வாங்க முடிந்திருக்கிறது. அவரைக் கைது செய்வார்கள் என்று நினைக்கிறீர்களா?''

''சசிகலாவைக் கைது செய்திருக்கும் நிலையில், ஜெயலலிதாஜியைக் கைது செய்யாமல் விடுவார்கள் என்று தோன்றவில்லை. அதை அவரிடமே நான் தெரிவித்து விட்டேன்.''

''அதற்கு அவர் என்ன சொன்னார்?''

''எதற்கும் தான் தயாராகவே இருப்பதாகச் சொன்னார். தன்னை சிறையில் தள்ளிப் பழிவாங்க வேண்டும் என்பதில் கருணாநிதியும், சிதம்பரமும் குறியாக இருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார். நடராசன்தான் உங்களுக்கு நண்பராயிற்றே, அவருக்குத் தெரியாதது எனக்கு எப்படித் தெரியும்?''

''சசிகலா, அவருடைய குடும்பத்தினர் குறித்து ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டிருப்பதை நீங்கள் பார்த்தீர்களா? எந்தவிதத் தொடர்பும் வைத்துக் கொள்ளப்போவதில்லை என்று தெரிவித்திருக்கிறார். அப்படி இருக்கும்போது நடராசனை சந்தித்து என்ன கிடைத்துவிடப் போகிறது.''

''சில நண்பர்களின் ஆலோசனையின் வெளிப்பாடாக அந்த அறிக்கையை வெளியிட்டிருப்பதாக என்னிடம் தெரிவித்தார் ஜெயலலிதாஜி. யார் அந்த நண்பர்கள் என்று கேட்டேன். சிரித்துக் கொண்டே, 'உங்களுக்கும் தெரிந்தவர்தான்' என்று சொன்னார். அதற்கு மேல் நான் வற்புறுத்தவில்லை.''

விமான நிலையத்திலிருந்து வீட்டுக்குத் திரும்பக் காத்திருந்தபோது, ஆளுநர் சென்னா ரெட்டியும் அவரது மனைவியும் வெளியூர் செல்வதற்காகக் காரில் வந்து இறங்கிக் கொண்டிருந்தனர். விமான நிலையத்துக்குள் நுழைவதற்குள் சந்தித்துவிட வேண்டும் என்று அவர்களை நோக்கி விரைந்தேன்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT