தினமணி கதிர்

துளித் துளியாய்..!

11th Jun 2023 12:00 AM | மணிபாரதி

ADVERTISEMENT

 

ஆபிஸ் முடிந்து ரேவதி கம்பெனி பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தாள். அவள் உட்கார்ந்த சிறிது நேரத்திலேயே பஸ் புறப்பட்டது. ஓ.எம்.ஆரிலிருந்து மணப்பாக்கத்துக்குச் செல்ல குறைந்தது ஒரு மணி நேரமாவது ஆகும். ஒரு மணி நேரத்தைக் கழிப்பது என்பது சிரமமான காரியம்.

வெளியில் வேடிக்கை பார்க்கலாம் என்றால், தினமும் பயணிக்கிற ரூட்டில் புதிதாக எதைப் பார்த்துவிட முடியும்? ஒரே வழி வாட்ஸ் ஆப் பார்ப்பதுதான். பொதுவாக, ,ஆபிஸ் நேரத்தில் வாட்ஸ் ஆப், பேஸ் புக் பார்க்கிற பழக்கம் ரேவதிக்கு இல்லை. முக்கியமான போன் வந்தால் மட்டும் எடுத்து பேசுவாள். அதுவும் ரத்தினச் சுருக்கமாகப் பேசி முடித்து அணைத்து விடுவாள்.

வாட்ஸ் ஆப்பை ஓப்பன் பண்ணி ஒவ்வொரு மெசேஜாக பார்க்க ஆரம்பித்தாள். அதில், பார்த்திபன் அனுப்பிய மெசேஜூம் வந்திருந்தது. 'அவன் எதற்காகத் தனக்கு மெசேஜ் அனுப்ப வேண்டும்' என்கிற எண்ணம் அவளுக்கு ஓட ஆரம்பித்தது. கூடவே எரிச்சலும், கோபமும் வந்தது. ஆனாலும், விஷயம் என்ன என்பதை தெரிந்துகொள்வதற்காக அதை ஓப்பன் பண்ணி படிக்க ஆரம்பித்தாள்.

ADVERTISEMENT

'வணக்கம் ரேவதி. நம்முடைய திருமணத்துக்குப் பிறகு, நாம் வாழ்வதற்காக வாங்கிய வீட்டை, இனி நாம் சேர்ந்து வாழவேப் போவதில்லை என்கிற முடிவு எடுத்தபடியால், அதை விற்றுவிட தீர்மானித்துள்ளேன். தனி மனுஷனுக்கு த்ரீ பெட்ரூம் என்பது அநாவசியம். விலை பேசி அட்வான்ஸ்கூட வாங்கிவிட்டேன். அடுத்த வாரம் சாவி ஹேன்ட் ஓவர் பண்ண வேண்டும். அதற்கு முன்னால், நீ அந்த வீட்டைப் பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டால், ஒருமுறை பார்க்கலாம். சாவி ஃபிளாட் செக்யூரிட்டியிடம் இருக்கிறது.' என்று மேசேஜில் இருந்தது.

ரேவதியும் அப்படியொரு மெசேஜை பார்த்திபனிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள். திருமணத்துக்குப் பிறகு அவன் பேங்க் லோன் போட்டு அந்த ஃபிளாட்டை வாங்கினான். பத்துக்கும் மேற்பட்ட ஃபிளாட்களைப் பார்த்து, அதில், 'இதுதான் உத்தமம்' என ரேவதிதான் தேர்வு செய்துகொடுத்தாள். விலை சற்று அதிகம் என்றாலும், அவளுடைய விருப்பத்துக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காக, அதையே வாங்கினான்.

இன்டீரியர் டெக்கரேசன் பொறுப்பையும், அவளுடைய விருப்பத்துக்கே விட்டுவிட்டான். அவளும், அவ்வளவு சாதாரணமாக அதை செய்து முடித்து விடவில்லை. அங்குலம் அங்குலமாகப் பார்த்து, ரசித்து ரசித்து செய்தாள். ஃபிளாட், ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் லெவலுக்கு மாறியது.
இரண்டு ஆண்டுகள், அந்த ஃபிளாட்டில், இருவரும் ஒன்றாக வாழ்ந்தார்கள். காற்று புக இடம் இல்லாமல் ஃபிளாட் முழுவதும் காதல் நிரம்பி வழிந்தது. எதிர் ஃபிளாட் கோதை மாமி இவர்களைப் பார்த்து பொறாமைப்படாத நாளில்லை. ''சுத்தி போட்டுக்கடா கண்ணு..!'' என்று ,அவளே அதற்கு பரிகாரமும் சொல்வாள்.

சமைப்பது, துவைப்பது, ஆபிஸ் போய் வருவது, வீக் என்ட்டில் ஒரு படம் பார்ப்பது அல்லது ஹோட்டலுக்கு போய் உணவு அருந்துவது என எல்லாமே நன்றாகதான் போய்க் கொண்டிருந்தது. ஒரு சிறுபற்றாக்குறை, இருவரையும் வார்த்தைத் தடிக்கும்படி பேச வைத்துவிட்டது. பார்த்திபனைவிட ரேவதிக்கு சம்பளம் அதிகம்தான். ஆனால் ,அவள் அதை ஒருநாளும் காட்டிக் கொண்டதில்லை. பிரச்னை என்று வரும்போது, பேச்சு வரவே செய்யும். பேசி விட்டாள். அப்படி பேசிய தன் விளைவு, விவகாரத்து வரை கொண்டு சென்றுவிட்டது. அதற்கு, நடுவில் இருந்தவர்களும் ஒரு காரணம். சிறு சண்டையை ,மூட்டி மூட்டி பெரிய சண்டையாக மாற்றிவிட்டார்கள்.

கோதை மாமி மட்டுமே அவர்களுக்காக வருத்தப்பட்டாள். 'ரேவதியிடம் பேசி சமாதானப்படுத்த வேண்டும்' என நினைத்தாள். ஆனால், அவள் கேட்கும் மனநிலையில் இல்லை என்பதைப் புரிந்துகொண்டு,அமைதியாக இருந்துவிட்டாள். நீதிமன்றத்தில் விவகாரத்து கிடைத்தபோது, ரேவதிக்கு அழுகையே வந்தது.

பார்த்திபனை நேரடியாகப் பார்க்க தைரியமில்லாதவளாக ஓடிப் போய் காரில் ஏறிக் கொண்டாள். அவன், 'கோழை..கோழை.. ஓடுறதப் பாரு..!' எனமனதுக்குள் திட்டினான்.

இது நடைபெற்று ஆறு மாதங்களாகிறது. அதன்பிறகு இருவரும் பார்க்கவோ, பேசவோ இல்லை.

இப்போது இந்த மெசேஜ்.

வதிக்கு அந்த ஃபிளாட்டை ரொம்பப் பிடிக்கும். அவர்கள் இருவருக்கும் எப்படி ஒரு குணாதிசயம் உண்டோ, அதுபோல் அந்த ஃபிளாட்டுக்கும் ஒரு குணாதிசயம் உண்டு. இருவரும் பிரிந்ததில், பாவம் ,அதுதான்அநாதையாகி நின்றது. அது ரேவதிக்கும் புரியும். அதனால்தான் ,அதை பார்க்க வேண்டும் என முடிவெடுத்தவுடன் ஒரு நிமிடத்தைகூட வீணாக்காமல் ஓடி வந்திருக்கிறாள்.

எத்தனையோ நாள் அதுஅவளிடம் பேசியிருக்கிறது. பார்த்திபன் கோபப்பட்டு கத்தும்போதெல்லாம் அதுதான் அவளை ஆறுதல்படுத்தும். அவள் சிரித்தால் அதுவும் சிரிக்கும். அவள் அழுதால் அதுவும் அழாமல் பதிலுக்குக் கண்ணீரைத் துடைத்துவிடும். விவகாரத்து கிடைத்தவுடன் அவள் அந்த ஃபிளாட்டைவிட்டு வெளியேற மிகவும் சிரமப்பட்டுதான் போனாள். பார்த்திபனைப் பிரிவது கூட அத்தனை சிரமமாக இல்லை.

அந்த ஃபிளாட்டை பிரிவது அவ்வளவு கஷ்டமாக இருந்தது. வெளியில் வந்து செருப்பை மாட்டியவள், மண்டியிட்டு அதன் வாசலை ஒரு தரம் முத்தமிட்டாள். கண்கள் கலங்கியது. இந்த முறை, அது துடைப்பதற்கு கை நீட்டவில்லை. பதிலுக்கு அதுவும் கலங்கியது. அவள் எழுந்து, 'போய் வருகிறேன் என் இனிய தோழியே!' என்று சொல்லி புறப்பட்டாள்.

இப்போது மீண்டும் அதை பார்க்கும் சந்தர்ப்பம் அமைந்திருக்கிறது. பார்த்திபன் மீது ஆயிரம் கோபம் இருக்கட்டும். அதன் மேல் அவளுக்கு எந்தக் கோபமும் இல்லை. ஃபிளாட் கை மாறி விட்டால், அதை பார்ப்பது கஷ்டமாகிவிடும். புதிதாக வாங்கியவருக்கு அந்த உறவு எப்படி புரிய வரும். அதனால்தான், அதற்கு முன்னால் பார்த்து விடுவது மேல் என முடிவெடுத்து வந்திருக்கிறாள்.

'இப்படி கூட யோசிக்கத் தெரிந்திருக்கிறதே!' என பார்த்திபனை நினைத்து ஆச்சரியப்பட்டுக் கொண்டாள். நினைவுகள் விலை மதிப்பற்றவை. ஒவ்வொரு இதயத்துக்குள்ளும், குறைந்தது, ஒரு நினைவாவது முத்துக்களாக உதிர்ந்துகிடக்கும். அது சந்தோஷம் தருகிறதா? அல்லது வலியைத் தருகிறதா? என்பது அவரவர் மன நிலையை பொருத்தது. ரேவதிக்கு இரண்டுமே நிகழ்ந்திருக்கிறது.

செக்யூரிட்டியிடம் சாவி வாங்கி வீட்டின் கதவை ரேவதி திறந்தாள். அடுக்குமல்லியின் வாசம் உள்ளிருந்து அடர்த்தியாக வீசியது. அவள் ஹாலை ஒட்டிய ஜன்னலோரத்தில் வைத்து வளர்த்த மல்லிச்செடியின் வாசம்தான் அது. இன்னும் பட்டுவிடவில்லை போலிருக்கிறது. என் மேலிருந்த கோபத்தில் அதை பிடுங்கி எறிந்துவிடாமல், தொடர்ந்து தண்ணீர்விட்டு அவன் வளர்த்து வந்திருப்பது, சற்று நிம்மதியைத் தந்தது. இந்த ஃபிளாட்டின் உயிரோட்டமான பகுதிகளில் அதுவும் ஒன்று.

உள்ளே வந்து லைட்டை ஆன் பண்ணினாள். இருள் விலகி வெளிச்சம் படர்ந்தது. எல்லாம் அப்படியே இருந்தது. அவள் எப்படி விட்டுவிட்டு போனாளோ அப்படியே இருந்தது. ஹாலில் கிடந்த கார்ப்பெட்டை பார்த்ததும், கிரஹப் பிரவேசம் முடிந்துஅனைவரும் புறப்பட்டு போனதும், அவள் பார்த்திபனைக் கட்டிக் கொண்டு நன்றி சொன்னதும், பதிலுக்கு அவன் முத்தமிட்டதும் நினைவில் வந்தது. அன்பு செலுத்த அவனுக்கு தெரிந்த ஒரே வழி முத்தம் தருவது மட்டும்தான்.

டைனிங் டேபிளை பார்த்தபோது, ஒரு ஞாயிற்றுக்கிழமை ,அவளை உட்கார வைத்து, அவன் மட்டன் பிரியாணி செய்து போட்டது நினைவுக்கு வந்தது. இப்போதுகூட அந்த வாசம் அவளது நாசியில் எஞ்சி இருந்தது.

பெட்ரூமை பார்த்தபோது, எத்தனையோ சந்தோஷமான நினைவுகள் நினைவுக்கு வந்து போனது. எவ்வளவு பெரிய விஸ்வரூபப் பிரச்னையாக இருந்தாலும் அங்கு வந்ததும் புஸ்வானமாகிவிடும். ஒரு சிறு தீண்டலில் எல்லாம் மறைந்து போகும். ஓர் இனிய முத்தத்தில் அத்தனையும் கரைந்து போகும்.

கிச்சனை எட்டிப் பார்த்தாள். ஒருநாளும் தனக்காக அவள் சமைத்ததில்லை. பார்த்திபன் என்ன ஆசைப்படுகிறானோ அதை செய்துகொடுப்பாள். அது பாகற்காய் பிட்லையாக இருந்தாலும் சரி, இப்படி ஒவ்வொன்றையும் நினைத்துப் பார்க்கும்போது, அவனுடன் நன்றாகதான் வாழ்ந்திருக்கிறோம் என்கிற எண்ணமே எழுந்தது.

பிறகு எப்படி பிரச்னை ஆரம்பித்தது? தொடக்கப் புள்ளி நினைவில் இல்லை. சிறு சிறு வார்த்தைகளாகத் தொடங்கி, ஒருநாள் தகாத வார்த்தையாக வெடித்தது.

''போதும். எனக்கு உன் கூட வாழ பிடிக்கலை. உன்னை ஏன்டா லவ் பண்ணோம்ன்னு இருக்கு..!'' என ரேவதி வெறுப்பை உமிழ்ந்தாள்.

பதிலுக்கு பார்த்திபனும், '' ஒரு பிரச்னையும் இல்லை. பிடிக்கலைன்னா விவகாரத்து வாங்கிட்டுப் போயிடு..!'' எனஅமைதியாகச் சொன்னான்.

பின்னர், இருவரும் நீதிமன்றத்தில் விவகாரத்துக்கு விண்ணப்பித்தனர். பிரியும் அந்தக் கணத்தில்அவன், ''இந்த வீட்டுலேருந்து நீ எதை எடுத்துட்டுப் போகணும்ன்னு நினைக்கறியோ அதை எடுத்துட்டு போகலாம். .இல்லை இந்த வீட்டுலதான் இருக்கணும்ன்னு ஆசைப்பட்டா தாராளமா இருந்துக்கலாம்.. நான் வெளியே போயிடுறேன்!'' என்றான்.

அவளோ, ''வேண்டாம். .இது நீ லோன் போட்டு வாங்குன வீடு.. இதுல வாழும் உரிமை உனக்கு மட்டும்தான் உண்டு!'' என்று கூறி, அவளது சில உடைகளை மட்டும் எடுத்துக் கொண்டுபுறப்பட்டாள்.

கோட் ஸ்டாண்டில் தொங்கிக் கொண்டிருந்த பூக்கள் போட்ட குடை, அவளது கவனத்தை ஈர்த்தது. அருகில் வந்து அதை எடுத்து விரித்துப் பார்த்தாள். அதில் தெரிந்த வெவ்வேறு நிற பூக்கள்,அவளது கண்களில் சந்தோஷத்தை வரவழைத்தது. அவளுக்கு மழை என்றால் மிகவும் பிடிக்கும். ஆபிஸ் முடிந்து வீடு திரும்புகிறபோது, மழை வந்துவிட்டால், நனைந்தபடியேதான் வீடு வந்து சேர்வாள். அவளது அந்தச் செயலோ பார்த்திபனுக்கு கோபத்தை வரவழைக்கும்.
'மழையை ரசிக்க வேண்டியதுதான்! அதுக்காக இப்படியா? உடம்புக்கு முடியாம போச்சுன்னா என்ன பண்றது? ‘ என பார்த்திபன் கத்துவான். அவள்மழையை ரசிக்கலைன்னா நா உன்னையவே ரசிச்சுருக்க மாட்டேன். காதலுக்கு அடிப்படையே ரசனைதானே!' என அமைதியாகப் பதில் சொல்வாள். அவன், '' என்ன ரசனையோ? மண்ணாங்கட்டி ரசனை!'' என சலித்துக் கொள்வான்.
அவளை திருத்த முடியாது என்பதை புரிந்துகொண்ட அவன், அவளுக்கு அந்தக் குடையை வாங்கிக் கொடுத்தான்.
''இனிமே மழை வந்தா இதை விரிச்சு புடிச்சுட்டு நடந்துவா?'' என்றான். அவள் அந்தக் குடையை விரித்துப் பார்த்தாள். அதில், பிரிண்ட் செய்யப்பட்டிருந்த அந்த வண்ணமயமான பூக்கள் அவளை மிகவும் கவர்ந்தது. ''சூப்பர்ய்யா..'' என்றாள்.
இதற்கு பார்த்திபன், ''பாரிஸ் கார்னர் போய் ,உனக்காக,ஒவ்வொரு கடையா ஏறி இறங்கி கடைசியில் இதை ஓ.கே. பண்ணினேன்!'' என்றான். அவள் அவனைக் கட்டியணைத்து, ''பரவாயில்லையே.. உனக்கும் புரிஞ்சுருக்கே.. காதல்ங்குறது ரசனை சம்பந்தப்பட்ட விஷயம்ன்னு! இல்லைன்னா இத்தனை கடையில ஏறி இறங்கி தேடியிருப்பியா?'' என்று சொல்லி முத்தமிட்டாள்.
ஃபிளாட்டை விட்டு வெளியேறியபோது, அந்தக் குடையை எடுக்காமல்தான் போயிருந்தாள். இப்போது பார்க்கும்போது கஷ்டமாக இருந்தது. அது வெறும் குடையாக இருக்கலாம். ஆனால் ,அவளது கைக்கு வந்தபோது நடைபெற்ற சம்பவம், பொய் கலப்பில்லாத சம்பவமாயிற்றே. அன்பின் வெளிப்பாடாயிற்றே, காதலை அடுத்த உயரத்துக்குக் கொண்டு போன மனநிலையாயிற்றே! இப்படி, உலகத்தில் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு காரணம் இருக்கதானே செய்யும். அந்தக் காரணம் துக்கத்தையும், மகிழ்ச்சியையும் மாறி மாறி கொடுக்கத்தானே செய்யும். அதன்பிறகு, அவள் மழையில் நனைவதையே விட்டுவிட்டாள்.
இப்போது, அந்தக் குடையை ஒருமுறை தடவிப் பார்த்தாள். பார்த்திபனுடனான அந்த வாழ்க்கையைத் தொடர்ந்து வாழ்ந்திருக்கலாமோ? அவசரப்பட்டு விட்டோமோ? அவனைபிரிந்து என்ன கிழித்துவிட்டோம் அல்லது என்ன சாதித்துவிட்டோம்.
தேவையில்லாத நட்புகளும், விருப்பமில்லாத சம்பவங்களும்தானே இருக்கின்றன. ஒட்டாத அந்த நட்புடன் அட்ஜஸ்ட் பண்ணிப் போக முடிகிறது. தனக்கே தனக்கென்று வாழ்ந்தவனுடன் ஒத்துப் போகமுடியவில்லை. நீ பெரியவனா அல்லது நான் பெரியவளா என்கிற ஈகோ. அது இருக்கிற மனதில் சமாதானத்துக்கு இடமேது.
அதுதான் நீதிமன்றம் வரை கொண்டு போய் விட்டுவிட்டது. வக்கீலும் எவ்வளவோ எடுத்து சொல்லிப் பார்த்தார். ஈகோ விடுமா? இன்று இந்த இடத்தில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது.
ரேவதிக்கு கண்களில் ஈரம் கசிய ஆரம்பித்தது.
அப்போது, ''ரேவதி..!'' என குரல் கேட்டது. அவள் அதிர்ந்துத் திரும்பிப் பார்த்தாள். கோதை மாமிதான் பளிச்சென்று நின்றிருந்தாள்.
''என்னம்மா ஆச்சரியமா இருக்கு!''
''எனக்கே ஆச்சரியம்தான் மாமி!''
மாமி புரியாமல் பார்த்தாள். ரேவதி நடந்ததைச் சொன்னாள்.
இதற்கு மாமி, ''ரெண்டு பேரும் அவசரப்பட்டு முடிவெடுத்து விட்டேள்!'' என்றாள் வருத்தம் தோய்ந்தகுரலில்!
ரேவதி பதில் சொல்லாமல் நின்று கொண்டிருந்தாள்.
''எங்கயோ பொறக்குறோம். எங்கயோ வளர்கிறோம். யாரையோ கைப் பிடிக்குறோம்.. கைப் பிடிக்குற அந்த வாழ்க்கை ஒரு தரம்தான்! வாழ வேண்டிய வயசுல, அதை வாழாம விட்டுட்டோம்ன்னா, இந்தப் பிறவியே வேஸ்ட்டுதான். எந்தக் குடும்பத்துல பிரச்னை இல்லை. என் குடும்பத்துல இல்லையா? பிரச்னையைப் பார்த்து ஓடி ஓளிஞ்சா இப்படிதான் முடிவெடுக்கத் தோணும்,. அதை எதிர்த்து நிற்கணும்! பிரச்னைக்கு காரணம் என்னன்னு கண்டுபுடிக்கணும். தீர்க்க முடியாத பிரச்னைன்னு உலகத்துல எதுவுமே இல்லை. இப்ப இருக்குற பொண்ணுங்களுக்கெல்லாம் கோபம் அதிகமா வருது! எல்லாத்துக்கும் அதுதான் காரணம். அதை ஒழிச்சுட்டு உட்காந்து பொறுமையா நிதானமாகப் பேசினா எல்லா பிரச்னைக்கும் தீர்வு கிடைச்சுடும். எங்க காலத்துல எல்லாம் பிரச்னை வந்தா கோர்ட்டுக்காக ஓடிட்டு இருந்தோம். எது வந்தாலும் சமாளிச்சுட்டுதான் வாழ்ந்தோம். இன்னிக்கு ,நா இல்லாம மாமா இல்லை. மாமா இல்லாம நான் இல்லை. அவ்வளவு அன்பு, அவ்வளவு காதல்.. இத்தனைக்கும் பார்த்திபனும் நல்ல பையன்தான். எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லாதவன்தான்! சண்டை போடுவானே தவிர கொடுமைக்காரன் கிடையாது. கொடுமைக்காரனா இருந்துருந்தா, நீ ஆறு மாசம்கூடஅவனோட வாழ்ந்திருக்க முடியாது. .ஒரு வாரத்துலயே விட்டுட்டு ஓடியிருப்ப. .உனக்காக எவ்வளவு அழகான வீட்டை வாங்கிக் குடுத்துருக்கான். .உன்னை யாராவது தப்பா பேசினா விடுவானா? வறிஞ்சு கட்டிகிட்டு சண்டைக்குப் போவான்! ரெண்டு பேரும் புரிஞ்சுக்காம போய்ட்டிங்க! அவ்வளவுதான். இப்பவும் ஒண்ணும்ஆயிடலை. யோசிச்சு நல்ல முடிவா எடுங்க?'' என்றாள் கோதை மாமி; ஒரே மூச்சில் பேசி முடித்தாள்.
''சரி மாமி!'' என்று சொல்லி, கதவை இழுத்து பூட்டினாள். லிப்ட் வழியே கீழே வந்தாள்.
செல்போனை எடுத்து, 'உன் கூட பேச விரும்புறேன்'என பார்த்திபனுக்கு வாட்ஸ் ஆப்பில் மெசேஜ் அனுப்பினாள்.
அவனிடமிருந்து அடுத்த விநாடியே போன்செய்த பார்த்திபன், ''உன்னை எனக்குத் தெரியும் ரேவதி. இப்பவே பேசலாம். நீ எங்க இருக்கன்னு சொல்லு! நான்அங்க வரேன்!'' என்றான்.
''நம்ம ஃபிளாட் மெயின் என்ட்ரன்ஸல தான் நின்னுகிட்டு இருக்கேன்!'' என்றாள் ரேவதி.
''அங்கேயே வெய்ட் பண்ணு! பத்து நிமிஷத்துல வரேன்!'' என்றான் பார்த்திபன்.
செல்போனை கட் பண்ணிவிட்டு, அவனுக்காக காத்திருக்க ஆரம்பித்தாள் ரேவதி. வானம் இருட்ட ஆரம்பித்தது. ஒரு துளி மழை அவள் மேல் விழுந்து அவளை உற்சாகப்படுத்தியது.

ADVERTISEMENT
ADVERTISEMENT