தினமணி கதிர்

திரைக்கதிர்

4th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

 


"இந்தியன் 2' படத்தை முடித்துவிட்டு அ.வினோத், மணிரத்னம் ஆகியோரின் படங்களில் அடுத்தடுத்து நடிக்கத் திட்டமிட்டிருக்கிறார் கமல். ஆனால், லைகா நிறுவனத்தில் நடந்த ரெய்டு நடவடிக்கையால், திட்டமிட்டபடி "இந்தியன் 2' படத்தை முடிக்க முடியாத நிலை... இந்த நிலையில் இயக்குநர் ஷங்கர், கொடுத்த தேதிகள் போதும் எனக் கமலிடம் சொல்லிவிட்டாராம். விரைவில் கமலின் ராஜ்கமல் நிறுவனம் அ.வினோத் படம் குறித்த அறிவிப்பை வெளியிடும் என்கிறார்கள்.

-----------------------

ஜெயம் ரவி நடிப்பில், "அடங்க மறு' படத்தை இயக்கிய கார்த்திக், அமீரின் சிஷ்யர். படம் மிகப்பெரிய கவனம்பெற்ற நிலையிலும், அடுத்த படத்தை இயக்க ரொம்பவே காலம் எடுத்துக் கொண்டார். விஜய், விஷால், ஆர்யா உள்ளிட்டவர்கள் கார்த்திக்கிடம் வலிய கதை கேட்ட நிலையிலும், ஏனோ அவரின் பட முயற்சி தள்ளிக் கொண்டே போனது. இந்த நிலையில் ஜெயம் ரவியை வைத்து ஒருவழியாக அடுத்த படத்தைத் தொடங்கிவிட்டார் கார்த்திக். கல்பாத்தி அகோரம் தயாரிப்பில் விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. 

ADVERTISEMENT

-----------------------

கவுண்டமணியின் 964-ஆவது படமாக "பழனிசாமி வாத்தியார்' படம் உருவாகவுள்ளது. கவுண்டமணியின் ஜோடியாக சஞ்சனா சிங் நடிக்கிறார். யோகி பாபு, கஞ்சா கருப்பு, ராதாரவி, சித்ரா லட்சுமணன், ரைடர் ரவி, டி.சிவா, ஆர்.கே.சுரேஷ், ஜே.எஸ்.கே. சதீஷ் என 11 தயாரிப்பாளர்கள் இந்த படத்தில் நடிக்கின்றனர். ஒயிட் ஆங்கிள் ரவிஷங்கர் ஒளிப்பதிவு செய்கிறார். முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் சிவகார்த்திகேயனும் நடிக்க சம்மதித்து விட்டார். படப்பிடிப்பு அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்குகிறது. முழுக்க முழுக்க சென்னையில் படப்பிடிப்பு நடக்கிறது. இசையமைப்பாளர் கே இசையமைக்கிறார். பாடல்களை வைரமுத்து எழுதுகிறார். 

-----------------------

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்த "தங்கலான்' படப்பிடிப்பு ஆறேழு மாதங்களாக நடந்து வந்த நிலையில், சின்ன பிரேக். 20 நாள்கள் படப்பிடிப்பு மீதமிருக்கிறது. அதுமுடிந்துவிட்டால்... ரிலீஸ்தான். "தங்கலான்' படத்திற்காக வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் விக்ரம், இதுவரை வேறு படம் எதுவும் கமிட் ஆகாமல் இருக்கிறார். தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குநர்களிடம், "தங்கலான் முடிச்சிட்டு வர்றேன்...' என்று அன்போடு "வணக்கம்' போட்டுவிடுகிறாராம்.

-----------------------

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கி நடிக்கும் "ஈ-50' படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன் இருவரும் தனுஷின் சகோதரர்களாக நடிக்கின்றனர். விஷ்ணு விஷால், காளிதாஸ் ஜெயராம், துஷாரா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். செல்வராகவனின் "சாணி காயிதம்' பட இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் இப்போது "கேப்டன் மில்லர்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் தனுஷின் ஜோடியாக பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், நிவேதிதா சதீஷ், சந்தீப் கிஷன், ஜான் கொக்கேன் உட்படப் பலர் நடித்து வருகின்றனர். 

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் அடுத்த மாதமும், அதற்கு அடுத்த மாதம் டீசரும் வெளியாகின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT