தினமணி கதிர்

காகிதக் கப்பல்கள்..!

4th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

 

''நல்ல வேளை நீ என் கல்யாணத்துக்கு வந்தேடி! எங்கே வராம இருந்திடுவியோன்னு ரொம்பவும் பயந்து போயிருந்தேன்.''
மணமகள் அலங்காரத்தில் இருந்த பூர்ணிமா சொல்ல, யாமினிக்கு கோபமாக வந்தது.
''என்னடி அநியாயம் இது. வீடு தேடி வந்து பத்திரிகை தந்து ஒரு வாரத்துக்கு முன்னாடியே வந்துடுன்னு வற்புறுத்தி அழைச்சிட்டு இப்போது இரக்கமில்லாம இப்படிப் பேசறே? நான் வரமாட்டேன்னு நினைச்சியா? உன் கல்யாணத்துக்கு வராம இருப்பேனாடி? ஏன் இப்படி நினைச்சே?'' என்று மூச்சு வாங்க படபடவென்று பொறிந்தாள்.
''அதுவந்து... அந்த ரஞ்சித்தையும் என்னோட கல்யாணத்துக்கு அழைச்சிருந்தேன். அவனும் கண்டிப்பா வர்றேன்னு வாக்குறுதி தந்திருந்தான். அதை உன்கிட்டே போனில் சொல்லியிருந்தேன்ல..''
''சரி.. அதுக்கென்ன..'' என்று முறைத்தாள்.
''அதான். அவன் வர்றதால , எங்கே நீ வராமப் போயிடுவியோன்னு''
''போடி லூசு. அவன் வந்தா எனக்கென்ன வராட்டி எனக்கென்ன..'' என்று நெருங்கி வந்து கன்னம் கிள்ளினாள். ''கல்யாணப் பொண்ணாச்சேன்னு பார்க்கிறேன். இல்லை.''
''அதில்லேடி நம்ம காலேஜ் செட்டில் எல்லோரையும் கூப்பிடிருந்தேன். ஒருத்தர் பாக்கியில்லாம அவனைத் தவறவிட முடியாதில்லை..''
''கடவுளே. நீ ஏன் சும்மா ..சும்மா அவனையும், என்னையும் கம்பேர் பண்ணிப் பேசிட்டிருக்கேன்னு சத்தியமாகப் புரியலை எனக்கு. என்ன தாண்டி உன் பிரச்னை நான் இப்போ இருக்கவா, போகவா?''
''கோபிச்சுக்காதேடி''- என்று யாமினியின் கைகளைப் பிடித்துகொண்டாள். பின்னர் அன்புடன் அணைத்துகொண்டாள்.
பூர்ணிமாவுக்கு தனது கல்லூரி தினங்கள் நினைவுக்கு வந்தன.
கல்லூரிக் காலம்தான் இளமையின் பொற்காலம் !
எப்போது நினைத்தாலும் மனசுக்குள் மழைச்சாரல் பொழியும் சந்தோஷத் தூறல் அடிக்கும். அதில், நனைதல் பரம சுகம். நட்புகளின் நெருக்கமும் துள்ளித் திரிந்த இளமையும் எண்ணங்களின் சுதந்திரமும் மீண்டும் திரும்ப வருமா என்ன?
அந்த நாள்களில் தான் யாமினியை விழுந்து விழுந்து காதலித்திருந்தாள் ரஞ்சித். அவளென்றால் பனியாய் உருகுவான்.
ஒருமுறை அட்டெண்டன்ஸ் எடுக்கும்போது, அவளது பெயரை மேடம் அழைக்க ஆர்வக் கோளாறில் இவன் ப்ரசண்ட் சொல்லி வழிந்தான். யாமினிக்கு நீல நிறம் பிடிக்கும் எனத் தெரிந்ததும் மாதத்தின் முக்கால் நாள்கள் அந்த வண்ணம் கலந்த சட்டையை போட்டுத் திரிந்தான். கேண்டீன், லைப்ரரி எங்கு சென்றாலும் வளர்ப்பு நாய் போல் பின்தொடர்ந்தான்.
தான் இன்னொருவனால் கவனிக்கப்படுகிறோம். தன்னிடமிருக்கும் ஏதோ ஒரு விஷயத்தினால் அந்த ஆண் கவரப்படுகிறான் என்று உணர்ந்தவுடன் ஒரு பெண்ணுக்கு சிறகுகள் முளைத்துவிடுகின்றன. மனதுக்குள் ஒரு மகாராணி உணர்வும், உலக அளவு இன்பமும் சொத்தாக அமைந்துவிடுகிறது. யாமினியும் அதற்கு விதிவிலக்கில்லை.
ரஞ்சித் தன்னை கவனிப்பதும், காதலித்து உருகுவதும் தெரிந்ததும் கூட உணராதது போலவே நடிப்பாள். அவனை அலைக்கழிப்பதில் ஒரு அற்ப சந்தோஷம் அவளுக்கு.
ரஞ்சித் ஒரு சாதாரணன். ஆயிரத்தில் ஒருவன் மிச்சமிருக்கும் அந்த தொள்ளாயிரத்து தொன்னூற்றி ஒன்பது பேரில் ஒரு சராசரி ஆசாமி. சுமார் அழகு. நடுத்தரப் படிப்பு. நலிந்த குடும்பம். அப்பாவுக்கு ஒரு துணிக்கடையில் பணி. அம்மாவுக்கு ஒரு ஸ்வீட் கடையில் வேலை. இரண்டு தங்கைகள். அவர்களின் சிறப்பாக எதிர்காலத்துக்கு மூத்தவன் என்ற வகையில் இவன் தலை மேல் பொறுப்புகள்.
ஆக, அவன் எந்தவிதத்திலும் தனக்கு ஏற்றவனல்ல என்கிற முடிவெடுத்தவளாக யாமினி அவனிடம் பாராமுகத்துடன் இருந்தாள்.
அவனோ அவள் உட்காரும் பெஞ்சில் தினசரி ஒரு ரோஜாப் பூ வைப்பதும், காதல் கவிதைகளாகக் கிறுக்கி உயிரெடுப்பதும், பின்னாலேயே சுற்றுவதுமாய் இருந்தான். காதலின் அடுத்தகட்டம் செல்ல நடிகர் முரளி போல், அத்தனை தயக்கம் அவள். முகம் உயர்த்தி என்ன என்பது போலப் பார்த்தாலே ஓடி வந்துவிடுவாள்.
ஆனால் தயக்கங்கள் ஒழிந்து தைரியம் பெற்று, வேறு வழியே இல்லை என்ற சூழலில் கல்லூரியின் கடைசி தின பொன் நிமிடங்களில் அவளிடம் தன் காதலை ரஞ்சித் வெளிப்படுத்தினபோது, ''ச்சீ.. ச்சீ...'' என்ற அசூயையுடன் அவனை வெறுத்து ஒதுக்கிவிட்டாள் யாமினி.
காயம்பட்ட பட்டாம்பூச்சியாய் பறந்து போனான் அவன்.
அதோடு சரி, அவனைப் பற்றி அத்தனை சிந்தனைகளிலிருந்து அவன் விலகிவிட்டாள். அப்படி ஒருவனை தன் வாழ்நாளில் சந்திக்கவே இல்லை என்பதற்காகவே காலத்தை நகர்த்திவிட்டாள்.
இப்போது என்னடாவென்றால் இந்த பூர்ணிமாவின் திருமணத்துக்கு வரப் போகிறானாமே.
வரட்டுமே!
''ஹா... அவனையெல்லாம் நான் எப்பவோ மறந்துட்டேன்டி. நீ சொல்லித்தான் அவன் ஞாபகமே வருது!'' என்று கருணையின்றி சிரித்தாள் யாமினி.
அவளைப் பரிதாபமாகப் பார்த்தாள் பூர்ணிமா. தன்னை உருகி உருகி காதலித்த ஒருவனை அத்தனை சீக்கிரத்தில் ஒரு பெண்ணால் மறந்துவிட முடியுமா என்ன? என்ன ஒரு அலட்சியம், ஒரு திமிர்.
''அந்த ஜோக்கரும் வர்றானா பூர்ணி? எங்கிருக்கான் அவன். என்ன பண்றான்?''
''கல்யாணத்துக்கு வருவான். நீயே நேரடியாகக் கேட்டுத் தெரிஞ்சுக்கோ?''
''ஹூம்.. நானா..'' என்று சண்டைச் சேவலாக சிலுப்பிக் கொண்டாள்.''
போட்டாகிராஃபர் அழைக்க வருங்காலக் கணவனுடன் ஜோடிப் போஸ் கொடுக்கக் கிளம்பிவிட்டாள் பூர்ணிமா.
ரஞ்சித்தும் திருமணத்துக்கு வரப் போகிறான் என்ற தகவல் யாமினியின் மனதுக்குள் ஒரு ஆர்வக் குறுகுறுப்பை உருவாக்கியிருந்தது.
கல்லூரி முடிந்து நான்கு ஆண்டுகள் ஆகப் போகிறது.
இத்தனை ஆண்டுகள் கழித்து அவனைப் பார்க்கப் போகிறோம். ஆனால் ஒரு தர்மச் சங்கடத்துடன்தான் இந்தச் சந்திப்பு நிகழப் போகிறது! அதுதான் அவளை லேசான குற்ற உணர்ச்சியில் உந்தித் தள்ளியது.
அவனிடம் கடைசியாகப் பேசின வார்த்தைகள் எதுவும் இப்போது மனதின் ஞாபகத்துக்கு இல்லை. அப்படி ஞாபகத்தில் வைத்துகொள்ளும் அளவுக்கு அவள் அதற்கு முக்கியத்துவம் தரவும் இல்லை.
ஆனால் இன்னும் கூட தனது நிராகரிப்பினை, இல்லை என்ற மனநிலையை கொஞ்சம் மென்மையாகதான் வெளிப்படுத்தி இருக்கலாமோ , பாவம் கவிதையெல்லாம் எழுதுகிறவன். பூ மாதிரி இதயம் வாய்த்திருக்கிறவன். எப்படி என் அலட்சியத்தை, நிராகரிப்பின் வலியை தாங்கிக் கொண்டானோ?
'பச். பரவாயில்லை. பரவாயில்லை. அன்றைக்கு நான் இருந்த மனநிலையில் அப்படி நடந்துகொண்டது தான் சரி. அதை இப்போது நினைத்து யோசித்து என்ன பலன்.
அவன் என்னுடன் பேசுவானா என்ன பேசுவான். எப்படிப் பேச முடியும்? திருமணம் செய்திருப்பானா, உன் ஞாபகமாகவே வாழ்ந்திருட்டிருக்கேன் யாமினி என்பானோ, அவனது பெண் குழந்தைக்கு என் பெயர் வைத்திருப்பானா, அன்னைக்கு பைத்தியக்காரத்தனமாக நடந்துக்கிட்டேன் ஸாரி என்பானா உன்னை இன்னும் மறக்க முடியாம நடைபிணமா வாழ்ந்திருட்டிருக்கேன் என அழுவானா தாடி இருக்குமோ?
அவனைத் தான் ஆகாதென்று ஒதுக்கிட்டியே இன்னமும் ஏன் அவன் மேல் இத்தனை ஆர்வம்? அவன் மேல இத்தனை ஆர்வம்? அவன் என்னாகியிருந்தா உனக்கென்ன உள்மனம் அதட்டியது.
கலவை உணர்ச்சியில் கலங்கித் தவித்தாலும் அவனை சந்திக்கும் அந்த நொடிக்காக ஆவலுடன் காத்திருக்கத் துவங்கினான் யாமினி.
மறுநாள் அதிகாலை முகூர்த்தம் என்பதால் நேரத்திலேயே தயாராக வேண்டிய கட்டாயம். சற்று தொலைவிலிருக்கும் அம்மன் கோயிலில் நெருங்கின சொந்தங்கள் மட்டுமே கலந்துகொள்ளும் நிகழ்வாக இருந்தது பூர்ணிமாவின் திருமணம். நல்லபடியாக நடந்தும் முடிந்தது.
திரும்பவும் மண்டபம் வந்தார்கள். தொடர்ச்சியாக வரவேற்பு. அதைத் தொடர்ந்து மதியம் சம்பந்தி விருந்து.
வரவேற்புக்கான புது அலங்காரத்துக்கு தயாராகிக் கொண்டிருந்தாள் பூர்ணிமா. வட இந்தியா பாணியில் மாற்றுப் பக்கம் முந்தானை போட்டு, கொண்டை அணிந்து பார்க்கவே புதுசாக இருந்தாள்.
''என்னடி யாமினி. காலையில் இருந்தே டென்ஷனாக இருக்கே?'' என்று பூர்ணிமா கண்ணடித்து சிரித்தபடியே, ''யாரையோ எதிர்பார்த்து ஏங்குற மாதிரி இருக்கே?'' என்று மீண்டும் கேட்டாள்.
''எல்லாம் இந்த எல்.சங்கீதாவைத்தான் பார்க்கிறேன். வர்றேன்னு சொன்னா. கழுதை இன்னமும் ஆளைக் காணோம்!''
ஒருவேளை இந்த ரஞ்சித் நான் வருவேன் எனத் தெரிந்து, என் முகம் பார்க்கத் தயங்கி வெட்கப்பட்டுக் கொண்டு தன் பயணத்தை ரத்து செய்துவிட்டு வராமலேயே இருந்துவிட்டானோ? இருக்கலாம். இருக்கலாம்.
கண்ணாடி கார்த்தியும், நெட்டை குமரவேலுவும் கூட்டத்தில் தெரிந்தார்கள். அவன் இருக்கிறானா. ம்ஹும்.
வந்தால் வரட்டும், வராவிட்டால் போகட்டும்! யாருக்கு நஷ்டம்.
''டீ யாமினி. சுடு தண்ணீர் வேணும்டி. யாராவது இருக்காங்களா பாரு?''
வெளியே போய்த் தேட யாரையும் காணோம். ''இருடி நானே போய் எடுத்துட்டு வர்றேன்!''
சமையல் அறை போய் விவரம் சொல்லி, காத்திருந்து வாங்கிக் கொண்டு மீண்டும் அறைக்குத் திரும்ப உள்ளே பேச்சு சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.
ரஞ்சித்தின் குரல்? யாமினிக்கு சிலிர்த்தது யெஸ்.. அவன்தான்!
இத்தனை வருஷம் கழித்தும் அந்தக் குரல் உடனே அடையாளமாகத் தெரிகிறதே எப்படி?
பூர்ணிமாவை ஏதோ கிண்டல் செய்து கொண்டிருந்தான். மனசு லேசாக உதற மறைத்தவளாய் உள்ளே நுழைகிறாள். அவனைப் பார்த்து மிக மிக லேசாக ஒரு புன்னகை.
''அட. ஹேய் யாமினி நீயும் வந்திருக்கிறாயா? சூப்பர் ,. சூப்பர்..'' என்றான் உற்சாகத்தோடு.
அவனை ஓரக்கண்ணால் பார்த்தான். உடம்பு
வந்திருக்கிறது. ஃப்ரெஞ்ச் தாடி. ஸ்டைல் கண்ணாடி. அலட்சிய ஹேர்ஸ்டைல் டக் இன் செய்த செக்ட் சட்டை ஜீன்ஸ் ஃபாண்ட் . சோகம் இல்லை. சந்தோஷக் குரல்.
''எப்படி இருக்கே யாமினி. நான் உன்னை இங்கே எதிர்பார்க்கவே இல்லை. எப்போ வந்தே!''
இயல்பான யதார்த்தமான விசாரிப்பு.
''ஏன்டா. உன் மனைவியைக் கூட்டிட்டு வரலை!'' என்று பூரணி கோபித்தாள்.
''நானும் கடுமையா முயற்சி பண்ணினேன் பூரணி, பாங்கில் லீவ் கிடைக்கலை?''
'ஓ. இவன் மனைவி வங்கியில் இருக்கிறாளா?' என்று யாமினி மனசுக்குள் நினைத்துகொண்டாள்.
''ஏன்டா கல்யாணம்தான் ரகசியமாய் பண்ணிக்கிட்டே மனைவி எப்படி இருப்பான்னு போட்டோவாது காண்பிக்கக் கூடாதா? போனில் பொக்கிஷமாய் பாதுகாத்து வைச்சிருப்பாய்?'' என்று நெற்றிச் சுட்டியை சரி செய்படியே கேட்டாள் பூர்ணிமா.
ரஞ்சித் சிரித்தபடியே தனது ஐபோனை எடுத்து போட்டாக்களின் பட்டியல் போய், ''இது நாங்க ஆக்ரா டூர் போனபோது தாஜ்மஹால் முன்னாடி நின்று எடுத்தது..''
வாங்கிப் பார்த்தாள் பூர்ணிமா. ''டேய் அழகா இருக்காங்காடா'' என்று போனை தற்செயலாக யாமினியிடம் நீட்டினாள். அவளும் பார்த்தாள். டைமிங் முடிந்து டிஸ்ப்ளே ஆஃப் ஆக இரண்டு குழந்தைகள் படம் தெரிந்தது ஸ்கீர் சேவரில்..?
''இது யாருடா குட்டீஸ். செம க்யூட்டா இருக்குதுங்க..?''
''ரெண்டும் என் வாரிசுங்கதான். ட்வின்ஸ் தர்சினி, ஹர்சினி..''
''அட்றா சக்கை.. இது வேறயா...?''
''இன்னொன்னு சொல்லவா நம்ப முடியாது. உன்னால என்னோடது லவ் மேரேஜ். ஒதுங்கி, ஒதுங்கிப் போனவனை விரட்டிவிரட்டி காதலிச்சு, கெஞ்சி மிரட்டி அடிச்சி உதைச்சு காதலிக்க வெச்சு, கண்ணை மூடி கண்ணைத் திறந்தா கல்யாணம். உடனே குழந்தைகள். ஆன்லைன் பிஸினஸ் பண்றேன். சோம்பேறி ஜனங்கள் சொர்க்க வாழ்க்கையை தானமாகத் தர்றாங்க..? ஒஹோங்கன்னு வருமானம். எட்டு சென்டில் நீச்சல் குளத்தோட மூணு மாடிகள் கொண்ட பங்களா. ரெண்டு கார்,. வாழ்க்கை செமையாய் போகுது தோழி..''
சந்தோஷமாய் கூவிக் கொண்டே போனவனை உற்றுப் பார்த்தாள் பூர்ணிமா. யாமினியிடம் திரும்பி, ''டீ. அவரு ரெடியாகிட்டாரான்னு கொஞ்சம் பாரேன். ஸ்டேஜ் ஏறணும்..!''
யாமினி தலையாட்டினபடி நகர்ந்து வாசலருகே கடந்த நொடியில் ஓடி சென்று, ரஞ்சித்தின் தலையில் பலமாகக் கொட்டினாள் பூர்ணிமா.
''அறிவுக்கெட்டவனே.. ஏதாவது இருக்காடா உனக்கு. நீ பெருமை பீத்திக்கிற நேரமாடா இது. பாவம் அவ முன்னாடி போய் சே..!''
''நான் என்ன பண்ணினேன். நீ தானே எப்படி இருக்கேன்னு கேட்டே?''
''அதுக்காக ஒரேடியா இப்படியா?'' என்று முறைத்தாள். ''பாவம். யாமினிக்கு இன்னும் கல்யாணமே ஆகலைடா. ஜாதகத்துல ஏதோ கிரகக் கோளாறுன்னு குடும்பமே கோயில், கோயிலாகச் சுத்திட்டிருக்காங்க? மனவேதனையில் இருக்கிறவ முன்னாடி போய் இப்படி பேசுவீயா..? அவ எவ்வளவு சங்கடப்படுவா?''
''ஏய். இதெல்லாம் எனக்கு எப்படிப்பா தெரியும். நான் யதார்த்தமாகத் தான் பேசுனேன்..!''
''போதும். கொஞ்சம் அடக்கி வாசி. அவ இப்போ வந்துடுவா மறுபடியும் ஆரம்பிச்சுடாதே!''
''பாரு. வயசுக்கோளாறுல ஆர்வத்துல அவகிட்ட ஏதோதோ கோமாளித்தனம் பண்ணினேன்தான். ஆனா காலேஜில் இருந்து வெளியே அடுத்த நொடியே அவளை மறந்துட்டேன். இப்ப சொன்னதிலே வேற தப்பான நோக்கம் இல்லை. சத்தியமா இப்ப அவனை சந்திக்கிற முந்தின நொடி வரை அவ ஞாபகமே என்கிட்டே இல்லை. அதுதான் உண்மை. ஆனா நீ என்னடான்னா...?''
அப்போதுதான் அங்கே வந்த யாமினி,
கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துகொண்டு வேகமாய் அங்கிருந்து நகர்கிறாள்.
காலம் யாரை எப்போது எப்படி வீழ்த்தும், எந்த அளவு உயர்த்தும் என்கிற சத்திய உண்மை. மெல்ல மெல்ல உறைக்கத் துவங்குகிறது அவளுக்கு..!
 

ADVERTISEMENT
ADVERTISEMENT