தினமணி கதிர்

எல்லாம் ஓ.டி.டி. செயல்

டெல்டா அசோக்


கரோனாவுக்கு பின்னர் திரைத்துறை மிகப் பெரிய சரிவைச் சந்தித்திருக்கிறது. ஆனால், மக்களின் பொழுதுபோக்கு நுகர்வு அதிகரித்திருக்கிறது. காரணம் ஒ.டி.டி. என அழைக்கப்படும் இல்லத்திரை. கிட்டத்தட்ட 100 ஆண்டுகளாகத் திரைத்துறை இயங்கி வந்த முறையையே முற்றிலுமாக மாற்றி அமைத்திருக்கிறது கரோனாவால் அறிமுகமான பொது முடக்கக் காலம். இந்த ஆண்டை மட்டும் கணக்கில் எடுப்போம்.

நாம் ஓ.டி.டி.யில் பார்த்த படங்கள் என்னென்ன? இதில் எத்தனை நாம் திரையரங்குகளுக்கு விரும்பிச் சென்று பார்க்கும் நடிகர்களின் படங்கள், எத்தனை வேற்று மொழிப்படங்கள், மாஸ் ஹீரோக்களின் படங்கள் ஓ.டி.டி.யில் பார்க்கும்போது, எப்படி இருக்கிறது, மாஸ் ஹீரோக்களின் பில்ட் அப் காட்சிகளை ஓ.டி.டி.யில் பார்க்கும்போது எப்படி இருக்கிறது, இடையில் வரும் பாடல்களை ரசிக்கிறோமா, ஓ.டி.டி.யில் படம் பார்க்கும்போது நம்முடைய தேர்வு கதையை அடிப்படையாகக் கொண்டிருக்கிறதா? அல்லது நடிகர்களை அடிப்படையாகக் கொண்டிருக்கிறதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களை நாம் பட்டியல் இட்டாலே சினிமா என்னவாக மாறிக் கொண்டிருக்கிறது, இனி என்னவாக மாறும் என்பதை ஓரளவுக்குப் புரிந்துகொள்ளலாம்.

சினிமா வியாபாரம் என்பது தற்போது மூன்று விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு நடக்கிறது. திரையரங்கு வியாபாரம், டி.வி. வியாபாரம், டிஜிட்டல் வியாபாரம்.... இந்த மூன்று வியாபாரங்களுமே அந்தப் படத்தில் நடித்திருக்கும் ஹீரோவின் மார்க்கெட் வேல்யூவை பொருத்ததே. ஒரு படத்தின் 60 சதவிகித வருமானம் திரையரங்கு வியாபாரம் மூலம் மட்டுமே நடக்கிறது.

மீதம் 40 சதவீதம்தான் டி.வி., டிஜிட்டல் மற்றும் பிற மொழி உரிமங்கள் மூலம் கிடைக்கிறது. ஹீரோவைப் பொருத்துத்தான் அந்தப் படத்தின் முதலீடும், கமர்ஷியல் வெற்றியும் இருக்கிறது. இந்திய சினிமாக்கள் தொடர்ந்து கதாநாயகனை மையப்படுத்தியே எடுக்கப்படுவதற்கான அடிப்படைக் காரணம் இதுதான்.

இதனால் ஒரு படத்தில் ஹீரோவின் சம்பளம்தான் உச்சம். அந்த ஹீரோவை ஒட்டித்தான் கதை, நாயகியின் தேர்வு, இயக்குநர்.. என எல்லாமே இருக்கும். தயாரிப்பாளர்கள், நடிகர்களைத் தேர்வு செய்த காலம் போய், நடிகர்கள்தான் இப்போது தயாரிப்பாளர்களைத் தேர்வு செய்கின்றனர்.

தயாரிப்பாளர் என்பவர் ஹீரோக்கள் சொல்வதைக் கேட்டு, அவர்களுக்கேற்றபடி வளைந்து கொடுத்தால் மட்டுமே அந்தப் படம் திட்டமிட்டபடி வெளியாகும். இல்லையென்றால் அந்தப் படம் பாதியில் கைவிடப்படும் அல்லது வேறு வகையிலான இழப்புகளைச் சந்திக்கும். அப்படி ஹீரோவை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் இந்திய திரைத்துறையை அப்படியே தலைகீழாக மாற்றிப்போட்டிருக்கிறது கரோனா காலத்தால் ஏற்பட்டிருக்கும் ஓ.டி.டி. வளர்ச்சி.

இனி ஒரு ரசிகனை சினிமா பார்க்க வைப்பதற்கு போஸ்டர்கள், கட் அவுட்கள், பேனர்கள் எல்லாம் தேவையில்லை. ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்.. என சமூக வலைதளங்களில் ஒரு படத்தைப் பற்றி ஒரு பயனர் ஷேர் செய்யும் வீடியோ, புகைப்படங்களே ஒரு படத்துக்கான பப்ளிசிட்டியாக இருக்கின்றன. மலையாள திரையுலகம் இன்ஸ்டாகிராமில் ஒரு படத்தை ப்ரமோட் செய்வதற்கென்றே தனி ப்ரமோஷன் டீம்களை உருவாக்கியிருக்கின்றன.

'சினிமா பண்டி' என்கிற ஒரு தெலுங்கு படம் நெட்ஃபிளிக்ஸில் வெளியானது. பெரிய ஹீரோவோ, ஹீரோயினோ, இயக்குநரோ என எதுவுமே இல்லை. ஆனால், இந்தப்படம்தான் சமூக வலைதளங்களில் ஒரு வாரம் பேசுபொருளாக இருந்தது. இந்தப்படத்தைப் பற்றிய புகைப்படங்கள், மீம்ஸ்கள், ஹேஷ்டேக்குகள் பகிரப்பட்டன. இதனால், இந்தப் படத்தைப் பார்த்தவர்களின் எண்ணிக்கைக் கூடியது. படம் ஓ.டி.டி.யில் மிகப்பெரிய ஹிட் அடித்தது.

திரையரங்கில் இந்தப் படம் வெளியாகியிருந்தால், இந்தக் கதாநாயகன், நாயகி, இயக்குநருக்கு இப்படி ஒரு விளம்பரமும், புகழும் நிச்சயம் கிடைத்திருக்காது. ஆனால், ஓ.டி.டி. அதனை சாத்தியமாக்கியிருக்கிறது. முன்பெல்லாம் ஒரு படம் பார்த்தால் நடிகர்களின் நடிப்பு, இயக்குநரின் திறமையைத் தாண்டி பல விஷயங்கள் ஒரு சாமானிய ரசிகனால் பேசப்படாது. ஆனால், ஓ.டி.டி. ஒவ்வொரு படத்தையும் மிக நுணுக்கமாக ஆராயும் திறனை ஒவ்வொரு சாதாரண ரசிகனுக்குள்ளும் கொண்டுவந்திருக்கிறது.

படத்தின் மேக்கிங் பற்றி, கேமரா கோணங்கள் பற்றி, எடிட்டிங் பற்றி, சவுண்ட் மிக்ஸிங் பற்றி.. எனப் பல விஷயங்களையும் அலசி, அதில் ஒரு சிறு குறையிருந்தாலும் அந்தப்படத்தைத் தவிர்க்கும் பழக்கத்தை ஓ.டி.டி. உருவாக்கியிருக்கிறது. ஒரு ஹீரோ இதுவரை தன்னுடைய தனிப்பட்ட புகழையும், பெருமையையும் பறைசாற்றிக் கொள்ள சினிமாவைப் பயன்படுத்தினார்.

தனிப்பட்ட ஒரு நடிகரின் நம்பிக்கைகள், அவரது அரசியல் கருத்துகள், போட்டி நடிகர்களுக்கு அவர் சொல்லும் பஞ்ச் வசனங்கள் என படம் முழுக்க அந்த ஹீரோவை சார்ந்தே இருக்கும். ஆனால், ஓ.டி.டி.யில் ஒரு நடிகர் தன்னை முன்னிலைப்படுத்தி சினிமாவை உருவாக்கிவிட முடியாது. அப்படி எடுக்கப்படும் படங்கள் இடது கையால் புறந்தள்ளப்படும் என்பதற்கு பல்வேறு உதாரணங்கள் இருக்கின்றன.

திரையரங்கில் வெளியாகி அடுத்த 15 நாள்களுக்குள் ஓ.டி.டி.க்கு வந்த விஜயின் 'மாஸ்டர்' ஓ.டி.டி.யில் எதிர்பார்த்த அளவு கொண்டாடப்படவில்லை. இந்தப் படம் குறித்த கருத்துகளோ, விமர்சனங்களோ, மீம்ஸ்களோ எதுவும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகவில்லை. ஆனால், திரையரங்களில் வெளியாகி ஒரு மாதம் கழித்து ஓ.டி.டி.க்கு வந்த 'கர்ணன்' படத்தைப் பற்றிய விமர்சனங்கள், கருத்துகள், அதுபற்றிய விவாதங்கள் எல்லாம் திரையரங்குகளில் ரிலீஸான நேரத்தைக் காட்டிலும், ஓடிடியில் ரிலீஸானபோது, அதிகம் இருந்தது. மொழி எல்லைகளைக் கடந்து இந்தப் படம் கொண்டாடப்பட்டது, விமர்சிக்கப்பட்டது. நாயகனுக்கு ஆரத்தி எடுப்பது, ஆளுயர மாலை போடுவது, பால் அபிஷேகம் செய்வது என்பதெல்லாம் இனி இருப்பதற்கான சாத்தியங்கள் குறைவு. இனி படத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கப்பவது கன்டென்ட்டும், மேக்கிங்கும், நடிகர்களின் நடிப்பும் மட்டுமே!

நாடகத்தில் இருந்து சினிமா உருவானது. அப்படி சினிமாவின் அடுத்தகட்டமாக இனி வெப் சீரிஸ்கள் இருக்கப்போகிறது. பார்ட் 1, பார்ட்2, ப்ரீக்வெல், சீக்வெல் சினிமாக்கள் இனி இருக்காது.

'மிர்ஸாபுர்', 'தி ஃபேமிலி மேன்' போன்று வெப்சீரிஸ்கள் இனி தமிழிலும் வரிசைக்கட்டி வரும் என எதிர்பார்க்கலாம். 'வடசென்னை' படத்தை முழுவதுமாக எடுத்து முடித்தபோது கிட்டத்தட்ட 5 மணி நேர கன்டென்ட் வெற்றிமாறனிடம் இருந்ததாகச் சொல்வார்கள்.

திரையரங்குகள் வியாபாரத்துக்காக அது இரண்டே முக்கால் மணி நேர சினிமாவாக சுருக்கப்பட்டது. இப்போதைய லாக்டௌன் சூழலில் 'வட சென்னை' எடுத்து முடிக்கப்பட்டிருந்தால் அது தமிழின் மிக முக்கியமான வெப் சீரிஸாகக் கொண்டாடப்பட்டிருக்கும்.அமேஸான் நிறுவனம் தனது ஓ.டி.டி. தளத்தை 2006ஆம் ஆண்டே தொடங்கிவிட்டது. அமேஸான் ப்ரைம் இந்தியாவில் 2011ஆம் ஆண்டில் இருந்தே இருக்கிறது. நெட்ஃபிளிக்ஸ் 2016 முதல் இந்தியாவில் பயன்பாட்டில் இருக்கிறது. ஹாட்ஸ்டார் 2015ஆம் ஆண்டில் இருந்து இருக்கிறது. ஆனால், தரமான வெப்சீரிஸ்கள் இந்தத் தளங்களில் வெளியாக ஆரம்பித்தப் பிறகுதான் இந்திய ரசிகர்கள் இதன்மீது கவனம் செலுத்த ஆரம்பித்தார்கள். கடந்த கரோனா பொது முடக்கத்துக்குப் பின், ஓ.டி.டி. தளங்கள் மீது சினிமா ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் 72% வாக்குப் பதிவு: மாவட்ட வாரியாக முழு விவரம்

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

SCROLL FOR NEXT