தினமணி கதிர்

நடமாடும் நூலகம்!

தி. நந்​த​கு​மார்

நூலகங்களைத் தேடி வாசகர்கள் சென்று படித்த நிலை மாறிவிட்டது. வாசகர்களைத் தேடி நடமாடும் நூலகம் வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடங்கிய சில மாதங்களிலேயே நூற்றுக்கணக்கான புதிய வாசகர்கள் கிடைத்து இருக்கின்றனர்.

இதுகுறித்து அந்த மாவட்டத்தில் கோட்டாட்சியராகப் பணிபுரியும் எம். ஷேக் மன்சூரிடம் பேசியபோது:

2023ஆம் ஆண்டின் தொடக்கத்தில், ராமநாதபுரம் மாவட்ட மக்களிடையே கற்றல் எண்ணத்தை அதிகப்படுத்துவதற்காக ஒரு நடமாடும் நூலகத்தை உருவாக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தனது எண்ணத்தை தெரிவித்தார். இதற்காக, கீழக்கரையில் உள்ள முகம்மது சதக் பொறியியல் கல்லூரி நிர்வாகத்தினர் பேருந்து ஒன்றை நடமாடும் நூலகமாக மாற்றுவதற்குத் தேவையான வடிவமைப்பையும் வெளிப்புறத் தோற்றத்தையும் உருவாக்கி அளித்தனர். இதன் பின்னர், மேலும் சிலர் வடிவமைப்புக்கு உதவினர்.

பிப்ரவரியில் நடைபெற்ற ராமநாதபுரம் முகவை சங்கமம் புத்தகத் திருவிழாவுக்கு முன்னதாக தயார் செய்ய வேண்டும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன், ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் உத்தரவிட்டனர்.

அன்று தொடங்கி பல அரசு அலுவலர்களின் உதவியோடும், தனியார் கல்வி நிலையங்கள், தனியார் நிறுவனத்தினரின் உதவியோடும் நடமாடும் நூலகம் உருவாக்கப்பட்டது.

சுமார் 2 ஆயிரத்துக்கும் மேலான நூல்கள் மாவட்ட நூலக அலுவலரின் ஒத்துழைப்போடு நடமாடும் நூலகமாகச் செயல்படும் பேருந்தில் அடுக்கி வைத்தோம். புத்தகத் திருவிழாவில், செயல்பாட்டுக்கும் வந்தது. மாணவர்கள் ஆர்வத்தோடு நடமாடும் நூலகத்தை கண்டு மகிழ்ந்தனர். நடமாடும் நூலகத்துக்கு ஒரு ஓட்டுநரை போக்குவரத்துத் துறை சார்பிலும், நூலகர் பணியை நூலகத் துறை சார்பிலும் பெற்றோம்.

கடந்த 2 மாதங்களில் மாவட்டத்தின் பொது இடங்களில் தினமும் சென்று, ஒரு நாள் முழுவதும் முகாமிடுகிறது. அங்கேயே நூல்களை வாங்கிப் படிக்கலாம். எடுத்துச் செல்ல அனுமதியில்லை. நாள்தோறும் 150 பேர் வரை படிக்கின்றனர்.

போட்டித் தேர்வர்களுக்குப் பயன்படும் நூல்கள், மாணவர்களின் அறிவுச் சிந்தனையையும் படைப்பாற்றலையும் வளர்க்கும் சிறார் நூல்கள், முன்னேற துடிக்கும் இளைஞர்களுக்கான வழிகாட்டி நூல்கள், வரலாற்று நூல்கள், பெண்களின் சுய முன்னேற்றத்தை வளர்க்கும் தன்னம்பிக்கை நூல்கள், கவிதை தொகுப்புகள், பருவ இதழ்கள் என நடமாடும் நூலகம் இயங்கி வருகிறது.

நேரம் முடித்து, அந்தந்த ஊர்களில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நடமாடும் நூலகப் பேருந்தை இரவு நேரத்தில் அதன் ஊழியர்கள் நிறுத்திவிடுவர். நாள்தோறும் 10 நாளிதழ்கள் வாங்கப்படுகின்றன.

தற்போது புதியதாக ஆட்சியராகப் பொறுப்பேற்றிருக்கும் பி.விஷ்ணுசந்திரனும் நடமாடும் நூலகத்துக்குத் தேவையான உதவிகளைச் செய்வதாக உறுதியளித்துள்ளார்.
நூலகத்துக்கு வந்து செல்வோர் விவரங்களைப் பதிவு செய்ய நோட்டுப் புத்தகம், மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்குவதற்கான நோட்டுப் புத்தகத்தை வைத்துள்ளோம்.
இனி நடமாடும் நூலகத்தில் பதிவு செய்தோரின் அலைபேசி எண்களைச் சேகரித்து, வாட்ஸ் ஆஃப் குழுவைத் சதொடங்கி, கற்றல் ஆர்வத்தை மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்.
இந்த கல்வி ஆண்டு தொடங்கியவுடன் அனைத்து பள்ளிகளுக்கும் இந்த நடமாட நூலகம் செல்வதற்கான திட்டமிடல் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனிச்சப் பூவோ..!

சென்னை சென்ட்ரலில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்: முழு தகவல் வெளியானது!

‘இனி விளம்பரங்கள் இல்லை, படங்கள் மட்டுமே’ : பிவிஆரின் புதிய திட்டம் பலனளிக்குமா?

ஒருநொடி படத்தின் டீசர்

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

SCROLL FOR NEXT