தினமணி கதிர்

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 125


சென்னை விமான நிலையம் முதல் வாக்குச்சாவடி வரை, பரபரப்பு உச்சகட்டத்தில் இருந்தது. கட்சியிலிருந்து எம்.ஜி.ஆர். பிரிந்து சென்ற பிறகு, திமுக பெரும்பாலும் திரைப்பட நடிகர்களை முன்னிலைப்படுத்தித் தனது தேர்தல் வியூகத்தை வகுத்ததே இல்லை. அப்படியே டி. ராஜேந்தரைப் போன்ற சில திரைப்படப் பிரபலங்கள் திமுகவில் இணைந்தபோதுகூட அவர்களுக்கு உரிய முக்கியத்துவம் தரப்படாததால், கட்சியிலிருந்து விலகிவிட்டனர். 1996 தேர்தல் அப்படியல்ல.

திமுக தலைமை விரும்பியதோ என்னவோ, திமுக தொண்டர்களின் பிரசாரங்களில் கட்சித் தலைமையைவிட ரஜினிகாந்துக்குத்தான் முக்கியத்துவம் காணப்பட்டது. பார்க்குமிடமெல்லாம், "சூப்பர் ஸ்டார்' ரஜினியின் ஆதரவு பெற்ற "உதயசூரியன்' சின்னத்தில் வாக்களியுங்கள் என்கிற போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. தமாகா வேட்பாளர்களும் சரி, திமுக வேட்பாளர்களும் சரி தங்களது பிரசாரங்களில் ரஜினிகாந்தின் பெயரையும் படத்தையும் முன்னிலைப்படுத்தி இருந்தனர்.

பிரசாரத்துக்கு நேரடியாகப் போகாவிட்டாலும் திமுக - தமாகா கூட்டணிக்கு ஆதரவாக ரஜினிகாந்த் நடித்த விளம்பரப் படம் தொலைக்காட்சி மூலம் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு வந்தது. சொல்லப்போனால், 1996 சட்டப்பேரவைத் தேர்தலின் நாயகர் ரஜினிகாந்த்தான் என்று கூற வேண்டும். அவரை முன்னிலைப்படுத்தி, ஜெயலலிதாவை வீழ்த்தியதில் "துக்ளக்' ஆசிரியர் சோ. 
ராமசாமியின் பங்களிப்பும் சாதாரணமானதல்ல.

வாக்குப் பதிவு முடிந்த அன்று மாலையில், எழும்பூர் காசா மேஜர் சாலையில் உள்ள நண்பர் பி.ஆர். சேதுபிரகாசத்தை சந்திக்கச் சென்றிருந்தேன். அவரை சந்தித்து நீண்ட நாள் இடைவெளியாகி இருந்ததுதான் காரணம். அங்கே அவருடன் இருந்தவர்களில் ஒருவர் சிங்கப்பூரிலிருந்து வந்திருந்தவர். நடராசன் - சசிகலா தம்பதியருக்கும், அவர்கள் குடும்பத்தினருக்கும் மிகவும் நெருக்கமானவர் என்று சேதுபிரகாசம் அறிமுகப்படுத்தினார்.

பெசன்ட் நகரிலுள்ள "புதிய பார்வை' ஆசிரியர் ம. நடராசனை சந்திக்க அவர்கள் இருவரும் கிளம்பியபோது நானும் அவர்களுடன் இணைந்து கொண்டேன். வாக்குப் பதிவு நிறைவடைந்துவிட்ட நிலையில், தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது குறித்து ம. நடராசன் என்ன கூறுகிறார் என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆவல் எனக்கு.

ம. நடராசன் குறித்த ஒரு முக்கியமான தகவல் விட்டுப்போய்விட்டது. முதல்வர் ஜெயலலிதா - ஆளுநர் சென்னா ரெட்டி சமரசத்துக்கு முன்னர் நடந்தது இது. இந்தத் தகவலை என்னிடம் தெரிவித்தவர் நடராசனல்ல; ஆளுநர் சென்னா ரெட்டி.

திருப்பதியில் உள்ள காங்கிரஸ் பிரமுகர் ஒருவரின் பண்ணை வீட்டிற்கு ம. நடராசனை வரவழைத்து சந்தித்தார் ஆளுநர் சென்னா ரெட்டி. ஜெயலலிதா அரசின் மீது பரவலாகக் காணப்படும் விமர்சனங்களையும், அதிருப்தியையும் சுட்டிக்காட்டி ம. நடராசனுக்கு விளக்கினார் அவர். அதிலிருந்து முதல்வர் ஜெயலலிதாவைக் காப்பாற்ற தான் ஒரு வழி வைத்திருப்பதாகவும், நடராசன் ஏற்றுக்கொண்டால் அது சாத்தியமாகும் என்றும் அவரிடம் விளக்கினார் அவர்.

"காங்கிரஸூக்கு இப்போது 60 எம்எல்ஏ-க்கள் இருக்கிறார்கள். அதிமுகவுக்கு 164. உங்களால் அதிமுகவிலிருந்து 60 எம்எல்ஏ-க்களின் ஆதரவைத் திரட்ட முடியுமானால், காங்கிரஸ் ஆதரவுடன் உங்களை முதல்வராக்குகிறேன். கட்சிப் பிளவு ஜெயலலிதாவுக்கு அனுதாபமாக மாறி அவர் வெற்றி பெறக்கூடும். இல்லையென்றால், காங்கிரஸ் - அதிருப்தி அதிமுக கூட்டணி ஆட்சி வெற்றி பெறும். ஜெயலலிதா இல்லாமலோ, நீங்கள் இல்லாமலோ அதிமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை அமைக்க முடியும்'' என்பதுதான் சென்னா ரெட்டி, நடராசனிடம் தெரிவித்த ஃபார்முலா.

காங்கிரஸ் தலைமையின் அறிவுறுத்தலின் பேரில்தான் இந்த ஃபார்முலாவை நடராசனிடம் தெரிவித்ததாகவும், ஆளுநர் என்னிடம் தெரிவித்தார். ஆட்சியை திமுக கைப்பற்றுவதை தடுப்பது மட்டுமல்ல இந்தத் திட்டத்தின் நோக்கம். எப்படியாவது, காங்கிரûஸ ஆட்சியில் அமர்த்துவது என்பதுதான் குறிக்கோள். அதன் மூலம்தான் காங்கிரஸ் தமிழ்நாட்டில் மீண்டும் வேரூன்ற முடியும் என்று தான் கருதியதாகப் பதவி ஓய்வுக்குப் பிறகு என்னிடம் தெரிவித்தார் சென்னா ரெட்டி.

""அதற்கு ம. நடராசன் ஏன் ஒப்புக்கொள்ளவில்லை?'' என்று கேட்டபோது, அவர் சொன்ன பதில் இது - ""நடராசன் அதற்கு சம்மதிக்கவில்லை. மிகுந்த சிரமங்களுக்கும், போராட்டங்களுக்கும் இடையில் ஜெயலலிதாவுக்கு நான் துணை நின்றிருக்கிறேன். காங்கிரஸூடன் அமைந்த கூட்டணியாகட்டும், இரட்டை இலை சின்னத்தைப் பெற்றதிலாகட்டும் எனது பங்களிப்பை யாரும் மறுத்துவிட முடியாது. நான் துணை நின்று உருவாக்கிய கட்சிக்கும், என்னை நம்பி அரசியலுக்கு வந்த ஜெயலலிதாவுக்கும் நான் துரோகம் செய்யத் தயாராக இல்லை.''

இது குறித்துப் பலமுறை நான் ம. நடராசனிடம் கேட்டபோதெல்லாம், அவர் பதில் சொல்லாமல் சிரித்து மழுப்பிவிட்டார்.

பெசன்ட் நகர் கலாக்ஷேத்ரா காலனியிலுள்ள அவரது வீட்டின் மொட்டை மாடியில், கடற்கரைக் காற்று வாங்கியபடி ம. நடராசன் அமர்ந்திருந்தார். அவரைச் சுற்றி நம்பிக்கைக்குரிய சில கட்சிக்காரர்களும், சொந்தக்காரர்களும் இருந்தனர். ம. நடராசன் வீட்டு உபசரிப்பு என்பது எம்.ஜி.ஆர். பாணியிலானது. அங்கே சென்றவர்கள் சாப்பிட்டாக வேண்டும். சாப்பிட்டபடியே பேசிக் கொண்டிருந்தோம்.

"தேர்தல் முடிவுகள் அதிமுகவுக்கு சாதகமாக இருக்காது என்பதுதான் பரவலாகக் கூறப்படுகிறது. அதிமுக வெற்றி பெறும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?''

""அதிமுக வெற்றி பெறுமோ இல்லையோ, ஜெயலலிதா வெற்றி பெறுவாரோ இல்லையோ எனக்குத் தெரியாது. ஆனால், எம்ஜிஆர் தோற்கமாட்டார். எம்ஜிஆர் வாக்குகளை வீழ்த்தும் சக்தி கலைஞருக்கும் கிடையாது, ரஜினிகாந்துக்கும் கிடையாது!''

""கூட்டணி ஆட்சிகூட அமையாது என்று நினைக்கிறீர்களா?''

""அதற்குக்கூட வாய்ப்பில்லை என்பதுதான், பல்வேறு பகுதிகளிலிருந்து எனக்கு கட்சிக்காரர்கள் தரும் தகவல். ஆட்சி மாற்றம் ஏற்படுவது என்றால், ஒரேயடியாகப் படுதோல்வியாகத்தான் இருக்க முடியும். தமிழக மக்கள் அதில் தெளிவாக இருப்பார்கள். குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்பதுதான் எனது கருத்து.''

ம. நடராசனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட நான் தயாராக இருக்கவில்லை. தமிழகம் குறித்து மட்டுமல்லாமல், தேசிய அளவிலும் தேர்தல் முடிவுகள் குறித்தும் பேசிக் கொண்டிருந்தோம். அவர் கணித்தது போலவே, பாஜக தலைமையில் ஆட்சி அமைந்தது. ஆனால், 13 நாள்களுக்கு மேல் அது நிலைக்கவில்லை. பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சியில் அதிமுக பங்கு பெறும் என்று சொன்னார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 1998-இல்தான் அது நடந்தது.

வாக்குப் பதிவு முடிந்த நிலையில், தமிழகம் அலைகளற்ற கடல்போல நிசப்தமாக இருந்தது. முடிவுகள் வெளியாவதற்கு முன்னாலேயே, தமிழக அரசின் முக்கியமான அதிகாரிகள் பலர் கோபாலபுரம் சென்று திமுக தலைவர் கருணாநிதியை ரகசியமாக சந்திக்கத் தொடங்கிவிட்டனர். வாரன் சாலையில் உள்ள மூப்பனார் வீட்டில் அவரை சந்திக்க நான் சென்றபோது, இது குறித்து நான் தெரிவித்தேன். அவர் சிரித்துக் கொண்டார்.

மூப்பனாருடன் இருந்த முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் எம். பழனியாண்டி என்னைப் பார்த்து, ""கலைஞர் முதல்வர், நம்ம தலைவர் பிரதமர்'' என்பதுதான் மக்களின் விருப்பம் என்றார். அதற்கும் மூப்பனார் சிரித்தாரே தவிர பதிலொன்றும் சொல்லவில்லை.

""லோக்சபாவில் காங்கிரஸ் எத்தனை சீட் ஜெயிக்கும்னு தில்லி பத்திரிகை நண்பர்கள் கூறுகிறார்கள்?'' - மூப்பனார் கேட்டார்.

"200 தாண்டினால் அதிகம் என்று கூறுகிறார்கள்.''

""அது வந்தால்போதும், காங்கிரஸ் ஆட்சி அமைந்துவிடும். அந்த 200 பாஜகவுக்குப் போய்விடக் கூடாது. அவர்கள் ஆட்சி அமைத்துவிடுவார்கள்.''

""அவர்களுடன் சேர மற்ற கட்சிகள் தயாராகுமா? நீங்களே தயாராக இருப்பீர்களா?''

அதற்கும் மூப்பனார் சிரித்தார். நானும் சிரித்துக்கொண்டே அவரிடமிருந்து விடைபெற்றேன். 

மே மாதம் 9-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே தமிழகத்தில் திமுக - தமாகா கூட்டணி, ஒரு சில தொகுதிகளைத் தவிர ஏனைய தொகுதிகளில் முன்னணியில் இருந்தன. பர்கூர் தொகுதியிலேயே முதல்வர் ஜெயலலிதா 8,366 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.

மே மாதம் 12-ஆம் தேதி நான்காவது முறையாக திமுக தலைவர் கருணாநிதி முதல்வராகப் பதவி ஏற்றார். அவரது தலைமையில் அமைந்த 26 அமைச்சர்கள் கொண்ட அமைச்சரவை ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்றுக்கொண்டது. 

பதவியேற்பு விழாவிற்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தமாகா தலைவர் ஜி.கே. மூப்பனார், ஆர்.எம். வீரப்பன், செ. மாதவன், சத்தியவாணி முத்து உள்ளிட்ட பலரும் வந்திருந்தனர். நடிகர்கள் ஜெய்சங்கர், நாகேஷ், சரத்குமார், விஜயகாந்த் ஆகியோரும்.

பதவியேற்பு முடிந்ததும், அடுத்த நாளே தில்லி புறப்படுகிறார் முதல்வர் கருணாநிதி என்கிற தகவல் கிடைத்தது. மக்களவையில் காங்கிரஸ் எதிர்பார்த்த அளவுகூட இடங்களைப் பெறாத நிலையில், பாஜக ஆட்சி அமைக்குமா, காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சியா அல்லது காங்கிரஸ் ஆதரவுடன் மூன்றாவது அணி ஆட்சியா என்கிற கேள்விகள் எழுந்தன. முதல்வர் தில்லி கிளம்புவதற்குள் நான் சென்றுவிட வேண்டும் என்கிற அவசரம் எனக்கு.

ஏற்கெனவே கடுமையான மே மாத வெயில் தில்லியில். போதாக்குறைக்கு அரசியலும் அந்த வெப்பத்தை மேலும் அதிகரித்திருந்தது. 161 இடங்களுடன் பாஜக அதிக இடங்கள் வென்ற கட்சியாகவும், 140 இடங்களுடன் காங்கிரஸ் இரண்டாவது பெரிய கட்சியாகவும் வெற்றி பெற்றிருந்தன.

தில்லி சென்றிறங்கியதும் நான் நேராகச் சென்று சந்தித்தது ஐ.கே. குஜ்ராலை. நான் தொலைபேசியில் அழைத்ததும் உடனடியாக வரச்சொன்னார் அவர். அப்போது அவர் புராணா கிலா சாலையில் குடியிருந்தார். 

""ஆட்சியில் இருக்கும் கட்சி தோல்வியடைந்தால், மீண்டும் கூட்டணிக்குத் தலைமையேற்று ஆட்சி அமைப்பது தார்மீகமாகத் தவறு. ஜனதா தளம், இடதுசாரிகள், மாநிலக் கட்சிகளுடன் இணைந்து வேறு கட்சிகள் தலைமையில் ஆட்சி அமைக்கலாம். அல்லது, காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரவளிக்கலாம். அதுதான் முறை'' என்று விளக்கினார் அவர்.

""எல்லோருடைய எதிர்பார்ப்பும் கருணாநிதியும், மூப்பனாரும் என்ன சொல்கிறார்கள் என்பதில்தான் இருக்கிறது. நாளை அவர்கள் வந்தால்தான் அடுத்த கட்ட நகர்வு ஏற்படும்'' என்று தெரிவித்தார் குஜ்ரால்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கட்சியும் மத்தியில் மூன்றாவது அணி அமைக்கும் ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு தருவது என்று முடிவெடுத்திருந்தன. அதுபற்றி ஐ.கே. குஜ்ராலுடன் கேட்டபோது, ""இடதுசாரிகள் வெளியில் இருந்து ஆதரவு தரக்கூடாது. ஆட்சியில் பங்கேற்க வேண்டும். என்னிடம் கேட்டால், அந்தக் கூட்டணிக்கு ஜோதிபாசு தலைமையேற்க வேண்டும்!'' என்றார்.

மூன்றாவது அணித் தலைவர்கள் கூட்டத்துக்கு அவர் கிளம்பிக் கொண்டிருந்தார், நானும் விடைபெற்றேன். அந்தக் கூட்டத்தில் முக்கியமான எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர் கலந்து கொள்ள இருந்தனர் என்பதால் நானும் அங்கே புறப்பட்டேன்.

பாஜகவுக்கு ஆதரவில்லை என்பதில் காங்கிரஸூம், பிரதமர் நரசிம்ம ராவும் தெளிவாக இருந்தனர். கூட்டணிக்குத் தலைமையேற்க விரும்பவில்லை என்று வி.பி. சிங் தெரிவித்துவிட்டார். ஜோதிபாசு என்ன சொல்வார் என்று மாநிலக் கட்சிகள் எதிர்பார்த்துக் காத்திருந்தன. அதிக இடங்களைப் பெற்ற கட்சி என்கிற முறையில் பாஜகவை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் வாஜ்பாய் குடியரசுத் தலைவரிடம் கோரியிருந்தார்.

நான் அங்கே சென்றபோது, மூன்றாவது அணித் தலைவர்களின் கூட்டம் மூப்பனாரும், கருணாநிதியும் இல்லாமல் நடந்து கொண்டிருந்தது.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

வாக்களித்த அரசியல் பிரபலங்கள் - புகைப்படங்கள்

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

SCROLL FOR NEXT