தினமணி கதிர்

பேல் பூரி

DIN

கண்டது

(ஊத்தங்கரை பேருந்து நிலையத்துக்கு வெளியே நின்று கொண்டிருந்த வாடகை கார் ஒன்றில்)

பணிந்து வாழ் பயந்து வாழாதே

-ஜெயலட்சுமி,
கல்லாவி.

(அம்பாசமுத்திரம் புத்தகக் கடையில் கண்ட வாசகம்)

வெற்றிக் கனியைப் பறிக்க, பணியில் அர்ப்பணிப்பு நிறைந்த உழைப்பு தேவை.

-ஆ. மாடக்கண்ணு,
பாப்பான்குளம்.

(கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சில ஊர்களின் பெயர்கள்)

எளங்கடை, இரவுபுதூர்கடை, தெருவுக்கடை,
அத்திக்கடை.

-ஆர்.கே.லிங்கேசன்,
மேலகிருஷ்ணன்புதூர்.

கேட்டது


(மயிலாடுதுறை காவேரி நகரில் இருவர்..)

""மாசா மாசம் அங்காடியில போய் எல்லா சாமான்களையும் நான்தான் வாங்கிட்டு வருவேன். இந்த மாசம் ஸ்மார்ட் கார்டையே காணோம்.''
""பொங்கலுக்கு கொடுக்கிற ஆயிரத்தை நீ வாங்கிப்பேன்னு உன் மனைவி ஒளிச்சி வைச்சிட்டிட்டு இருப்பாங்க..?''

-சங்கீத சரவணன்,
மயிலாடுதுறை.

(கடலூர் பேருந்து நிலையம் அருகே இருபெண்கள் பேசியது)

""சரி விடுடி. ஏன் உன் கணவரை திட்டுறே.
குடும்பமுன்னா அப்படி இப்படி இருக்கும்தான்!''
""ம். சரி. அப்படி ஒரு குடும்பம். இப்படி ஒருகுடும்பம் இருந்தா எப்படிடீ..''

-பொ.பாலாஜி,
அண்ணாமலைநகர்.

கேட்டது

(திருச்சி ஜி கார்னர் மைதானத்தில் இருவர் பேசிக் கொண்டது)

""இன்னுமடா நீ ஸ்கூட்டர் ஓட்ட கத்துக்கலை..''
""எல்லாம் நல்ல ஸ்கூட்டரை வச்சிருக்காங்க. அதான் தரமாட்டேங்கிறாங்க? நீதான் உன் "ஓட்டை' ஸ்கூட்டரை கொஞ்சம் தாயேன்''

--சம்பத்குமாரி,
பொன்மலை.

யோசிக்கிறாங்கப்பா!

நடப்பதற்கு கால்கள் வேண்டும்.
நல்லபடி நடப்பதற்கு மனம் வேண்டும்.

-வி.ந.ஸ்ரீதரன்,
சிறுசேரி.

மைக்ரோ கதை

இராமசாமியிடம் பக்கத்துக்கு வீட்டுப்பையன் வந்து நின்றான். "" மாமா.. அப்பா அவசர வேலையாக சென்னைக்கு போகணுமாம். 500 ரூபாய் வாங்கிக்கிட்டு வரச் சொன்னாரு. அஞ்சாம் தேதிக்கு மேல தந்துடுவாராம்' என்றான். இராமசாமியோ, "" மாமாவுக்கும் அஞ்சாம் தேதிக்கு மேலதான் ரூபாய் வருமாமுன்னு சொல்லிடு'' என்று பையனைத் திருப்பி அனுப்பிட்டார்.

சற்றுநேரம் கழித்து எதிர்வீட்டுக்காரரின் மகன் வந்து நின்று, ""மாமா..'' என்று அழைக்க, "" என்ன வேண்டும்'' என்றார் இராமசாமி .

""அப்பாவுக்கு வரவேண்டிய ரூபாய் வரலையாம். ஆயிரம் ரூபாய் உங்களிடம் கடனாக வாங்கி வரச்சொன்னார். பத்தாம் தேதிக்குள் தந்துடுவாராம்'' என்ற சிறுவன் கூறியவுடன், பையிலிருந்து ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொடுத்தனுப்
பினார்.

""என்னங்க ஐநூறு ரூபாய் கேட்ட பையனுக்குக் கொடுக்காமல் ஆயிரம் ரூபாய் கேட்டு வந்த பையனுக்கு மறுபேச்சு பேசாமல் உடனே கொடுத்து அனுப்புறீங்க'' என்று இராமசாமியிடம் அவரது மனைவி லட்சுமிஅதட்டலுடன் கேட்டார்.

"ஐநூறு ரூபாயைக் கேட்டவர் அஞ்சாம் தேதிக்கு மேல் தருவதாகச் சொன்னதாகப் பையன் சொன்னான். எதிர்வீட்டுப்பையன் அவனது அப்பா பத்தாம் தேதிக்குள் தருவதாகச் சொன்னதாகச் சொன்னான். ஐந்தாம் தேதிக்கு மேல் என்றால் என்றைக்கு என்றே தெரியாது. இரண்டாவது வந்த பையனோ பத்தாம் தேதி என்று ஒரு தேதியை சரியாகச்சொன்னான்'' என்றார் இராமசாமி. இதில் இவ்வளவு விஷயம் இருக்கிறதா? என்று லட்சுமி அதிசயித்து நின்றார்.

- ப. சோமசுந்தர வேலாயுதம்,
தென்காசி.


எஸ்எம்எஸ்

தற்செயலாய் கிடைப்பதில்லை வெற்றி.
தன்செயலாய் கிடைப்பதே வெற்றி.


-முனைவர் ச.உமாதேவி,
திருவண்ணாமலை.

அப்படீங்களா!


புதுப்புது இரு சக்கர மோட்டார் சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டாலும், அவை வேகமாகச் செல்வது, எரிபொருளைச் சேமிப்பது போன்றவையாகதான் இருக்கும். ஆனால், மோட்டார் சைக்கிள்களின் பெரும் பின்னடைவே விபத்துகள்தான். சாலைகளில் எதிர்பாராத விதமாக வரும் பள்ளம், கல் மீது ஏறி பைக் சரிந்தால் விபத்து நிச்சயம். மோட்டார் சைக்கிள் விபத்துகளில் அதிக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண பல முன்னணி நிறுவனங்கள் ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளன. ஆனால், மும்பையைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான லைகர், கீழே விழாமல் சுயமாக நிற்கும் மின்சார ஸ்கூட்டரை தயாரித்து முன்னணி நிறுவனங்களுக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது. உலகின் முதல் சுய சமநிலைப்படுத்தும் பைக்காகவும் இது உள்ளது.

செயற்கை நுண்ணறிவு மூலம் பைக்கின் புவிஈர்ப்பு சக்தியை மாற்றி சமநிலைப்படுத்தும் தொழில்நுட்பம் இதில் இணைக்கப்பட்டுள்ளது. இதற்காக நொடிக்கு 9 ஆயிரம் தகவல்களை சேகரித்து செயல்படும் அதிநவீன அல்கோரிதம் மூலம் ஏராளமான சென்சார்கள் செயல்படுகின்றன என்று இந்த நிறுவனத்தின் இணை நிறுவனர் விகாஸ் தெரிவிக்கிறார்.

பைக்கை இயக்கிய முதல் 5 முதல் 7 கி.மீ. வரையில் குறைவான வேகத்தில் சமநிலையுடன் இயங்கும். சுய சமநிலையை நீக்கினால்தான் பைக்கின் வேகம் அதிகரிக்கும். பைக்கின் வேகத்தை குறைத்தால் மீண்டும் சுயசமநிலைக்கு வண்டி திரும்பிவிடும்.

10 ஆயிரம் கி.மீ. தூரம் வரையில் இந்த பைக் சோதனை நடத்தப்பட்டுள்ளது. நிகழாண்டு இறுதியில் இது சந்தைக்கு வர உள்ளது. ஆரம்ப விலை ரூ.90 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

-அ.சர்ப்ஃராஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT