தினமணி கதிர்

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 124


திமுக தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்துக்கு சரியாக காலை 11 மணிக்கு வந்து சேர்ந்தார் நடிகர் ரஜினிகாந்த்.  அவரது கார் கோபாலபுரம் வீட்டு வாசலில் வந்து நின்றபோது, திமுக தலைவர் நேரில் வரவேற்பார் என்கிற ஊகத்துக்கு முற்றுப்புள்ளி விழுந்தது. 

காரில் இருந்து இறங்கி வீட்டிற்குள் நுழைந்த ரஜினிகாந்தை சால்வை அணிவித்து வரவேற்றார் ஆற்காடு வீராசாமி. அவருடன் ரஜினிகாந்த் முதல் மாடியில் இருந்த கருணாநிதியின் அறைக்குச் சென்றார். புகைப்படக் கலைஞர்கள் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

இதற்குப் பிறகு என்ன நடந்தது என்பதை புகைப்படக் கலைஞர் ஒருவரின் நேர்முக வர்ணனையில் தெரிந்து கொண்டேன் . அறைக்குள் சென்றதும் கருணாநிதியைக் கரங்களைகூப்பி வணங்கியபடி நெருங்கினார் ரஜினி. அருகில் சென்றதும் குனிந்து அவரது கால்களைத் தொட்டு வணங்கினார். அவரை எழுப்பித் தழுவிக் கொண்டார் கருணாநிதி.

அங்கிருந்த சோபாவில் தன்னருகில் ரஜினியை அமர வைத்த கருணாநிதி, அவர் எழுதிய குறளோவியம் உள்ளிட்ட சில புத்தகங்களை அளித்தார். அந்த அறையில் ஆற்காடு வீராசாமியும், முரசொலி மாறனும் இருந்தனர். அவர்கள் புகைப்படங்களுக்குப் போஸ் கொடுத்து முடிந்ததும், புகைப்படக்காரர்கள் வெளியே அனுப்பப்பட்டனர்.

சுமார் அரை மணி நேரம் கருணாநிதியும், ரஜினிகாந்தும் ஆலோசனை நடத்தினார்கள். சந்திப்பு முடிந்து கிளம்பிய ரஜினிகாந்திடம், "என்ன பேசினீர்கள்?' என்று கேட்டபோது, முதலில் தயங்கினார். பிறகு, ""ஏற்கெனவே தெரிவித்துவிட்டேன். இப்போது நேரில் வாழ்த்துத் தெரிவித்தேன். "அடுத்தாற்போல கோட்டையில் சந்திப்போம்' என்று சொல்லி விடை பெற்றுக் கொண்டேன்'' என்பதுதான் அவர் சொன்ன பதில்.

""இதற்கா அரை மணி நேரம்?'', ""கூட்டணி வெற்றி பெற்றால் நீங்கள் முதல்வராவீர்களா?'', ""ஆட்சி அமைப்பது திமுகவா இல்லை ; தமாகாவா?'' போல பல கேள்விகளை நிருபர்கள் எழுப்பினார்கள். அதையெல்லாம் சட்டையே செய்யாமல் நகர்ந்து விட்டார் ரஜினிகாந்த்.

ரஜினிகாந்த் கிளம்பிச் சென்ற பிறகு, அறிவாலயம் செல்வதற்காக மாடியிலிருந்து இறங்கிவந்த திமுக தலைவர் கருணாநிதி, வழக்கம்போல பத்திரிகை நிருபர்களைச் சந்தித்தார். அவரது முகத்தில் மகிழ்ச்சி.

""ரஜினிகாந்த் என்ன பேசினார்?''

""வாழ்த்துத் தெரிவித்தார். என்னைப் "பெரிய அண்ணா' என்று குறிப்பிட்டார். கூட்டணி அமைந்ததில் மகிழ்ச்சி என்று கூறினார்.''

""பிரசாரம் குறித்து எதுவும் பேசவில்லையா?''

""இல்லை. அவர்தான் ஏற்கெனவே தெளிவுபடுத்தி விட்டாரே, அதனால் நானும் எதுவும் கேட்கவில்லை. இன்றைக்கு அவர் பெங்களூர் செல்கிறார். வெளியூருக்குத்தான் செல்கிறார். வெளிநாட்டுக்கல்ல.''

""அவ்வளவுதானா?''

"எனது அடுத்தகட்ட சுற்றுப்பயணம் குறித்த விவரங்களைச் சொன்னேன். கேட்டுக்கொண்டார். மக்கள் மிகுந்த எழுச்சியுடன் இருப்பதை பத்திரிகைகள் மூலம் தெரிந்து கொண்டதாகச் சொன்னார். ஆங்காங்கே உள்ள ரஜினி மன்றத்தினர் மூலமாகவும் தெரிந்து கொண்டதாகச் சொன்னார். வெற்றிக்கு வாழ்த்துகளைக் கூறினார்.''

முரசொலி மாறனும், ஆற்காடு வீராசாமியும் அவரை மேலும் பேசவிடாமல், அழைத்துச் சென்று விட்டனர். காரில் ஏறிச் சென்று விட்டார்.

கோபாலபுரத்தில் ரஜினிகாந்த் - கருணாநிதி சந்திப்புடன் அன்றைய பரபரப்பு முடிந்தவிடவில்லை. அரசினர் தோட்டத்தில் உள்ள சென்னை பத்திரிகையாளர் சங்கத்தில், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. மூப்பனார், நிருபர்களைச் சந்திக்க இருக்கிறார் என்கிற செய்தி வந்தது. கோபாலபுரத்தில் தொண்டர்கள் கூட்டம் என்றால், பத்திரிகையாளர் சங்கத்தில் நிருபர்களின் கூட்டம் நிறைந்து 
வழிந்தது.

வழக்கத்துக்கு மாறாக, மூப்பனார் நிறையப் பேசினார். பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்குப் பொறுமையாகவும், விளக்கமாகவும் பதிலளித்தார். தனிக்கட்சி தொடங்கித் தலைவரானதாலோ என்னவோ, காங்கிரஸின் பொதுச்செயலாளராக இருந்தபோது அவரிடம் காணப்பட்ட தயக்கமும், நிருபர்களைச் தவிர்க்கும் வழக்கமும் விடைபெற்றுக் கொண்டிருந்தன.

""தமிழ் மாநில காங்கிரஸில் ரஜினிகாந்த் சேர வற்புறுத்துவீர்களா?''

""நான் எப்படி அவரை வற்புறுத்த முடியும்? ரஜினிகாந்த் தமாகாவில் சேர வந்தால், அதை நான் நிச்சயமாக வரவேற்பேன். தலைமை தாங்கும்படி கூடக் கூறுவேன். அவரது தலைமையில் இயங்குவதில் எனக்கு எந்தவிதத் தயக்கமும் கிடையாது. முதலமைச்சராக ரஜினி வரவிரும்பினால் அதற்கும் ஒத்துழைப்பேன்.''

""அப்படியானால், திமுக - தமாகா கூட்டணி வெற்றி பெற்றால், கருணாநிதி முதல்வர் இல்லையா?''

""நான் அப்படிச் சொல்லவில்லை. ரஜினிகாந்த் எந்தவித சுயலாப நோக்குமில்லாமல் எங்களுக்கு ஆதரவு தந்திருக்கிறார். அவருக்கு முதல்வராகவோ, தலைவராகவோ விருப்பம் இல்லை என்றுதான் நான் நினைக்கிறேன்.''

""ரஜினிகாந்த் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?''

""அவர் தனது சக்தியை உணராமல் இருக்கிறார். அவருக்குள்ள செல்வாக்கை என்னால் விவரிக்க முடியவில்லை. அவர் நேரடியாகப் பிரசாரம் செய்யாவிட்டாலும் அவருக்கு மக்கள் ஆதரவு அபரிமிதமாக இருக்கிறது.''

""இந்தத் தேர்தலில் உங்களது முக்கியமான பிரசாரம் என்னவாக இருக்கும்?''
""பிரசாரத்தைத் தொடங்கிவிட்டோமே, இப்போது கேட்கிறீர்கள்... அதிமுக ஆட்சியின் ஊழல், அராஜகம்தான் இந்தத் தேர்தலின் தலையாய பிரச்னைகள்.''

""உங்கள் பிரசாரத்துக்கு மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு ஆதரவு இருக்கிறது?''

""கருத்துக் கணிப்புகள் எங்களுக்கு ஆதரவாக உள்ளன. மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள் என்று தெரிகிறது...''

மக்களவைத் தேர்தல் குறித்த சில கேள்விகளுக்கும் மூப்பனார் பொறுமையாக பதிலளித்தார். அவரது அரசியல் வாழ்க்கையில் இந்த அளவுக்கு நீண்ட நேரம் பொறுமையாகவும், விளக்கமாகவும் நிருபர் கூட்டத்தில் பேசி நான் பார்த்தது அதுதான் முதல் முறையும், கடைசி முறையும் என்று நினைக்கிறேன்.

கருத்துக் கணிப்புகள் எல்லாமே, திமுக - தமாகா கூட்டணியின் வெற்றியை உறுதிப்படுத்தின.  தேசிய அளவில், காங்கிரஸ் அல்லது பாஜக அதிக இடங்கள் வென்ற கட்சியாக உருவாக முடியுமே தவிர, எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்க வழியில்லை என்பதையும் கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன.

தேர்தல் பிரசாரம் உச்சகட்டத்தை எட்டியிருந்த நேரம். தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்ற தொகுதிகளின் நிலவரம் குறித்து சில தினசரிகள் என்னிடம் கணிப்புகள் கேட்டிருந்தன. அதனால், குறிப்பிட்ட சில தொகுதிகளுக்கு நான் பயணிக்க முடிவெடுத்தேன். அதில் முக்கியமானவை பிரதமர் நரசிம்ம ராவ் போட்டியிட்ட நந்தியால், பெஹ்ராம்பூர் தொகுதிகள்.

ஆந்திர மாநிலம் நந்தியால் தொகுதியில் பிரதமர் நரசிம்ம ராவ் வெற்றி பெறுவது உறுதி என்பதை அனைவருமே எதிர்பார்த்தனர். ஒடிஸா மாநிலம் பெஹ்ராம்பூர் தொகுதியைத் தனது இரண்டாவது தொகுதியாக அவர் ஏன் தேர்ந்தெடுத்தார் என்று பலருக்கும் தெரியவில்லை. ஒருவேளை அந்தத் தொகுதியில் தெலுங்கு பேசுபவர்கள் அதிகமாக இருப்பதும்கூடக் காரணமாக இருக்கலாம். 

பெஹ்ராம்பூரை அடுத்த மக்களவைத் தொகுதி அஸ்கா. ஜனதா தளத் தலைவர் பிஜு பட்நாயக் அந்தத் தொகுதியில் போட்டியிட்டார். இரண்டு தொகுதி நிலவரங்களையும் பார்க்கலாம் என்று அங்கு போனேன். தெலுங்கு, ஹிந்தி, மராத்தி மட்டுமல்லாமல், பிரதமர் பி.வி. நரசிம்ம ராவால் சரளமாக ஒடியா மொழியிலும் மேடையில் பேச முடியும் என்பதை அப்போது நேரில் பார்த்தேன்.

அஸ்கா தொகுதிக்கு பிஜு பட்நாயக் இரண்டே நாள்கள்தான் வந்ததாகச் சொன்னார்கள். வேட்புமனு தாக்கல் செய்த பிறகு மூன்று இடங்களில் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டதுடன் சரி. ஆனால், அவரைத் தோற்கடிக்க யாராலும் முடியாது என்று காங்கிரஸ்காரர்களே சொன்னார்கள்.

அடுத்தாற்போல, நான் அங்கிருந்து சென்றது லக்னெளவுக்கு. பாஜக தலைவர் வாஜ்பாய் 1996 தேர்தலில் உத்தர பிரதேச மாநிலம் "லக்னெள', குஜராத்திலுள்ள "காந்திநகர்' என்று இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். சந்திரசேகர் போட்டியிடும் "பல்லியா' தொகுதி, முலாயம் சிங் யாதவ் போட்டியிடும் "மெயின்புரி', வாஜ்பாயின் "லக்னெள', அஜித் சிங்கின் "பாக்பத்' தொகுதிகள் சென்றுவிட்டு, தில்லி வந்து சேர்வதற்கு ஐந்து நாள்களாகின. அசுரவேக சுற்றுப்பயணம்.

தில்லிக்கு நான் வந்திருக்கிறேன் என்கிற தகவலை ராஜேஷ் பைலட் வீட்டில் தெரிவித்தேன். அவர் "தெளசா' தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் இருந்தார். அன்று இரவு தில்லி வரப்போவதாகவும், என்னை சந்திக்க வேண்டும் என்றும் தகவல் அனுப்பினார். இரவில் அவரது 10, அக்பர் சாலை வீட்டில் சந்திக்கும்படி எனக்குத் தகவல் அனுப்பி இருந்தார், சென்றேன்.

பிரசாரக் களைப்புடன் அவர் நடுநிசிக்குப் பிறகு வந்தார். முகத்தைக் கழுவிக் கொண்டு, அடுத்த சில நிமிஷடங்களில் தட்டில் இரண்டு சப்பாத்தியுடன் வந்தமர்ந்தார். நான் முன்பே இரவு உணவு முடித்துவிட்டதால் எனக்கு சாயா தரப்பட்டது.

""தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?'' - கேட்டது ராஜேஷ் பைலட்.

""தேசிய அளவில் தேர்தல் முடிவைக் கணிக்கும் அளவிலான தகவல் திரட்டு என்னிடம் இல்லை. பரவலாகக் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்காது என்றுதான் கூறப்படுகிறது. பாஜகவும் தனிப்பெரும்பான்மை பெறாது என்றுதான் நானும் நினைக்கிறேன்.''

""தென்னிந்தியா எப்படி இருக்கும்?''

""எனக்குக் கிடைத்த தகவலைத் தெரிவிக்கிறேன். இது துல்லியமாக இருக்கும் என்று சொல்வதற்கில்லை. ஆந்திராவிலுள்ள 42 இடங்களில் காங்கிரஸூம், தெலுங்கு தேசமும் சம பலத்தில் இருக்கின்றன. பிரதமர் நரசிம்ம ராவ் காங்கிரஸூக்கு பலம். என்.டி. ராமா ராவ் புறக்கணிக்கப்பட்டது தெலுங்கு தேசத்துக்கு பலவீனம். அதனால் காங்கிரஸ் 20-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும் என்று நான் நினைக்கிறேன்.''

""கர்நாடகத்தில்?''

""ராமகிருஷ்ண ஹெக்டேயும், தேவே கெளடாவும் இணைந்திருப்பதால் ஜனதா தளம் அதிக இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது. காங்கிரஸின் வெற்றியை பாஜக தடுக்கும் என்பதுதான் எனது கருத்து. 28 இடங்களில், காங்கிரஸ் 10 தொகுதிகளில் வெற்றி பெற்றால் அதுவே அதிகம்.''

""கேரளாவில் காங்கிரஸின் வாய்ப்பு குறித்து என்ன தகவல்? கருணாகரன்ஜியிடம் பேசினீர்களா?''

""இல்லை. கேரளாவில் காங்கிரஸூக்கு ஓரளவுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது. பத்து இடங்கள் கிடைக்கலாம் என்பதுதான் அங்கிருக்கும் பத்திரிகை நண்பர்களின் கணிப்பு.''

""தமிழ்நாட்டில் காங்கிரஸ் - அதிமுக கூட்டணி தோல்வியா, படுதோல்வியா?''

"படுதோல்வி என்றுதான் நான் நினைக்கிறேன். அதற்குக் காரணம், காங்கிரஸில் ஏற்பட்ட பிளவும், ரஜினிகாந்தின் ஆதரவும். திமுக - தமாகா கூட்டணி அத்தனை இடங்களிலும் வெற்றி பெறும் என்று நான் நினைக்கிறேன்.''

அதற்கு ராஜேஷ் பைலட் சொன்ன எதிர்வினை என்னை திடுக்கிட வைத்தது.

"மூப்பனார்ஜி ஜெயித்தால் என்ன, காங்கிரஸ் ஜெயித்தால் என்ன? ஒருவேளை காங்கிரஸூக்குப் பெரும்பான்மை கிடைக்காவிட்டால், மூப்பனார் காங்கிரஸை ஆதரிப்பாரே தவிர, பாஜகவை நிச்சயம் ஆதரிக்க மாட்டார். மூப்பனார் திமுகவுடன் கூட்டணி அமைத்தது, நரசிம்ம ராவும் அவரும் சேர்ந்தே எடுத்த முடிவாகக்கூட இருக்கலாம்.''

சுமார் மூன்று மணிக்குத்தான் நான் அங்கிருந்து கிளம்பினேன். வெறிச்சோடிக் கிடக்கும் இரவு நேர தில்லி சாலைகள் எனக்குப் புதிதொன்றுமல்ல. 

அடுத்த நாள் அதிகாலை விமானத்தில் சென்னைக்குக் கிளம்பினேன். எனது வாக்கைப் பதிவு செய்ய...

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் 72% வாக்குப் பதிவு: மாவட்ட வாரியாக முழு விவரம்

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

SCROLL FOR NEXT