தினமணி கதிர்

பேல் பூரி

22nd Jan 2023 06:00 AM

ADVERTISEMENT

 

கண்டது


( சேலம் பேருந்து நிலையத்திற்கு வெளியே நின்று கொண்டிருந்த கார் ஒன்றில்...)

சிறந்ததை தேடாதே கிடைத்ததை சிறந்ததாக்கு.

- இரா.வசந்தராசன்,
கிருஷ்ணகிரி.

 

ADVERTISEMENT

(தேனி -- ஆண்டிபட்டி சாலையில் உள்ள ஊரின் பெயர்)

"பிராதுக்காரன்பட்டி."
-ஆர்.எஸ்.மனோகரன், முடிச்சூர்.

 

(கொடைக்கானலுக்கு வாகனங்கள் நுழையும் பகுதியின் பெயர்)

மூஞ்சிக்கல்

-எஸ்.மோகன்,
கோவில்பட்டி.


 

 

கேட்டது


(நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் காவலரும், பயணியும்...)

""பஸ் வர்ற வழியிலேயே விழுந்து கிடக்கிற உடம்பு சரியில்லையா..?''
""சரியாக இருக்கு சார். வழக்கமா, "ஆப்' அடிப்பேன். இன்று "புல்' அடிச்சேன். அவ்வளவுதான். கொஞ்சம் கைதூக்கி விடுறீங்களா?''

-ஆர்.கே.லிங்கேசன்,
மேலகிருஷ்ணன்புதூர்.

 


(திருச்சி கடைவீதியில் இருவர் பேசிக் கொண்டது)

""பொங்கல் பரிசு வாங்கியும் பிரயோசனம் இல்லை.''
""ஏன்?''
""ஆயிரம் ரூபாயை என் மனைவி வாங்கிட்டு, அரிசி- சர்க்கரையை சமையலுக்கு வெச்சிருங்கன்னு சொல்லிட்டா?''

-அ.சுஹைல் ரஹ்மான்,
திருச்சி.

 

(சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே ஓர் டீக்கடையில்..)

" "காப்பி குடிச்சதும், ஒரு ஸ்பூன் சர்க்கரையை வாயில் போட்டுக்கிறீங்களே, ஏன்?''
" "டாக்டர்,  காபியில் சர்க்கரை சேர்க்க வேண்டாம்னு சொல்லிட்டாரு!"

- ஆர்.விஸ்வநாதன்,
சென்னை 78.

 

யோசிக்கிறாங்கப்பா!


உண்மை சாகக் கூடாது. 
ஒரு பொய் வாழக்கூடாது.

-தாமஸ் மனோகரன்,
புதுச்சேரி.

 

மைக்ரோ கதை


கைப்பேசி ஒலித்தது. எடுத்தான் தினேஷ்.

"'சொல்லு மகேஷ்''

""ப்ரோ. நாக்கெல்லாம் வர.. வர்றன்னு இருக்கு. எந்த வேலையும் ஓடலை..''

""புரியுது. இப்ப உனக்கு குடிச்சாகணும். அவ்வளவுதானே..''

""ம். இந்த நள்ளிரவுல கிடைக்குமா..?''

""எனக்கு இடம் தெரியும். நீ எங்க ஆபிஸாண்ட வா.! சேர்ந்தே போகலாம்!''

""இதோ ஐந்து நிமிஷத்துல வர்றேன்.''

தினேஷ் சொன்னபடி ஆஜராகினான். இருவரும் நடக்க ஆரம்பித்தனர். இரண்டு தெருவைத் தாண்டி, ஒரு குறுகலான சந்துக்குள் நுழைந்தனர்.

அங்கு பலர் குடித்துக் கொண்டிருந்தனர். சிலர் காத்திருந்தனர். 

மகேஷ் கடைக்காரரிடம் நெருங்கினான். ""அண்ணே. ரெண்டு டீ'' என்றான்.

-ஜி.சுந்தரராஜன்,
திருத்தங்கல்.

 

எஸ்எம்எஸ்


கை கொடுப்பவரே 
கைவிடுவது உண்டு.

-வி.ந.ஸ்ரீதரன், சிறுசேரி.

 

அப்படீங்களா!


நவீன தொழில்நுட்பத்தில் செயற்கை நுண்ணறி பல்வேறு புதிய மாற்றங்களைக் கொண்டு வருகிறது. மனிதர்களின் தேவைகளை புரிந்து கொண்டு தானாக செயல்படுவதால் செயற்கை நுண்ணறிவின் தேவை அனைத்து துறைகளிலும் உள்ளது.

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் மிமிக்ரி செய்யும் புதிய மென்பொருளான வால்-இ -யை உருவாக்கி உள்ளது. 

வால்-இ-யை பயன்படுத்தி எந்தப் பேச்சையும் மூன்று நொடிகள் அப்லோடு செய்துவிட்டால்போதும், அதேபோன்ற குரலை தயாரித்துவிடும்.

எழுத்துவடிவத்தை அப்படியே அதே குரலில் மாற்றும் திறன் வாட்-இக்கு உள்ளது. அப்லோடு செய்யப்பட்ட குரல் சோகமாகவோ, மகிழ்ச்சியாகவோ, ஆக்ரோஷம் என எப்படிபட்டவையாக இருந்தாலும் அதே உணர்வுடன் புதிதாக உருவாக்கிவிடும். 

இதற்காக 60 ஆயிரம் நேரம் ஆங்கில உரையை பயிற்சிக்காக இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.  இதுபோன்ற மிமிக்ரி செயலிகளைவிட 100 மடங்கு இது துல்லியமாக குரலை வழங்கும் என்று மைக்ரோ சாஃப்ட் தெரிவித்துள்ளது.
பேச்சு குறைபாடு உள்ளவர்களின் எழுத்து திறமையை குரல் வடிவத்தில் வெளியிட இந்த வால்-இ  உதவி செய்கிறது.

ஏற்கெனவே, அரசியல்வாதிகள், பிரபலங்களின் குரல்கள், விடியோக்கள் போலியாக உருவாக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. 

இந்தநிலையில், இதுபோன்ற சேவைகள் தவறான முறையில் பயன்படுத்தப்படும் வாய்ப்புகள்தான் அதிகமாக உள்ளன. அதிலும், சில வங்கிகளில் குரல் வடிவிலான கடவுச்சொல் உள்ளதால் இதுபோன்ற சேவைகள் தவறான முறையில் பயன்படுத்தப்படுவதைத் தவிர்க்க மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் பாதுகாப்பு அம்சத்தையும் ஏற்படுத்த வேண்டும்.

-அ.சர்ப்ஃராஸ்
 

ADVERTISEMENT
ADVERTISEMENT