தினமணி கதிர்

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 123


சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்தை வரவேற்கக் காத்திருந்த தமிழ் மாநில காங்கிரஸ்காரர்களில், எஸ்.ஜி. விநாயகமூர்த்தி, எஸ்.எம். இதயத்துல்லா, "கராத்தே' தியாகராஜன் ஆகியோர் முகங்கள்தான் நினைவில் இருக்கின்றன. அவருக்கு மலர்கொத்தும் சால்வையும் அணிவித்து அவர்கள் வரவேற்றபோது, ரஜினிகாந்த் தமாகா-வில் சேரப் போகிறார் என்கிற கருத்து பத்திரிகையாளர்களிடம் பரவலாக எழுந்தது.

சாதாரணமாக ரஜினிகாந்த் பத்திரிகையாளர்களைத் தவிர்த்து விடுவதுதான் வழக்கம். அவர்களுக்குத் தெரியாமல் வேறு வழியாகப் போவது என்பது எப்போதும் அவரது வாடிக்கை. அதற்கு மாறாக, விமானநிலையத்திலிருந்து வெளியே வரும்போதே அங்கு கூடியிருந்த பத்திரிகையாளர்களைப் பார்த்து அவர் கையசைத்தபோது, அவரது அரசியல் பிரவேசம் உறுதி என்று நான்கூட நினைத்தேன்.

அதுமட்டுமல்ல, தனது ரசிகர்களையும், தமாகா தொண்டர்களையும் விலக்கிக் கொண்டு, நேராக பத்திரிகையாளர்கள் குழுமியிருந்த பகுதிக்கு அவர் வந்தபோது, எங்களால் அதை நம்பவே முடியவில்லை. அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளையும் பதில்களையும் நான் குறித்து வைத்திருக்கிறேன். இரண்டே கேள்விகளுக்குத்தான் அவர் பதில் சொன்னார்.

""நீங்கள் திமுக - தமாகா கூட்டணியை ஆதரிக்கிறீர்களா?''

""ஹண்ட்ரட் பர்சென்ட், ஹண்ட்ரட் பர்சென்ட்! (நூறு சதவீதம் ஆதரிக்கிறேன்)''
""அப்படியானால் அந்தக் கூட்டணிக்காகப் பிரசாரம் செய்யப் போகிறீர்களா?''
""நான் இப்போது 36 மணிநேர பிரயாணக் களைப்பில் இருக்கிறேன். அமெரிக்காவிலிருந்து வந்திருக்கிறேன். எனக்கு "ஜெட்லாக்' போவதற்கு ஒருநாள் ஓய்வு தேவை. அதற்குப் பிறகு பிரசாரம் குறித்து யோசித்து முடிவு எடுப்பேன். ஓகே.. இது போதும்..''

அதற்கு மேல் அவர் அங்கே நிற்கவில்லை. ரசிகர் கூட்டம் அவரை சுற்றி வளைத்துக் கொண்டது. அதிலிருந்து தப்பிக்கவும், அவர்கள் அனைவரையும் திருப்திப்படுத்தவும் காரின் மீது ஏறி நின்றார். எல்லோருக்கும் கை அசைத்துவிட்டு, காவல்துறை பாதுகாப்புடன் காரில் ஏறிக் கிளம்பிவிட்டார். அங்கிருந்து ஒருவழியாக வெளியே வருவதற்கே எனக்கு ஒரு மணி நேரத்துக்கு மேலாகிவிட்டது.

அடுத்தாற்போல திமுகவின் அறிவாலயம் போவதா, தமாகா-வின் சத்தியமூர்த்தி பவனுக்குப் போவதா, இல்லை அதிமுக - காங்கிரஸ் கூட்டணி என்னதான் நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள யாரையாவது சந்திப்பதா என்று யோசித்தபடி, தி.நகர் உஸ்மான் சாலையில் சிவா விஷ்ணு கோயிலுக்கு அருகிலுள்ள சுந்தரம் காம்ப்ளக்ஸில் அமைந்திருந்த எனது "நியூஸ்கிரைப்' அலுவலகத்துக்கு எனது புல்லட் மோட்டார் சைக்கிளில் வந்து சேர்ந்தேன்.

அப்போது செல்பேசி அறிமுகமாகி இருக்கவில்லை. தொலைபேசி ஒலித்தது. தொலைதூர விமானப் பயணத்தில் ஏற்படும் ஜெட்லாகையும் பொருள்படுத்தாமல் ரஜினிகாந்த் முக்கியமான சிலரை சந்தித்து ஆலோசனை நடத்துவதாகத் தகவல் கிடைத்தது. யார், யார் சந்தித்தார்கள் என்று விசாரித்தேன். அவரை சந்தித்தவர்களில் முக்கியமானவர் மு.க. ஸ்டாலின்.

திமுக தலைவர் கருணாநிதி அப்போது மதுரையில் தேர்தல் பிரசாரத்தில் இருந்தார். அவரது சார்பில், ரஜினிகாந்தை வரவேற்கவும், அரசியல் நிலைமையையும், திமுக - தமாகா கூட்டணிக்காக வகுத்திருக்கும் தேர்தல் திட்டங்களை ரஜினிகாந்திடம் விளக்கும் பொறுப்பும் அவரிடம் தரப்பட்டிருந்தது என்று அறிவாலயத்தில் உள்ள நண்பர் ஒருவர் எனக்குத் தெரிவித்தார்.

போயஸ் கார்டனிலுள்ள ரஜினிகாந்த் வீட்டில், அப்போது திமுக இளைஞரணி செயலாளராக இருந்த மு.க. ஸ்டாலின், டி.ஆர். பாலுவுடன் அவரை சந்தித்து சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடத்தினார்.

தேர்தல் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. வாக்குப் பதிவுக்குப் பத்தே நாள்கள் இருக்கும் நிலையில், ரஜினிகாந்த் ஆதரவும் சேர்ந்தவுடன் திமுக - தமாகா கூட்டணி வெற்றிக் கூட்டணி என்கிற கருத்து மக்கள் மத்தியில் எழுந்தது. பாமகவும், வாழப்பாடி ராமமூர்த்தியின் தமிழ்நாடு ராஜீவ் காங்கிரஸýம் ஓர் அணியாகவும், மதிமுக - மார்க்சிஸ்ட் கட்சி இன்னொரு அணியாகவும் களமிறங்கி இருந்தாலும், போட்டி என்னவோ திமுக தலைமையிலான கூட்டணிக்கும், அதிமுக கூட்டணிக்கும்தான்.

1996 தேர்தலில் மையப்புள்ளியாக நடிகர் ரஜினிகாந்த் மாறியிருந்தார். முன்பு போலல்லாமல் அவர் தனிப்பட்ட முறையில் ஆலோசனை நடத்தியது "துக்ளக்' ஆசிரியர் சோ ராமசாமியுடனும், மரியாதை நிமித்தம் ஆர்.எம். வீரப்பனுடனும் மட்டும்தான். அவர் பிரசாரத்துக்குச் செல்வாரா, மாட்டாரா என்கிற சந்தேகத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அமைந்தது அடுத்த நாள் வெளிவந்த அறிக்கை - 

""கால அவகாசம் இல்லாததால் எல்லா இடங்களுக்கும் செல்ல முடியாது. ஒருசில இடங்களுக்காவது செல்லலாம் என்றால் மற்ற இடங்களில் இருக்கும் ரசிகர்களை ஏமாற்ற என் மனம் இடம் கொடுக்கவில்லை. இந்த ஏமாற்றத்தைத் தவிர்ப்பதற்காகவும், காலமின்மையாலும், நான் வெளியில் வந்து என்ன செய்ய நினைக்கிறேனோ அதையே தொலைக்காட்சி மூலம் தெரிவிக்க நினைத்தேன். அதற்கு சம்மதம் தெரிவித்த திமுக தலைவர் கருணாநிதிக்கும், தமாகா தலைவர் மூப்பனாருக்கும் நன்றி. விரைவில் தொலைக்காட்சி மூலம் ரசிகர்களையும், தமிழக மக்களையும் சந்திக்கிறேன்.''

அடுத்த நான்கு நாள்கள் நான் கர்நாடக மாநிலத்தில் நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தல் குறித்துத் தெரிந்துகொள்ள சென்றுவிட்டேன். 1994 சட்டப்பேரவைத் தேர்தலில், ராமகிருஷ்ண ஹெக்டே எடுத்த சாதுர்யமான நகர்வுகள் ஜனதா தளத்தை மீண்டும் ஆட்சியில் அமர்த்தி இருந்தது.

1989 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் பெறும் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து வீரேந்திர பாட்டீல் முதல்வரானார். நிஜலிங்கப்பாவின் பிரதம சீடர் என்பது மட்டுமல்லாமல், சக்தி வாய்ந்த லிங்காயத்து சமுதாயத்தின் மரியாதைக்குரியவராகவும் திகழ்ந்தவர் வீரேந்திர பாட்டீல். அவருக்கு வயதாகி விட்டதால், சுறுசுறுப்புப் போதவில்லை என்கிற காரணத்தைக் கூறி, அவரை பதவியிலிருந்து அகற்றி பங்காரப்பாவை முதல்வராக்கினார் ராஜீவ் காந்தி. அந்தத் தவறான முடிவின் விளைவால் இப்போதுவரை காங்கிரஸ் அந்த சமுதாயத்தின் ஆதரவைப் பெற முடியவில்லை.

வீரேந்திர பாட்டீல் காங்கிரஸால் அவமதிக்கப்பட்டார் என்கிற ஆத்திரம்தான் அந்த சமுதாயத்தின் ஆதரவு ராமகிருஷ்ண ஹெக்டேக்கும், பிறகு எடியூரப்பாவுக்கும் திரும்பியதற்குக் காரணம். இப்போது கர்நாடகாவில் பாஜகவின் அடிப்படை வாக்குவங்கியே லிங்காயத்துகளுடையதுதான். வீரேந்திர பாட்டீலுக்குப் பிறகு பங்காரப்பாவும், நரசிம்ம ராவுக்கு பங்காரப்பாவைப் பிடிக்காததால் அவர் அகற்றப்பட்டு வீரப்ப மொய்லியும் காங்கிரஸால் முதல்வர்களாக்கப்பட்டனர்.

நிஜலிங்கப்பா தலைமையிலான ஸ்தாபன காங்கிரஸில் இருந்தவர்கள்தான் வீரேந்திர பாட்டீல், ஹெக்டே, தேவே கெளடா உள்ளிட்டவர்கள். ஜனதா கட்சி உருவானபோது, ஹெக்டே தேசிய பொதுச் செயலாளர்களில் ஒருவரானார். தேவே கெளடா கர்நாடக மாநில ஜனதா கட்சியின் தலைவரானார்.

ஜனதா கட்சி முதல்வராக 1983-இல் ராமகிருஷ்ண ஹெக்டே முதல்வரானபோது, அவரது அமைச்சரவையில் பங்காரப்பா, எஸ்.ஆர். பொம்மை, தேவே கௌடா மூவரும் இடம் பெற்றனர். அவர்களில் எஸ்.ஆர். பொம்மையும், பங்காரப்பாவும் முதல்வர்களாகி இருந்தனர். தேவே கெளடா முதல்வராகவில்லை என்பது மட்டுமல்ல, அரசியலிலும் செல்வாக்கு இழந்திருந்தார்.

1983 முதல் ஹெக்டேவின் அமைச்சரவையில் இருந்த தேவே கெளடா, வி.பி. சிங் தலைமையில் ஜனதா தளம் உருவானதை ஏற்றுக்கொள்ளவில்லை. சுப்பிரமணியம் சுவாமியுடன் இணைந்து ஜனதா கட்சியில் தொடர்ந்தார். ஹெக்டே அமைச்சரவையில் இருந்தும் விலகினார். அதைத் தொடர்ந்து, நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், 1962 முதல் 1989 வரை தொடர்ந்து ஆறு தடவை வெற்றி பெற்ற ஹோலேநரசிபூர் தொகுதியில் முதன்முதலாகத் தோல்வியைத் தழுவினார். அதற்குப் பிறகு, அவரது அரசியல் வாழ்க்கையே அஸ்தமித்துவிட்ட நிலைமை.

1994 சட்டப்பரேவைத் தேர்தல் வெற்றிக்கு "ஒக்கலிகர்' சமுதாயத்தின் வாக்குகளைப் பெற வேண்டும் என்று திட்டமிட்டு, அரசியல் வனவாசம் போயிருந்த தேவே கெளடாவை மீண்டும் அழைத்து வந்தவர் ராமகிருஷ்ண ஹெக்டே. அப்போது அவர்கள் தங்களுக்குள் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டனர். ""முதல்வர் பதவிக்கு கெளடா, பிரதமர் பதவிக்கு ஹெக்டே'' என்பதுதான் அந்த ஒப்பந்தம். அதன் விளைவால்தான் 1994 சட்டப்பேரவை வெற்றியும், தேவே கெளடா முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும்.

1996 மக்களவைத் தேர்தலில், ஜனதா தளம் வெற்றி பெற்றால், அடுத்து அமைய இருக்கும் மத்திய ஆட்சியை நிர்ணயிக்கும் பொறுப்பு ராமகிருஷ்ண ஹெக்டேவுடையது என்று பகிரங்கமாக அறிவித்திருந்தார் தேவே கெளடா. அதன் தாக்கம் கர்நாடக மாநிலம் முழுவதும் காணப்பட்டது. இத்தனைக்கும், பாரதிய ஜனதா கட்சியும், காங்கிரஸýம் மும்முனைப் போட்டிக்கு வழிகோலி இருந்தன.

ராமகிருஷ்ண ஹெக்டேயும், தேவே கெளடாவும் இணைந்து மேடையேறிய இரண்டு பொதுக்கூட்டங்களை நான் பார்த்தேன். தமிழகத்தில் ஏற்பட்டிருந்தது போன்ற ஆட்சி மாற்றத்திற்கான எழுச்சி, கர்நாடகத்திலும் தெரிந்தது. கர்நாடக மாநிலத்தின் இரண்டு முக்கிய சமுதாயங்களான லிங்காயத்துக்களும், ஒக்கலிகர்களும் இணைந்ததன் விளைவு நன்றாகவே பிரதிபலித்தது. 

பெங்களூரிலிருந்து சென்னைக்குத் திரும்புவதற்கு முன்னால், பங்காரப்பாவை சந்திக்கச் சென்றேன். தொடர்ந்து ஏழு தடவைகள் வெற்றி பெற்ற சோரபா சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடாமல், ஷிமோகா (இப்போது ஷிவமோகா) மக்களவைத் தொகுதியில் தனது கர்நாடக காங்கிரஸ் கட்சி சார்பில் களமிறங்கி இருந்தார் அவர். பிரசாரத்துக்கு நடுவில் பெங்களூரு வந்திருந்தார்.

""கர்நாடக தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்?''

""காங்கிரஸ் அதிகபட்சம் ஐந்து இடங்களில் வெற்றி பெற முடியும் அவ்வளவுதான். ஹெக்டேயும், கெளடாவும் இணைந்திருப்பதால் அதிக இடங்களில் அவர்கள் ஜெயிக்கக்கூடும். இந்த முறை பாஜக சில இடங்களில் 
வெற்றி பெற்று தனது கணக்கைத் தொடங்கும்.''

""சரி நீங்கள்?''

""நான் தேர்தலில் தோல்வி அடைந்ததில்லை!''

பங்காரப்பாவின் கணிப்பு அப்படியே பலித்தது. வாக்காளர்களின் நாடித்துடிப்பைத் துல்லியமாகத் தெரிந்து வைத்திருந்த அரசியல்வாதிகளில் அவரும் ஒருவர்.

நான் சென்னை திரும்பிய அடுத்த நாள் தேர்தல் பிரசாரத்திலிருந்து சென்னை திரும்பி இருந்தார் திமுக தலைவர் கருணாநிதி. அவரை கோபாலபுரம் வீட்டிற்கு சென்று ரஜினிகாந்த் சந்திக்க இருக்கிறார் என்று தகவல் வந்தது. அங்கே சென்று பார்த்தால் தெருவெல்லாம் எள் போட்டால் விழாது எனுமளவுக்குத் தொண்டர் கூட்டம்.

அந்தக் கூட்டத்தில் நானும் வேறு சில பத்திரிகையாளர்களும், ஒரு புகைப்படக் கலைஞரின் உதவியோடு மிகுந்த பிரயாசைக்குப் பிறகு, கருணாநிதி வீட்டு வாசல்வரை வந்து விட்டோம். அங்கே பத்திரிகையாளர்கள் கேட்டுக்கு உள்ளே தனியாகக் குழுமி இருக்க வழி செய்யப்பட்டிருந்தது. 

நடிகர் ரஜினிகாந்தை திமுக தலைவர் கருணாநிதி வாசலில் வந்து வரவேற்று அழைத்துச் செல்லப் போகிறார் என்கிற எதிர்பார்ப்புடன் பத்திரிகையாளர்களும், அதைப் படமெடுக்க புகைப்படக்காரர்களும் தயாராகக் காத்திருந்தோம்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT