தினமணி கதிர்

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 129

பரபரப்பின் உச்சத்தில் இருந்தது தில்லி. ஒருபுறம், வாஜ்பாய் தலைமையிலான அரசு பதவி ஏற்றுக் கொண்டிருந்தது. ஆனால், 15 நாள்களில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க முடியுமா என்பது சந்தேகத்தில் இருந்தது. இன்னொருபுறம், தேவே கெளடாவைப் பிரதமர் வேட்பாளராகக் காங்கிரஸ் ஏற்றுக் கொண்டு ஆதரவு அளிப்பதாகக் கூறி இருந்தது. வாஜ்பாய் அரசு பதவி ஏற்றுக் கொண்ட நிலையில், அந்த நிலைப்பாடு தொடருமா என்கிற கேள்வி, காங்கிரஸ் வட்டாரங்களிலேயேகூட எழத் தொடங்கிவிட்டன.

கர்நாடகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸூம் அங்கே உள்ள மாநிலக் கட்சிகளும் நேரிடையாக மோதும் நிலையில், மாநிலக் கட்சிகளின் கூட்டணியை ஆதரிப்பது காங்கிரஸை பலவீனப்படுத்தும் என்று மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பலர் கருதினார்கள். பாஜகவைத் தடுத்து நிறுத்தும் முயற்சியில் காங்கிரஸ் தனது செல்வாக்கை மாநிலக் கட்சிகளிடமும், ஜனதா தளத்திடமும், இடதுசாரிகளிடமும் இழந்துவிடக் கூடும் என்கிற அச்சம் பரவலாக எழுந்தது.

காங்கிரஸில் நிலவிய குழப்பத்தைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள விழைந்தது பாஜக. அதேபோல, மாநிலக் கட்சிகளுடன் இணைந்து ஜனதா தளம் அமைத்திருக்கும் மூன்றாவது அணியில் காணப்பட்ட கருத்துவேறுபாடுகளையும் தனக்கு சாதகமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டது.

ஜனதா தளம் என்பதே பிளவுபட்ட நிலையில்தான் இருந்தது. லாலு பிரசாத் யாதவின் ஆதரவாளர்கள் 16 பேர், கர்நாடகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனதா தளம் உறுப்பினர்கள் 16 பேர், உத்தர பிரதேசம், பிகார், ஒடிஸா மாநிலங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனதா தளம் உறுப்பினர்கள் 13 பேர் என்று பிரிந்து காணப்பட்டனர். முலாயம்சிங் யாதவின் சமாஜவாதி கட்சி 17 இடங்களில் வெற்றி பெற்றிருந்த நிலையில், தனிப்பட்ட செல்வாக்கு என்று எடுத்துக் கொண்டால், அவர்தான் முன்னணியில் இருந்தார்.

திமுக, தெலுங்கு தேசம் கட்சிகள் 16 இடங்களில் வென்றிருந்தபோது, இன்னொரு முக்கியமான மாநிலக் கட்சியாக உயர்ந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி 20 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. காங்கிரஸூம், பாஜகவும் இல்லாத ஆட்சி என்கிற ஒற்றைப் புள்ளியில் இந்தக் கட்சிகள் இணைந்திருந்தாலும், பிரதமர் வேட்பாளர் என்பதில் அவர்களுக்குள் முழுமையான உடன்பாடு இருக்கவில்லை.

53 இடங்களுடன் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரிக் கூட்டணி முக்கியப் பங்கு வகித்தது. இடதுசாரிகளில், குறிப்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித்தின் பிரதமருக்கான முதல் தேர்வு யாராக இருந்தார் தெரியுமா? முலாயம் சிங் யாதவ். முன்னாள் சோஷலிஸ்ட்டான முலாயம் சிங் யாதவ், நரசிம்ம ராவ் அரசின் தாராளமயக் கொள்கைகளை, மாநிலக் கட்சிகளைப்போல ஆதரிக்கமாட்டார் என்பதுதான் அதற்குக் காரணம்.

மாயாவதியின் 11 உறுப்பினர்கள் கொண்ட பகுஜன் சமாஜ் கட்சி வாக்கெடுப்பில் பங்கெடுக்காமல் தவிர்ப்பது என்று முடிவெடுத்திருப்பதுபோல, காங்கிரஸூம், முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாதி கட்சியும் நடுநிலை வகித்தால் 163 இடங்களுடன் வாஜ்பாய் தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற முடியும்.

பாஜகவின் திட்டத்தை முறியடித்தது யார் என்று சொன்னால், அனைவரும் வியப்பில் சமைவார்கள். அது வேறுயாருமல்ல, முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான பி.வி. நரசிம்ம ராவ்தான். அவரது அந்த முடிவுக்குக் காரணம், அவர் கலந்தாலோசித்த பிரணாப் முகர்ஜி, கே. கருணாகரன், ஜே.பி. பட்நாயக் ஆகிய மூவரும்.

காங்கிரஸில் ஏற்கெனவே பல எம்.பி.க்கள் பாஜகவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்கிற கருத்தை முன்மொழியத் தொடங்கி இருந்தனர். காங்கிரஸ் கட்சி நடுநிலை வகிப்பது என்று முடிவெடுத்தால், அவர்கள் பாஜகவுக்கு நேரிடையாகவே ஆதரவளித்து, ஆட்சியில் பங்கு பெற விழையக்கூடும் என்று அவர்கள் மூவரும் நரசிம்ம ராவை எச்சரித்தனர். அது காங்கிரஸில் பிளவை ஏற்படுத்த வழிகோலும் என்பது பிரணாப் முகர்ஜியின் கருத்தாக இருந்தது என்று என்னிடம் தெரிவித்தார் கே. கருணாகரன்.

"பி.வி.யின் வீட்டில் நான், பிரணாப், ஜே.பி., காட்கில், புவனேஷ் சதுர்வேதி ஆகியோர் அமர்ந்திருந்தோம். பி.வி. எதுவும் பேசவில்லை. எங்களைப் பேசவிட்டுக் கேட்டுக் கொண்டிருந்தார். வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இருந்தால், கட்சி பிளவுபடும் என்பது மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சியின் நம்பகத்தன்மை முற்றிலுமாக சிதைந்துவிடும் என்று பிரணாப் சொன்னதை நாங்கள் அனைவரும் ஆமோதித்தோம். நரசிம்ம ராவும் அதை ஆமோதிப்பதுபோலத் தலையாட்டினார்.''

"மூன்றாவது அணியை ஆட்சி அமைக்க அனுமதிப்பதைவிட, காங்கிரúஸ ஆட்சி அமைக்கலாம் என்கிற கருத்து முன்வைக்கப்பட்டதா?''

"அது எப்படி முடியும்? காங்கிரஸூக்கு 140 இடங்கள்தான் இருந்தன. ஐக்கிய முன்னணிக் கூட்டணிக்கு 192 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தது. தனிப்பட்ட கட்சியாக பாஜகவுக்கு வாய்ப்பு வழங்கிய பிறகு, அதிக எண்ணிக்கை பலமுள்ள மூன்றாவது அணிக்குத்தான் சங்கர்தயாள் சர்மா வாய்ப்பு வழங்குவார் என்பதை நாங்கள் எதிர்பார்த்தோம்!''

""அப்படியானால், காங்கிரஸ் ஏன் அந்தக் கூட்டணியில் இணைந்து ஆட்சி அமைத்திருக்கக் கூடாது?''

""அப்படியொரு கருத்தை ஜே.பி. முன்வைத்தார். பி.வி. மட்டுமல்ல, நாங்கள் அனைவருமே அதை நிராகரித்துவிட்டோம். அந்தக் கூட்டணியில் உள்ள கட்சிகள், காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைப்பதை ஏற்றுக்கொள்ளாது. ஆதரவு தராது. 140 இடங்களில் வெற்றி பெற்றிருக்கும் காங்கிரஸ், 16 அல்லது 17 இடங்களில் வெற்றி பெற்ற கட்சியின் பிரதிநிதி ஒருவரைப் பிரதமராக ஏற்றுக்கொண்ட அந்தக் கூட்டணி ஆட்சியில் எப்படி பங்கு பெற முடியும்?''

""மூப்பனார் பிரதமராகி இருந்தால் ஒருவேளை ஏற்றுக் கொண்டிருப்பீர்களோ?''

""ஏற்றுக் கொள்வதென்ன, நரசிம்ம ராவ் உள்பட நாங்கள் அனைவரும் அதை எதிர்பார்த்தோம். மாநிலக் கட்சிகள் என்று எடுத்துக் கொண்டாலும் தனிப்பட்ட முறையிலும் அதிக அளவு எம்.பி.க்களின் ஆதரவு பெற்றவராக மூப்பனார்தான் இருந்தார்.''

""அவர் ஏன் பிரதமராகவில்லை?''

""அதை அவரது கட்சிக்காரர்களிடம் கேளுங்கள்.  திமுகவிடம் கேளுங்கள். என்னிடம் கேட்டால் எப்படி?''

கலகலவென்று சிரித்தபடி சொன்னார் கருணாகரன்.

வாஜ்பாய் தலைமையிலான முதலாவது பாஜக அரசை ஆதரிப்பதில்லை என்பது மட்டுமல்ல, எதிர்த்து வாக்களிப்பது என்பதிலும் பி.வி. நரசிம்ம ராவ் உறுதியாக இருந்ததால்தான், காங்கிரஸில் பிளவு ஏற்படவில்லை என்பதுடன், வாஜ்பாயி அரசு கவிழ்ந்தது.

1996 மே 27-ஆம் தேதி. பிரதமர் வாஜ்பாய்க்கு வழங்கப்பட்ட 14 நாள் அவகாசம் அடுத்த நாள் முடிய இருந்தது. பெரும்பான்மை பெறுவது இருக்கட்டும், பாஜகவால் கூடுதலாக ஒரு எம்.பி.யைக்கூடத் தனது பக்கம் இழுக்க முடியவில்லை. வாக்கெடுப்பில் கலந்து கொள்வதில்லை என்று முடிவெடுத்திருந்த மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிகூட, எதிர்த்து வாக்களிப்பது என்று தீர்மானித்திருந்தது.

பரபரப்பும் எதிர்பார்ப்புமாக மக்களவை கூடியது. பார்வையாளர் மாடத்தில் நான் அமர்ந்திருந்தேன். உள்ளே நுழைந்தவர்கள் பெரும்பாலும் மெளனமாகவே இருந்தனர். பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் நுழைந்தபோது, பாஜகவினர் மேஜையைத் தட்டி அவரை வரவேற்றனர். அவரது முகத்தில் எள்ளளவும் எந்தவொரு உணர்ச்சியும் தெரியவில்லை. சிரித்த முகத்துடன் உள்ளே நுழைந்தார்.

பிரதமர் வாஜ்பாய், நம்பிக்கைத் தீர்மானத்தை முன்மொழியப் போகிறாரா அல்லது நேரடியாக வாக்கெடுப்புக்கு வழிகோலப் போகிறாரா என்கிற எதிர்பார்ப்பில் மக்களவை காத்திருந்தது.

""பிரதமர் பேச விரும்புகிறார்'' என்று கூறி, அதற்கான அனுமதியை வழங்கினார் அவைத் தலைவர் பூர்ணோ சங்மா.

""அத்யக்ஷ் மஹோதய் (அவைத் தலைவர் அவர்களே...)'' என்றபடி தொடங்கிய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் உரை, அடுத்த ஒரு மணிநேரம் தென்றலும்,  புயலுமாகத் தொடர்ந்தது. அவ்வப்போது ஆளும் கட்சித் தரப்பிலிருந்து மேஜை தட்டப்படும் ஓசையைத் தவிர, எதிர்க்கட்சி வரிசையில் இருந்தவர்கள் உன்னிப்பாக அவரது உரையைக் கேட்ட வண்ணம் இருந்தனர்.

வாஜ்பாயின் நாடாளுமன்ற வாழ்க்கையில் மூன்று உரைகள் குறிப்பிடும்படியானவை. 1971-இல் வங்கதேச போரைத் தொடர்ந்து அந்த நாடு உருவானபோது அவர் ஆற்றிய உரை; 1996 மே மாதம் 27-ஆம் தேதி ஆற்றிய உரை; பொக்ரான் அணு ஆயுத சோதனைக்குப் பிறகு அவர் ஆற்றிய உரை மூன்றுமே நிகரற்றவை என்பதை கட்சி வேறுபாடின்றி அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள்.

""நான் நாடாளுமன்ற உறுப்பினராக 40 ஆண்டுகளாக இருந்து வருகிறேன். பல அரசுகள் ஆட்சி அமைத்ததையும், ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டதையும் பார்த்திருக்கிறேன். அந்த ஒவ்வொரு நிகழ்வுக்குப் பிறகும் இந்திய ஜனநாயகம் மேலும் வலுவடைந்திருக்கிறது என்பதையும் பார்த்திருக்கிறேன்'' என்றபடி தொடங்கியது அன்றைய அவரது நாடாளுமன்ற உரை.

நம்பிக்கைத் தீர்மானத்தை முன்மொழியாமல் அவர் உரையாற்றியதிலிருந்து, பாஜகவுக்குப் பெரும்பான்மை பலம் இல்லை என்பது தெளிவானது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அதைப் பிரச்னையாக எழுப்பவோ, குழப்பம் ஏற்படுத்தவோ முயலவில்லை. வாஜ்பாய் என்ன சொல்லப் போகிறார் என்பதைக் கேட்க ஆவலுடன் காத்திருந்தார்கள்.

""இப்போது நான் பதவி ஆசை பிடித்தவன் என்றும், ஆட்சியில் தொடர்வதற்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் செல்வேன் என்றும் சிலர் குற்றம் சாட்டுகிறார்கள். நான் இதற்கு முன்னாலும் பதவியில் இருந்திருக்கிறேன். ஆனால், பதவிக்காக எந்தவொரு தரக்குறைவான செயலிலும் ஈடுபட்டதில்லை. பிற கட்சிகளில் பிளவை ஏற்படுத்தி அல்லது பதவி ஆசை காட்டி கூட்டணி அமைத்துத்தான் பதவியில் தொடர வேண்டும் என்றால், அப்படியொரு ஆட்சிக்கு ஆசைப்படுகிறவன் நானல்ல...''

அவர் அவ்வப்போது பேசுவதை நிறுத்தி இடைவெளி விடும்போது, ஒட்டுமொத்த அவையும் அடுத்து என்ன பேசப் போகிறார் என்று ஆவலுடன் காத்திருந்த காட்சி இப்போதும் என் கண் முன்னர் நிற்கிறது.

அவரது பேச்சிலிருந்து பெரும்பான்மை பெற முடியவில்லை என்பது தெரிந்தது. ஆனாலும் அவர் என்னதான் சொல்லப் போகிறார் என்கிற ஆர்வமும் தொடர்ந்தது. ""குடியரசுத் தலைவர் வழங்கிய வாய்ப்பை எங்களால் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை என்பது வேறு விஷயம். எதிர்க்கட்சி வரிசையில் அமர்வது ஒன்றும் எங்களுக்குப் புதிதும் அல்ல...

அடுத்தாற்போல அமைய இருக்கும் பெரும்பான்மை பலம் பொருந்திய கூட்டணி எதுவாக இருந்தாலும், அதற்கு எனது வாழ்த்துகள். தேசத்துக்காக எங்கள் சேவை தொடரும்'' என்றபடி அவைத் தலைவரைப் பார்த்துப் பேசத் தொடங்கினார்.

""அவைத் தலைவர் அவர்களே, நான் இப்போது குடியரசுத் தலைவரை சந்தித்து எனது பதவி விலகல் கடிதத்தைக் கொடுக்க இருக்கிறேன்'' என்றபோது நம்பிக்கை வாக்கெடுப்புக்கான தேவையே எழுவில்லை.

வாஜ்பாய் பதவி விலகிய மே 27-ஆம் தேதிக்கும், அடுத்த பிரதமராக தேவே கெளடா பதவி ஏற்ற ஜூன் 1-ஆம் தேதிக்கும் இடையில் பல திரைமறைவுப் பேரங்களும் அரசியலும் அரங்கேறின. அவை வெளியில் தெரியவில்லை.

முலாயம் சிங் யாதவ் பிரதமராகக் கூடாது என்று வி.பி. சிங்கும், லாலு பிரசாத் யாதவுக்கு எதிராக ராம் விலாஸ் பாஸ்வானும் குறியாக இருந்தனர். பிரதமராக ராம் விலாஸ் பாஸ்வான் பெயரை வி.பி. சிங் பரிந்துரைத்தார். ஆனால், "யாதவ் அணி' நிராகரித்துவிட்டது. தென்னிந்தியர் ஒருவர் பிரதமராக வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதியும், தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடுவும் மட்டுமல்ல, பிரதமர் நரசிம்ம ராவேகூட மனதுக்குள் விரும்பினார் என்று பரவலாக அப்போது பேசப்பட்டது.

பிரதமர் பதவிக்கு தேவே கெளடாவை மூன்றாவது அணி தேர்ந்தெடுத்ததற்கு இவை மட்டுமே அல்ல காரணம். அந்த முடிவுக்குப் பின்னால், அந்நிய சக்திகளின் கடுமையான அழுத்தமும் இருந்தது.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

ரத்னம் படத்தின் 2வது பாடல்!

அமர் சிங் சம்கிலா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

கேஜரிவால் கைது: இந்தியாவில் தேர்தல் நியாயமாக, சுதந்திரமாக நடக்கும் என நம்புகிறோம்: ஐ.நா.

திருமால் உருகிப் போற்றிய திருமேற்றளி கோயில்

SCROLL FOR NEXT