தினமணி கதிர்

பேல் பூரி

DIN

கண்டது

(ஈரோட்டில் ஆட்டோ ஒன்றின் பின்புறம் எழுதப்பட்ட வாசகம்)

""புத்திசாலியாக இரு. முட்டாளாக நடி.வாழ்க்கையில் நிறைய கற்றுக் கொள்ளலாம்.''

-க.ரவீந்திரன்,
ஈரோடு.

(திருநெல்வேலி மேலப்பாளையம் ஆசாத் ரோடில் உள்ள கடையின் பெயர்)

""மாப்பிள்ளை ஹார்டுவேர்ஸ்''

-சாத்தை மயில்,
நெல்லை.

(சங்கராபுரம் அருகேயுள்ள ஒரு ஊரின் பெயர்)

""பூட்டை''

-காதர்பாட்சா,
சென்னை.

(திருச்சி உறையூரில் உள்ள  ஒரு மருத்துவமனையில் கண்ட வாசகம்)

""நாட்டுக்காகப் பாடுபடும் ராணுவ வீரர்கள், விவசாயிகள், ஆசிரியர்களுக்கு "கன்சல்டிங் கட்டணம்' கிடையாது!

-சம்பத்குமாரி,
பொன்மலை.

கேட்டது

(சீர்காழி மருந்தகத்தில் ஒன்றில்..)

""சார். இந்த மருந்து வெளியே கிடைக்காது. எந்த டாக்டரிடம் டீரிட்மெண்ட் எடுக்கறீங்களோ அங்கதான் கிடைக்கும்.''
""இதான் சார். இப்ப இருக்கிற பெரிய வியாதியே. டாக்டர்கள்
இப்படி பன்னா மருந்துச் சீட்டு இல்லாமல்தான் நீங்க வியாபாரம் பண்ணனும்.''

-பி.கவிதா,
தம்பரம்.


(திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே நகரப் பேருந்தில் தாயும் மகனும்..)

""நல்ல இடமுன்னு தரகர் சொன்னார். இந்தப் பெண்ணையும் வேண்டாமுன்னு சொல்லிடாதே!''
""அது உன் கையில்தான்மா இருக்கு.''
""என்ன சொல்றே!''
""மருமகளோடு இருக்கப் போறது நீ. நீதானே முடிவு செய்யணும்!''

-அ.சுஹைல் ரஹ்மான்,
திருச்சி.

(நாகர்கோவில் பகுதியில் உள்ள வங்கி ஒன்றின் வாசலில் , நண்பர்கள் இருவர்)

""பாஸ்புக் பிரிண்ட் போட மிஷின் பிராப்ளமுன்னு  சொன்னாங்க! அப்புறமா பிரிண்ட் போட்டு தந்தாங்களே... நீ , என்ன சொன்னே?''
""அடுத்த வாரம் ஒரு ஐந்து லட்சம் ரூபாய் வரும். அதை "டெபாசிட்' பண்ணணும்'னு சொன்னேன் !''

-மகேஷ் அப்பாசுவாமி,
பனங்கொட்டான்விளை.

யோசிக்கிறாங்கப்பா!

வாழ்க்கை ஒரு கேள்வி, யாரும் விடை தர முடியாது..!
மரணம் ஒரு விடை, யாரும் கேள்வி கேட்க முடியாது..!

-தி.நந்தகுமார்,
குடியாத்தம்.

மைக்ரோ கதை


""ராகேஷ்!  நாளை என் பர்த்டே!  என் வீட்டுக்கு அவசியம் நீ வரணும்!''
""சரிடா பாபு! கண்டிப்பா வர்றேன்!''

தனது மகன் ராகேஷும் பக்கத்து வீட்டு பையன் பாபுவும் பேசிக் கொண்டதைக் கேட்டார் பாஸ்கரன்.

""அகிலா! பக்கத்து வீட்டு பாபு மிகவும் ஏழை பையன். போன வாரம் நம் மகன் பர்த்டே! கேக் வெட்டி கொண்டாடினோம். சந்தோஷமாக அந்த பாபு வந்து கலந்து கொண்டான். அவன் பர்த்டேயையும் அப்படி கேக் வெட்டி கொண்டாட வைப்போம். இன்று மாலையே ஒரு கேக் வாங்கி வருகிறேன். நாளை அவன் வீட்டுக்கு கொண்டு போய் கொடுப்போம். அவனும் சந்தோஷமாக கேக் வெட்டி பர்த்டே கொண்டாடட்டும்!''  என்றார் பாஸ்கரன்.

அகிலா முகத்தில் லேசான இளமுறுவல்!

""நீங்க கலெக்டர் ஆபீஸில் வேலை செய்யறீங்க! அந்த பாபுவின் அப்பா ஒரு ஜவுளிக்கடை பணியாளர்.  நீங்க உங்க மகனுக்கு ஆயிரம் ரூபாய்க்கு வேண்டுமானாலும் கேக் வாங்கி கொடுத்து, அதற்கு மேலும் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு செலவு செய்யலாம். இந்த கேக் வெட்டிக் கொண்டாடுவது அவர்கள் வீட்டு நடப்புக்கு எடுபடாது. அதற்குரிய பணத்தை அவர்கள் கையில் ரொக்கப் பரிசாக கொடுத்தால், சில நாள்களுக்கு அவர்கள் வீட்டு செலவுக்கு கூட அது உதவலாம்!''

மனைவி அகிலா சொன்ன யோசனையும் பாஸ்கரனுக்கு சரி என்று பட்டது.  அப்படியே செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்தார்.

-கு.அருணாசலம்,
தென்காசி.

எஸ்.எம்.எஸ்.

விட்டதைப் பிடிக்க நினைக்கும்போதே 
மொத்தத்தையும் இழந்து விடுகிறோம்! 

-நா.இரவீந்திரன்,
வாவிபாளையம். 

அப்படீங்களா!

சமூக வலைதள தகவல் பரிமாற்றம் செயலிகளிடையே ஏற்பட்டுள்ள போட்டியில் வாடிக்கையாளர்களைக் கவர புதிய அறிவிப்புகளை வாட்ஸ் ஆஃப் தொடர்ந்து அறிவித்து வருகிறது.

30 புகைப்படங்களை மட்டும் அனுப்புவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. தற்போது 100 புகைப்படங்கள் அல்லது விடியோக்களை அனுப்பும் வகையில் புதிய வசதி அறிவிக்கப்பட்டுள்ளது.  நிகழ்ச்சிகளில் எடுக்கப்பட்ட ஏராளமான புகைப்படங்களை அனுப்ப இது உதவியாக இருக்கும்.  இந்த புதிய சேவை புகைப்பட பிரியர்களிடையே பெரும் வரவேற்பை பெரும். 

வழக்கமாக,  புகைப்படங்களை அனுப்பும் முறையிலேயே இவற்றை அனுப்பலாம். 30 புகைப்படங்களுக்கு மேல் தேர்வு செய்ய முடியவில்லை என்றால் உங்கள் வாட்ஸ் ஆஃப்பை 2.22.24.73 அல்லது அதற்கு மேல் உள்ள வேர்ஷனுக்கு அப்டேட் செய்து கொள்ளவும்.

மேலும், குழுவின் விவரத்தை விவரிக்கும் அளவையும் வாட்ஸ் ஆஃப் நீட்டித்துள்ளது. முகப்பு படத்தில் தனிநபரின் அவதார் முறை புகைப்படத்தை தயாரித்து வைத்து கொள்ளும் வசதியும், டாக்குமென்ட் பைல்களை பகிரும் போது அதற்கான தலைப்பிட்டு அனுப்பும் புதிய வசதியும் வழங்கப்பட்டுள்ளது. 
இதேபோல், வாட்ஸ்ஆப்பில் அனுப்பப்படும் புகைப்படங்கள் முழு தரத்தில் அனுப்பும் புதிய சேவையையும் வாட்ஸ் ஆஃப் பீட்டா வெர்ஷனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது விரைவில் அனைத்து பயன்பாட்டாளர்களுக்கும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-அ.சர்ப்ராஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

”கனவு காண்பது அண்ணாமலையின் உரிமை!”: கனிமொழி பேட்டி

SCROLL FOR NEXT