தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: பூட்டு வலியைக் குணப்படுத்துவது எப்படி?

எஸ். சுவாமிநாதன்

சுமார் எட்டு மாதங்களுக்கு முன் ஆரம்பித்த பூட்டு வலி, சிறிது சிறிதாக அதிகரித்து, தற்சமயம் எல்லா பூட்டுகளிலும் பரவி கடுமையாக வலிக்கிறது. வலி ஆரம்பித்த உடனேயே வைத்தியம் தொடங்கிவிட்டேன். இருந்தாலும் முழு நிவாரணம் கிடைக்காமல் வலியால் மிகவும் அவதிப்படுகிறேன். இது எதனால் எப்படி குணப்படுத்துவது?

-மாலதி, திருச்சி.

விதை நீக்கிய இரு கடுக்காய்களை நன்கு பொடித்து, சிறிது வெல்லம் கலந்து காலை மாலை என இரு வேளை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர, பூட்டுகளில் ஏற்படும் கடும் வலியானது நன்றாகக் குறையும் என்றும், அதன் மீது சீந்தில் கொடி கஷாயம் குடிக்க, மிக வேகமாக வலி குறையும் என்றும்  ஆயுர்வேத  நூல் ஒன்றில் காணப்படுவதால், இந்த எளிமையான சிகிச்சையை நீங்கள் முயற்சி செய்து பார்க்கலாம்.

தொடர்ந்து சில மாதங்களுக்கு சீந்தில்கொடியை சாறு வடிவத்திலோ, அரைத்த உருண்டையாகவோ, பொடியாகவோ, கஷாயமாகவோ சாப்பிட்டு வந்தால், பூட்டுகளில் ஏற்படும் கடுமையான வலியின் தாக்கமானது குறையும் என்று சக்ரதத்தம் எனும் ஆயுர்வேத நூலில் குறிப்பு காணப்படுகிறது.

போதி மரம் எனப்படும் அரச மரத்தின் பட்டையை பெருந்தூளாக இடித்து, அறுபது கிராம் எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து காய்ச்சவும். இருநூற்றி ஐம்பது மில்லியாக வற்றியதும் வடிகட்டி, காலை மாலை சமபங்காகப் பிரித்து வெறும் வயிற்றில், ஐந்து மில்லி தேனுடன் சாப்பிட்டுவர, மூலிகை தோஷங்களாகிய வாத, பித்த, கபங்களால் ஏற்படும் பூட்டுவலிக்கான தீர்வாக அமையும்.

சுக்கு 12 கிராம், தனியா 12 கிராம் என்ற கணக்கில் எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கொதிக்கவிட்டு, 250 மில்லியாக வற்றியதும் வடிகட்டி ஒரு நாளில் பல தடவை சிறிது சிறிதாக பருகி வர, பூட்டுவீக்கம், வலி போன்றவை மட்டுப்படும்.

5 கிராம் வெல்லத்தில் 10 கிராம் பசுநெய்யைவிட்டு நன்றாகக் கலந்து சாப்பிட, கப,- பித்தங்களால் ஏற்படும் அரிப்பு, படை மற்றும் பூட்டு வலிகளை குணப்படுத்தும். இதயத்துக்கு அருமருந்தாகும் என்று பாவபிரகாசர் எனும் ஆயுர்வேத முனிவர் குறிப்பிடுகிறார்.

நூறு கிராம் கறுப்பு எள்ளை வறுத்து, இரு நூற்று ஐம்பது மில்லி பசும்பாலில் அரைத்து, வலியுள்ள பூட்டுகளின் மீது வெதுவெதுப்பாகப் பற்றிட, வலி நன்றாகக் குறையும் என்று அவர் மேலும் கூறுகிறார்.

பாதிப்படைந்துள்ள பூட்டுகளின் மீது மேல்பூச்சாக நூறு கிராம் கோதுமை மாவு, இருநூற்றி ஐம்பது மில்லி ஆட்டின்பால், ஐம்பது கிராம் பசு நெய் ஆகியவற்றை ஒன்றாகக் குழைத்து வெதுவெதுப்பாகப் பற்றிடுதல் நல்லது என்கிறார் சக்ரதத்தர் எனும் முனிவர்.

வாத- பித்தங்களால் ஏற்படும் வலி எரிச்சல் போன்ற பூட்டு உபாதைகளில் விற்பனையிலுள்ள பிண்ட தைலத்தைத் தடவிவிடுவதும், மந்தமான வலியுடன் குளிர்ச்சியாகக் காணப்படும் பூட்டுகளில் கொட்டஞ்சுக்காதி தைலத்தைப் பூசுவதும், கிராமப்புறங்களில் வாடிக்கையாக உள்ள சிகிச்சை முறைகளாகும்.

பூட்டுவலியால் பாதிக்கப்பட்டுள்ள உங்களுக்கு அதிக புளி , உப்பு, காரம் போன்றவை நல்லதல்ல. குறைக்கப்பட வேண்டும். அதிகமான வெயில் உள்ள நாட்களில் அதிக தூரம் நடக்க வேண்டிய நிர்பந்தமுள்ளவர்களர்களுக்கு பூட்டுக்களில் தேய்மானம் விரைவில் ஏற்பட்டு, வலியை அதிகப்படுத்தும். ரத்தத்தை கெடுக்கும் எந்த உணவும் செயலும், பூட்டுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது நிச்சயம்.

தோல் மற்றும் தசை நார்களை ஆரம்பத்தில் பாதித்து, பின்னாளில் வலுவாகி, உட்புற தாதுக்களாகிய சதை, எலும்பு, மஜ்ஜை போன்ற பகுதிகளுள் இறங்கி பெரும் ஆபத்தை விளைவிக்கும். இந்த உபாதைக்கான தீர்வாக வாந்தி, பேதி, எனிமா, நஸ்யம் எனும் மூக்கில் மருந்து விடும் சிகிச்சை, ரத்தக் குழாய்களைக் கீறி கெட்ட ரத்தத்தை வெளிப்படுத்துதல் போன்ற சிகிச்சைகள் செய்யப்பட வேண்டும் என்று ஆயுர்வேதம் வலியுறுத்துகிறது.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

”கனவு காண்பது அண்ணாமலையின் உரிமை!”: கனிமொழி பேட்டி

பெங்களூரு குண்டு வெடிப்பு: தகவல் தெரிவித்தால் ரூ. 10 லட்சம்

ரம்ம்ம்மிய பாண்டியன்!

SCROLL FOR NEXT