தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: இதய பாதிப்புகள் ஏற்படாமல் பாதுகாக்க...

25th Sep 2022 06:00 AM | பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்

ADVERTISEMENT

 

என் வயது 36. அலுவலகத்தில் கடுமையான வேலைப்பளு காரணமாக, இதயப் பகுதியில் அழுத்தம், பயம், சோர்வு, ரத்தத்தில் அதிக கொழுப்பு, மயக்கம் போன்றவை உள்ளன. இதற்கு என்ன வகையான ஆயுர்வேத மருந்துகள் பயன்படும்?

-பிரபு,
ஆத்தூர்.

அறுபது வயதில் ஏற்பட வேண்டிய உபாதைகள் உங்களுக்கு இந்த சிறு வயதிலேயே ஏற்பட்டுவிட்டன. இந்த வயதில் வேலையை விடவும் முடிôது. மேலதிகாரிகளை தாஜா செய்துகொண்டு வாழ வேண்டிய கட்டாயம் உங்களுக்கு மட்டுமல்ல; லட்சோபலட்சம் இளைஞர்களுக்கும் இன்று இதே நிலைதான்.
மன அழுத்தம், பயம், சோர்வு போன்ற உபாதைகளில் மனம் பெரிதும் பாதிக்கப்படுவதால், உடல் உட்புற சுரப்பிகளின் தாறுமாறான சுரப்பினால் நீங்கள் குறிப்பிடும் வகையில் ரத்த நாளங்களில் தடிப்பு, அதன் காரணமாக ரத்த ஓட்ட பாதிப்பு, அதிக கொழுப்பு, மயக்கம் போன்றவை ஒன்றன்பின் ஒன்றாக ஏற்படத் தொடங்குகின்றன.
வேலையைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். அதே சமயத்தில் நீங்கள் குறிப்பிடும் உபாதைகள் தாக்காமலுமிருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், அதற்கு அலுவலகத்தில் அருகிலமர்ந்து வேலை செய்யக் கூடியவர்களை நண்பர்களாக்கிக் கொண்டு, நீங்கள் செய்யும் வேலைகளில் சிலவற்றை அவர்கள் எடுத்துச் செய்யும்படியான திறமையானவர்களுக்குப் பகிர்ந்து, வேலையை எளிதாக்க முடியுமா என்று நீங்கள் முயற்சி செய்வது அவசியமாகும்.
மேலும், சாத்வீகமான உணவு வகைகளான பால், தயிர், மோர், தேன், நெல்லிக்காய், பச்சைக்காய்கறிகள், கீரைகள், பழங்கள் போன்றவற்றை மட்டுமே தேர்ந்தெடுத்துச் சாப்பிட வேண்டியதும் அவசியமாகும்.
புலால் உணவு, உடல் சூட்டை அதிகப்படுத்தும் பட்டை, சோம்பு, கரம் மசாலா போன்றவை விலக்கத் தக்கவை.
வீட்டில் சண்டைச் சச்சரவு ஏற்படாத வகையில் அன்பான, அமைதியான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொள்வதும் தேவையான தருணமாகும்.
குடம்புளி, மருதம்பட்டை, திராட்சை விதை அரைத்து எடுக்கப்பட்ட சாறு, சூரியகாந்திப் பூ, 
ஆளிவிதை, மஞ்சட்டி, பூண்டு, கருங்காலிக் கட்டை, மிளகு போன்ற மூலிகைகள் சேர்த்துத் தயாரிக்கப்
படும் மருந்து, ரத்தக் கொழுப்பு உபாதை, உட்புற நாளங்களில் ஏற்படும் சேதம், அதிக ரத்த அழுத்த உபாதை போன்றவற்றை நன்கு குறைத்து ஆரோக்கியத்தை மேம்படுத்தித் தரும்.
மேலும் இதய ரத்தக் குழாய்களில், பிராண வாயுவின் ஓட்டத்தை மேம்படுத்தவும், நல்ல கொழுப்பை உடலில் சீரான அளவில் சேர்ப்பதையும் உறுதி செய்யக் கூடியவை.
உடலெங்கும் ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. பக்கவாதம், இதய பாதிப்புகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது. நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து பணியாற்றக் கூடிய நபர்களுக்கு ஏற்படும் ரத்தக் குழாய் சுருட்டல் உபாதையைக் குறைப்பதுடன், குழாய் உட்புற அடைப்பையும் சீராக்கித் தருகின்றன. தனித்தனியாக இதுபோன்ற செயலூக்கத்தைக் கொண்டிராத இம்மூலிகைகளின் சேர்க்கையால், அவைகளின் கூட்டு முயற்சியால் செய்துகாட்டுகின்றன.
அந்தக் கூட்டு முயற்சியில் அவை மேற்கொள்ளும் சுரண்டுதல், நெகிழ்வித்தல், நீராக்கி வெளியேற்றுதல் போன்ற செயல்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் நீங்கள் உணவில் சில நாட்கள் எண்ணெய் பசை இல்லாத வறண்ட உணவுகள், கசப்பு- துவர்ப்புச் சுவையுடைய கறிகள் மற்றும் கீரைகள் ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுதல் நலம் தரும்.
சுக்கும் கோரைக்கிழங்கும் தட்டிப் போட்டுக் காய்ச்சிய வென்னீரையே பருக வேண்டும்.

ADVERTISEMENT

(தொடரும்)

ADVERTISEMENT
ADVERTISEMENT