தினமணி கதிர்

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 107

25th Sep 2022 06:00 AM | கி. வைத்தியநாதன்

ADVERTISEMENT

 

அங்கே நின்று கொண்டிருப்பதில் பயனில்லை என்று தெரிந்துவிட்டது. அலகாபாதில் நேரு குடும்பத்தினரின் ஆனந்தபவனம்போல, ஒடிஸா மக்களால் புவனேசுவரத்திலுள்ள பிஜு பட்நாயக்கின் இல்லமான ஆனந்தபவனம் போற்றப்படுகிறது. இப்போது அதை அவரது மகனும் முதல்வருமான நவீன் பட்நாயக் அரசுக்கு ஒப்படைத்து நினைவில்லமாக்கி விட்டார்.
ஆனந்தபவனின் வாசல் வராந்தாவில், பிஜு பட்நாயக்கின் ஆதரவாளர்களும், கட்சிக்காரர்களும், பார்வையாளர்களும் நிறைந்திருந்தனர். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் திமுக தலைவர் மு. கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டில் தொண்டர்கள் குவிவதுபோலத்தான், ஒடிஸாவில் பிஜு பட்நாயக்கின் ஆனந்தபவனும்.
வரவேற்பறை சோபாவில் பல முன்னாள், இன்னாள் எம்.எல்.ஏ.க்கள், அமர்ந்திருந்தனர். பிஜு பாபுவின் தளபதிகள் என்று பரவலாக அறியப்பட்ட பிஜாய் மஹோபாத்ரா, ஸ்ரீகாந்த் ஜெனா, நளினி மொஹந்தி மூவரையும் அங்கே பார்க்க முடிந்தது. எனக்கு நெருங்கிய பழக்கம் அவர்களிடம் இல்லாவிட்டாலும், ஓரிருமுறை பேசி இருக்கிறேன். அதனால் அவர்கள் என்னைப் பார்த்து நட்புணர்வுடன் புன்னகைத்தனர்.
அதற்கு மேலும் அங்கே இருப்பதில் அர்த்தமில்லை என்பதால் கிளம்பத் தயாரானோம். வாசல் கேட்டைக் கடக்கவில்லை, பின்னாலிருந்து குரல் கேட்டது. நளினி மொஹந்தி கைதட்டி அழைத்தார்.
பிஜு பாபுவின் உதவியாளர் ஓடிவந்து கையைப் பிடித்தார். ""உங்களை மேலே அழைத்துக் கொண்டு வரச் சொல்கிறார்'' என்கிற அவரது அரைகுறை ஆங்கிலத்தில் பதற்றம் தெரிந்தது.  நளினி மொஹந்தியும், பிஜாய் மஹாபாத்ராவும் என்னை வியப்புடனும், மரியாதையுடனும் பார்த்தனர். நான் மாடிக்கு அழைத்துச் செல்லப்பட்டேன்.
உள்ளே பெரிய ஹாலில் உள்ள குஷன் நாற்காலியில் பிஜு பாபு அமர்ந்திருந்தார். சிங்கத்தின் முன்னால் முயல் நிற்பதுபோல, சிறு நடுக்கத்துடன் நான் நின்று கொண்டிருந்தேன். 
என்னை உட்காரச் சொல்லவில்லை. முறைத்துப் பார்த்தார். பிறகு என்ன தோன்றியதோ, ""அங்கிருந்து நாற்காலியை எடுத்துப் போட்டுக்கொள்'' என்று அவரிடமிருந்து உத்தரவு பிறந்தது.
அவருக்கு அருகில் கையைக் காட்டிய இடத்தில் நாற்காலியைப் போட்டேன். உட்கார சைகை காட்டிய பிறகு உட்கார்ந்தேன். 
நான் பார்த்த அளவில் இந்திரா காந்தி, எம்.ஜி.ஆர்., நரேந்திர மோடி ஒத்த ஆளுமை அவருடையது. அவரது உயரமும், உடல்வாகும், குரலும், பார்வையும் யாராக இருந்தாலும் எழுந்து கைகட்டி நிற்க வைத்துவிடும்.

""நான் என்ன தவறு செய்தேன்'' என்று கேட்க நினைத்தேன். ஆனால் அதற்கு தைரியம் வரவில்லை. வார்த்தையும் வரவில்லை. அவரே நிமிர்ந்து பார்த்துப் பேசத் தொடங்கினார்.
""உன்னைப் பற்றி நான் எவ்வளவு உயர்வாக நினைத்துக் கொண்டிருக்கிறேன். உன்னை ஒரு பத்திரிகையாளனாக அல்லாமல், என் பையன் மாதிரி நினைக்கிறேன். நீயென்னவென்றால், கண்ட சாமியார்கள் பின்னால் அலைந்து கொண்டிருக்கிறாய்.. சந்திராசுவாமியுடன் தொடர்பு வைத்துக் கொண்டிருக்கும் உன்னை நான் சந்தித்தால், அது எனக்கு மரியாதைக் குறைவு. அது பற்றி நினைத்துப் பார்த்தாயா?''
அதற்குப் பிறகு பத்து நிமிடம் எனக்கு சந்திராசுவாமி பற்றியும், அவரது நிழல் செயல்பாடுகள் குறித்தும் பாடமே நடத்திவிட்டார். சந்தர்ப்பச் சூழ்நிலை அப்படி அமைந்துவிட்டது என்பதை நான் அவருக்குத் தெளிவுபடுத்த முடியவில்லை. 
""என்னை மன்னித்து விடுங்கள்'' என்றுதான் சொல்ல முடிந்தது. ""மன்னித்து விடுங்கள்'' என்கிற அந்த வார்த்தையின் மகிமையை அடுத்த நொடியில் நான் உணர்ந்து கொண்டேன் - உக்ர நரசிம்மராக இருந்தவர், கோபம் தணிந்த லட்சுமி நரசிம்மராகி விட்டார்.
""இன்னும் எத்தனை நாள்கள் புவனேசுவரத்தில் தங்கி இருக்கப் போகிறாய்?''
""இரண்டு அல்லது மூன்று நாள்கள். இங்குள்ள பத்திரிகை அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டும். அவர்களிடமிருந்து சந்தா தொகை பாக்கி இருக்கிறது.''
அப்போது ஒடிஸாவில் பிரபலமாக இருந்த மூன்று நாளிதழ்களும் எனது "நியூஸ் கிரைப்' செய்தி நிறுவனத்தின் சந்தாதாரர்கள். அவை மூன்றுமே பிஜு பட்நாயக்குக்கும், ஜனதா தளத்துக்கும் எதிரானவை. அதுவும் பிஜு பாபுவுக்குத் தெரியும்.
""இங்கே யாரும் பத்திரிகைகளைப் பத்திரிகைகளாக நடத்துவதில்லை. எல்லோருமே ஏதாவது அரசியல் கட்சிப் பின்னணியுடன்தான் செயல்படுகின்றனர். உனக்கு ஒடியா தெரியாது. தெரிந்திருந்தால், உன்னையும் ஒரு பத்திரிகை தொடங்கச் சொல்லியிருப்பேன். ஊருக்குப் போவதற்கு முன்பு ஒருநாள் சாவகாசமாக மாலையில் என்னை சந்திக்க வா. தில்லி அரசியல் பற்றிப் பேச வேண்டும்...''
அவரிடம் விடைபெற்றுக் கொண்டு வெளியே வந்தபோது, பழைய உற்சாகமும், தெளிவும் எனக்குத் திரும்பி இருந்தன.
பிஜு பாபுவால் முடியாத பல சாதனைகளை அவரது மகனும், பிஜு ஜனதா தளத் தலைவரும், ஒடிஸாவின் நீண்டநாள் முதல்வராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருப்பவருமான நவீன் பட்நாயக் செய்து காட்டியிருக்கிறார்.
நான் முன்பே சொன்னதுபோல ஜவாஹர்லால் நேரு, எம்.ஜி.ஆர். போல செல்வாக்கு பெற்ற தலைவரான பிஜு பட்நாயக்கால் தொடர்ந்து இரண்டு தடவை தேர்தலில் வெற்றிபெற முடிந்ததில்லை. நவீன் பட்நாயக் தொடர்ந்து ஐந்தாவது முறையாக முதல்வராகத் தொடர்கிறார். இனிமேலும் தொடரக் கூடும்.
ஒடிஸாவில் 25 ஆண்டுகளுக்கு முன்னால் முன்னணி நாளிதழ்களாக இருந்தவை மூன்று - நந்தினி சத்பதியின் மகன் தத்தகத்தா சத்பதி நடத்தும் "தாரித்ரி',  ஜெ.பி. பட்நாயக்கின் மருமகன் செளமியரஞ்சன் பட்நாயக் நடத்தும் "சம்பாத்', முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தியாகியுமான ஹரேகிருஷ்ண மஹ்தாபின் மகன் பத்ருஹரி மஹ்தாப் நடத்தும் "சமாஜ்'. மூன்றுமே பிஜு பட்நாயக்கைக் கடுமையாக எதிர்த்து வந்தன.
அதுமட்டுமல்ல, அந்த நாளிதழ்களின் ஆசிரியர்களான தத்தகத்தா சத்பதி, செளமியரஞ்சன் பட்நாயக்,  பத்ருஹரி மஹ்தாப் மூவருமே அரசியல் வாரிசுகள். முதல்வராக வேண்டும் என்று மனதுக்குள் அரசியல் ஆசையைத் தேக்கி வைத்திருந்தவர்கள். என்னிடமே அதைப் பலமுறை தெரிவித்தும் இருக்கிறார்கள்.
ஆனால், தற்போதைய சாதனை முதல்வர் நவீன் பட்நாயக் அப்போது ஒடிஸாவிலேயே இல்லை. அவரது தாயார் கியான் பட்நாயக் பஞ்சாபியர் என்பதால், தில்லியில் வளர்ந்தார். டெஹ்ராடூனிலுள்ள டூன் ஸ்கூலில் சஞ்சய் காந்தியின் வகுப்புத் தோழர். எழுத்தாளர், அறிவுஜீவி. அரசியலில் நாட்டமே இல்லாமல் இருந்தவர்.
பிஜு பட்நாயக்கின் மறைவு, ஒடியா மொழி சரியாக பேசக்கூடத் தெரியாமல் இருந்த நவீன் பட்நாயக்கை அரசியலுக்கு இழுத்து வந்தது என்பது மட்டுமல்ல, அந்த மாநிலத்தின் அசைக்க முடியாத அரசியல் ஆளுமையாக உயர்த்தியும் இருக்கிறது. அதைவிட வேடிக்கை இன்னொன்றுண்டு. முதல்வராக வேண்டும் என்கிற கனவில் மிதந்த,  பிஜு பட்நாயக்கைக் கடுமையாக எதிர்த்த தத்தகத்தா சத்பதி, செளமியரஞ்சன் பட்நாயக், பத்ருஹரி மஹதாப் மூவரையும், நவீன் பட்நாயக்கைத் தலைவராக ஏற்றுக்கொண்டு பிஜு ஜனதா தளத்தில் இணையச் செய்திருக்கிறது.
மாடியிலுள்ள பிஜு பாபுவின் அறையிலிருந்து நான் கீழே இறங்கி வந்தபோது, வரவேற்பறையில் இருந்த பலரும் என்னை ஆச்சரியமாகப் பார்த்தார்கள். சிரித்தபடி என்னை நெருங்கி வந்த நளினி மொஹந்தியிடம் கைகுலுக்கியபடி, "எல்லோரும் ஏன் என்னை இப்படி ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள்?' என்று கேட்டேன்.
பதில் சொல்லாமல், என் கையைப் பிடித்தபடி வரவேற்பறையில் போடப்பட்டிருந்த சோபாவுக்கு அழைத்துச் சென்றார். அங்கே பிஜாய் மஹோபாத்ரா அமர்ந்திருந்தார். இன்னொரு சோபாவில் ஸ்ரீகாந்த் ஜெனா உட்கார்ந்திருந்தார்.
""பிஜு பாபுவுக்கு ஒருவர் மீது கோபமும் ஆத்திரமும் வந்தால், எளிதில் தணியாது. அதற்கு சில நாள்கள், வாரங்கள், மாதங்கள்கூடப் பிடிக்கும். உங்களைப் பார்க்க வேண்டாம் என்று சொல்லி, "அவரை விரட்டுங்கள்' என்று உதவியாளருக்குக் கட்டளை இட்டதாகச் சொன்னார்கள். பிறகு எப்படி, திடீரென்று கோபம் தணிந்து உங்களைக் கூப்பிடச் சொன்னார் என்பதுதான் எங்களுக்கு வியப்பு...''
அந்த மாபெரும் தலைவருக்கு என்னிடம் இருந்த அன்பை நினைத்து நான் நெகிழ்ந்தேன். அந்த அன்பும், அக்கறையும் அவரது இறுதிக்காலம் வரை தொடர்ந்தது. பிஜு பட்நாயக்கின் கடைசிப் பேட்டி என்னிடம்தான். அந்த ஒலிநாடாவை நான் இப்போதும் பத்திரமாக போற்றிப் பாதுகாக்கிறேன்.
தில்லி தியாகராஜா மார்க்கிலுள்ள மத்திய இணையமைச்சராக இருந்த திலீப் ரேயின் வீட்டில்தான் அவர் தனது இறுதிக் காலத்தில் தங்கி இருந்தார். என்னிடம் அந்தப் பேட்டியின்போது அவர் தெரிவித்த பல கருத்துகளை பிஜு பட்நாயக்கின் இறுதி சாசனம் என்றுதான் கூற வேண்டும்.
தன்னால் மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாக்கப்பட்ட தளபதிகளான ஸ்ரீகாந்த் ஜெனா, நளினி மொஹந்தி, பிஜாய் மஹாபாத்ரா மூவர் மீதும் கடைசிகாலத்தில் அவர் கடுமையான அதிருப்தியில் இருந்தார். 
திலீப் ரே அவரது செல்லப் பிள்ளையாக மாறியிருந்தார். அவரும் சரி, தனது தந்தையைப் போல பிஜு பாபுவை அவரது இறுதிக் காலத்தில் பாதுகாத்தார் என்பதையும் குறிப்பிடாமல் இருக்க 
முடியவில்லை.
நவீன் பட்நாயக் தலைமையில் பிஜு ஜனதா தளம் உருவாக முக்கியமான காரணம் திலீப் ரே. நவீன்தான் அதன் தலைமையை ஏற்க வேண்டும் என்றுகூறி அழைத்து வந்தவர் அவர்தான். தேவே கெளடா, ஐ.கே. குஜ்ரால், வாஜ்பாயி என்று மூன்று பிரதமர்களின் அமைச்சரவைகளில் இடம்பெற்ற ஒரே அரசியல்வாதியான திலீப் ரே, இப்போது அரசியலில் இருந்து முற்றிலுமாக விலகி தொழிலதிபராகி விட்டார். 
நளினி மொஹந்தி, நவீன் பட்நாயக் உடனான கருத்து வேறுபாடு காரணமாக பிஜு ஜனதா தளத்திலிருந்து விலகி காங்கிரஸில் சேர்ந்தார். அவர் மறைந்து பத்தாண்டுகளாகிவிட்டன. 
முதல்வர் நவீன் பட்நாயக்குடனான கருத்து வேறுபாட்டால் கட்சியிலிருந்து விலகித் தனிக்கட்சி தொடங்கினார் பிஜாய் மஹாபாத்ரா. பிறகு காங்கிரஸில் சேர்ந்தார். இப்போது பாரதிய ஜனதாவில் உள்ள பல தலைவர்களில் ஒருவராகத் தொடர்கிறார்.
பிஜு பட்நாயக் இருக்கும்போதே, ஸ்ரீகாந்த் ஜெனா அவரிடமிருந்து விலகி விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். காங்கிரஸில் இணைந்துவிட்ட ஜெனா, மன்மோகன் சிங் அமைச்சரவையில் முக்கியப் பொறுப்பு வகித்தார். இப்போது, ஒடிஸா அரசியலில் முக்கியத்துவம் இழந்த நிலையில் தொடர்கிறார்.
சட்டென்று பரபரப்பும் கலகலப்பும் அதிகரித்தது. பிஜு பட்நாயக் கீழே இறங்கி வரப்போகிறார் என்று தெரிந்தது. இனியும் அங்கே இருக்க வேண்டாம் என்று நானும், நிருபர் சங்க்ராம் பாண்டாவும் அங்கிருந்து கிளம்பிவிட்டோம்.
சம்பாத் நாளிதழின் அதிபர் செளமியரஞ்சன் பட்நாயக் அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்ததாகச் சொன்னார், அரசு விருந்தினர் மாளிகை வரவேற்பாளர். உடனே தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். 
""புவனேசுவரத்துக்கு வந்திருப்பதாகச் சொன்னார்கள், எங்கே காணாமல் போய்விட்டீர்கள்?''
பிஜு பாபுவை சந்திக்கச் சென்றதாகச் சொன்னேன்.
""உங்களை சந்திப்பதற்கு முதல்வர் ஜெ.பி. பட்நாயக் நேரம் ஒதுக்கி இருக்கிறார். அவர் நாளை புரி ஜெகந்நாதர் கோயிலுக்குப் போக இருக்கிறார். உங்களையும் உடனழைத்துச் செல்ல விரும்புகிறார். உடனே அவரது அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளுங்கள்.''
சர்வ சாதாரணமாக முதல்வர்களைச் சந்திக்க முடிவதும், அவர்கள் பத்திரிகையாளர்களை அழைத்து நலம் விசாரிக்கும் நடைமுறையும் வெளிமாநிலங்களில் இப்போதும் தொடர்கிறது. 

ADVERTISEMENT

(தொடரும்)

ADVERTISEMENT
ADVERTISEMENT